நவம்பர் 26, 2016

“மீட்பின் விலையும் – மீட்பின் பொருளும்”

Image result for trespass offering

                “மீட்பின் விலையும் – மீட்பின் பொருளும்”                                                     

            The price of redemption - redemption of the material

ஒரு ஆய்வு

திறவுகோல்வசனம்:              ரோமர்: 5:15 – “… மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது”.

ஒரு அடிமை அல்லது ஒரு போர்க்கைதியை மீட்பதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இது சம்பந்தமாக நாம் பார்க்கும்போது, அது அரைச்சேக்கல் வரி என்கிற வீதத்தில் தன்தன் உயிரை மீட்கும் காணிக்கையாக ஆண்டவருக்குச் செலுத்த வேண்டியது அவசியம். பின் வரும் வேதவசனங்களை நன்கு வாசித்துப் பாருங்கள்:

யாத்திராகமம்: 30:12 – “நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்”.

யாத்திராகமம்: 30:13-15 – “எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்க வேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்”.

யாத்திராகமம்: 30:14 – “எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டும்”.

யாத்திராகமம்: 30:15 – “உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவர்த்தி பண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்”.

ஐசுவரியவான் ஆனாலும், தரித்திரனானாலும் மீட்கும் பொருளாக இருவருக்கும் சமமாக அரைச்சேக்கல் செலுத்த வேண்டும் என காண்கிறோம்.

Image result for trespass offering

பழைய ஏற்பாட்டில் மீட்பிற்கு விலையாக எதை? எவ்வளவு? எதற்காக? கொடுத்தனர்?


1.   தனது மாடு இன்னொருவனைக் கொன்றதால், அந்த உயிருக்கு ஈடாக செலுத்த வேண்டிய அபராதம்:          

    யாத்திராகமம்: 21:30 – “அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதனால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்”.

2.   மனிதனின் முதற்பேற்றை மீட்கக் கொடுத்த பணம்: 

              எண்ணாகமம்: 18:15 – “மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்க வேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்க வேண்டும்”.

3.   அடிமையான தன் இனத்தானை, குடும்பத்தார் மீட்கக் கொடுக்கும் பணம்: 
(லேவியராகமம்: 25:47-51)

லேவியராகமம்: 25:51 – “… அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்”.

4.   அடகு வைத்ததை மீட்கக் கொடுத்த தொகை: (லேவியராகமம்: 25:25-28)

லேவியராகமம்: 25:26,27 – “… தானே அதை மீட்கதக்கவனானால், அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப் போகக்கடவன்”.

இத்தகைய பொருள் தரக்கூடியதற்கு அடிப்படையான எபிரேய மூலபாஷை “Koper” என்பதாகும். அதேபோல, இன்னொரு எபிரேய சொல்லும் இதற்கு அடிப்படையாக இருக்கிறது. அது “Asam” என எபிரெய மொழியிலும், “Trespass Offering” (டிரஸ்பாஸ் ஆஃபரிங்) எனவும் அழைக்கப்படுகிறது. அதன் பொருள் "குற்றநிவாரணபலி" என்பதாகும்.

Image result for trespass offering

1.   கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்தால், குற்றநிவாரணபலியாக செலுத்த வேண்டிய அபராதம்:

லேவியராகமம்: 5:15-18 – “ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்ற நிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்து, பரிசுத்தமானதைத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாக ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான். அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்”.

2.   தன் அயலானுக்கு மாறாட்டம் பண்ணி, பலாத்காரமாய் பறித்துக் கொண்டதினிமித்தம் செலுத்த வேண்டிய அபராதம்:

லேவியராகமம்: 6:2-7 – “ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம் பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக் கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண் செய்து, அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்ததும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ் செய்தானேயாகில், அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியினால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக் கொண்டதையும், இடுக்கண் செய்து பெற்றுக் கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும், பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு, தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டு வருவானாக. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக் காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்”.

3.   குற்றநிவாரணபலி:

லேவியராகமம்: 7:1-7 – “குற்றநிவாரண பலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண பலியும் கொல்லப்பட வேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து, அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி. ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்பட வேண்டும்; அது மகா பரிசுத்தமானது. பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்”.

4.   கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களை செய்தால் செலுத்த வேண்டிய அபராதம்:

எண்ணாகமம்: 5:5-8 – “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடக்கடவர்கள்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினிமித்தம் அபராதத்தின் முதலோடே ஐந்தில் ஒரு பங்கை அதிகமாய்க்கூட்டி, தான் குற்றஞ’செய்தவனுக்குச் செலுத்தக்கடவன். அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேர வேண்டும்”.

