நவம்பர் 09, 2016

அறியாத வழியும் தெரியாத பாதையும்

Image result for Isa:42:16

அறியாததும் தெரியாததுமான பாதைகள்

திறவுகோல் வசனம்:  ஏசாயா: 42:16 – “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்”.

யார் குருடர்?

மாற்கு: 8:17 – “இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: … இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்கு கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?”

கண்களிருந்தும் கர்த்தருடைய வழிகளையும், வழி நடத்தல்களையும், சத்தியத்தையும், மகிமையையும் கண்டும் காணாமலும் உணராமலும் இருப்பவர்களே குருடர்.

குருடராயிருக்க காரணம்?

2கொரிந்தியர்: 4:4 – “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்”.

நமக்குத் தேவை - பிரகாசமுள்ள மனக்கண்கள்:

எபேசியர்: 1:19 – “தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்”.

அறியாத வழி – நானே வழி என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் வழி. பரலோகம் செல்லும் வழி (யோவான்: 14:6)

தெரியாத பாதை: விசுவாச பாதை; கிறிஸ்துவின் உபதேசம்; நம்பிக்கையின் மகிமை (மத்தேயு: 28:19,20)

குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கண்களிருந்தும் கர்த்தரை அறியாதவர்களை இரட்சிப்பு பெறாதவர்களை அவர்கள் அறிந்திராத வழியாகிய … நானே வழி என்ற இயேசுவின் வழியிலே நடத்தி, அவர்களுக்கு தெரிந்திராத பாதையான ஆராதனை, விசுவாச பாதையில் நடத்தவும், கிறிஸ்துவின் உபதேசத்தில் நடக்கப் பழக்குவித்து, மகிமையின் நம்பிக்கையில் நடக்கச் செய்து பரலோகம் சேர்க்கவும் செய்து அவர்களை கடைசி வரை கைவிடாதிருப்பேன் என்று திருவுளம் பற்றுகிறார்.
கண்களிருந்தும் காணாதவர்களை அவர்கள் அறியாததும் தெரியாததுமான பாதைகளில் எவ்வாறு நம் தேவன் நடத்துகிறார் என்பதை நாம் தியானிப்போம்.

1.   அறியாததும் தெரியாததுமான பாதை - இருவழி சந்தில் கட்டப்பட்ட கழுதை:

மாற்கு: 11:4 – “அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்”.
அநேக ஆத்துமாக்கள் இருவழிச்சந்துகளிலும், முட்டுச்சந்துகளிலும் ஆங்காங்கே ஒருவரும் அறியாவண்ணம் சாத்தான் கட்டிப்போட்டு வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட ஆத்துமாக்களை ஆத்துமபாரம் கொண்டோராய் நாம் கண்டுபிடித்து கட்டவிழ்த்து நமதாண்டவர் இயேசுவிடம் கொண்டு வரவேண்டியது நம் ஒவ்வொருவர் மேலும் விழுந்த கடமை. கட்டப்பட்ட கழுதை தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள இயலாது. அதற்கு பிறருடைய உதவி தேவை.

கட்டப்பட்ட அக்கழுதைக்கு என்ன செய்வது? எவ்வழி செல்வது என்பதை அது அறியாது. அதனுடைய எதிர்காலம் எதை நோக்கியிருக்கிறது? தன் நோக்கம் என்ன என்பதும் அது அறியாது. நல்ல மேய்ப்பனை சுமக்கின்ற பாக்கியம் தனக்குண்டு என்பதையும் அது அறியாமல் கட்டப்பட்டிருக்கிறது. அதை கட்டவிழ்த்து, அதற்கென தேவன் கொடுத்த தரிசனப் பாதையில் கொண்டுபோய் சேர்ப்பது நமது கடமைகளில் ஒன்றாகும் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.

“… தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்” என்று அப்.பவுல் இதற்காக மிகுந்த பாரத்தோடு ஜெபிப்பதையும் நாம் காண்கிறோம் (எபேசியர்: 1:19).

நாம் வாழும் இந்திய தேசத்தில் இப்படி எத்தனையோ ஆத்துமாக்கள் வழி தெரியாமல், பாதையறியாமல், திசை தெரியாமல் சந்துகளில் கட்டப்பட்டு கிடக்கிறார்கள். அவர்களை கட்டவிழ்ப்பது நமது கடமையல்லவா?

