இசைவிருந்தால் அசைவுண்டு
இன்றைய தியானத்தின் தலைப்பு: “இசைந்து போகுதல்”.
இந்த வார்த்தையின்
படி மனிதனுடைய வாழ்வு இல்லாதபடியானால்தான் மனிதனுடைய வாழ்வில் இவ்வளவு பிரிவுகளும்
பிளவுகளும் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகின்றது. கணவன் மனைவி இசைந்துபோக வேண்டும்.
இசைவு இல்லாதபடியினால் மனமுறிவு ஏற்பட்டு பின்பு, மணமுறிவுக்கு வந்து நிற்கிறார்கள்.
மாமியார் மருமகள் இசைந்து போக வேண்டும். இவர்களுக்குள் இசைவு இல்லாதபடியினால் சண்டை
சச்சரவு ஏற்பட்டு, அதனால் கூட்டுக் குடும்பங்கள் சிதறி விடுகிறது. மேலாளருக்கு, பணியாளர்
இசைந்து போக வேண்டும். இவர்களுக்குள் இசைவு இல்லாதபடியினால் பணிமாற்றம், இடமாற்றம்
இல்லாவிடின் பணி நீக்கம் கூட ஏற்படுகிறது.
நமக்குள் இசைவு என்கிற இசைந்து (இணங்கிப்) போகிற சுபாவம் ஏற்பட
வேண்டும். பிரசங்கி: 10:4- “… இணங்குதல் பெரிய
குற்றங்களையும் அமர்த்திப்போடும்”. அப்படி இல்லாவிடின் அனைத்து பிரிவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும்
அதனால் ஏற்படுகிற பின்விளைவுகளுக்கும் நாமே பொறுப்பேற்க ஆயத்தமாயிருக்க வேண்டியதாகி
விடும்.
யாக்கோபு: 3:17 – “பரத்திலிருந்து வருகிற ஞானமோ … இணக்கமுள்ளதாயும், … மாயமற்றதாயுமிருக்கிறது”.
1பேதுரு: 3:8 – “மேலும்,
நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும்,
மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து…”
என்று வேதம் சொல்கிறபடியினால்… நாம் எதிலெதிலெல்லாம் இசைந்து போகவும், இணங்கிப் போகவும்
வேண்டும் என்பதை தொடர்ந்து தியானிப்போம் வாருங்கள்.
1.
தலைவனுக்கு
ஆயுததாரியின் இசைவு: (யோனத்தானும் ஆயுததாரியும்)
1சாமுவேல்: 14:7 – “அப்பொழுது ஆயுததாரி அவனைப்பார்த்து:
உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம்
செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய
மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்”.
ஆயுததாரி:
அக்காலத்தில் அரசர்களுக்கும், படைத்தளபதிகளுக்கும் உதவியாக ஆயுததாரி
என்றொருவனை நியமித்திருப்பார்கள். அவனது வேலை – யுத்த களத்தில், தான் சேவகம் பண்ணும் தலைவனுக்குரிய
ஆயுதங்களை தடையின்றி விநியோகிப்பதுதான். அதுமட்டுமல்ல… தன்தலைவனை பின்பற்ற வேண்டும்.
இசைந்து போக மனதாயிருக்க வேண்டும். தலைவனுக்குரிய போர் ஆயுதங்கள் (ஈட்டி, பட்டயம்,
அம்புகள்) அனைத்தையும் சுமந்து கொண்டு, தலைவன் கேட்கிற எவ்வித ஆயுதத்தையும் எடுத்துக்
கொடுக்க வேண்டும். தலைவனுடைய சொல்லுக்கு மறு சொல் பேசாமல் இசைந்து செல்ல வேண்டும்.
மொத்தத்தில் தலைவனுடைய நிழலைப்போலவே அவனைப் பின்பற்ற வேண்டும். இதுதான் ஆயுததாரியின்
வேலை. வேலையே சுபாவமாக மாற வேண்டும்.