5.   குற்றநிவாரணபலியான இயேசுகிறிஸ்து:

ஏசாயா: 53:10 – “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக் கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்”.

மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா குற்றநிவாரண பலியைச் செலுத்தும்போது, இயேசு இந்த வசனத்தை (ஏசாயா: 53:10,11 – “… அநேகர்…”) மனதிற் கொண்டிருந்தார் என கருத இடமுண்டு. ஏசாயா: 53:11 – “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய   அக்கிரமங்களை தாமே சுமந்து கொள்வார்”. இந்த வசனத்தை இயேசு காணும்போது, தம்மை மற்றவரின் பாவத்திற்காக பாடுபடுகிறவராகப் புரிந்து கொண்டார் எனலாம். இப்படி பதிலாளாகப் பாடுபடுவது, அநேகருக்காக தம் தந்தையாகிய பிதாவுக்கு தன்னையே பலியாக படைப்பது என்பதை பழைய ஏற்பாட்டிலிருந்தல்ல … அவர் பாடுபட்ட வரலாற்றிலிருந்து புதிய ஏற்பாட்டிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மாற்கு: 14:36 – “அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்”.

மாற்கு: 15:34 – “ஒன்பதாம் மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்”.

ரோமர்: 5:15 – “… மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய் பெருகியிருக்கிறது”.

மத்தேயு: 20:28 – “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்”.

1தீமோத்தேயு: 2:6 – “எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக் கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது”.

மீட்பின் விலையும் – மீட்பின் பொருளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே என்பதை இந்த ஆய்வின்மூலம் அறிகிறோம்.




நவம்பர் 25, 2016

கடுகு விதையின் சிறிய அளவும் - கடுகு செடியின் பெரிய அளவும்

Image result for mark 4:30

கடுகு விதை

திறவுகோல்வசனம்:     மாற்கு: 4:30-32 – “பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது; விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்”.

இந்த உவமையை மத்தேயு: 13:31,32 ; லூக்கா: 13:18,19 ஆகிய சுவிசேஷங்களிலும் நாம் காணலாம்.

இதில் கடுகு விதை சிறியது என்று, மாற்கு, மத்தேயு மட்டுமே குறிப்பிடுகிறார்கள். லூக்கா இதை குறிப்பிடவில்லை.

கடுகு விதையை நிலத்தில் மனுஷன் விதைத்தான் என்று மத்தேயுவும் (13:31), மனுஷன் அதை எடுத்து தன் நிலத்தில் போட்டான் என்று லூக்காவும் (13:19) குறிப்பிடுகின்றனர். மாற்கு இவ்விடத்தில் மனுஷனைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

அப்படியானால் இந்த உவமையின் கருத்து என்ன?


“சபையானது ஆரம்பத்தில் ஒரு சிறிய விஷயம்தான். ஆனால், முழுஉலகத்தையே இரட்சிக்கும் தேவனுடைய ராஜ்யத்திற்கு அதுதான் அடிப்படை அஸ்திபாரம்” என்பதுதான் இதின் பொருள். எனவேதான், மாற்கும் அதைத் தொடர்ந்து மத்தேயுவும் கடுகு விதை சிறியது என்பதை குறிப்பிடுகின்றனர்.

இந்த உவமையில் முக்கிய அம்சம் மரம்தான். பறவைகள் வந்து தங்கக்கூடிய அளவிற்கு வளர்ந்ததுதான் இதின் விசேஷமே என்கிறார் மாற்கு.

“காலம் வந்து விட்டது; தேவனுடைய ராஜ்யத்தின் மகிமை மக்களுக்கு கிடைக்கும் காலம் இது; இஸ்ரவேலரில் ஒதுக்கப்பட்டவர்கூட அழைப்பைக் கேட்கின்றனர். புறஜாதியினரும் கேட்கும் காலம் வந்துவிட்டது. தேவனுடைய ராஜ்யம் வந்துவிட்டது” என்பதுதான் டாட் என்ற வேத பண்டிதரின் கருத்து.