2.   அறியாததும் தெரியாததுமான பாதை – ஆராதனையின் பாதை:

நம்மை தேவன் படைத்த நோக்கமே – ஆராதிப்பதற்குத்தான். ஏசாயா: 43:21 – “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்” ஏசாயா: 35:10 – “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்”.

கர்த்தரால் கட்டவிழ்க்கப்பட்ட ஜனம் கர்த்தரை தொழுதுகொள்ள வேண்டும். அப்படி தொழுது கொள்ள ஆராதனையின் சிறப்பை அவர்கள் முதலில் உணர வேண்டும். அப்பொழுதுதான் தவறாமலும், அர்ப்பணிப்போடும் ஆராதிக்க கர்த்தரை நெருங்கிச் சேர அவர்களால் முடியும்.

ஆராதனையின் சிறப்பம்சம்:

ஆதியாகமம்: 2:2,3 – “தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டு பண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்”.

ஒரு உடன்படிக்கை செய்ய குறைந்தது இரண்டு பேர் தேவை. ஒன்று தேவன். இரண்டு மனிதன் அல்லது நாம். தேவனாகிய கர்த்தர் மனிதனிடம் ஆராதனைக்கென ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துகிறதை காண்கிறோம். ஆறுநாள் நல்லது என்று தேவன் கண்டார். ஏழாம் நாளும் நல்லது என்று கண்டார். ஆனால், ஏழாம் நாளுக்கு பிற்பாடு மற்றொரு நாள் சேர்க்கப்படவில்லை. ஏனெனில், ஏழாம் நாள் கர்த்தரை ஆராதிக்கும் நாள். அவருடைய பாதத்தில் மனிதன் நன்றி சொல்லி ஆராதிக்கும்நாள். ஓய்வு நாள் – ஏழாம் நாள் என்பது யூதர்களுக்கு சனிக்கிழமை. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளான நமக்கோ ஞாயிற்றுக்கிழமை. அது கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட நாள்; அது தேவனால் பரிசுத்தமாக்கப்பட்ட நாள்.
தேவன் மனிதனை சந்திக்கும் சிறப்பான நாள். மனிதனுடைய வரவிற்காக தேவன் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நாள். தேவனாகிய கர்த்தர் தன்னை சந்திக்க வரும் மனிதனுக்கு அப்பாயிண்மெண்ட் (Appoinment) கொடுத்திருக்கும் நாள். அந்த நாளை தேவன் வேறெதற்கும் கொடுக்கவில்லை. நம்மை சந்திப்பதற்காகவும், நம்மோடு உறவாடுவதற்காகவும், நம்மை ஆசீர்வதிக்கவும் மட்டுமே ஆசையோடு, வாஞ்சையோடு, கரிசனையோடு, அன்போடு, ஏக்கத்தோடு காத்திருக்கும் நாள்.
அப்படிப்பட்ட நாளை நாம் உதாசீனப்படுத்தவேக் கூடாதல்லவா? அப்படி ஆராதனையை உதாசீனப்படுத்துவதோ, அசட்டையாக கருதி உலகை நோக்கி ஓடுவதோ நமதாண்டவரை எவ்வளவாய் துக்கப்படுத்தியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்?! சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் நமக்கு அப்பாயிண்மெண்ட் (Appoinment) கொடுத்திருக்க, அதை நாம் அசட்டை செய்தால் எவ்வளவு பெரிய இழப்பு நமக்கு?! அது எவ்வளவு பெரிய நிந்தையாக நம் தேவனுக்கு இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்?! கர்த்தர் நமக்கு அப்பாயிண்மெண்ட் (Appoinment) கொடுத்திருக்க, நாம் வேறு எதற்கோ? எவருக்கோ கொடுப்பது கர்த்தருக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்பதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.

மெனுஹா – ஓய்வுநாள் (Sabbathday – Menuha):

ஆதியாகமம்: 2:2 – ல் ஓய்வுநாளுக்கு “மெனுஹா” என மூலபாஷையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பொருள்: சந்தோஷமான இளைப்பாறுதல்; அமைதி அல்லது மகிழ்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. அது படைப்பின் மகிழ்ச்சி, சிருஷ்டிப்பின் மகிழ்ச்சி. தேவனாகிய கர்த்தர் ஓய்வுநாளில் இவ்விதமாய் மகிழ்ந்திருந்தார். நாமும் அவரை ஆராதனை செய்யும்போது, நம்மை இரட்சித்த தெய்வத்தின் அன்பை எண்ணி, நம்மை இளைப்பாறச் செய்திட்ட இரட்சகரை மகிழ்வோடு உளப்பூர்வமாக ஆராதிக்கும்போது நம்மில் நம் தேவனாகிய இயேசுகிறிஸ்து ஆனந்தங்கொள்வார். அதைவிட நமக்கு வேறென்ன பாக்கியம் வேண்டும்?!!

