சகோதரி.சாராள் நவ்ரோஜி
தமிழ்க்கிறிஸ்தவ உலகம் சகோதரி.சாராள் நவ்ரோஜி அம்மாள் அவர்களை மறந்துவிட
முடியாது. சகோதரியின் பாடல்களில் சத்தியமும், அனுபவமும், இனிமையும், எழிலும் மிளிரும்.
சிலோன் பெந்தெகொஸ்தே மிஷன் சபையில் (CPM) சகோதரி ஊழியத்திற்காக
சேர்ந்திருந்த, அந்த நாட்களில் (1960), தலைமையகமாய் விளங்கிய கொழும்புக்கு (இலங்கைக்கு)
இவர்களை சபை அனுப்பியது. அப்போதெல்லாம் இன்றிருக்கும் அளவிற்கு விமானப்பயணங்களும்,
பொருளாதார வசதிகளும் பெருகியிருக்கவில்லை.
எனவே, இலங்கை நாட்டிற்கு செல்ல, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், தனுஷ்கோடி,
மண்டபம் கேம்ப் இவற்றைக்கடந்தே இரயில் மூலம் செல்ல வேண்டும். கடல் கடக்க, கப்பல் ஏறி
தலைமன்னார், மன்னார் வழியாக கொழும்பு நகருக்குச் செல்வதுதான் அக்கால வழக்கம்.
சபைமூலம் கர்த்தர் தந்த அந்த அழைப்பினை ஏற்று, சகோதரி. அவர்கள் தனுஷ்கோடிக்குச்
செல்வதற்காக சென்னை எழும்பூர் தொடர் வண்டி நிலையத்திற்கு வந்தபோது, தனது தாயார் வழியனுப்ப
வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். தாயாரோ தென்படவே இல்லை. தொடர் வண்டியில் ஏறி
அமர்ந்தபோதும், சகோதரியின் கண்கள், தம் தாயார் தென்படுகிறார்களா எனத்தேடி துழாவிப்
பார்த்தன. தாயாரோ வரக்காணோம். வண்டியும் புறப்படத் தயாராயிற்று. தாயார் வரமாட்டார்கள்போலும்
எனத் தன்னைத் தேற்றிக்கொண்டிருந்தபோது, ஏசாயா: 49:15 வது வசனம் அவர்கள் சிந்தனையில்
மின்னியது.
தொடர் வண்டியில் இருந்தபடியே, அவர்கள் அன்று எழுதிய நம்பிக்கைப்
பாடல்தான் …
“என்னை மறவாஇயேசுநாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்”
உந்தன் தயவால் என்னை நடத்தும்”
(இந்தப் பாடலின் சரணங்களில்
ஒன்று)
“தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே"
இன்றுவரை எத்தனை கோடி நாவுகளோ இந்தப் பாடலைப் பாடுகின்றன…! மகிழ்கின்றன…!
தேறுதலடைகின்றன…!
இந்தப் பாடல் முழுவதையுமே, இப்போது ஒருதடவை பாடிப்பாருங்களேன்…!
ஒரு குழந்தை, தன் தாயின் மடியில் எவ்விதக் கலக்கமோ, பயமோ, தவிப்போ
இன்றி, மகிழ்ந்து களிகூறும் உணர்வுதான் வந்து சேரும்!
அவநம்பிக்கை, அதைரியம், பயம், சந்தேகம், கலவரம், சத்துருவின் ஆயுதங்கள்
பற்றிய திகில் எல்லாம் பறந்தோடிவிடும்!
பெராக்காவில் கூடி, ஆனந்த
முழக்கமிட்டுக் கர்த்தரைத் துதித்த யோசபாத்தின் கூட்டம்போல் மகிழ்ந்துபோவோம்!
தன் சோக அனுபவத்தில் ஒரு தெய்வீக இதமும், துணிவும் கண்ட சகோதரி
அவர்கள், ஆயிரமாயிரங்களுக்கு அந்த அனுபவத்தைக் கொடுக்கவும் கிருபை பெற்றிருந்தார்கள்.
சகோதரி அவர்கள் இந்தப் பாடலை எழுதவேண்டுமென விரும்பிய பரிசுத்த
ஆவியானவர்தான். அவர்கள் தாயாரைச் சற்று மறைத்து வைத்தாரோ என்னவோ?!
வெனு நேரத்துக்கு முன்பாகவோ தொடர்வண்டி நிலையம் வந்துவிட்ட தாயார்,
வேறொரு நடைமேடையில் மகளுக்குக் காத்திருந்துவிட்டு, பின்பு தகவலறிந்து வண்டி நகரும்போதுதான்,
மகள் இருக்கும் சரியான இடம் வந்து, கரம் அசைத்து மகளை வழியனுப்பினார்கள்.
ரோமர்: 8:2; பிலிப்பியர்: 1:12 வசனங்களை ஒரு தடவை வாசித்து விடுங்களேன்!
பவுல் சொல்கிறார்: “எனக்கு சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று…!”
எனவே, ஊழியருக்குச் சம்பவிப்பவைகள் எவையாயினும், (அவை அவர்களுக்கு
சாதகமானவையோ, பாதகமானவையோ) அனைத்தும் நன்மைக்கே….! கர்த்தரின் நாம மகிமைக்கே…!