கடுகு விதையின் சிறிய அளவும் - கடுகு செடியின் பெரிய அளவும்


கடுகு விதை என்றதுமே நமக்கு அதனுடைய மரபுப்படி சிறியத் தன்மையையே காட்டும். மத்தேயு: 17:20 – ல் இயேசுகிறிஸ்து விசுவாசத்தைக் குறித்து ஒப்பிடுகையில், “… கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்…” என கடுகு விதையின் சிறிய தன்மையை குறிப்பிடுவதைக் காணலாம். கடுகு விதையின் சிறிய அளவும் - கடுகு செடியின் பெரிய அளவும் என்பதனை வேறுபடுத்திக் காட்டுவதில்தான் உவமையைப் புரிந்து கொள்ளும் திறவுகோல் ஒருவருக்கு அமைகின்றது.

இந்த வேறுபாடானது அற்ப ஆரம்பம், பிற்பாடு விரிந்த வலிமையான ஓர் அமைப்பு முறை என்பதில் அல்ல (யோபு: 8:7); “இப்போது தேவனுடைய ராஜ்யம் மறைந்திருக்கிறது; அப்போது மாட்சிமையுடன் வெளிப்படும்” என்பதில் அடங்கியிருக்கிறது.

ஆகாயத்துப் பறவைகள்:


மாற்கு 4:32 – “… விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்”.

புறஜாதியினரை “ஆகாயத்துப் பறவைகள்” என்று யூத ரபிமார்கள் அழைப்பார்கள். ஆதாரம்: லூக்கா: 13:29 – “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்”.

தானியேல்: 4:10-12 – “நான் படுத்துக்கொண்டிருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. அதின் இலைகள் நேர்த்தியும் அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினாலே போஷிக்கப்பட்டது”.

தானியேல்: 4:21 – “அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது”.

தானியேலில் சொல்லப்பட்ட தரிசனமும், மாற்குவில் சொல்லப்பட்ட உவமையும் கருத்திலும் பொருளிலும் ஒத்துப் போவதைக் காணலாம்.
 இப்போது … கீழ்கண்ட பொருளின்படி மனதிற் கொண்டு, இந்த உவமையை தியானிப்போமானால் … உவமையின் உட்கருத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

 கடுகு விதை                                 - தேவனுடைய ராஜ்யம்
மனுஷன்                                          - கிறிஸ்து மற்றும் தேவமனிதர்கள்
மரம்                                                    - தேவனுடைய சபை
ஆகாயத்துப் பறவைகள்          - புறஜாதி மக்கள்
மரத்தின் கிளைகள்                     - கிளை சபைகள்


கடுகுவிதை – தேவனுடைய ராஜ்யம்:


தேவனுடைய ராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது. “அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது.” இந்த கடுகுவிதையானது விதைக்கப்பட்டதும் சிறிய செடியாக வரும் என்று நினைக்கும்போது, அது சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடுகிற பெரிய மரமானது. உண்மையில் கடுகு செடி சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், உவமையின்படி அது சகல பூண்டுகளிலும் பெரிதாகி ஒரு பெரிய மரமானதாம். இது எதைக் காட்டுகிறது?

பூமியில் தேவனுடைய ராஜ்யம் வளரும் வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூமியில் தமது ராஜ்யத்தைக் கட்ட விரும்புகிறார். அதற்குரிய மனிதர்கள் வசம் கடுகுவிதை போன்ற தரிசனத்தை சபை நிறுவ ஒப்படைக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட அபிஷேகம் நிறைந்த அழைப்பை உணர்ந்த, ஆத்துமபாரம் கொண்ட யாராயினும் விதையை விதைக்கலாம்.

விதைப்பவர் எப்படியிருப்பினும் விதைக்குள் ஜீவன் உண்டு என்பதை நாம் அறிவோம். விதை சிறியதாயிருப்பினும் அது வளரும்போது விருட்சமாகும். ஆலமரம் பெரிதாக வளருகிறது. அதற்காக அதன் விதையானது ஆலமரம்போல பெரிதாகவா இருக்கிறது. அதுபோலத்தான் இதுவும். விதை சிறியதாயிருந்தாலும் விதைக்குள் இருக்கும் மரபணு, அதன் வீரியத்தின்படிதான் வளர்ச்சி நிலை காணப்படும் என்பதை நாம் அறிவோமல்லவா?!

மரம் – தேவனுடைய சபை:


“அது சகல பூண்டுகளிலும் பெரிதாகி” – என்று சொல்லப்படுகிறது. அதாவது உலகில் உள்ள சகல மதவழிபாட்டு ஸ்தலங்களைப் பார்க்கிலும் (சகல பூண்டுகளிலும்), தேவனுடைய ராஜ்யமாகிய திருச்சபையானது பெரிதாகும் என்பது தேவனுடைய வாக்காகும்.

