டிசம்பர் 12, 2012

எக்காள சத்தப் பண்டிகை

 
லேவியராகமம்: 23:24,25

யூத வருடத்தில் ஏழாவது மாதம் முதலாம் நாள் எக்காளப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஏழாவது மாதத்தில்தான் கடைசி மூன்று பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது.எக்காளப் பண்டிகை, பாவ நிவாரணப் பண்டிகை, கூடாரப் பண்டிகை ஆகியவை. இதற்கு முன்னாளிலுள்ள பெந்தெகோஸ்தே பண்டிகைக்கும், இந்த பண்டிகைக்கும் இடையில் நான்கு மாத இடைவெளிகள் இருக்கிறது. இது முக்கியமான கவனித்தலுக்குரியது.

முதல் நான்கு பண்டிகைக்குரியதான நிறைவேறுதல்கள் முடிந்து விட்டன. ஆனால், இந்த மூன்று பண்டிகைகளும் முடிந்தவரை என்பதற்கு ஆதி திருச்சபையிலும், புதிய ஏற்பாட்டிலும் எந்த அத்தாட்சியும் இல்லை. அதன் நிறைவேறுதல்கள் கடைசிக் காலத்தில் சம்பவிக்கும். ஏசாயா: 58:1 - "எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி..."

எக்காளம் என்பது தீர்க்கதரிசன குரலின் முழக்கமாகும். எக்காளம் தொனிக்கும்போது தேவனுடைய சத்தம் அவருடைய ஊழியர்கள் மூலம் வரப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

வெளிப்படுத்தல்: 1:10 - "கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன். அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்."

எக்காளங்களை ஊதுவதின் நோக்கம்: (எண்ணாகமம்: 10:1-10)

வெள்ளியால் செய்யப்பட்ட இரண்டு எக்காளங்கள். (எண்ணாகமம்: 10:2). 
இரண்டு என்பது சாட்சிகளைக் குறிக்கிறது.
வெள்ளி என்பது மீட்பைக் குறிக்கிறது.

1. சபையாக கூடி வரச் செய்ய:

இஸ்ரவேல் அனைத்தையும் ஒன்றாக கூடிவரச் செய்யும்படியாக எக்காளம் ஊதப்பட்டது. 12 கோத்திரத்திலுள்ள எல்லா இஸ்ரவேலரும் கூடி வந்தார்கள். "ஜனங்கள் அவரிடத்தில் (இயேசு கிறிஸ்துவினிடத்தில்) சேருவார்கள்" ஆதியாகமம்: 49:10.

2. தலைவர்களை மட்டும் கூட்டிச் சேர்க்க: எண்ணாகமம்: 10:4

ஒரே ஒரு எக்காளத்தை மட்டும் ஊதும்போது, ஆயிரவர்களுக்கு தவைனாகிய  பிரபுக்கள் கூடிவருகிறார்கள். கர்த்தர் இன்றைக்கும் தலைவர்களோடு பேசுகிறார். அவர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கிறார்.

3. பாளையங்களை பிரயாணப்படச் செய்ய: (எண்ணாகமம்: 10:2,5)

மேகஸ்தம்பம் புறப்படும்போது எக்காளங்கள் பெருந்தொனியாய் முழங்கும். கானானை நோக்கி அவர்கள் புறப்படுகிறார்கள் என்பதை அது அறிவிக்கும். சாதாரணமாய் முழங்குவதற்கும், பெருந்தொனியாய் முழங்குவதற்கும்  வேறுபாடு இருக்கிறது. தேவன் தம் சபையை மன்னேற அனுமதிக்கிறார்.

கர்த்தருடைய நோக்கமெல்லாம் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. அதுபோலவே, இயேசு கிறிஸ்து திரும்ப வருமுன்,  கர்த்தருடைய சபை சத்தியத்துக்குள்ளும் கடந்து சென்று உறுதிப்பட வேண்டும் என்று விரும்புகிறார். பரிசுத்த அவியின் அபிஷேகத்தைப் பெற்ற உடன் நமது பயணம் முடிந்து விடவில்லை. இன்னும் அதிக அனுபவங்களுண்டு. நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

4. ஜனங்களை யுத்தங்களுக்கு ஆயத்தம் செய்ய: (எண்ணாகமம்: 10:9)

ஜனங்களை யுத்தத்துக்கு ஆயத்தம் செய்ய எக்காளங்கள் பெருந்தொனியாய் முழங்க வேண்டும். (1கொரிந்தியர்: 14:8). "அந்தப்படி எக்காளம் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்துக்கு ஆயத்தம் பண்ணுவான்...."

நாம் தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடுத்து, தேவனுடைய சகல சர்வாயுதவர்க்கங்களையும் தரித்துக் கொண்டு, சாத்தானோடும், அதிகாரங்களோடும், துரைத்தனங்களோடும் யுத்தம் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். (எபேசியர்: 6:10-18).

