நவம்பர் 17, 2016

ஏபோத் - EPHOD

Image result for ephod in the bibleImage result for ephod in the bibleImage result for ephod in the bible

ஏபோத் 

(EPHOD)

ஒரு ஆய்வுக்கட்டுரை

1.   ஏபோத் - ஒரு விக்கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது:


கிதியோன் பொன்னினால் ஒரு ஏபோத்தைச் செய்து ஓப்ராவில் வைத்தான் என்று காண்கிறோம். நியாயாதிபதிகள்: 8:27 – “அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத்தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப்பின்பற்றிச் சோரம் போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிருந்தது”. மீகா இதர விக்கிரகங்களுடன் தொழுகைக்காக ஒரு ஏபோத்தையும் செய்தான். 

நியாயாதிபதிகள்: 17:5 – “மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, …”. நியாயாதிபதிகள்: 18:17,18,20 – “தேசத்தை உளவுபார்க்கப் போய்வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு வருகிறபோது, …”. “அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்”. இங்கு ஏபோத் ஒரு விக்கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது.

2.   ஏபோத் - ஆசாரியன் அணியும் ஒரு ஆடையாகக் குறிப்பிடப்படுகிறது:


சாமுவேல் சிறு பையனாக இருந்தபோது ஒரு சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான் என்றும், அவன் தாய் ஆண்டுதோறும் பலி செலுத்துவதற்கு வரும்போதெல்லாம் அவனுக்கு ஒரு சணல்நூல் ஏபோத்தைத் தைத்துக் கொண்டு வந்தாள் என்றும் அறிகிறோம். 1சாமுவேல்: 2:18,19 – “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான். அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்”.

நோபின் ஆசாரியர்கள் 85 பேர் சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தார்கள். 1சாமுவேல்: 22:18 – “அப்பொழுது ராஜா தேவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்று போடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்து பேரை அன்றையத்தினம் கொன்றான்”.

கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக தாவீது சணல்நூல் ஏபோத்தை தரித்துக் கொண்டவனாய் நடனமாடினான். 2சாமுவேல்: 6:14 – “தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுபலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்”.

பிரதான ஆசாரியனுக்குரிய ஓர் ஏபோத்தைக் குறித்து வேதம் கூறும்போது … இது ஒரு விலையுயர்ந்த அங்கியாகக் காணப்படுகிறது. யாத்திராகமம்: 28:28,29 – “மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும். ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின் மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்”.  

3.   ஏபோத் – ஒரு நிமித்தம் பார்க்கும் கருவி எனவும் கூறலாம்:


கர்த்தருடைய சித்தத்தை அறிவதற்காக இது பயன்படுத்தப்பட்டது. ஆசாரியர் இதனைச் சுமந்து திரிந்தனர். இப்படியாகச் சவுல், கர்த்தருடைய சித்தத்தை அறிய விரும்பி, அகியாவைப் பார்த்து, “ஏபோத்தைக் கொண்டு வா” என்றான். 1சாமுவேல்: 14:3,18 – “சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்;” “அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்;”.

சவுலுக்கு எதிரான போராட்டத்தில் கர்த்தருடைய சித்தத்தை அறிய, தாவீதும் அபியத்தாரைப் பார்த்து “ஏபோத்தை இங்கே கொண்டு வா” என்கிறான். 

1சாமுவேல்: 23:9 – “தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம் பண்ணுகிறான் என்று தாவீது அறிந்து கொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: “ஏபோத்தை இங்கே கொண்டு வா” என்றான்”.

மேற்கூறிய ஆதாரங்களைக் கொண்டு வேதஅறிஞர்கள் மூன்று வகையான முடிவுகளைக் கொண்டுள்ளனர். அவை:


1.   இது வழிபாட்டுக்குரிய விக்கிரகம்

2.   ஒருவகை அங்கி; இதில் இரு உறைகள் காணப்பட்டன. இது சாதாரணவேளைகளில் விக்கிரகங்களுக்குப் போர்த்தப்பட்டன. ஆனால், கர்த்தருடைய சித்தத்தை அறிய வேண்டிய வேளையில் இதனை ஆசாரியன் போர்த்துக் கொண்டான். இதன் பைகளில் ஊரீம் – தும்மீம் கட்டைகள் காணப்பட்டன. (யாத்திராகமம்: 28:28,29; 35:27,39; 1சாமுவேல்: 2:18).

2ராஜாக்கள்: 23:7 – ல் பெண்கள் அஷோராவுக்கு (அஸ்தரோத்துக்கு) (ஸ்தம்பத்துக்கு) அங்கிகள் தைத்தனர் என்பது, ஏபோத்து விக்கிரகங்களுக்கான ஒருவகை அங்கியாக இருக்கலாம் என்பதற்கு சாட்சி.

3.   ஏபோத்தும் கர்த்தருடைய பெட்டியும் ஒன்றே. இக்கருத்து 1சாமுவேல்: 14:18 –ல் எபிரேய மொழியில் “கர்த்தருடைய பெட்டி” என்பதற்கு செப்துவஜிந்தில் “ஏபோத்” என்று குறிப்பிடப்படுவதால் வந்தது. உடன்படிக்கைப்பெட்டியும் கர்த்தருடைய சித்தத்தை அறிய பயன்பட்டதென்று நாம் அறிவோம். பிந்தின காலத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பெட்டிகள் தோன்றின. ஏபோத் என்பது இந்தப் பெட்டிகளுக்குரிய மற்றொரு பெயர் என்பர் இக்கருத்துடையோர்.

மேலே கூறியவற்றில் இரண்டாவது கருத்து ஒருவேளை உண்மைநிலையை விளக்குவதாக இருக்கலாம். ஏபோத்து ஆரம்பத்தில் ஒரு அங்கியாக இருந்திருக்கக்கூடும். இது ஆரம்பத்தில் சுரூபங்களுக்கு போர்த்தப்பட்டு வந்தது. இவ்வாறு போர்த்தப்பட்டதால் ஒருவேளை அந்த சுரூபமும் ஏபோத்து என்று குறிப்பிடபட்டடிருக்க வேண்டும். சில அங்கிகள் விலையுயர்ந்த பொருட்களால் செய்யப்பட்டு பாரம் மிகுந்தனவாகக் காணப்பட்டன.
கர்த்தருடைய சித்தத்தை அறிய வேண்டிய வேளைகளில் ஆசாரியர் இதனைப் போர்த்துக் கொண்டனர். அல்லது சுமந்து சென்றனர். அல்லாத வேளைகளில் வழிபாட்டிடத்தில் தனியாகவோ அல்லது விக்கிரகங்களுக்குப் போர்த்தப்பட்டோ இது பாதுகாக்கப்பட்டு வந்திருக்கலாம்.