தானியேல் கண்ட தரிசனத்தின்படி “இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது” என்று பார்க்கிறோம்.

1.   விருட்சம் - வளர்ந்தது
2.   விருட்சம் – பலத்தது
3.   விருட்சம் – தேசத்தின் எல்லைவரை காணப்பட்டது
4.   விருட்சம் – வானபரியந்தம் எட்டினது
சபையின் வளர்ச்சியை தேவனுடைய ராஜ்யத்தின் வளர்ச்சியை பாருங்கள். அல்லேலூயா! ஆமென்!

 ஆகாயத்துப் பறவைகள் – புறஜாதிகள்:


ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையுமாம். முன்பே பார்த்தோம் … புறஜாதியினரை “ஆகாயத்துப் பறவைகள்” என்று யூத ரபிமார்கள் அழைப்பார்கள். ஆதாரம்: லூக்கா: 13:29 – “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்”.

 தானியேலின் எழுபது வாரங்களின் தரிசனத்தின்படி (தானியேல்: 9:24-27) இப்போது புறஜாதியரின் இரட்சிப்பு நிறைவேறும் காலம். தானியேல்: 9:26 வசனத்திற்கும் தானியேல் 9:27 வது வசனத்திற்கும் இடையில் உள்ள காலம்தான் புறஜாதியார் இரட்சிப்பு பெறும் காலமாயிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தேவன் நம்மைக் கொண்டு தமது ராஜ்யத்தை புறஜாதியார் நடுவே கட்டும்படி விரும்புகிறார். ஆகாயத்துப்பறவைகள் மாலைநேரம் (அந்தகார இருள்) நெருங்குகையில் உயரமான விருட்சங்களை (சபைகளை) பாதுகாப்பிற்காக தங்க தேடும். எனவே, சபைகள் பலமுள்ளவைகளாக காணப்பட வேண்டும். விருத்தியடைய வேண்டும். ஸ்திரப்பட வேண்டும். புறஜாதிகள் மீட்படைய அவர்கள் தங்கி தாபரிக்க, இளைப்பாற வேண்டிய வசதிகள் சபைகளில் செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆகாயத்துப்பறவைகள் தங்கி தாபரிக்க கடந்து வரும். தங்குமிடமும், தாபரிக்க ஒரு இடமும் நாம் ஏற்படுத்தாவிட்டால் மீட்கப்பட்ட ஆத்துமா எங்கே போகும்?

ஜலப்பிரளயத்திலிருந்து பல்லுயிர்களை காக்கும் திட்டத்தைக் கொடுத்த தேவனாகிய கர்த்தர், நோவாவை ஒரு பெரிய பேழையை செய்ய சொன்னார் என்பதை நாம் மறந்து விடக்கூடாதல்லவா?! அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாத்திட அதற்கு வேண்டிய அனைத்தையும் அவன் சவதரித்து வைக்கவில்லையா?! இந்த பாரம் போதகரிடமும், சபையாரிடமும் அதிகமதிகமாய் காணப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆகாயத்துப்பறவைகள் தங்குவதற்கான முன் ஆயத்தங்களை செய்ய இயலும். அதற்கான தரிசனமும், திட்டமும், ஜெபமும் நம் அனைவருக்கும் தேவை.

மரத்தின் கிளைகள் - கிளைசபைகள்:


ஸ்தலசபை மட்டும் நிறுவப்பட்டால் போதுமானதல்ல; கிளைசபைகளும் வளர வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம். அனைவரும் பட்டணங்களை நோக்கியே ஆராதனைக்கு வருவார்கள் என கருதிட இயலாது. கிராமங்களில், பட்டிக்காடுகளில், காட்டுக் கொட்டாய்களில், வயல்களின் நடுவில் உள்ள வீடுகளில் ஏராளமான மக்கள் திரள் உள்ளனர் என்பதை நாம் மறந்து விட கூடாது. அப்படிப்பட்டவர்களை சந்தித்திட கிளைசபைகளால்தான் கூடும். தரிசனமுள்ள கிராம ஊழியங்கள், ஊழியர்களால்தான் கூடும். அதை நாம் ஊக்குவிக்க தவறிவிடக்கூடாது. பட்டணங்களில் இருக்கிற ஊழியர்களைவிட கிராமங்களில் இருக்கிற அநேக ஊழியர்கள் மிகுந்த பாரத்தோடும், தியாகத்தோடும் பலபாடுகள் மற்றும் பற்றாக்குறை நடுவே அர்ப்பணிப்போடு செய்து வருவதை நாம் அறியாதிருக்க கூடாது. சமுதாய போராட்டங்கள், கலாச்சார போராட்டங்கள், பாரம்பரிய போராட்டங்கள், மூடநம்பிக்கை கலாச்சாரம் போன்ற போராட்டங்கள் கிராம ஊழியர்கள் சந்திப்பது பயங்கரமானது. ஊழியர்களுக்கு வீடு கிடைப்பது அரிது, கிடைத்த வீட்டிற்கு தண்ணீர் கிடைப்பது அல்லது கொடுப்பது என்பது இன்னும் இந்திய கிராமங்களில் அதைவிட கொடுமையானது என்பதை அறிவீர்களா? பட்டணம் கிராமம் என உயர்த்தி தாழ்த்துவதாக அர்த்தங் காண விழையக்கூடாது. அதேசமயம் பட்டணத்தில் உள்ளதை பார்க்கிலும் கிராமஊழியம் என்பது சற்று கடினம் என்பதையாவது மக்கள் உணரவேண்டும் என்பதை தெரியப்படுத்தவே இக்கருத்து.