ஆராதனையின் ஆசீர்வாதம்:

அ) விடுதலை: 430 வருடங்கள் அடிமையாயிருந்த இஸ்ரவேல் ஜனத்தை விடுவித்தது – ஆராதனையின் மூலமாகத்தான். “என் ஜனங்களை ஆராதனைக்கு போகவிடு” என்ற ஒரு வார்த்தையின் மூலமாய் அடிமைத்தனத்தின் விலங்கை தேவனாகிய கர்த்தர் உடைத்தெறிந்தார். எத்தனை வருட அடிமைத்தன கட்டுகளாயிருந்தாலென்ன… கர்த்தரை ஆராதிக்கும்போது பாவ, சாப, பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து ஆராதனையின் மூலமாக ஆண்டவர் இயேசுகிறிஸ்து நம்மை விடுவிக்கிறார்.
ஆ) வருத்தங்கள்; பாடுகள்; உபத்திரவங்களிலிருந்து விடுதலை: நியாயாதிபதிகள்: 10:16 – “… கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்”.
இ) சத்துருக்களிலிருந்து விடுதலை: 1சாமுவேல்: 7:3 – “… உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார்…”.
ஈ) பரிசுத்தமான வார்த்தைகளை பேச வைப்பார்: செப்பனியா: 3:9 – “அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்”.
உ) மனசாட்சியை பூரணப்படுத்தும்: எபிரெயர்: 9:9; 10:2 – குற்றமற்ற மனசாட்சியை நமக்கு தருகிறது.
ஊ) அசைவில்லாத ராஜ்யத்தை தருகிறது: எபிரெயர்: 12:28 – “அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்”.
எ) உயர்வைத் தருகிறது: தாவீது கர்த்தரைத் துதித்து துதித்து, ஆராதித்து ஆராதித்தே அரசனாகும் உரிமையை பெற்றான்.
ஏ) பதவி உயர்வு தருகிறது: தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போன்றவர்கள் கர்த்தரை ஆராதித்து பதவி உயர்வடைந்தார்கள்.
ஐ) வாழ்வின் சகலவித தேவைகளையும் பரிபூரணமாக சந்திக்கப்படுகிறது: ஆராதனையில் சரீர சுகம், பிசாசின் போராட்டத்தில் விடுதலை, கடனிலிருந்து விடுதலை, பொருளாதார ஆசீர்வாதம், பரிசுத்தம், பில்லிசூனியக்கட்டிலிருந்து விடுதலை என ஏரளமாய் நாம் இன்றும் சொல்லிக்கொண்டே போகலாம்…. ஆராதனையின் ஆசீர்வாதங்கள் அநேகம்…
ஆராதனை எப்போதெல்லாம்? எசேக்கியேல்: 46:3 – “… ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்”.
பரலோகத்தின் மாதிரி: எபிரெயர்: 8:5 – “இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது…”.

3.   அறியாததும் தெரியாததுமான பாதை – கர்த்தருடைய பரிசுத்தமானதை விழுங்கக் கூடாது:

