நவம்பர் 14, 2016

புது உடன்படிக்கை புதுப்பித்தல் பண்டிகை - Festive New Covenant Renewal

Image result for Deut:31:9-13

புது உடன்படிக்கை புதுப்பித்தல் பண்டிகை

Festive New Covenant Renewal

“உடன்படிக்கை புதுப்பித்தல் பண்டிகை” என்ற ஒன்று இஸ்ரவேலரிடையில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சில ஆதாரங்கள் காணப்படுகின்றன. யோசுவா: 24 ஆம் அதிகாரத்தில் “உடன்படிக்கை புதுப்பித்தல்“ நிகழ்ச்சி ஒன்றைக் காண்கிறோம்.

ஏழு ஆண்டுக்கு ஒருமுறை விடுதலை வருஷம் ஆசரிக்கப்படும்போது, கூடாரப்பண்டிகையில் இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய சந்நிதியில் நிற்க, நியாயப்பிரமாணம் அனைவரும் கேட்க வாசிக்கப்பட வேண்டும். பிள்ளைகளும் பெரியவர்களும் அவற்றைக் கேட்டு அவற்றின்படி நடக்க கவனமாயிருக்க வேண்டும் என கட்டளையிடப்பட்டது. ஆதாரத்திற்கு … கீழ்க்கண்ட வேத வாக்கியங்களை வாசித்துப் பார்க்கவும்.

உபாகமம்: 31:9-13 – “மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச்சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லோருக்கும் ஒப்புவித்து, அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில், உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய். புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்க வேண்டும் என்றான்”.

இதற்கான மற்றுமொரு ஆதாரம்:  நெகேமியா: 8 ஆம் அதிகாரத்தில் உள்ளதை காணலாம். நெகேமியா: 8:1-3 – “ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டு வரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்கு சொன்னார்கள். அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டு வந்து, தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியான மட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவி கொடுத்தார்கள்”. நெகேமியா: 8:18 – “முதலாம்நாள் தொடங்கிக் கடைசி நாள் மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது”.

உபாகமம்: 31:11 – “அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில், உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய்” – இந்த வசனத்தின்படி “புது உடன்படிக்கை புதுப்பித்தல் பண்டிகை” யானது பின்னாட்களில் கூடாரப்பண்டிகையுடன் இணைக்கப்பட்டது என்பதை நாம் அறிய முடிகிறது. எனவேதான், நெகேமியாவின் நாட்களில் ஏழுநாள் பண்டிகையில் தினம்தினம் நியாயப்பிரமாணப்புத்தகத்தை அனைவரின் காதுகள் கேட்க வாசித்தார்கள் (நெகேமியா: 8:18) என அறிந்து கொள்கிறோம். இதையே நாம் “புது உடன்படிக்கை புதுப்பித்தல் பண்டிகை” என்கிறோம்.

இவை தவிர … வேறு எவ்வித சூழ்நிலைகளில் வேதப்பிரமாணங்கள் அல்லது வேத வார்த்தைகள் வாசிக்கப்பட்டது?


1.   எரேமியாவின் நாட்களில் …

எரேமியாவின் நாட்களில், ராஜாவும், இஸ்ரவேல் ஜனமும் வழி தப்பி நடக்கையில், அவர்கள் பொல்லாத வழிகளை விட்டு திருப்பும்படி தன் உதவிக்காரனாகிய பாரூக்கை வாசிக்க எரேமியா கேட்டுக் கொண்டான். அவன் சென்று அனைவரின் செவிகள் கேட்க வாசித்தான் என காண்கிறோம். (எரேமியா: 36:6-21)

2.   ஆபகூக் தீர்க்கதரிசியின் நாட்களில் …

ஆபகூக்: 2:2,3 – “நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை. குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை”.

3.   இயேசு கிறிஸ்துவின் நாட்களில் …

லூக்கா:4:16,17 – “தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது …”.

4.   அப்போஸ்தலரின் நாட்களில் …

அப்போஸ்தலர்: 13:27 – “எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்”

5.   பூர்வகால நாட்களில் …

அப்போஸ்தலர்: 13:27; 15:21 – “மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்”.  
 
6.   புதிய ஏற்பாட்டு நாட்களில்

2கொரிந்தியர்: 3:2 – “எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே”. 

வேதத்தை வாசிக்க கேட்டோ அல்லது வேதத்தை வாசித்து வாசித்தோ இப்பொழுது நிருபமாகவே மாறிப்போனார்கள். வசனமே வாழ்க்கையாக மாறிப்போனது. இப்படிப்பட்டவர்களைப் பார்த்தால் வசனத்தைப் பார்க்க வேண்டிய அவசியமிராது. அந்தளவுக்கு சாட்சியின் வசனத்தை கைக்கொள்ள பழகி விட்டவர்கள். வசனமின்றி வாழ்க்கையில்லை. அநேகர் சாட்சியின் வசனம் நிறைந்த வாழ்க்கையின்றி, வெறும் ஆசாரமாக மாறிவிட்ட நிலையில், அந்நாட்களில் , சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் – என்று ஊழியர்கள் சாட்சி பகரக்கூடிய அளவில் வசனமாகவே வாழ்ந்துவிட்ட பரிசுத்தவான்களை நாம் என்னவென்று சொல்வது?! ஆமென்!

     7.   கிளை சபைகளில் …  

கொலோசெயர்: 4:16 – “இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்”.  

புதிய ஏற்பாட்டு நாட்களில் ஆவிக்குரியவர்களாகிய நாம் … ஆவிக்குரிய சபைகளில் இருக்கின்ற நாம் … வருடத்திற்கு இருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது ஒரு ஏழு ஏழு நாட்கள் இரவும் பகலும் பரிசுத்த வேதாகமத்தை ஒருமணி நேரத்திற்கு ஒருவர் வீதம் சபையிலே வாசிக்க செய்யலாம். அதன்மூலம்  “புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு” அனைவரும் ஆசீர்வாதத்தை பெறலாமல்லவா?

வாசிப்பினால் ஏற்பட்ட எழுப்புதல்:


நெகேமியா: 9:3 – “அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள்”.

1.   தங்கள் நிலை – பரிசுத்தவான்களின் நிலையில் நின்றார்கள்
2.   பாவ அறிக்கை – இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் மனமாற்றமடைந்தார்கள்
3.   கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள் – அநேக நாட்களாக மறந்த நிலையில்

எவ்வளவு பெரிய மாற்றம்?!! மாற்றங்களை தருவதே எழுப்புதல்!!

அப்போஸ்தலர்: 17:11 – “அந்தப்பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்”.

எனக்கன்பானவர்களே!

இந்நாட்களில் நமக்குள்ளும், நமது சபைகளுக்குள்ளும், நமது கிறிஸ்தவ சமூகத்திற்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு மாற்றம் அல்லது எழுப்புதல் உண்டாக ஜெபிப்போம்! செயல்படுவோம்! ஆதிதிருச்சபையார் போலவும், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் “புது உடன்படிக்கையை புதுப்பித்தல் பண்டிகை” மூலம் வேதகட்டளைகளை வேத பிரமாணங்களை, வேதவார்த்தைகளை கற்றுக்கொடுக்க திட்டமிட்டதுபோல நாமும் செயல்படுவோம்! நற்குணசாலிகளாய் மாறுவோம்! கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!