பட்டணத்தில் உள்ள சபைகள் மற்றும் ஊழியர்கள் தங்களது கிளைகளை கிராமங்களை நோக்கி பரவச் செய்ய வேண்டும். பட்டணங்களில் உள்ள சபைபிதாக்கள் வெறும் பாரம்பரிய ஆராதனைகளை நடத்திக் கொண்டிராமல் … கிராமங்களில் தேவனுடைய ராஜ்யத்தை கட்ட கிளைசபைகளை நிறுவ மக்களை ஊக்குவித்து அனுப்பி வைக்க வேண்டும். கிராம ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் நினைவுகூர வேண்டும். கிராம ஊழியங்களை, ஊழியர்களை அற்பமாயெண்ணாமல் ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துங்கள். நாம் சென்று எவ்வித வசதியும் இல்லாத கிராமங்களிலெல்லாம் அவர்களைப்போல தங்கி ஊழியம் செய்துவிட முடியாது என்பதை நாம் உணர்ந்து, செய்பவர்களை ஊக்குவிப்போம்.

ஒரு சபை என்று ஒன்று இருக்குமானால் … நிச்சயம் அதற்கு கிளை சபை என்ற ஒரு சபை இருக்க வேண்டும். ஒரு செடி ஒரே நேராக மட்டுமே வளருமானால் … அது தருகின்ற பலன் குறைவே. அதே செடியானது கிளைவிட்டு பரவி வளருமானால், ஒவ்வொரு கிளையிலும் நாம் எதிர்பார்க்கும் பலன்கள் ஏராளமாய் கிடைக்கும். ஒரு போதகர் ஒரு சபையை மட்டும்தான் நடத்தி வருகிறார் என்றால்… அது சரியான நோக்கமல்ல … தரிசனமல்ல… தேவசித்தமல்ல… அதற்கு பெயர் பிழைப்பு. பிழைப்பு நடத்த வரவில்லை. தேவனுக்கு சேவை செய்யவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒருவரும் மறந்துவிட கூடாது. ஒவ்வொரு ஊழியரும் தன்கீழே குறைந்த பட்சம் இரு சபைகளையாது நிறுவ பாடுபட வேண்டும். மற்றும் இரு மிஷினெரிகளையாவது தாங்க முன்வர வேண்டும். அதற்கு ஜெபமும், அர்ப்ணிப்பும் தேவை.
ஆமென்! அல்லேலூயா!
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

நவம்பர் 24, 2016

சகோதரி.சாராள் நவ்ரோஜி

Image result for saaral naoroji

சகோதரி.சாராள் நவ்ரோஜி

தமிழ்க்கிறிஸ்தவ உலகம் சகோதரி.சாராள் நவ்ரோஜி அம்மாள் அவர்களை மறந்துவிட முடியாது. சகோதரியின் பாடல்களில் சத்தியமும், அனுபவமும், இனிமையும், எழிலும் மிளிரும்.

சிலோன் பெந்தெகொஸ்தே மிஷன் சபையில் (CPM) சகோதரி ஊழியத்திற்காக சேர்ந்திருந்த, அந்த நாட்களில் (1960), தலைமையகமாய் விளங்கிய கொழும்புக்கு (இலங்கைக்கு) இவர்களை சபை அனுப்பியது. அப்போதெல்லாம் இன்றிருக்கும் அளவிற்கு விமானப்பயணங்களும், பொருளாதார வசதிகளும் பெருகியிருக்கவில்லை.