யோனத்தானும் ஆயுததாரியும்: யோனத்தானுக்கு அமைந்த ஆயுததாரி உண்மையிலேயே
நல்ல ஆயுததாரிதான். அவனது வாயின் வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை நன்கு கவனித்து வாசித்துப்
பாருங்கள்… “உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம்
செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய
மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன்”
இந்த ஆயுததாரி போல ஒரு இல்லத்தரசியோ, ஒரு மருகளோ, ஒரு பணியாளரோ,
ஒரு விசுவாசியோ சொல்வாரானால் அந்த குடும்பம், அந்த அலுவலகம், அந்த சபை எவ்வளவு சிறப்பாக
அமையும்?!! என்பதை நினைத்துப் பாருங்கள். இப்படிப்பட்டவர்களால் அவ்விடங்களில் அமைதியும்,
இளைப்பாறுதலும், சந்தோஷமும் கரைபுரண்டு ஓடாதா?! அவ்விடங்களில் ஆசீர்வாதம் பெருகாதா?!
இப்படிப்பட்ட இசைவும், இணங்கிப் போகிற குணமும் ஏற்பட ஜெபிப்போம்.
ஒரு கணவனுக்கு மனைவி ஒரு நல்ல ஆயுததாரியாக மாறட்டும். ஒரு குடும்பத்திற்கு
மருமகள் மாமியாருக்கு ஒரு நல்ல ஆயுததாரியாக மாறட்டும். ஒரு மேலாளருக்கு ஒரு பணியாளர்
நல்ல ஆயுததாரியாக மாறட்டும். ஒரு போதகருக்கு ஒரு விசுவாசி ஒரு நல்ல ஆயுததாரியாக மாறட்டும்.
அப்பொழுது அவ்விடங்களிலெல்லாம் ஆசீர்வாதமும், சந்தோஷமும், இளைப்பாறுதலும் பெருகட்டும்.
ஆமென் அல்லேலூயா!
2. பக்தி வைராக்கியமுள்ளவர்களின் இசைவு: (யெகூவும் யோனதாபும்)
2ராஜாக்கள்: 10:15,16 – “அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது,
தனக்கு எதிர்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல
உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால்,
உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல்
ஏறி வரச் சொல்லி, நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக
எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல்
ஏற்றினார்கள்”.
ஒரு பக்திவைராக்கியமுள்ளவன் மற்றொரு பக்தி வைராக்கியமுள்ளவனை கண்டறிவான்
அறிவது மட்டுமல்ல… அவனோடு இணைந்து கொள்வான். ஐக்கியமாயிருப்பான். இசைந்து செல்வான்.
இணங்கிப் போவான். அதுதான் இங்கு நடந்திருக்கிறது. கர்த்தருக்காக பக்தி வைராக்கியமுள்ள
யெகூ, மற்றொரு பக்தி வைராக்கியமுள்ள யோனதாபை வழியிலே சந்திக்கும்போது உடனே கண்டு கொண்டான்.
கர்த்தருடைய பிள்ளைகள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அளவில்லாத சந்தோஷம் உண்டாவதுபோல
யெகூவுக்குள்ளும் உண்டானதில் வியப்பில்லை. அதுதான் ஆவிக்குரியவர்களின் சுபாவம். இயேசுவின்
தாயாகிய மரியாளும், யோவான்ஸ்நானகனுடைய தாயாகிய எலிசபெத்தும் சந்தித்துக் கொண்டபோது
ஏற்பட்ட சந்தோஷம் அதுதான். இருவரின் கருவறைகளுக்குள் ஏற்ப்பட்ட சந்தோஷமும் என்னவென்று
சொல்ல… பரிசுத்தவான்களின் சந்திப்பு பரலோக மகிழ்ச்சிகளைக் பூமிக்குக் கொண்டு வரும்.
யெகூவின் பக்தி வைராக்கியத்தை யோனதாப் அந்நாட்களில் கண்டான். விக்கிரகாராதனையையும்,
பூசாரிகளையும்
நிக்கிரகமாக்கி தேசத்தை தூய்மைப்படுத்தினான். யெகூ, யோனதாபின் சந்திப்பும், இசைவும்
விக்கிரகங்களை அகற்றியது. யோவான்ஸ்நானகன், இயேசுவின் கருவறை சந்திப்பு உலகில் உள்ள
ஆத்துமாக்களை ஆதாயம் செய்தது. ஆயத்தப்படுத்தியது.
