டிசம்பர் 03, 2012

மிஷினெரி ஊழியம்

 

' மிஷினெரி' என்ற பதம் 'மிட்டோ' என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு 'அனுப்புதல்' என்று பொருள். 

கிரேக்க பதத்தில் 'அப்போஸ்டலோ' - 'அனுப்பு' அல்லது 'அனுப்புதல்' என்னும் பதத்திற்கு சமமானது. 

இவ்விரு பதங்களின் மூலக் கருத்து ஒன்று போலானது, அப்போஸ்தலர் என்னும் பதம்  புதிய ஏற்பாட்டில் 80 முறை உபயோகிக்கப்பட்டுள்ளது.

இயேசுவே முதல் அப்போஸ்தலர்; பிரதான அப்போஸ்தலர். அவருடைய அப்போஸ்தல தன்மை பிதாவினிடத்திலிருந்து வந்தது.  ஏனெனில் மீட்பின் ஊழியத்தை இவ்வுலகில் நிறைவேற்றும்படி அவர் பிதாவினால் அனுப்பப்பட்டார். இயேசு தன் சீர்களில் 12 பேரை வேறு பிரித்து அவர்களை அப்போஸ்தலர் என அழைத்தார். இவர்கள் அவரால் போதிக்கப்பட்டு பயிற்சி பெற்றனர். அவரிடத்தில் இருந்து சீர்கள் அப்போல்தல அதிகாரத்தைப் பெற்றனர். அவர் உயிர்த்தெழுந்த பின் சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி உலகம் முழுவதும் அவரால் அனுப்பப்பட்டனர்.

அவருடைய ஊழியத்திற்கும் ( His Mission) , சீஷர்கள் ஊழியத்திற்கும் (Mission of the Disciple) இடையே நேரடியான தொடர்பு இருந்தது. யோவான்: 20:21 - "பிதா என்னை அனுப்பினது போல நான் உங்களை அனுப்புகிறேன்". இந்த பன்னிருவரும் தான் 'அப்போஸ்தலர்கள்' என அழைக்கப்பட்டனர். இவர்கள் சிறப்பான சிலாக்கியங்களும், சிறப்பான உத்திரவாதங்களுடைய சிறப்புத் தன்மையுடைய மனிதக் கூட்டம்.

ஆனால், புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் என அழைக்கப்பட்ட வேறு சிலர் இருந்தனர். இவர்கள் அப்போஸ்தலரின் இரண்டாம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். பர்னபா, தீமோத்தேயு, சீலா ஆகியோர்.

அப்போஸ்தலர் - பரிசுத்த ஆவியினாலும், சபையினாலும் அனுப்பப்பட்டார்கள் என அப்போஸ்தலர்: 13:4 - ல் காண்கிறோம். இந்த அப்போஸ்தல நடபடிகளில் ஆக்கியோனாகிய லூக்கா அப்போஸ்தலருடைய ஊழியங்களையே பெரும்பாலும் குறிப்பிடுகிறார். (அப்போஸ்தலர்: 8:4;  13:9).

இந் நாட்களில் நாம் யாரை மிஷனெரி என்று அழைப்பது?

பன்னிரண்டு பேரின் இனத்தைச் சேர்ந்த யாரும் இப்போது கிடையாது. (லூக்கா: 22:14; 21:30). ஆயினும், அப்போஸ்தலருடைய 2 ம் கூட்டத்தைச் சார்ந்தவர்களுக்கும், 12 பேருக்கும் இடையே சில பொதுவான காரியங்கள் உண்டு.

இவ்விரு கூட்டத்தாரும் ரோம ராஜ்யத்தில் உள்ள பல தேசங்களுக்கு அனுப்பப்பட்டனர். பிரசங்கிக்கவும், போதிக்கவும் சபையால் அனுப்பப்பட்டனர். அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல் பல இடங்களுக்கு பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்பட்டார்கள். (அப்போஸ்தலர்: 16:6,7).

மிஷினெரி என்னும் பதத்திற்கு - சகல நிபந்தனைகள், எதிர்ப்புகள் அனைத்தையும் விளக்கக் கூடிய ஒரு விளக்கத்தை கொடுப்பது கூடாத காரியம்.