எனவே, இலங்கை நாட்டிற்கு செல்ல, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், தனுஷ்கோடி, மண்டபம் கேம்ப் இவற்றைக்கடந்தே இரயில் மூலம் செல்ல வேண்டும். கடல் கடக்க, கப்பல் ஏறி தலைமன்னார், மன்னார் வழியாக கொழும்பு நகருக்குச் செல்வதுதான் அக்கால வழக்கம்.

சபைமூலம் கர்த்தர் தந்த அந்த அழைப்பினை ஏற்று, சகோதரி. அவர்கள் தனுஷ்கோடிக்குச் செல்வதற்காக சென்னை எழும்பூர் தொடர் வண்டி நிலையத்திற்கு வந்தபோது, தனது தாயார் வழியனுப்ப வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். தாயாரோ தென்படவே இல்லை. தொடர் வண்டியில் ஏறி அமர்ந்தபோதும், சகோதரியின் கண்கள், தம் தாயார் தென்படுகிறார்களா எனத்தேடி துழாவிப் பார்த்தன. தாயாரோ வரக்காணோம். வண்டியும் புறப்படத் தயாராயிற்று. தாயார் வரமாட்டார்கள்போலும் எனத் தன்னைத் தேற்றிக்கொண்டிருந்தபோது, ஏசாயா: 49:15 வது வசனம் அவர்கள் சிந்தனையில் மின்னியது.

தொடர் வண்டியில் இருந்தபடியே, அவர்கள் அன்று எழுதிய நம்பிக்கைப் பாடல்தான் …

    “என்னை மறவாஇயேசுநாதா 
உந்தன் தயவால் என்னை நடத்தும்”

(இந்தப் பாடலின் சரணங்களில் ஒன்று)

“தாய் தன் சேயை மறந்து  விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே"

இன்றுவரை எத்தனை கோடி நாவுகளோ இந்தப் பாடலைப் பாடுகின்றன…! மகிழ்கின்றன…! தேறுதலடைகின்றன…!

இந்தப் பாடல் முழுவதையுமே, இப்போது ஒருதடவை பாடிப்பாருங்களேன்…!

ஒரு குழந்தை, தன் தாயின் மடியில் எவ்விதக் கலக்கமோ, பயமோ, தவிப்போ இன்றி, மகிழ்ந்து களிகூறும் உணர்வுதான் வந்து சேரும்!

அவநம்பிக்கை, அதைரியம், பயம், சந்தேகம், கலவரம், சத்துருவின் ஆயுதங்கள் பற்றிய திகில் எல்லாம் பறந்தோடிவிடும்!

பெராக்காவில் கூடி,  ஆனந்த முழக்கமிட்டுக் கர்த்தரைத் துதித்த யோசபாத்தின் கூட்டம்போல் மகிழ்ந்துபோவோம்!

தன் சோக அனுபவத்தில் ஒரு தெய்வீக இதமும், துணிவும் கண்ட சகோதரி அவர்கள், ஆயிரமாயிரங்களுக்கு அந்த அனுபவத்தைக் கொடுக்கவும் கிருபை பெற்றிருந்தார்கள்.

சகோதரி அவர்கள் இந்தப் பாடலை எழுதவேண்டுமென விரும்பிய பரிசுத்த ஆவியானவர்தான். அவர்கள் தாயாரைச் சற்று மறைத்து வைத்தாரோ என்னவோ?!

வெனு நேரத்துக்கு முன்பாகவோ தொடர்வண்டி நிலையம் வந்துவிட்ட தாயார், வேறொரு நடைமேடையில் மகளுக்குக் காத்திருந்துவிட்டு, பின்பு தகவலறிந்து வண்டி நகரும்போதுதான், மகள் இருக்கும் சரியான இடம் வந்து, கரம் அசைத்து மகளை வழியனுப்பினார்கள்.

ரோமர்: 8:2; பிலிப்பியர்: 1:12 வசனங்களை ஒரு தடவை வாசித்து விடுங்களேன்! பவுல் சொல்கிறார்: “எனக்கு சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று…!”

எனவே, ஊழியருக்குச் சம்பவிப்பவைகள் எவையாயினும், (அவை அவர்களுக்கு சாதகமானவையோ, பாதகமானவையோ) அனைத்தும் நன்மைக்கே….! கர்த்தரின் நாம மகிமைக்கே…!

நன்றி: நித்தியபேரின்பம்