அதுபோல ஒரு பக்திவைராக்கியமுள்ள விசுவாசியும், மற்றொரு பக்தியுள்ள
விசுவாசியும் ஒருவரையொருவர் வழியிலோ, அலுவலகத்திலோ, வீட்டிலோ சந்தித்துக் கொள்ளும்போது
… ஒருவருக்கொருவர் தங்களது பக்தி வைராக்கியத்தை ஊழிய ஸ்தலங்களிலோ, மிஷினெரி பணித்தலங்களிலோ
மற்றும் சபையினிலோ காட்டும்போது அது எவ்வளவு பெரிய மாற்றத்தை அல்லது எழுப்புதலை தேசத்திலும்,
சபைகளிலும் கொண்டு வரும்?!
யெகூ, யோனதாப்போல சபையிலே நாம் பக்தியுள்ள யாவரோடும் ஐக்கியமாக,
இணக்கமாக, இசைவாக இருக்கிறோமா? போதகரோடு விசுவாசியும், கணவனோடு மனைவியும், விசுவாசியோடு
விசுவாசியும் இணக்கமாக, இசைவாக இருந்து பக்தி வைராக்கியத்தை நமது பணித்தளங்களில் வெளிப்படுத்தினால்
அது எவ்வளவு பெரிய எழுப்புதலைக் கொண்டு வரும் தெரியுமா? இவ்வகையான எழுப்புதல் வரும்படி
ஜெபிப்போம்.
3. ஆலயத்தின் வேலையைச் செய்யும்படியான இசைவு:
எஸ்றா: 3:9 – “அப்படியே, தேவனுடைய
ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும்,
கத்மியேலும் அவன் குமாரரும், யூதாவின்
குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதரராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்”.
தனி ஒரு மனிதன் தனக்காக ஒரு வீட்டைக் கட்டவோ, கட்டிய வீட்டை பழுது
பார்க்கவோ அவனால் முடிகிறபோது… ஏன் அனைவரும் சேர்ந்தும்கூட ஒரு ஆலயத்தின் வேலைகளை பழுது
பார்க்கவோ, புதிதாக கட்டவோ முடிவதில்லை? காரணம் இதுதான். ஒருவருக்குள்ளும் இசைவு என்பது
இல்லாமற்போனதே.
எஸ்றா, நெகேமியாவின் காலங்களில் ஆலயத்தை பழுதுபார்த்து மீண்டும்
புதுப்பித்துக் கட்ட அனைவரும் இசைந்தனர். தங்களது நேரத்தை ஒதுக்கி, தங்களையே அவ்வேலைகளில்
முழுமனதோடு ஈடுபடுத்திக் கொண்டனர். இதெல்லாம் ஊழியக்காரருடைய வேலைகள் என அவிசுவாசமாய்
பேசவோ, புறக்கணிக்கவோ இல்லை. அதைச் செய்யத்தான் சன்பல்லாத்தும், தொபியாவும் இருக்கிறார்களே!?.
அதைச் செய்ய இயேசுவின் இரத்தத்தத்தால் மீட்கப்பட்ட ஒரு விசுவாசி தேவையில்லை. அந்நாட்களில்
ஆலயத்திற்காக தங்களது உடமைகளை, நிலங்களை, வீடுகளை இழந்தனர். எவ்வளவு பெரிய தியாகத்தினால்
இடிந்துபோன கர்த்தருடைய ஆலயம் நிமிர்ந்து நின்றது என பாருங்கள். தங்களை ஆலயத்திற்காக
தியாகம் பண்ண ஒரு இசைவு, ஒரு இணக்கம் தேவை. அது இன்றையத்தினம் நம்மிடம் உண்டா? இருக்குமானால்,
நாம் ஆராதிக்கும் ஆலயத்தை நாமே கட்ட வேண்டும். நாமே புணரமைக்க வேண்டும். நாமே பழுது
பார்க்க வேண்டும். அதற்காக பக்தி வைராக்கியமுள்ளவர்களை நம்மோடு சேர்த்துக்கொள்ள, யெகூ,
யோனதாப் போல செயல்பட அர்ப்பணிப்போமா?! சபையார் அனைவருக்குள்ளும் ஆலயத்தின் வேலைக்கான
இசைவும், இணக்கமும், தியாகமும் ஏற்படும்படி ஜெபிப்போமா?!