ஒரே நேரத்தில் போதகர்களும், ஆவிக்குரிய தலைவர்களும் சத்தத்தை எக்காள சத்தத்தைப் போல உயர்த்தி, வரப்போகும் ஆபத்தை குறித்து தேவ ஜனத்தை எச்சரித்து, அவர்களை யுத்தத்துக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். (எசேக்கியேல்: 33:2-9).

5. பண்டிகைகளைக் கொண்டாட: (எண்ணாகமம்: 10:10)

எல்லா ஜனங்களையும் ஒன்றாகக் கூட்டி பண்டிகைகளை ஆசரிக்கச் செய்யவும், விசேஷித்த ஜெபத்தையும் உபவாசத்தையும் அறிவிக்கவும் எக்காளங்கள் ஊதப்பட வேண்டும். (யோவேல்: 2:15,16).

ஆரோனும், அவன் குமாரரும் எக்காளத்தை ஊத வேண்டும்: (எண்ணாகமம்: 10:8)
 

ஆரோனும் அவன் நான்கு குமாரரும் எக்காளம் எக்காளம் ஊதும்படி நியமிக்கப்பட்டார்கள். வேறு யாரும் ஊதிவிட முடியாது. (யாத்திராகமம்: 28:1). இது ஊழியத்துக்கென்று கிறிஸ்து தரும் வரங்களும் அதன் அடையாளமுமாக இருக்கிறது. (எபேசியர்: 4:11).

1கொரிந்தியர்: 15:51,52 - "ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது   ஒரு இமைப் பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்"

அநேக கிறிஸ்தவர்கள் கடைசி எக்காள தொனிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்று தொனித்துக் கொண்டிருக்கும் மற்ற எக்காளங்களுக்கு செவி சாய்த்து அதின் செய்திகளை அறிந்து கொள்ளா விட்டால் கடைசி எக்காளத்துக்கு ஆயத்தமாக இருப்பது எப்படி?

ஆதித் திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் அசைவு மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், கி.பி.350 க்கு பின் கிறிஸ்தவ மார்க்கத்தோடு  அரசாங்கம் இணைந்தது. திருச்சபையின் வீழ்ச்சி (சரிவு) ஆரம்பமாயிற்று. ஏறத்தாழ 1000 ஆண்டுகள் இருண்ட காலம் என அழைக்கப்படுகிறது. ஆவிக்குரிய எந்த வெளிச்சமும் வீச வில்லை. ஆங்காங்கே கிறிஸ்துவின் நாமத்தில் தவறான மார்க்கங்களே நடமாடி வந்தன. அதன்பின் கர்த்தர் மீண்டும், சத்தியத்தையும், சபையையும் நிலைநிறுத்த வேத சத்தியங்களை எக்காளத் தொனியில் அறிவிக்கும் தேவ மனுஷர்களையும் எழுப்பினார்.

இருண்ட காலத்தக்குப் பின் தொனித்த எக்காளங்கள்: 

1. கி.பி.1517 - "விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுதல்"  என்ற சத்தியத்தோடு மார்டின் லுத்தர் எழுந்தார். இதனால், லுத்தர் அனுபவித்த பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அநேக சீர்திருத்தவாதிகள் இரத்த சாட்சியாய் இந்த சத்தியத்திற்காக மரித்தார்கள். சபையை கீழ் நிலைக்கு இழுத்துச் சென்ற அநேக துர் உபதேசங்களுக்கு விரோதமாய் மார்டின் லுத்தர் தைரியமாய் பிரசங்கித்தார். நாம் கிரியைகளினாலோ, சடங்காச்சாரத்தினாலோ அல்லாமல், விசுவாசத்தினாலே இரட்சிக்கப்படுகிறோம் என்று அறிவுறுத்தினார்.

2. கி.பி.1524 - பாப்திஸ்துகள் எழும்பி தண்ணீரில் மூழ்கித்தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற சத்தியத்தைக் கொண்டு வந்தார்கள்.

3. கி.பி.1738 - பரிசுத்தத்தையும் சுத்திகரிப்பையும் எக்காளத் தொனியில் முழங்குவதற்காக கர்த்தர் ஜான் வெஸ்லியை எழுப்பினார். பரிசுத்தத்திற்கும் வேறுபட்ட ஜீவியத்திற்கும் ஒப்புக் கொடுத்து அநேக கிறிஸ்தவர்கள் முன் வந்தார்கள். பாவ ஜீவியத்தைப் பற்றி உணர்த்தப்பட்ட ஜனங்கள் ஆயிரமாயிரமாய் தெருக்களில் அழுது புலம்பினார்கள். இதனால், பிரஞ்சுப் புரட்சியின் கொடுமையிலிருந்து இங்கிலாந்து தேசத்தார் பாதுகாக்கப்பட்டனர்.

4. கி.பி.1865 -  நடைமுறை கிறிஸ்தவ ஜீவியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை வந்தது. இரட்சண்ய சேனை பிறந்தது. டாக்டர்.பெர்னாண்டோ அநேக அனாதை இல்லங்களை ஸ்தாபித்தார். அது போன்ற இயக்கங்கள் 1886 ஆம் ஆண்ட முதல் ஏராளமாய் பெருகிற்று.

