நவம்பர் 16, 2016

பொருத்தனைகள் - VOWS

Image result for 1samuel: 1 ch

பொருத்தனைகள்

VOWS

பொருத்தனை என்பது பழைய ஏற்பாட்டு காலங்களில் இருந்தே தொன்றுதொட்டு வருகிற ஒரு காரியம். இதை தமிழில் “நேர்த்திக்கடன்” அல்லது “வேண்டுதல்” எனவும் சொல்வார்கள். இதை இன்றைய சபைகளில் உள்ள கிறிஸ்தவ மக்கள் கர்த்தருக்கு இன்றளவும் செலுத்தி வருகிறார்கள்.

இஸ்ரவேலரிடையில் வாயிலிருந்து புறப்படும் சொற்கள் மிகவும் வல்லமையுடையனவாகக் காணப்பட்டன. வாயினால் சொன்னதை கைகளினால் நிறைவேற்றுவதில் உறுதியாயிருப்பார்கள். தங்கள் வார்த்தைகளை தாங்களே கனம் பண்ணுகிறவர்கள்தான் இஸ்ரவேலர்கள். முற்பிதாக்களின் வாக்குறுதிகள் இவ்விதமாய் காணப்பட்டன. இந்த அடிப்படையிலேயே மனிதர்கள் வாயினால் செய்யும் பொருத்தனைகளும் வல்லமை மிக்கதாகவும், மீறக்கூடாததாகவும் கருதப்பட்டது.

இப்படியாக, யெப்தா ஒரு பொருத்தனை செய்ய, கடைசியில் அப்பொருத்தனையால் தன் ஆசை மகளைப் பலியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோதிலும், அப்பொருத்தனையிலிருந்து அவன் மாறவில்லை என காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் மூன்றுவகையான பொருத்தனைகளைக் காணலாம். அவைகளைக் குறித்து சற்று விரிவாக ஆராய்வோம் வாருங்கள்.

1.   பலனை எதிர்பார்க்கும் பொருத்தனை:


கர்த்தர் எனக்கு இந்த நன்மையைச் செய்தால், நான் அதற்குப் பதிலாக இன்னதைச் செய்வேன் என்று பொருத்தனை செய்வது – “பலனை எதிர்பார்க்கும் பொருத்தனை” என சொல்லலாம். தேவனாகிய கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணி, வழியிலே காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் தந்து, என்னை … சமாதானத்தோடே திரும்பி வரப் பண்ணுவாரானால், அதற்குப் பதிலாக, தான் கர்த்தரை தனக்குத் தேவனாக ஏற்றுக் கொண்டு, பெத்தேலில் ஒரு தொழுகையை ஏற்படுத்தி, அவருக்கு தசமபாகம் செலுத்துவதாகப் பொருத்தனை பண்ணினான் (ஆதியாகமம்: 28:20-22). யெப்தா, அன்னாள் ஆகியோர் செய்த பொருத்தனைகளும் இப்படிப்பட்டவைகளே (நியாயாதிபதிகள்: 11:30,31; 1சாமுவேல்: 1:11). தமிழில் இதனை “நேர்த்திக்கடன்” என்கிறோம்.

2.   பலனை எதிர்பாராத பொருத்தனை:


தாவீது, சமஸ்த இஸ்ரவேலை தானல்ல, கர்த்தாதி கர்த்தரே அரசாளுகிறார் என்பதைக் காட்ட, கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வரத் தீர்மானிக்கிறான். அப்படிப் பெட்டியைக் கொண்டு வருமுன், தான் வீட்டிற்குப் போவதுமில்லை, நித்திரை செய்வதுமில்லை என்று பொருத்தனை செய்வதைக் காணலாம். சங்கீதம்: 132:1-5 – “… நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும், என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை; என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்”. இதனை தமிழில் “சபதம்” என்கிறோம்.

3.   விலகியிருக்கும் பொருத்தனை:


ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக சாதாரண வாழ்க்கையின் சிலாக்கியங்கள் சிலவற்றிலிருந்து விலகியிருத்தல்.

உதாரணமாக …

எண்ணாகமம்: 21:1-3 – “வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, அவர்களில் சிலரைச் சிறைப்பிடித்துக்கொண்டு போனான்.அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம் பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள். கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக் கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்”.

1சாமுவேல்: 14:24 – “இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் சத்துருக்கள் கையில் பழிவாங்க வேண்டும், சாயங்கால மட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம் பண்ணாதிருந்தார்கள்”. வெற்றி கிடைக்கும்வரை அல்லது பழிவாங்கி தீரும்வரை ஆகாரத்தை தங்களை விட்டு விலக்கி வைத்தார்கள். இம்முறைக்கு தமிழில் “விரதம்” என்கிறோம்.

கானானிய கலாச்சாரத்தை வெறுத்த நாடோடிகளான இஸ்ரவேலர் பலர் இத்தகைய விரதங்களை மேற்கொண்டனர். இவர்களில் சிலர் நசரேயர் என்றும், சிலர் ரேகாபியர் என்றும் அறியப்பட்டனர். சிம்சோன், சாமுவேல் ஆகியோர் நசரேய விரதம் பூண்டவர்கள்தான்.

இப்பொருத்தனைகளை நிறைவேற்றுவதைக் குறித்த விதிகளை ஆசாரிய பிரமாணம் வகுத்துள்ளது:


1.   பொருத்தனையாக செலுத்தப்படும் சமாதானபலி இரண்டு நாட்களில் புசித்து தீர வேண்டும். மீந்திருப்பது மூன்றாம்நாளில் எரிக்கப்பட வேண்டும்.
2.   பொருத்தனையாகச் செலுத்தப்படும் பலிகள் யாவும் பழுதற்றனவாக இருத்தல் வேண்டும் (லேவியராகமம்: 22:17-25)
3.   நசரேய விரதத்தைக் குறித்த பிரமாணங்களை எண்ணாகமம் 6 ஆம் அதிகாரத்தில் காண்கிறோம்.
4.   பொருத்தனைக்காகச் செலுத்தப்பட வேண்டிய பொருட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன (எண்ணாகமம்: 15:1-10)
5.   பொருத்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
6.   திருமணமாகாத பெண்ணின் பொருத்தனைகளையும், திருமணமான பெண்ணின் பொருத்தனைகளையும் முறையே தகப்பன் அல்லது கணவனைச் சார்ந்திருக்கும்.
7.   விதவை அல்லது விலக்கப்பட்டவள் தன் பொருத்தனையைத் தானே நிறைவேற்றக் கடமைப்பட்டவள்.

பிரசங்கி: 5:4,5 – “நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்து கொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்”.