யாரோ தியாகத்தோடு கட்டிய ஆலயத்தில் நாம் சுதந்தரமாய், சந்தோஷமாய்
இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று, ஆனந்தக் கூச்சலோடு ஆராவாரத்தோடு ஆராதித்து இளைப்பாறுதலை
பெறுகிறோமே! நாம் ஆராதிக்கும் ஆலயத்திற்கு, நாம் இரட்சிக்கப்பட, கர்த்தருடைய வல்லமையை
ருசிக்க, ஆவிக்குரிய மன்னாவை அனுதினமும் பெற்றுத் தருகிற ஆலயத்திற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்?!
என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் இருக்கும் இடம் சிறிய கிராமமாகவோ, பேரூராட்சியாகவோ,
ஊராட்சி ஒன்றியமாகவோ, பட்டணமாகவோ இருக்கலாம். ஆனால், ஆலயத்தின் மகிமை அந்த ஊரைவிட மிகச்
சிறப்பாக இருக்க வேண்டாமா? கிராமங்களில் ஐம்பது வீடுகள் இருக்கிற இந்திய தேசத்தில்
ஒவ்வொரு விக்கிரக கோவில்களின் கோபுரங்களும் வானளாவாக காணப்படுகிறதே! கோபுரம் கட்ட வேண்டாம்.
ஒரு நல்ல ஆலயம் கர்த்தருக்காக எழும்ப வேண்டாமா?
எத்தனையோ கிராமங்களில் உள்ள சபைகளில் உட்கார நாற்காலிகள், ஒலிப்பெருக்கிகள்,
மின்வசதிகள், பாய்கள் கூட இல்லாத நிலைமை காணப்படுகிறதே… சொந்த நிலம் இல்லை, சொந்த கட்டிடங்கள்
இல்லை… இன்தானும்வீ அநேக சபைகளுக்தைகு வாடகை இடங்ப்போகள்லதான்.... நாமோ அரண்மனை போன்ற வசதி நிறைந்த பங்களா, வீடுகளில் வாழ்ந்து வருகிறோமோ….
நல்லதுதான்... வேண்டியதுதான் … ஆனால், தாவீதுக்கு இருந்த அந்த ஆலயத்தின் பாரம் நமக்கு
ஏன் உண்டாகவில்லை?! நம்மிடம் தேவனாகிய கர்த்தர்
பூமிக்குரிய
ஆசீர்வாதங்களை தாராளமாக தந்து ஆசீர்வதித்திருப்பாரானால்… நீங்கள் ஆராதித்து வரும் ஆலயத்தின்
தேவைகளை சந்திக்க முன் வாருங்கள். ஆகாய்: 1:4 – “இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது,
நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?” என
ஆகாய் தீர்க்கதரிசி மூலமாய் கர்த்தர் உரைக்கிறாரே. சிந்தித்துப் பார்த்து செயலாற்றுவோமா?!
4. ஜெபத்திற்கு ஒருமன இசைவு:
அப்போஸ்தலர்: 1:14 – “அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின்
தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும், வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்”.
ஜெபத்தில் ஒரு இசைவு வேண்டும். அப்பொழுதான் ஜெபம் கேட்கப்படும்.
ஒருமன இசைவு இல்லாத ஜெபம் பயனற்றது. தனி ஜெபம்தான் செய்வேன் என்று சிலர் சொல்லக்காரணம்…
யாரோடும் இசைவாக இல்லையென பொருள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இசைவு இருக்காது. சபையாருடன்
இசைவு இருக்காது. போதகரோடு இசைவு இருக்காது. அதையெல்லாம் மனதிற்குள் மறைத்து வைத்து,
பிரதர்… நான் தனி ஜெபம்தான் ஏறெடுப்பது எனது வழக்கம் என்பர். இப்படிப்பட்டவர்களின்
ஜெபம் கேட்கப்படாது என்பதை அப்படிப்பட்டவர்கள் அறிய வேண்டும். தனி ஜெபம் ஏறெடுப்பது
தவறல்ல. அனைவரோடும் இசைவாக இருந்து தனி ஜெபம் ஏறெடுப்பது நலம்.