5. கி.பி.1875 - பரிசுத்தத்திற்கும் சுத்திகரிப்பிற்கும் மறுபடியும் திரும்பினார்கள். சுத்திகரிப்பு என்பது திட்டமான அனுபவமாக வலியுறுத்தப்பட்டது. கெஸ்விக் இயக்கம் ஆரம்பமானது.

6. கி.பி.1880 - ஏ.பி.சிம்சன் தெய்வீக சுகமளித்தலைப் பற்றிய சத்தியங்களைக் கொண்டு வந்தார். இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மட்டும் சிலுவையில் மரிக்காமல் நமது சரீரத்தின் நோய்களை நீக்கவும், வழியுண்டாக்கினார் என்று பிரசங்கித்தார்.

7. கி.பி. 1890 - பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பற்றி சத்தியமும் அந்நிய பாஷையில் பேசுவதுமாகிய சத்தியங்களும் வெளிவந்தன. 1906 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் என்னுமிடத்தில் அசுசா  தெருவில் நடந்த எழுப்புதல் கூட்டங்களில் கர்த்தர் பரிசுத்தாவியின் நிறைவை அபரிதமாக ஊற்றினார். இது அநேக தேசங்களுக்கு பரவியது. அநேக பெந்தெகோஸ்தே ஆலயங்கள் உருவாயின.

8. கி.பி. 1948 பெரிய பெரிய சுவிசேஷ விழாக்களில் எக்காளச் சத்தம் பெருந்தொனியாய் முழங்கிற்று. பில்லி கிரஹாம், ஓரல் ராபர்ட்ஸ், டி.எல.ஆஸ்போர்ன் போன்ற கர்த்தருடைய ஊழியர்கள் எழுந்தனர். ஆயிரக்கணக்கான அற்புதங்கள் நடந்தன. பெருங் கூட்டத்தார் இரட்சிக்கப்பட்டனர். 1948 ஆம் ஆண்டில்தான் இஸ்ரவேல் தேசம் மீண்டும் உருவானது. மட்டுமல்ல, பரிசுத்தாவியின் பின்மாரி அநேக ஸ்தாபன சபைகளில் ஊற்றப்பட்டது.

9. கி.பி.1962 - இன்றும் புதிய அபிஷேகம் புராட்டஸ்டாண்டசபைகளில் பற்றி பிடித்தது. கத்தோலிக்கர் மத்தியிலும் பரவியது. ஆழமான வேத பாடங்களை நடத்தும் ஊழியம் ஆரம்பமானது. முழு உலகத்தையும் சுவிசேஷத்தால் நிரப்பக் கூடிய சுவிசேஷ ஊழியம் நிறைந்த நாட்களுக்குள் வந்திருக்கிறோம். 1962 பிப்ரவரி 26 க்குப் பின் 'அக்கியூரியஸ்'  என்ற சின்னமாகிய பானையிலிருந்து தண்ணீர் ஊற்றும் மனிதனின் அடையாளத்துக்கும் வந்திருக்கிறோம்.

 கிறிஸ்து வருவதற்கு முன்பாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும், நிலைநிறுத்தப் போகும் சத்தியங்கள்:

-  பரிசுத்தாவியின் ஒன்பது வரங்கள் - 1கொரிந்தியர்: 12:8-10

-  உண்மையான ஆவிக்குரிய ஆராதனை - ஆவியிலே பாடி, கீத வாத்தியங்களோடு ஆராதிப்பது.

 -  விடுதலையின் ஊழியம், பிசாசின் பிடியிலிருந்தும், பாரம்பரியங்களிலிருந்தும், குறி சொல்லுதலிலிருந்தும் மக்களை விடுவிப்பது.

-  ஆலயத்தில் தெய்வீக ஆராதனை ஒழுங்குகள்:

1. ஊழியத்துக்கடுத்த 5 வகை வரங்கள் - எபேசியர்: 4:11

2. சரீரமாகிய ஊழியம்

-  எல்லா ஊழியங்களையும் ஒன்றாகக் கட்டுதல். எண்ணாகமம்: 10 அதிகாரம். தேவன் ஊழியத்திலே ஒற்றுமையையும், ஒருமுகப்பாட்டையும் கொண்ட வருதல்.

-  யுத்தத்திற்கு ஆயத்தம் செய்தல் - ஆவிக்குரிய பிளவுபட்ட காலத்திற்கு முடிவு உண்டாக்குதல்.

எக்காளப் பண்டிகை...    தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைவேறுதல்:

தேவன் நமக்களிக்கும் புதிய சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்போது இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை பரிபூரணமாக ஒப்புக் கொடுக்கும்போது நாம் தனிப்பட்ட முறையில் இந்த அனுபவத்துக்கு வருகிறோம். பெரிய காரியங்களை நடைமுறைக்கு கொண்டு வர தேவனுடைய அழைப்புக்கு செவி கொடுப்போமாக.

எபிரேயர்: 6:2 - "பூரணராகும்படி கடந்து போவோமாக..."

வாசித்துப் பாருங்கள்:  ஏசாயா: 60:1;   எபேசியர்: 5:14-16