டிசம்பர் 05, 2012

ஒரு மனிதன் கிறிஸ்தவ சேவைக்கு அழைப்பை பெறுவது எப்படி?

 

தேவன் சர்வ ஆளுகை உள்ளவர். அவரே அவருடைய வேலைக்கு நம்மைத் தெரிந்தெடுக்கிறவர். எனவே, அவருடைய அழைப்பை நாம் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்க வேண்டும்.

கீழ்க்காணும் சில நிபந்தனைகளை கைக் கொள்ளும்போது தேவ அழைப்பைப் பெறலாம்:

1. திறந்த மனது - (2கொரிந்தியர்: 10:5)

2. கூர்மையான காதுடையவர், தேவனுடைய சத்தத்தை தெளிவாகக் கேட்க உதாரணம்: சாமுவேல், தாவீது, எலிசா, சீஷர்கள் - (மாற்கு: 4:7)

3. தூய்மையான இருதயம்  -  (யோவான்: 7:17; சங்கீதம்: 99:5; எபிரேயர்: 12:14;  சங்கீதம்: 24:3,4;  66:16)

4. சுறுசுறுப்பான கைகளையுடையவன் - (யோவான்: 5:17;  19:4)

5. ஆயத்தமான கால்கள் - (சங்கீதம்: 119:32; ஏசாயா: 52:7;  1கொரிந்தியர்: 7:29;  1சாமுவேல்: 21:8)

அழைப்பு வேறு; வழி நடத்துதல் வேறு

முழு நேர ஊழியத்துக்குரிய அழைப்புக்கும் - வழி நடத்துதலுக்கும் உள்ள தெளிவான வித்தியாசத்தை முதலில் கண்டறிய வேண்டும்.

மக்கதோனியா அழைப்பு பவுலின் மிஷினெரி அழைப்பு அல்ல. அது குறிப்பிட்ட காலத்தில் வந்த அழைப்பு. அழைப்பு பெற்றவர்கள் உள் நாட்டிலா அல்லது வெளி நாட்டிலா என்ற வழி நடத்துதலை பெற வேண்டும். வெளி நாட்டு அழைப்பு இருந்தால் எப்போது, எங்கு செல்வது என்ற வழி நடத்துதலை அறிந்திருக்க வேண்டும். 

தேவன் பவுலை புற ஜாதியினரிடத்திற்கும், பேதுருவை யூதரிடத்திற்கும் அனுப்பினார். (கலாத்தியர்: 2:7,8). வில்லியம் கேரியை இந்தியாவிற்கும், ஹட்சன் டெய்லரை சீனாவிற்கும் தேவன் அனுப்பினார்.  வழி நடத்துதல் மிஷினெரிகளுக்கு மட்டுமல்ல, எந்த ஊழியம் செய்தாலும் அதை வெளி நாட்டிலா, உள்நாட்டிலா என்ற வழி நடத்துதல் மிக அவசியம். எந்த சபை, எவ்வளவு காலம், என்ன ஊழியம் என்ற வழி நடத்துதல் மிக மிக அவசியம்.

அழைப்பில்லாமல் ஒருவர் மிஷினெரியாக இருக்க   முடியுமா?

இக் கேள்விக்கு விடையளிக்கும்போது ஒன்றுக்கொன்று எதிர் திசைகளுள்ள இரண்டு விடைகள் உண்டு. அதைத் தவிர்த்து நாம் சரியான விடை காண வேண்டும்.

1. அப்போஸ்தலனாகிய பவுலுக்கு கிடைத்த மக்கதொனியா அழைப்பைப்போல் அழைப்பைப் பெற்றவர் மாத்திரமே மிஷினெரியாய் இருக்க முடியும் என்பது.

2. எல்லா கிறிஸ்தவர்களும் மிஷினெரிகளாய் இருக்கிறபடியால் சிறப்பான அழைப்பு தேவையில்லை என்பது.

இந்த இரண்டு கருத்தும் தவறு. 

முதல் கருத்தை வலியுறுத்துகிறவர்களில் பெரும்பான்மையினர் ஒரு இடத்திற்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இரண்டாவது கருத்தை வலியுறுத்தபவர்கள் - ஊழியப் பணித்தளங்களுக்குச் செல்வதன் மூலம் பல தீமைகளை விளைவிக்கின்றனர். பின்பு, தோல்வியடைந்து வீடு திரும்புகின்றனர்.

இக்கால மிஷினெரிகளுக்கு இரண்டு வகை சோதனையுண்டு:

1. கர்த்தருக்கு முன் ஓடுவது

2. கர்த்தருக்கு பின் தங்குவது

இந்த சோதனைகளை ஜெயிக்க வேண்டும்.

கிறிஸ்தவ ஊழியத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவது எது?

கிறிஸ்தவ ஊழியத்திற்கான அழைப்பு திடீரென ஆகாயத்தில் தோன்றுவது அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவருடைய உள்ளத்தில் அழைப்பைக் குறித்த உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இது வேததத்திற்கு ஒத்ததாய் இருக்க வேண்டும்.

ஒரு தேவனுடைய பிள்ளை வேத வசனத்திற்கு உண்மையாக கீழ்படியும்போது தேவன் அவனை படிப்படியாக வழி நடத்திக் காண்பிக்கிறார்.

1. ஆண்டவரை தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளுதல்

2. தேவ சித்தத்திற்கு கீழ்படிதல். இதில் இரண்டு வகை சித்தம் உண்டு. அவை:

அ) பொதுவான தேவ சித்தம். (1தெசலோனிக்கேயர்: 4:3;   2பேதுரு: 3:9)

ஆ) சிறப்பான தேவ சித்தம். இது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும், ஒவ்வொரு நாளிலும் வித்தியாசமாய் அமையும். (ரோமர்: 12:1,2;  எபேசியர்: 2:10).