ஆதித்திருச்சபையார் யாவரோடும் இசைந்து ஒருமனப்பட்டு ஜெபத்திலே உறுதியாய்
தரித்திருந்தார்கள். அவ்விடங்களிலெல்லாம் அசைவு உண்டானதென்று வேதத்தில் வாசிக்கிறோம்.
எதனால்? இசைவு இருக்கிற இடத்தில் அசைவு உண்டாகும்
என்பதை மறந்து விடாதீர்கள். மத்தேயு: 18:19 – “அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள்
வேண்டிக் கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால்,
பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச்
சொல்லுகிறேன்”.
சபையில் நடக்கும் உபவாச ஜெபங்கள், கண்விழிப்பு ஜெபங்கள், விசேஷித்த
ஜெபங்களிலும் வாய்ப்பிருந்தால் கூடுமானவரை இசைந்து ஜெபிக்க அர்ப்பணியுங்கள். அப்பொழுது
உங்கள் மூலமாக விசுவாச குடும்பங்கள், சபை ஊழியங்கள் மட்டுமல்ல தேசத்தில் ஒரு எழுப்புதல்
ஏற்பட உங்களை தேவன் ஆசீர்வாதமாக்குவார். உங்களது விசுவாசமுள்ள ஜெபம் எத்தனையோ பிணியாளிகளை
சுகமாக்கும். எத்தனையோ விசுவாச குடும்பங்கள் உயிர்மீட்சி அடையும். அப்பொழுது உங்களது
ஜெபத்தின் வலிமையை நீங்கள் உணரும்படி ஆவியானவர் கிரியை செய்வார்.
இல்லத்தரசிகளே! உங்கள் கணவரோடு ஜெபத்தில் ஒருமன இசைவோடு இருங்கள்;
குடும்பத்தலைவர்களே! உங்கள் மனைவியோடு ஜெபத்தில் ஒருமன இசைவோடு இருங்கள்; மாமியார்களே!
உங்கள் மருமகள்களோடு வேற்றுமை பாராமல் ஜெபத்தில் ஒருமன இசைவோடு இருங்கள்; விசுவாசிகளே!
சபையாரோடும், போதகரோடும் ஜெபத்தில் ஒருமன இசைவோடு இருங்கள்… எழுப்புதல் வராமல் எங்கு
போய்விடும் என்று அதையும்தான் பார்த்து விடுவோமே!!!
5. தேவாலயத்தில் தரித்திருப்பதில் இசைவு:
அப்போஸ்தலர்: 2:46 – “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து…” – அக்கினிமயமான
நாவுகளால் பற்பல பாஷைகளால் நிரப்பப்பட்டார்களே (அப்போஸ்தலர்: 2:1-4).
லூக்கா: 2:36,37 – “ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய
அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல்
ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும் அதிக வயது சென்றவளுமாயிருந்தாள். ஏறக்குறைய எண்பத்துநாலு
வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல்,
இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்”. - அதினிமித்தம்
குழந்தை இயேசுவைக் கண்டாளே
அப்போஸ்தலர்: 13:1,2 – “அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும்,
சிரேனே ஊரானாகிய லூகியும் … … கர்த்தருக்கு
ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது … …. பரிசுத்தாவியானவர் திருவுளம்
பற்றினார்”. இவர்களை ஊழியத்திற்கு என பிரித்தெடுத்தாரே.
யாத்திராகமம்: 33:11 – “நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய
பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை
விட்டுப் பிரியாதிருந்தான்” – அதனால், தேவனாகிய கர்த்தர் தம் ஜனத்திற்கு தலைவனாக
மோசேக்கு பின்பு யோசுவாவைத் தெரிந்தெடுத்தாரே.
