நவம்பர் 25, 2016

கடுகு விதையின் சிறிய அளவும் - கடுகு செடியின் பெரிய அளவும்

Image result for mark 4:30

கடுகு விதை

திறவுகோல்வசனம்:     மாற்கு: 4:30-32 – “பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது; விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்”.

இந்த உவமையை மத்தேயு: 13:31,32 ; லூக்கா: 13:18,19 ஆகிய சுவிசேஷங்களிலும் நாம் காணலாம்.

இதில் கடுகு விதை சிறியது என்று, மாற்கு, மத்தேயு மட்டுமே குறிப்பிடுகிறார்கள். லூக்கா இதை குறிப்பிடவில்லை.

கடுகு விதையை நிலத்தில் மனுஷன் விதைத்தான் என்று மத்தேயுவும் (13:31), மனுஷன் அதை எடுத்து தன் நிலத்தில் போட்டான் என்று லூக்காவும் (13:19) குறிப்பிடுகின்றனர். மாற்கு இவ்விடத்தில் மனுஷனைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

அப்படியானால் இந்த உவமையின் கருத்து என்ன?


“சபையானது ஆரம்பத்தில் ஒரு சிறிய விஷயம்தான். ஆனால், முழுஉலகத்தையே இரட்சிக்கும் தேவனுடைய ராஜ்யத்திற்கு அதுதான் அடிப்படை அஸ்திபாரம்” என்பதுதான் இதின் பொருள். எனவேதான், மாற்கும் அதைத் தொடர்ந்து மத்தேயுவும் கடுகு விதை சிறியது என்பதை குறிப்பிடுகின்றனர்.

இந்த உவமையில் முக்கிய அம்சம் மரம்தான். பறவைகள் வந்து தங்கக்கூடிய அளவிற்கு வளர்ந்ததுதான் இதின் விசேஷமே என்கிறார் மாற்கு.

“காலம் வந்து விட்டது; தேவனுடைய ராஜ்யத்தின் மகிமை மக்களுக்கு கிடைக்கும் காலம் இது; இஸ்ரவேலரில் ஒதுக்கப்பட்டவர்கூட அழைப்பைக் கேட்கின்றனர். புறஜாதியினரும் கேட்கும் காலம் வந்துவிட்டது. தேவனுடைய ராஜ்யம் வந்துவிட்டது” என்பதுதான் டாட் என்ற வேத பண்டிதரின் கருத்து.

கடுகு விதையின் சிறிய அளவும் - கடுகு செடியின் பெரிய அளவும்


கடுகு விதை என்றதுமே நமக்கு அதனுடைய மரபுப்படி சிறியத் தன்மையையே காட்டும். மத்தேயு: 17:20 – ல் இயேசுகிறிஸ்து விசுவாசத்தைக் குறித்து ஒப்பிடுகையில், “… கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்…” என கடுகு விதையின் சிறிய தன்மையை குறிப்பிடுவதைக் காணலாம். கடுகு விதையின் சிறிய அளவும் - கடுகு செடியின் பெரிய அளவும் என்பதனை வேறுபடுத்திக் காட்டுவதில்தான் உவமையைப் புரிந்து கொள்ளும் திறவுகோல் ஒருவருக்கு அமைகின்றது.

இந்த வேறுபாடானது அற்ப ஆரம்பம், பிற்பாடு விரிந்த வலிமையான ஓர் அமைப்பு முறை என்பதில் அல்ல (யோபு: 8:7); “இப்போது தேவனுடைய ராஜ்யம் மறைந்திருக்கிறது; அப்போது மாட்சிமையுடன் வெளிப்படும்” என்பதில் அடங்கியிருக்கிறது.

ஆகாயத்துப் பறவைகள்:


மாற்கு 4:32 – “… விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்”.

புறஜாதியினரை “ஆகாயத்துப் பறவைகள்” என்று யூத ரபிமார்கள் அழைப்பார்கள். ஆதாரம்: லூக்கா: 13:29 – “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்”.

தானியேல்: 4:10-12 – “நான் படுத்துக்கொண்டிருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. அதின் இலைகள் நேர்த்தியும் அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினாலே போஷிக்கப்பட்டது”.

தானியேல்: 4:21 – “அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது”.

தானியேலில் சொல்லப்பட்ட தரிசனமும், மாற்குவில் சொல்லப்பட்ட உவமையும் கருத்திலும் பொருளிலும் ஒத்துப் போவதைக் காணலாம்.
 இப்போது … கீழ்கண்ட பொருளின்படி மனதிற் கொண்டு, இந்த உவமையை தியானிப்போமானால் … உவமையின் உட்கருத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

 கடுகு விதை                                 - தேவனுடைய ராஜ்யம்
மனுஷன்                                          - கிறிஸ்து மற்றும் தேவமனிதர்கள்
மரம்                                                    - தேவனுடைய சபை
ஆகாயத்துப் பறவைகள்          - புறஜாதி மக்கள்
மரத்தின் கிளைகள்                     - கிளை சபைகள்


கடுகுவிதை – தேவனுடைய ராஜ்யம்:


தேவனுடைய ராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது. “அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது.” இந்த கடுகுவிதையானது விதைக்கப்பட்டதும் சிறிய செடியாக வரும் என்று நினைக்கும்போது, அது சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடுகிற பெரிய மரமானது. உண்மையில் கடுகு செடி சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், உவமையின்படி அது சகல பூண்டுகளிலும் பெரிதாகி ஒரு பெரிய மரமானதாம். இது எதைக் காட்டுகிறது?