மத்தேயு: 17:27 – “… நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்”.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, பேதுருவைப் பார்த்து, வரிப்பணம் செலுத்துவதற்காக, மீனின் வாயை திறந்து பார் என்று கூறுகிறதைப் பார்க்கிறோம். பேதுரு மீனின் வாயை கர்த்தர் சொன்னபடி திறந்து பார்க்கிறான். மீன் முழுங்காமல் வைத்திருக்கிறது. ஒருவேளை அந்த மீன் விழுங்கியிருந்தால் பேதுரு என்ன செய்திருப்பான்?! யோசித்துப் பாருங்கள். கையிலும், மீனின் வாயிலும் காசில்லாததை காணும் பேதுரு, ஒரு கத்தியால் மீனின் வயிற்றைக்கீறி, வயிற்றில் உள்ள காசை எடுத்திருந்திருப்பான். மீன் இறந்து போயிருக்கும்.
ஆனால், நடந்தது என்ன? மீன் விழுங்கவில்லை. அதனால் என்ன நன்மை நடந்தது? பேதுருவுக்கு தேவையான காசு கிடைத்தது. மகிழ்ச்சியோடு காசை எடுத்துகொண்டு, மீனை திரும்பவும் கடலில் உயிரோடு விட்டுவிட்டு போகிறான். இருவருக்கும் மகிழ்ச்சி.
இரட்சிக்கப்படாததற்குமுன் நமது வருமானத்தில் பெரும்பகுதி பாவத்திற்கும், விக்கிரகங்களுக்கும்தான் செலவழித்திருப்போம். ஆனால், இரட்சிக்கப்பட்டவுடன் ஆரம்பத்தில் கர்த்தருக்குப்பயந்து மிகவும் பயபக்தியுடன் கர்த்தருக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்போம். ஊழியங்களை தாராளமாக தாங்குவோம். சபையில் உற்சாகமாக செயல்படுவோம். நாளாக நாளாக பக்தியில் விருத்தியடைய வேண்டும். மாறாக… விருத்திக்கு பதிலாக… விசுவாச வாழ்வில் குன்றிப்போய் … அல்லது அவிசுவாசிகளுடன் இணைந்து விசுவாசம் மாறி … அவிசுவாசியைப்போல பேசி கொடுப்பதை நிறுத்திக் கொள்வோம். இது பிசாசின் தந்திரங்களில் ஒன்று. தேவனுடைய இராஜ்யத்தைக்கட்ட தேவையான பொருளாதாரத்தை சபையைக் கொண்டு தேவன் சந்திப்பதற்குத்தான் கர்த்தருக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரு பகுதியை தேவன் ஏற்படுத்தி வைத்தார். சாத்தான் அதை தடைசெய்து தேவராஜ்யம் கட்டப்படாதபடிக்கு கொடுக்கிற தேவபிள்ளைகளை தடைசெய்துவிட பார்க்கிறான். அதன் வலையில் நாம் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
கர்த்தருக்கு கொடுக்க வேண்டியதை எத்தனையோபேர் விழுங்கி விடுகிறார்கள். அதனால் இன்று எத்தனையோபேர் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கென்று அள்ளிஅள்ளி கொடுக்கிறதை இந்நாட்களில் காண்கிறோம். நம் கையின் பிரயாசத்தை சாப்பிட வேண்டிய நாம்… நமது கையின் பிரயாசத்தை யார் யாருக்கோ பிரியமில்லாமலே கட்டாயமாக கொடுத்தே ஆக வேண்டிய சூழல் ஏற்படுகிறதே?! காரணம் என்ன?! என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அதெல்லாம் எதேச்சையாக எனக்கு நடந்தது… அதெல்லாம் இயற்கை … இப்படியெல்லாம் சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கிறோமா?! அப்படியானால் நாம் திருப்பிபோடாப்படாத அப்பமாயிருக்கிறோம் (ஓசியா: 7:8) என்பதை உணர வேண்டும். மேலே நல்ல தோற்றமாகவும், அடியில் தீய்ந்த நிலையிலும் காணப்படுவோம். விழிப்பாயிருங்கள். நீங்கள் தேவனுக்காக உபயோகப்பட வேண்டும். வேறு யாரும் எதுவும் உங்களை மிஸ் யூஸ் பண்ணாதபடிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
எனக்கன்பானவர்களே!
சத்தியத்தை கற்பதிலே சிறுபிள்ளைகளைப்போல வளருங்கள். விசுவாசியுங்கள். கர்த்தர் பேரிலே, சத்தியத்திலே ஊசிமுனையளவேனும் சந்தேகப்படாமல் விசுவாசமாயிருங்கள். உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். உங்களை நடத்திடுவார். உங்களை அழைத்த தேவன் தமது ஆராதனையில் வைத்து இருளை வெளிச்சமாகவும், கோணலானவைகளை செவ்வையுமாகவும் ஆக்குவேன் என்று வாக்குப் பண்ணியுள்ளார். வாக்குமாறாதவர். நிச்சயமாக நிறைவேற்றிடுவார். அதுவரைக்கும் உன்னைக் கைவிடாதிருப்பேன் என்று திருவுளம் பற்றியிருக்கிறார் அல்லவா?! நம்பிக்கையாயிருங்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகாது. நிச்சயமாகவே முடிவு உண்டு. கர்த்தர் நடத்திடும் அறியாத தெரியாத பாதைகளில் விசுவாச தைரியத்தோடு வீறுநடைபோடுங்கள். வாழ்வில் சகலவிதங்களிலும் வெற்றி பெறுவீர்கள். தேவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஆமென். அல்லேலூயா!