நவம்பர் 17, 2016

நசரேயர், ரேகாபியர் - Nazarite, Rechabites

Image result for Nazarite

நசரேயர், ரேகாபியர்

Nazarite, Rechabites

ஒரு ஆய்வுக் கட்டுரை

யோசுவாவின் தலைமையின் கீழ் கானானுக்குள் புகுந்த இஸ்ரவேலர், யோசுவாவின் காலத்திற்குப் பின்னர் கானானிய வழிபாட்டுடன் ஓரளவு சமரசம் கொண்டு, தேவனாகிய கர்த்தரை விட்டு விலகி, பாகாலை சேவிக்கவோ அல்லது கர்த்தரைப்போலவே பாகாலையும் சேவிக்கவோ முற்பட்டனர். இத்தகைய வழிபாடுகளில் கானானிய செழுமை வழிபாட்டு அம்சங்களான திராட்சை இரசம் குடித்தல், நடனமாடுதல், வேசித்தனம் பண்ணுதல் ஆகிய சீர்கேடுகள் அதிகமாகக் காணப்பட்டன. இவை அனைத்தும் விவாசாய வேளாண்மை சூழ்நிலையிலிருந்துத் தோன்றியவைகள். எனவே, நாடோடிகளாயிருந்து வந்த இஸ்ரவேல் மக்களுக்கு இவை முற்றிலும் புதியவை. பலர் இவற்றை ஆவலுடன் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், வெகு விரைவிலேயே வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தேவனாகிய கர்த்தருடைய மார்க்கத்தின் தனிச்சிறப்பை உணர்ந்த ஒருசில பரிசுத்தவான்கள், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த வழிபாட்டின் சீர்கேடுகள், ஆவிக்குரிய மக்களின் பரிசுத்தத்தை எவ்வளவாக பாதிக்கிறது என்பதை உணர்ந்தனர். அதனை வெறுக்கவும் முற்பட்டனர். இவற்றில் புதிதாகக் காணப்பட்ட பல அம்சங்களை வெறுத்து, விசேஷித்த பொருத்தனைகளைச் செய்து தங்களை அந்த கானானிய கலாச்சாரத்திலிருந்து விலக்கிக் காத்துக் கொண்டனர். காத்துக் கொண்டவர்கள் முறையே நசரேயர், ரேகாபியர், தீர்க்கதரிசிகள் போன்றோர். இதனால், இவர்களது தோற்றங்களும் மற்றவர்களைப் பார்க்கிலும் இச்சூழ்நிலையினிமித்தம் விந்தையாகவும் வித்தியாசப்பட்டும் மாறிப்போயிருந்தன.

நசரேயர்


நசரேயர் என்ற எபிரேயச் சொல் “பிரதிஷ்டை செய்யப்பட்டவர்” என்றும் “ஒப்புக்கொடுக்கப்பட்டவர்” என்றும் “பிரத்தியேகப்படுத்தப்பட்டவர்” என்றும் பொருள்படும்.

நசரேயப் பொருத்தனை செய்து கொண்ட ஒருவன் தன்னைக் கர்த்தருக்காகப் பிரத்தியேகப்படுத்திக் கொண்ட அல்லது பிறரால் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஒருவனாவான். எண்ணாகமம்: 6:2,6-8 – “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: புருசனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையை பண்ணினால்,” “அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது. அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்”

நியாயாதிபதிகள்: 13:5,7 – “நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்;…”. “அவர் என்னை நோக்கி: நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்”.

1சாமுவேல்: 1:11 – “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகலநாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்; அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்”.

இந்தப் பொருத்தனைகளெல்லாம் தேவனாகிய கர்த்தருக்குள் ஒருவன் உத்தமமாக இருப்பதைக் காட்டப்படுவதற்காகச் செய்யப்படும் ஒன்றாகும். தோற்றத்தில் இது ஒருவனுடைய ஆயுட்காலம் முழுவதும் கொண்டு செயல்பட வேண்டிய ஒன்றாகக் காணப்பட்டது. சிம்சோன், சாமுவேல் இவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்காக தங்களை ஒப்படைத்தவர்கள். ஆமோஸ்: 2:11,12 – “உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார். நீங்களோ நசரேயருக்குத் திராட்சம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்ல வேண்டாம் என்று கற்பித்தீர்கள்”. ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக பணிக்காக ஒப்படைக்கப்பட்ட இவ்விரதங்கள், பொருத்தனைகள் பிற்காலத்தில் அது மார்க்கத்திற்கேற்ற பொருத்தனையாக மாறிப்போயிற்று.

நசரேயர்களைக் குறித்த பிரமாணம் எண்ணாகமம்: 6 ஆம் அதிகாரத்தில் தரப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஆணோ, ஒரு பெண்ணோ, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நசரேயப் பொருத்தனை செய்து கொள்ளலாம். எண்ணாகமம்: 6:2,5 – “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: புருசனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையை பண்ணினால்,” “அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது, அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்”.

