லேவியராகமம்: 23:15-21
ஏழு வாரங்களின் பண்டிகை: யாத்திராகமம்: 34:22; உபாகமம்: 16:10-16; 2நாளாகமம்: 8:13.
முதற்பலன் அசைவாட்டும் பண்டிகை நடந்த ஏழு வாரங்களுக்கு அடுத்து ஏழாவது ஓய்வு நாளுக்கு மறுநாள் வருவதால் இந்தப் பெயர் பெற்றது.
7 x 7 = 49; 49 + 1 = 50 - வாசியுங்கள்: லேவியராகமம்: 23:15,16.
"நீங்கள் அசைவாட்டும் கதிர்கட்டைக் கொண்டு வரும் ஓய்வு நாளுக்கு மறுநாள் முதற் கொண்டு எண்ணத் துவக்கி, ஏழு வாரங்கள் நிறைவேறின பின்பு, ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளாகிய ஐம்பதாம் நாள் மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜன பலியைச் செலுத்தக்கடவீர்கள்."
பெந்தெகோஸ்தே பண்டிகை: (அப்போஸ்தலர்: 2:1; 20:16; 1கொரிந்தியர்: 16:8)
'ஐம்பது' என்ற எண்ணுக்கு கிரேக்க மொழியில் "பெந்தெகோஸ்தே " என்று பெயர். எழுத்தின்படியாக இந்த பண்டிகையை யூதர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது தான், தேவன் அதன் உள்ளான அர்த்தத்தை நிறைவேற்றினார். (அப்போஸ்தலர்: 2:1-4).
சேர்ப்புக் கால பண்டிகை: யாத்திராகமம்: 23:16.
வாற்க்கோதுமை அறுவடையின் முடிவில், கோதுமை அறுவடையின் துவக்கத்தில் இந்தப் பண்டிகை நடைபெறும் என்ற போதிலும், முக்கியமான அறுவடை - கூடாரப் பண்டிகை முடிந்து, திராட்சை, ஒலிவ அறுவடைக்குப் பின் நான்கு மாத இறுதியிலே நடைபெறும்.
ஆதித் திருச்சபையில் அந்த நாட்களில் மாபெரும் ஆத்தும அறுவடை நடைபெற்றது. யூதரானவர்கள் அறுவடை (வாற் கோதுமை) (அப்போஸ்தலர்: 2:41; 4:4).
புறஜாதி அறுவடையும் கூட, (கோதுமை அறுவடை) (அப்போஸ்தலர்: 15:14). என்றாலும் கூட, மாபெரும் அறுவடை - கிறிஸ்து பூமிக்கு திரும்புமுன் ஏற்படும் பெரிய எழுப்புதலில் நடக்கும்.
புறஜாதி அறுவடையும் கூட, (கோதுமை அறுவடை) (அப்போஸ்தலர்: 15:14). என்றாலும் கூட, மாபெரும் அறுவடை - கிறிஸ்து பூமிக்கு திரும்புமுன் ஏற்படும் பெரிய எழுப்புதலில் நடக்கும்.
எண் 50 - ன் முக்கியத்துவம்:
ஏழு ஓய்வு நாட்களுக்கு அடுத்த நாள் 50 வது நாள். (லேவியராகமம்: 23:15,16).
'50' என்பது 'யூபிலி' எனப்படும். அது, 'விடுதலை' 'நிலை நிறுத்துதல்' 'சுதந்தரம்' என்பதை சொல்லுகிறது.
50 வது வருடம் 'யூபிலி வருடம்' என்று சொல்லப்படும். இந்த யூபிலி ஆண்டு இளைப்பாறுதலும் மிகவும் கொண்டாட்டமுமான வருடமாகும்.
யூபிலி வருடத்தில் மூன்று முக்கியமான காரியங்கள் நடைபெறும்: (லேவியராகமம்: 25:8-55).
1. தங்கள் சகோதரர்கள் கையிலிருந்த அடிமைகளாயிருந்த எல்லா இஸ்ரவேலருக்கும் விடுதலை அறிவிக்கப்படுகிறது.
2. வறுமையினால் விற்றுப்போடப்பட்ட நிலம் வீடுகள் எல்லாம், பழையபடி விற்றவருக்கே வந்து சேருகிறது.
3. அந்த தேசம் முழுமைக்கும் அது இளைப்பாறுதல் ஆண்டு. பெந்தெகோஸ்தேயின் செய்திகள் எல்லாம் பரிசுத்த ஆவியானவரால் வரும் விடுதலையைப் பற்றியதே ஆகும். நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவ குமாரனுடைய மகிமையான சுயாதீனத்திற்குள் பிரவேசித்தல்.
புதிய போஜன பலி:
கர்த்தருக்கு முன்பாக காணிக்கையாக புதிய மாம்சமோ அல்லது புதிய காரியமோ ஏறெடுக்கப்படும். பெந்தெகோஸ்தே பண்டிகை வரும்போது, நம்மைத் தாமே புதிய தானியமாக அர்ப்பணிக்கின்றோம். நமது ஜீவனை சமர்ப்பிக்கின்றோம். (யோவான்: 12:24). "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்; செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்".
அடுத்த வசனம் நாம் கிறிஸ்துவுக்காக எவ்விதம் நமது ஜீவனையும் அர்ப்பணிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் காண்பிக்கிறது. புதிய மரித்தல் இருக்க வேண்டும். நீ அந்நிய பாஷையிலே பேசும்போது என்பது அநேகருக்கு கஷ்டமான காரியம். ஆதிதிருச்சபை மக்களுக்கு சிலுவை என்றால் ஒரு பயங்கரமான சின்னமாக இருந்தது. என்னவென்றால், இது ஒரு குற்றவாளி மரிப்பதையே காட்டுகிறது. (எபிரேயர்: 13:13; ரோமர்: 9:33).