பூமியில் தேவனுடைய ராஜ்யம் வளரும் வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூமியில் தமது ராஜ்யத்தைக் கட்ட விரும்புகிறார். அதற்குரிய மனிதர்கள் வசம் கடுகுவிதை போன்ற தரிசனத்தை சபை நிறுவ ஒப்படைக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட அபிஷேகம் நிறைந்த அழைப்பை உணர்ந்த, ஆத்துமபாரம் கொண்ட யாராயினும் விதையை விதைக்கலாம்.

விதைப்பவர் எப்படியிருப்பினும் விதைக்குள் ஜீவன் உண்டு என்பதை நாம் அறிவோம். விதை சிறியதாயிருப்பினும் அது வளரும்போது விருட்சமாகும். ஆலமரம் பெரிதாக வளருகிறது. அதற்காக அதன் விதையானது ஆலமரம்போல பெரிதாகவா இருக்கிறது. அதுபோலத்தான் இதுவும். விதை சிறியதாயிருந்தாலும் விதைக்குள் இருக்கும் மரபணு, அதன் வீரியத்தின்படிதான் வளர்ச்சி நிலை காணப்படும் என்பதை நாம் அறிவோமல்லவா?!

மரம் – தேவனுடைய சபை:


“அது சகல பூண்டுகளிலும் பெரிதாகி” – என்று சொல்லப்படுகிறது. அதாவது உலகில் உள்ள சகல மதவழிபாட்டு ஸ்தலங்களைப் பார்க்கிலும் (சகல பூண்டுகளிலும்), தேவனுடைய ராஜ்யமாகிய திருச்சபையானது பெரிதாகும் என்பது தேவனுடைய வாக்காகும்.

தானியேல் கண்ட தரிசனத்தின்படி “இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது” என்று பார்க்கிறோம்.

1.   விருட்சம் - வளர்ந்தது
2.   விருட்சம் – பலத்தது
3.   விருட்சம் – தேசத்தின் எல்லைவரை காணப்பட்டது
4.   விருட்சம் – வானபரியந்தம் எட்டினது
சபையின் வளர்ச்சியை தேவனுடைய ராஜ்யத்தின் வளர்ச்சியை பாருங்கள். அல்லேலூயா! ஆமென்!

 ஆகாயத்துப் பறவைகள் – புறஜாதிகள்:


ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையுமாம். முன்பே பார்த்தோம் … புறஜாதியினரை “ஆகாயத்துப் பறவைகள்” என்று யூத ரபிமார்கள் அழைப்பார்கள். ஆதாரம்: லூக்கா: 13:29 – “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்”.

 தானியேலின் எழுபது வாரங்களின் தரிசனத்தின்படி (தானியேல்: 9:24-27) இப்போது புறஜாதியரின் இரட்சிப்பு நிறைவேறும் காலம். தானியேல்: 9:26 வசனத்திற்கும் தானியேல் 9:27 வது வசனத்திற்கும் இடையில் உள்ள காலம்தான் புறஜாதியார் இரட்சிப்பு பெறும் காலமாயிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தேவன் நம்மைக் கொண்டு தமது ராஜ்யத்தை புறஜாதியார் நடுவே கட்டும்படி விரும்புகிறார். ஆகாயத்துப்பறவைகள் மாலைநேரம் (அந்தகார இருள்) நெருங்குகையில் உயரமான விருட்சங்களை (சபைகளை) பாதுகாப்பிற்காக தங்க தேடும். எனவே, சபைகள் பலமுள்ளவைகளாக காணப்பட வேண்டும். விருத்தியடைய வேண்டும். ஸ்திரப்பட வேண்டும். புறஜாதிகள் மீட்படைய அவர்கள் தங்கி தாபரிக்க, இளைப்பாற வேண்டிய வசதிகள் சபைகளில் செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆகாயத்துப்பறவைகள் தங்கி தாபரிக்க கடந்து வரும். தங்குமிடமும், தாபரிக்க ஒரு இடமும் நாம் ஏற்படுத்தாவிட்டால் மீட்கப்பட்ட ஆத்துமா எங்கே போகும்?

ஜலப்பிரளயத்திலிருந்து பல்லுயிர்களை காக்கும் திட்டத்தைக் கொடுத்த தேவனாகிய கர்த்தர், நோவாவை ஒரு பெரிய பேழையை செய்ய சொன்னார் என்பதை நாம் மறந்து விடக்கூடாதல்லவா?! அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாத்திட அதற்கு வேண்டிய அனைத்தையும் அவன் சவதரித்து வைக்கவில்லையா?! இந்த பாரம் போதகரிடமும், சபையாரிடமும் அதிகமதிகமாய் காணப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆகாயத்துப்பறவைகள் தங்குவதற்கான முன் ஆயத்தங்களை செய்ய இயலும். அதற்கான தரிசனமும், திட்டமும், ஜெபமும் நம் அனைவருக்கும் தேவை.