நசரேயன் மூன்று காரியங்களில் தன் பொருத்தனைகளை காத்துக் கொள்ள வேண்டும்:


1.   திராட்சைச் செடியிலிருந்து கிடைக்கும் எதையும் சாப்பிடக்கூடாது; மதுபானம் அருந்தக்கூடாது
2.   பொருத்தனை நாட்களில் முடி சிரைக்கப்படக் கூடாது
3.   மரித்தோர் உடலுடன், பெற்றோர் உடலாயிருந்தாலும் சரி, எந்தவித தொடர்பும் கொள்ளக்கூடாது

இவை யாவற்றையும் முற்கால நசரேயர் பின்பற்றினார்களா? என்பது கேள்விக்குரியது. சிம்சோன் இவற்றை அனுசரிக்கவில்லை என்பது நமக்குத் தெரிந்த ஒன்று.  

லேவியராகமம்: 21:11 –“பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளாமலும்,” – மரித்தோருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்பது இதற்குமுன் கூறப்படவில்லை. இந்த விஷயத்தில் நசரேயரும், பிரதான ஆசாரியனும் ஒரே விதிமுறைக்குட்பட்டனர் என அறியலாம்.
மயிர் கத்தரிக்கக்கூடாது என்பது முன்னமே உள்ள நியதி. முற்காலங்களில் நசரேயன் ஆயுள் முழுவதும் மயிரை வளர்க்க வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால், பின்னால் பொருத்தனை முடிந்ததும் மயிரை வெட்டி காணிக்கையாகப் படைக்க வேண்டும் என சொல்லப்பட்டது. 

எண்ணாகமம்: 6:18 – “அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக்கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின் கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்”.

இரத்தத்தைப்போலவே மயிரும் மனிதனுடைய உயிரை அவனுடைய மகிமையைக் குறிப்பிட்டு நின்றது. இப்படியாக சிம்சோனின் மயிரில் அவன் பலம் அடங்கியிருந்ததாக கருதப்பட்டது.

நசரேயர்கள், திராட்சைரசம் பருகாதிருப்பதன் மூலம் கானானிய விவசாய வேளாண் கலாச்சாரத்திற்கு நேரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ரேகாபியர்


இராஜாக்களின் காலத்தில் ரேகாபியர் என்னும் ஒரு வகுப்பாரும் தேவனாகிய கர்த்தரின்மேல் பக்தி வைராக்கியமுள்ள ஒரு கூட்டம் எழுந்தனர் என வேதத்தில் காண்கிறோம். ஆகாப் வீட்டாரால் ஏற்பட்ட பாகால் வழிபாட்டை அகற்றுவதில் யெகூவுக்கு துணையாயிருந்தது யோனதாபின் தகப்பன் ரேகாப் என்பதாக காண்கிறோம் (2ராஜாக்கள்: 10:15-27).

பிற்பாடு, இப்பெயரானது நாடோடி வாழ்க்கையை ஆதரித்த நசரேயரைப் போன்றதோர் கூட்டத்தாரைக் குறிப்பிட்டு நின்றது. இவர்கள் தேவனாகிய கர்த்தருடைய வழிபாட்டு ஆதரவாளர்கள். இக்கூட்டத்தாரைப்பற்றி நமக்கு கிடைக்கும் விவரமெல்லாம் எரேமியா: 35 ஆம் அதிகாரத்தில் அடங்கியுள்ளது. நேபுகாத்நேச்சார் படையெடுப்பின்போது இவர்கள் எருசலேமில் அடைக்கலம் புகுந்தனர் என அறிகிறோம். எரேமியா: 35:11 – “ஆனாலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்”.

ரேகாபியர்கள் மற்ற வேளைகளில் வனாந்தரங்களில் நாடோடிக் கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வந்தனர் என தெரிய வருகின்றது. இவர்கள் வாழ்க்கை ஒழுங்கை ரேகாபின் குமாரன் யோனதாப் வகுத்தான் என்றும், இவ்வொழுங்கின்படி இம்மக்கள் வீடுகளைக் கட்டாமலும், விதை விதையாமலும், கூடாரங்களில் பரதேசிகளாய் வாழ்ந்து வந்தவரென்றும், இவர்கள் திராட்சரசம் குடிப்பதில்லையென்றும் அறிகிறோம் (எரேமியா: 35:6-10). எரேமியாவின் காலமளவும் இக்கூட்டத்தார் இந்த ஒழுங்குகளை தவறாது கைக்கொண்டு வாழ்ந்து வந்தனரென்று அறிகிறோம்.

நசரேயர் மற்றும் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து இந்த ரேகாபிய கூட்டத்தாரும் இஸ்ரவேல் மார்க்கத்துடன் அல்லது யூத மதத்திற்குள் முழுவதுமாக கானானிய கலாச்சாரம் கலந்து விடாதபடி அதனைக் காத்தனர் என கூறலாம். அது மட்டுமல்ல… இஸ்ரவேல் மார்க்கம் வேரூன்றி நிலைத்திருக்கிறதென்றால் அதற்கு இந்த நசரேயர்களும், ரேகாபியரும், தீர்க்கதரிசிகளுமே காரணம் என சொல்லாம்.