பாரம்பரிய அடிப்படையில் முழு நேரமாக ஜெபத்திலும், வேத வாசிப்பதிலும், வேத வசனத்தை பிரசங்கிப்பதிலும் ஈடுபட்டுள்ள ஊழியர் (அப்போஸ்தலர்: 6:4) நிலவியல், கலாச்சார எல்லைகளைக் கடந்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பவர்கள் "மிஷினெரிகள்" என்று அழைக்கப்படுகின்றனர். (அப்போஸ்தலர்: 22:21;  15:20 ). இந்த விளக்கம் நிறைவான விளக்கம் அல்ல. ஆயினும், வேதாகமத்திற்கு ஒத்தது என்று கூறலாம்.

எனவே, ஒரு மிஷினெரி என்பவன் வெளி தேசத்தில் அந்நிய மொழி, அந்நிய கலாச்சாரம் நிறைந்த இவர்கள் நடுவில் சுவிசேஷத்தைக் கேள்விப்படாத ஜனங்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணி அவர்களை கிறிஸ்துவின் சபையில் கொண்டு வரும் பணியில் ஈடுபடுகிறவன் மிஷினெரி.

கிறிஸ்தவ சபையின் சர்வலோக மிஷினெரி ஊழியம் - இயேசு கிறிஸ்துவின் மானிட அவதாரத்தில் வேரூன்றி உள்ளது. தேவன் இவ்வுலகத்தை மீட்கும் நோக்கத்தில் பங்குள்ளவர்.

" தேவன் ஒரு மிஷினெரி தேவன். 
பரிசுத்த வேதாகமம் ஒரு மிஷினெரி புத்தகம். 
சுவிசேஷம் ஒரு மிஷினெரி செய்தி. 
சபை ஒரு மிஷினெரி ஸ்தாபனம்."

சபை தன் மிஷினெரி ஊழியத்தை செய்யத் தவறும்போது தன் விசுவாசத்தை மறுதலிக்கிறது. தன்னுடைய உக்கிராணத்தை மறுக்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு சாட்சி; ஆனால், ஒவ்வொரு கிறிஸ்தவனும் மிஷினெரி அல்ல. காரணம்... அழைக்கப்பட்டவர்களோ அநேகர்; தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்.

மிஷினெரிகளாக யாரும் பிறப்பதில்லை; ஆனால்,  மிஷினெரிகளாக உருவாக்கப்படுகிறார்கள்.

ஒரு காலத்திலும் இல்லாத அளவில் நமது நாட்களில் மிஷினெரிகளின் தேவை அதிகம். ஞானமும், ததரியமும், தரிசனமும், பொறுமையும், தாழ்மையும், உண்மையும் உள்ள மிஷினெரிகள் தேவை.

திருச்சபையில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் இந்த மாபெரும் மிஷினெரி ஊழியத்தை அறியாமலோ, அதின் பங்கை நிறைவேற்றாமலோ இருப்பது கூடாது. மிஷினெரியாக அழைக்கப்படாவிடினும் தனக்கு ஸ்தல சபை ஊழியத்திலும் உலக சுவிசேஷ பிரபல்யத்திலும் பங்கு உண்டு என்பதை மறக்கலாகாது.

"நெருப்பு எரிவதின் மூலம் நிலைத்து இருப்பதுபோல சபையானது மிஷினெரி ஊழியத்தின் மூலம் நிலைத்து நிற்கிறது" - என்று எமில் புருனர் என்ற கிறிஸ்தவ பெரியாரின் கூற்று. 

ஜெபத்தினாலும், பணத்தினாலும் மட்டும் மிஷினெரி ஊழியத்தை தாங்கினால் போதாது. நாம் கருத்தாய் ஜெபம் பண்ணி, கருத்தாய் பண உதவி செய்வதின் மூலமே இந்த ஊழியம் வல்லமையாய் இருக்கும்.

தேசங்களிலுள்ள ஒவ்வொரு சபைகளும் உலக சுவிசேஷ பிரபல்யத்தில் தங்களுடைய கடமையை கருத்தாய் உணர்ந்து செயலாற்றும்போது, மிஷினெரி ஊழியம் குன்றிப் போகாமல் புத்துயிர் பெற்று (எழுப்புதல்) புது வழியில் முன்னேற்றம் அடையும்.