டிசம்பர் 06, 2012

1,44,000 பேர்கள்

 
 வெளிப்படுத்தல்: 7:4-8

"முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்." (வெளிப்படுத்தல்: 7:4)

இவ்விதமாய் முத்திரை போடப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,44,000 பேர்கள். இவர்கள் அனைவரும் இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் என தெளிவாய் பார்க்கிறோம்.

இதை சிலர் ஆவிக்குரிய ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள் எனக் கூறுகிறார்கள். அதாவது யூதர்கள் மற்றும் புறஜாதியாரிலிருந்த வந்தவர்கள் எனக் கூறுகிறார்கள். வெளிப்படுத்தல்: 7:4-8 ல் இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

மனிதன் தவறாக வியாக்கியானம் பண்ணாமல், இருக்கும்படியாகவே பரிசுத்த ஆவியானவர் 12 கோத்திரத்தின் பெயரையும் குறித்துள்ளார். டி.பி.எம் ஊழியர்கள் தாங்களே அந்த 1,44,000 பேர் என்கின்றனர். ஏழாம் நாள் ஓய்வுக்காரர்கள், ஓய்வு நாளைக் கைக் கொள்ளுகிறவர்களே இந்த முத்திரை பெற்றவர்கள் என்கின்றனர். இவைகள் தவறான வியாக்கியானங்கள் எனப் பார்க்கிறோம்.

1,44,000 பேர்கள் என்று யோவானுக்கு எப்படித் தெரியும்? என்று சிலர் கேட்கின்றனர். வெளிப்படுத்தல்: 7:4 ல் "முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்" என்று கூறப்பட்டதுதான் இதற்கு பதில்.

தாண், எப்பிராயீம் ஆகிய இரண்டு கோத்திரங்களின் பெயர்கள் சொல்லப்படவில்லை. இதற்கு வேதத்தில் காரணம் கொடுக்கப்பட்டுள்ளது:

"ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய  தேவனாகிய கர்த்தரை விட்டுஅகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலுமஸ்திரியாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.  அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளையுக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக் கொள்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன் மேல் புகையும். இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு குலைத்துப் போடுவார். இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிரக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்கு தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கி போடுவார்."    (உபாகமம்: 29:18-21)

கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு எச்சரிப்பை கொடுத்திருந்தாலும் இதில் கூறப்பட்டுள்ள சாபத்திற்கு ஏற்றார்போல் தாண், எப்பிராயீம் கோத்திரத்தார் நடந்து கொண்டனர். (நியாயாதிபதிகள்: 18:2-31).

 "ஆகையால், தேசத்தை உளவு பார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிறசோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய் தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடு சொன்னார்கள்; அவர்கள் எப்பீராயீம் மலைத் தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடு மட்டும் போய், அங்கே இராத் தங்கினார்கள்" (நியாயாதிபதிகள்: 18:2).

""அப்பொழுது தாண் புத்திரர் அந்த சுரூபத்தை தங்களுக்கு ஸ்தாபித்துக் கொண்டார்கள். மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும்  அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள் மட்டும் தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள். தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுதும் அவர்கள் மீகா உண்டு பண்ணின சுரூபத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள்". (நியாயாதிபதிகள்: 18:30,31).

"ஒன்றை பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுகுட்டிக்காகத் தாண் மட்டும் போவார்கள்".  (1இராஜாக்கள்: 12:29,30).

"கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சமாய் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலமோன் அவர்கள் மேல் ஆசை வைத்து, அவர்களோடே ஐக்கியமாயிருந்தான்."    (1இராஜாக்கள்:  11:2).

ஓசியா: 5:1-7 வாசித்துப் பாருங்கள். எப்பிராயீமின் பாவங்கள் பற்றி எழுதப்பட்டிருப்பதை காணலாம். மேற் கண்ட வசனங்களிலெல்லாம் உள்ளபடி தாண், எப்பிராயீம் கோத்திரத்தார் பாவ வழிகளில் நடந்து  சொரூபத்தையும்', பொன்  கன்றுகுட்டியையும் வணங்கினர் என்று பார்க்கிறோம். எனவே, இவர்களுடைய கோத்திரத்தின் பெயர் சொல்லப்படவில்லை.

வெளிப்படுத்தல்: 7:4-8 ஆகிய வசனங்களில் 1,44,000 பேரையும்;
வெளிப்படுத்தல்: 7:8-17 ஆகிய வசனங்களில் 'ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டத்தையும்' பார்க்கிறோம். 1,44,000 பேர் பூமியில் முத்திரைப் போடப்படுவார்கள். முத்திரைப் போடப்பட்ட அவர்கள் இஸ்ரவேலர்களே எனத் தெளிவாக நமக்கு விளங்குகிறது.