இரண்டு அசைவாட்டும் அப்பங்கள்: (லேவியராகமம்: 23:17)
அசைவாட்டும் இந்த இரண்டு அப்பங்கள் யூதர்களையும் புறஜாதிகளையும் குறிக்கிறது. கிறிஸ்து சிலுவையிலே யூதரையும் புறஜாதியரையும் ஒரே மனுஷனாக இணைத்து சமாதானம் உண்டாக்கினார். (எபேசியர்: 2:14,15).
பத்தில் இரண்டு பாகங்கள் (2/10) இது முதற்பலனைக் குறிக்கிறது. இஸ்ரவேல் முதற்பலன் என்று அழைக்கப்பட்டது. அப்படியே சபையும் முதற்பலன் என்று குறிக்கப்படுகிறது. (எரேமியா: 31:9; எபிரேயர்: 12:23).
புளிப்பாக பாகம் பண்ணப்பட்டவை: (லேவியராகமம்: 23:17)
'புளிப்பு' என்பது பாவம், மாய்மாலம், துர் உபதேசம் ஊழலைக் குறிக்கிறது. ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். ஒருவன் பரிசுத்தாவியைப் பெற்றுவிட்டாலோ அல்லது அந்நிய பாஷையைப் பேசுவதாலோ அவன் சுத்திகரிக்கப்பட்டவனாக பரிசுத்தத்தில் நடக்கிறவனாக ஆகிவிடமாட்டான். ஒரு விசுவாசி இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட பின்பும் கூட அவனுக்குள் பாவ சுபாவம் காணப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக அதே ஆவிக்குரிய கூட்டத்தார்களும் பெந்தெகோஸ்தேகாரர்களும் எல்லாவிதமான பாவங்களினாலும் தவறான உபதேசங்களினாலும் பிரிவினையினாலும் மாம்சீகத்தினாலும் நிறைந்து காணப்படுகிறார்கள். கர்த்தரிலே தேறினவர்களாக விளங்குவதற்கு நமக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை. ஆனால், அதே நேரத்தில் அதை பரிசுத்தத்தோடு நாம் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களிடத் -திலும் கலப்படங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
பெந்தெகோஸ்தே என்பது கர்த்தருக்கு முதற்பலனானது. (லேவியராகமம்: 23:17). இது கடைசி அறுவடை அல்ல. பெந்தெகோஸ்தே அனுபவம் என்பது அபிஷேகம் பெற்றவர்களின் முதற்பலனானவர்களின் ஆவியிலே வளரும் அனுபவம். பெந்தெகோஸ்தே என்பது முடிவு அல்ல. அது ஆதி திருச்சபை இயக்கி வைத்த ராக்கெட் ஆகும். (அப்போஸ்தலர்: 2:1-4).
அசைவாட்டும் காணிக்கை: (லேவியராகமம்: 23:20)
பெந்தெகோஸ்தேயில் அடங்கியுள்ள ஆராதனையை இது குறிக்கும். இந்தப் பண்டிகையில் பிரவேசிக்கும் வரைக்கும் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க முடியாது. (யோவான்: 4:24).
இளைப்பாறுதலின் பண்டிகை: (லேவியராகமம்: 23:21)
கர்த்தரில் நாம் இளைப்பாற வேண்டும். தேவனுடைய ஆவியானவர் நம்மில் இறங்கி கிரியை செய்ய விட்டுக் கொடுக்க வேண்டும். அநேக வேளைகளில் நாம் வேலை செய்து கொண்டிருக்கிறபடியால் கர்த்தருடைய கிரியையை தடை செய்து விடுகிறோம்.
பெந்தெகோஸ்தே பண்டிகையின் நிறைவேறுதல்:
நாம் பரிசுத்த ஆவியினாலே அபிஷேகிக்கப்பட்டு அந்நிய பாஷையிலே பேசும்போது நாம் தனிப்பட்ட வாழ்க்கையில் பெந்தெகோஸ்தே பண்டிகையைக் கொண்டாடுகிறவர்களாகிறோம்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்த சில உண்மைகள்:
1. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது இரட்சிப்பு அல்ல; அது திட்டமான இரண்டாவத அனுபவம். (அப்போஸ்தலர்: 8:14-16; 19:1-6)
2. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. (உபாகமம்: 16:11; அப்போஸ்தலர்: 2:39; யோவான்: 7:37).
3. பரிசுத்த ஆவி பெற்றுக் கொண்டதற்கு அடையாளம் - அந்நிய பாஷையில் பேசுவதாகும். (அப்போஸ்தலர்: 2:4; 10:46: 19:6)
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்வது எப்படி?:
1. நீ மறுபடியும் பிறந்திருக்க வேண்டும். (யோவான்: 3:3)
2. இது ஒரு வரம். இதற்காக நீ அலறவோ, போராடவோ, கட்டுப்பாட்டை இழக்கவோ தேவையில்லை. அப்படியே விட்டுக் கொடு. பெற்றுக் கொள். (லூக்கா: 11:9-10; அப்போஸ்தலர்: 2:38).
3. விசுவாசத்தினால் பெற்றுக் கொள். (கலாத்தியர்: 3:14).
4. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கிற இயேசுவிடம் வா. (யோவான்: 7:37).
5. உனது நாவினாலும், குரலினாலும், உதடுகளினாலும் பேச ஆரம்பி. (அப்போஸ்தலர்: 2:4). ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்ல. பரலோக புது மொழியில் பரிசுத்த ஆவியானவர் உனக்குத் தரும் பாஷையிலே பேசு. கவனியுங்கள்: உடனடியாகத்தானே இரண்டு பாஷைகளில் உன்னால் பேச இயலாது.