நவம்பர் 19, 2016

உறவாடுதலா? உபயோகப்படுதலா?

Image result for hebrews 11 1 kjv

உறவாடுகிறோமா? உபயோகப்படுகிறோமா?


திறவுகோல்வசனம்: எபிரேயர்: 11:32 – “பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது”.

இந்த வசனத்தில் ஆறு பேரை எபிரேய நிருபக்காரன் குறிப்பிடுகிறார். இந்த ஆறு பேரில் தாவீது ஒருவன் மட்டும் அரசன். தாவீதைத் தவிர மற்ற ஐந்து பேரும் நியாயாதிபதிகள். இதில் சிம்சோன், சாமுவேல் மட்டும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். காரணம் என்ன? அதைத்தான் இப்பகுதியில் நாம் தியானிக்கப்போகிறோம்.

தனிச்சிறப்பிற்கு காரணம் இவர்கள் இருவரும் நசரேய விரதம் பூண்டவர்கள். இதில் சாமுவேல் – ஆசாரியனாகவும், தீர்க்கதரிசியாகவும், நியாயாதிபதியாகவும் செயல்பட்டான். நசரேயனாகவும் காணப்பட்டான். 

இஸ்ரவேல் மக்கள் சமயத்திற்கேற்றவாறு, காலத்திற்கேற்ப கலாச்சாராம் விட்டு கலாச்சாரம் மாறிப்போக எத்தனித்தாலும், நசரேய விரதம் பூண்டவர்கள் ஒருபோதும் கர்த்தருடைய வேதகலாச்சாரத்தை விட்டு பாரம்பரியத்தை விட்டு பக்திமார்க்கத்தைவிட்டு மாறிப்போகவோ, விலகிப்போகவோ மாட்டார்கள். சகல இஸ்ரவேல் ஜனத்தினின்று தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டு கர்த்தருக்குப் பிரியமானவர்களாகத்தான் வாழ்வார்கள். அதுதான் நசரேய விரதங்காப்பவர்களின் குணாதிசயம்.

ஒருகாலத்தில் நசரேயர் மற்றும் தீர்க்கதரிசிகளும் சேர்ந்து, இஸ்ரவேல் மார்க்கத்துடன் அல்லது யூத மதத்திற்குள் முழுவதுமாக அக்கால கானானிய கலாச்சாரம் மற்றும் புறஜாதிய கலாச்சாரம் கலந்து விடாதபடி அதனைக் காத்தனர் என கூறலாம். அது மட்டுமல்ல… இஸ்ரவேல் மார்க்கம் வேரூன்றி நிலைத்திருக்கிறதென்றால் அதற்கு இந்த நசரேயர்களும், தீர்க்கதரிசிகளுமே காரணம் என சொல்லாம்.

சிம்சோன் – தேவனால் உபயோகப்படுகிறவனாயிருந்தான்.
சாமுவேல் – தேவனோடு உறவாடுகிறவனாயிருந்தான்.

நாம் தேவனால் உபயோகப்படுத்தப்படுகிற பாத்திரமாயிருக்கிறோமா? அல்லது தேனோடு உறவாடுகிற பாத்திரவானாயிருக்கிறோமா? அல்லது பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படுகிற பாத்திரமாயிருக்கிறோமா?

கர்த்தருக்காக உபயோகப்படுகிற பாத்திரமாயிருப்பது சரிதான். அதற்குப் பிறகு என்ன? தூக்கியெறியப்படுகிற நிலைமைக்குள் இருக்கிறோமா? அல்லது தொடர்ந்து உபயோகப்படவும் உறவாடவும் என்கிற நிலைமைக்கு வருகிறோமா?!

உபயோகமா? உறவாடுதலா? எது முக்கியம்?


சாமுவேல் - ஆசாரியனாகவும், தீர்க்கதரிசியாகவும், நியாயாதிபதியாகவும், நசரேயனாகவும் காணப்பட்டான். சாமுவேலின் தனிச்சிறப்பைப் பாருங்களேன். 

தேவனோடு உறவாட ஆசாரிய சேவை; தேவனுடைய பட்சத்திலிருந்து மக்களுக்கு பணியாற்ற தீர்க்கதரிசன ஊழியம்; ஜனத்தை நீதிபரிபாலனம் செய்ய நியாயாதிபதி; தனிப்பட்ட வாழ்வை பரிசுத்தமாக காத்துக்கொள்ளவும், இஸ்ரவேல் மார்க்கத்துடன் அல்லது யூத மதத்திற்குள் முழுவதுமாக அக்கால கானானிய கலாச்சாரம் மற்றும் புறஜாதிய கலாச்சாரம் கலந்து விடாதபடி தடுக்க நசரேய விரதம். கர்த்தரோடு உறவாடுகிற ஒரு மனுஷனை தேவன் எவ்விதம் உபயோகப்படுத்துகிறார் என்று பாருங்கள்.

முதலாவது தேவனோடு உறவாடுங்கள். பின்பு, தேவனால் உபயோகப்படுத்தப்படுவீர்கள்.

வெறும் உபயோகத்திற்காக மாத்திரம் இருந்தால் … வேறு எவ்வித விசுவாச வாழ்வும் நம்மிடம் இராது. ஆவிக்குரிய வாழ்வு வெறுமனே வெறுமையாக போய்விடும். அதேபோல உறவாடுகிற நிலை மட்டும் போதுமானதல்ல; உறவாடுதலோடுகூட உபயோகப்படுதலும் தேவை.

நமது இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து – இரவெல்லாம் பிதாவோடுகூட உறவாடினார்; ஜெபித்தார்; பகலெல்லாம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற தம் ஊழியத்தை செய்தார். உபயோகப்பட்டார். உறவாடுதலும், உபயோகப்படுதலும் அவரது அநுதின வாழ்வில் கிரமமாய் காணப்பட்டது. நாம் அவருடைய பிள்ளைகளல்லவா?! நமது அன்றாடக வாழ்விலும் உறவாடுதலும், உபயோகப்படுதலும் கிரமமாய்க் காணப்படுமானால் … பிதாவின் சித்தம் பட்டணங்களிலும், கிராமங்களிலும் நிறைவேறுமல்லவா?! எனவே,

உறவாடுவோம்! உபயோகப்படுவோம்! கர்த்தர் உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!