1சாமுவேல்: 2:18 – “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு
முன்பாகப் பணிவிடை செய்தான்” – அதினிமித்தம் சமஸ்த இஸ்ரவேலுக்கு மாபெரும் தீர்க்கதரிசியாக
தெரிந்து கொண்டாரே.
மேலே கண்ட வசனங்கள் அனைத்தும் அனைத்து தரப்பினரும் அதாவது, சிறியோர்
முதல் முதியோர் வரை கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி தாபரித்தார்கள். தேவாலயத்தை வாஞ்சித்தார்கள்
என்பதைக் காட்டுகிறது.
அதனால் அவர்கள் எப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றார்கள் என்பதை அறிந்தோமல்லவா?! இந்த ஞாயிறு ஆராதனைக்கு வந்தால் அடுத்த ஞாயிறு ஆராதனைக்குத்தான் நம்மில் அநேகர் ஆலயத்தை நினைவுகூறுவோம். இடைப்பட்ட நாட்களில் ஆலயத்தைப்பற்றிய நினைவு அறவே இராது. தாவீது அப்படிப்பட்டவன் அல்ல. சங்கீதம்: 84:2 – “என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவணமுமாயிருக்கிறது…” என்கிறார்.
அதனால் அவர்கள் எப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றார்கள் என்பதை அறிந்தோமல்லவா?! இந்த ஞாயிறு ஆராதனைக்கு வந்தால் அடுத்த ஞாயிறு ஆராதனைக்குத்தான் நம்மில் அநேகர் ஆலயத்தை நினைவுகூறுவோம். இடைப்பட்ட நாட்களில் ஆலயத்தைப்பற்றிய நினைவு அறவே இராது. தாவீது அப்படிப்பட்டவன் அல்ல. சங்கீதம்: 84:2 – “என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவணமுமாயிருக்கிறது…” என்கிறார்.
தேவாலயத்தில் அநுதினமும் தரித்திருந்த சிமியோன் ஆண்டவர் இயேசுவை
தரிசிக்கவும், அவரைக் தன் கைகளால் தூக்கி ஜெபித்து ஆசீர்வதிக்கவும் கிருபை கிடைத்ததே
(லூக்கா: 2:25). ஆலயத்திலே தங்கி தாபரிப்பது வாழ்வில் எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை நமக்கு
கொண்டு வருகிறதென்பதை நாம் அறிந்துணர்வோமாக.
ஆலயத்தில் தங்கியிருப்பது வீண் அரட்டை அடிப்பதற்காக அல்ல… வீண்
அலுவலர்களாக நேரத்தைப் போக்க அல்ல… மாறாக, வேதத்தில் உள்ள பரிசுத்தவான்கள் – அபிஷேகம்
பெற்றுக் கொள்ளவும், உபவாசிக்கவும், ஆராதனை செய்யவும், பணிவிடை செய்யவும் சபையிலே,
சபையாகிய கூடாரத்திலே தங்கி தாபரித்தார்கள். இன்றோ … ஆலயங்கள் எப்படி இருக்கிறது? எப்படி
அதை உபயோகப்படுத்திக் கொள்கிறவர்களாய் இருக்கிறோம்? பிதாவின் வீட்டைக் குறித்த பக்தி
வைராக்கியம் உங்களில் பற்றியெரிகிறதா?
நம்முடைய ஓய்வுநேரங்களில் நம் ஆலயத்தில் வாசம்பண்ண, குடும்பமாய்
சென்று உபவாசிக்க, அபிஷேகம் பெற்றுக்கொள்ள, ஜெபிக்கவும், கர்த்தரை ஆராதிக்கவும் வாரத்தின்
இடைப்பட்ட நாட்களில் தேவாலயம் கடந்து செல்ல அர்ப்பணிப்போமாக. வெறும் ஞாயிற்றுக்கிழமை
விசுவாசியாக இராமல், இடைப்பட்ட நாட்களில் மறவாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாஞ்சையோடு
ஆலயத்தை நாடிச் செல்வீர்களானால் தேவனாகிய கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.