மரத்தின் கிளைகள் - கிளைசபைகள்:


ஸ்தலசபை மட்டும் நிறுவப்பட்டால் போதுமானதல்ல; கிளைசபைகளும் வளர வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம். அனைவரும் பட்டணங்களை நோக்கியே ஆராதனைக்கு வருவார்கள் என கருதிட இயலாது. கிராமங்களில், பட்டிக்காடுகளில், காட்டுக் கொட்டாய்களில், வயல்களின் நடுவில் உள்ள வீடுகளில் ஏராளமான மக்கள் திரள் உள்ளனர் என்பதை நாம் மறந்து விட கூடாது. அப்படிப்பட்டவர்களை சந்தித்திட கிளைசபைகளால்தான் கூடும். தரிசனமுள்ள கிராம ஊழியங்கள், ஊழியர்களால்தான் கூடும். அதை நாம் ஊக்குவிக்க தவறிவிடக்கூடாது. பட்டணங்களில் இருக்கிற ஊழியர்களைவிட கிராமங்களில் இருக்கிற அநேக ஊழியர்கள் மிகுந்த பாரத்தோடும், தியாகத்தோடும் பலபாடுகள் மற்றும் பற்றாக்குறை நடுவே அர்ப்பணிப்போடு செய்து வருவதை நாம் அறியாதிருக்க கூடாது. சமுதாய போராட்டங்கள், கலாச்சார போராட்டங்கள், பாரம்பரிய போராட்டங்கள், மூடநம்பிக்கை கலாச்சாரம் போன்ற போராட்டங்கள் கிராம ஊழியர்கள் சந்திப்பது பயங்கரமானது. ஊழியர்களுக்கு வீடு கிடைப்பது அரிது, கிடைத்த வீட்டிற்கு தண்ணீர் கிடைப்பது அல்லது கொடுப்பது என்பது இன்னும் இந்திய கிராமங்களில் அதைவிட கொடுமையானது என்பதை அறிவீர்களா? பட்டணம் கிராமம் என உயர்த்தி தாழ்த்துவதாக அர்த்தங் காண விழையக்கூடாது. அதேசமயம் பட்டணத்தில் உள்ளதை பார்க்கிலும் கிராமஊழியம் என்பது சற்று கடினம் என்பதையாவது மக்கள் உணரவேண்டும் என்பதை தெரியப்படுத்தவே இக்கருத்து.

பட்டணத்தில் உள்ள சபைகள் மற்றும் ஊழியர்கள் தங்களது கிளைகளை கிராமங்களை நோக்கி பரவச் செய்ய வேண்டும். பட்டணங்களில் உள்ள சபைபிதாக்கள் வெறும் பாரம்பரிய ஆராதனைகளை நடத்திக் கொண்டிராமல் … கிராமங்களில் தேவனுடைய ராஜ்யத்தை கட்ட கிளைசபைகளை நிறுவ மக்களை ஊக்குவித்து அனுப்பி வைக்க வேண்டும். கிராம ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் நினைவுகூர வேண்டும். கிராம ஊழியங்களை, ஊழியர்களை அற்பமாயெண்ணாமல் ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துங்கள். நாம் சென்று எவ்வித வசதியும் இல்லாத கிராமங்களிலெல்லாம் அவர்களைப்போல தங்கி ஊழியம் செய்துவிட முடியாது என்பதை நாம் உணர்ந்து, செய்பவர்களை ஊக்குவிப்போம்.

ஒரு சபை என்று ஒன்று இருக்குமானால் … நிச்சயம் அதற்கு கிளை சபை என்ற ஒரு சபை இருக்க வேண்டும். ஒரு செடி ஒரே நேராக மட்டுமே வளருமானால் … அது தருகின்ற பலன் குறைவே. அதே செடியானது கிளைவிட்டு பரவி வளருமானால், ஒவ்வொரு கிளையிலும் நாம் எதிர்பார்க்கும் பலன்கள் ஏராளமாய் கிடைக்கும். ஒரு போதகர் ஒரு சபையை மட்டும்தான் நடத்தி வருகிறார் என்றால்… அது சரியான நோக்கமல்ல … தரிசனமல்ல… தேவசித்தமல்ல… அதற்கு பெயர் பிழைப்பு. பிழைப்பு நடத்த வரவில்லை. தேவனுக்கு சேவை செய்யவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒருவரும் மறந்துவிட கூடாது. ஒவ்வொரு ஊழியரும் தன்கீழே குறைந்த பட்சம் இரு சபைகளையாது நிறுவ பாடுபட வேண்டும். மற்றும் இரு மிஷினெரிகளையாவது தாங்க முன்வர வேண்டும். அதற்கு ஜெபமும், அர்ப்ணிப்பும் தேவை.
ஆமென்! அல்லேலூயா!
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!