நவம்பர் 04, 2014

பிசாசு கையாளும் தந்திரங்கள்



தேவ ஜனங்களை வீழ்த்த - பிசாசு கையாளும் தந்திரங்கள்

திறவுகோல் வசனம்: 2நாளாகமம்: 32:10 - 19 வரை உள்ள சம்பவம்.

அசீரியா ராஜாவாகிய சனகெரிப் - தேவஜனங்களை தன் வார்த்தைகளினால் பயமுறுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மேல் உள்ள அவர்களது நம்பிக்கையை அற்றுப்போகச் செய்து, மக்களை தன்வசப்படுத்தப் பார்ப்பதை காண்கிறோம். சாத்தான் ஜனங்களை வீழ்த்த என்னவெல்லாம் தந்திரங்கள் செய்வானோ... அவை அனைத்தையும் இவனது நடவடிக்கைகளில் காண முடிகிறது. எனவே, சனகெரிப்பை சாத்தானுக்கு ஒப்பிட்டு தியானித்துப் பார்ப்போமானால், தேவ ஜனங்களை வீழ்த்த நினைக்கும் சாத்தான் கையாளும் தந்திர முறைகளை நாம் அறிய முடியும்.

நாம் தியானிக்கிற வேதபகுதி 2நாளாகமம்: 32:10 - 19 வரை உள்ள வசனங்கள்:

1.  32:10 - "நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?"

சந்தேகத்தை உண்டு பண்ணும் கேள்வி. சாத்தான் எப்போது வந்தாலும், தேவ ஜனத்திடம் கேட்கின்ற முதல் கேள்வியும், சந்தேகமும் இதுவாகத்தான் இருக்கும். சந்தேகத்தினால் நமது விசுவாசத்தை பலவீனப்படுத்துவது அவனது தந்திரமான திட்டங்களில் ஒன்றாகும்.

ஆதியாகமம்: 3:1 - "... தேவன் சொன்னதுண்டோ என்றது". ஆதிப்பெற்றோரிடம் சாத்தான் இதுபோன்றதொரு சந்தேகமான கேள்வியைக் கேட்டுத்தானே மனிதனை வீழ்ச்சியடைய செய்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நமது திட அஸ்திபாரம் எது? நமது விசுவாசம் எதின்மேல் உள்ளது? இக்கட்டுவேளையில் நாம் யாரை நோக்கிப் பார்ப்போம்? சத்துருவை மேற்கொள்ள நாம் எடுக்கும் ஆவிக்குரிய வழிகள் எவை? இதையெல்லாம் சாத்தான் நன்கு கவனித்து - அவ்வழிகள்மேல் நமக்கு நம்பிக்கையிழக்கச் செய்து, விசுவாசத்தைவிட்டு வழிவிலகச் செய்து நம்மை வீழ்த்துவதே சாத்தானின் முதல் தந்திரம்.

2.  32:11 - ஊழியக்காரரின் வார்த்தையை பொய்யாக்குதல்:

நம்மை வழிநடத்துகிற ஆவிக்குரிய போதகர் மற்றும் ஆவிக்குரிய தலைவர்களின் வார்த்தைகளை பொய்யாக்க தந்திரமாக பேசுவான். போதிக்கிற போதகரின் போதனையை அவமாக்க முயலுவான். இயேசுவை தொழுது கொண்டால் உனக்கு பிரச்சினை தீராது. கஷ்டம் நீங்காது. எதிர்காலம் என்னவாகும் என்பதை யோசி... என தனது தந்திரமான உலக வார்த்தைகளினால் அச்சுறுத்தி - தேவ வார்த்தையை அவமாக்குவான். 

கர்த்தருடைய வார்த்தையின்மேல் இருக்கும் நமது விசுவாசத்தை இழக்க செய்வான். நமது நம்பிக்கை வீணென்று பொய்யாக் கூறுவான்.

3.  32:11 - ஊழியர் உங்களை பட்டினி போடுவார் என்பான்: 

நீங்கள் போகும் சபையில் உங்களுக்கேற்ற ஆவிக்குரிய ஆகாரம் கிடைக்காது. உங்கள் குடும்ப தேவைகள் நிறைவேறாது. பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அச்சுறுத்துவான். எல்லாவிதத்திலும் நீங்கள் குறைவுபட நேரிடும். உங்கள் ஊழியர் கடைசியில் அந்த நிலைமைக்குத்தான் உங்களை கொண்டு போய் விடப் போகிறார் என கூறி பயமுறுத்துவான்.

4.  32:13,14 - சாத்தானின் பராக்கிரமத்தை விவரித்தல்:

சாத்தான் தனது போலியான பராக்கிரமத்தை எடுத்துரைத்து அதை நம்பும்படி விவரிப்பான். உலக ஆசை இச்சைகளை நம்முன் எடுத்து வைப்பான்.

5.  32:15 - ஊழியக்காரர்மேல் அவநம்பிக்கையை கொண்டு வருதல்: 

அவசியமின்றி காரணமின்றி ஊழியக்காரர்மேல் சேற்றைவாரி இறைப்பான். ஜனங்கள் கர்த்தருடைய ஊழியக்காரர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்த்தெறிச் செய்ய முயற்சிப்பான். அவரது உபதேசத்தைக் கேட்க வேண்டாம். அது வஞ்சிக்கிற உபதேசம் என துணிகரமாக கூறுவான்.  

6.  32:15 - நம் தேவனை குறை சொல்லுதல்: 

இன்றைக்கும் பல நாத்திக இயக்கவாதிகள், மற்ற மாற்று கருத்துடைய மார்க்கத்தினர் நமது தேவனுடைய கற்பனைகளை அவமாக்குவதும், கேலி செய்வதும், தூஷிப்பதையும் அவர்களது பத்திரிக்கைளிலும், இணையதளங்களிலும், முகநூல், ட்டுவிட்டர்களிலும் காணமுடிகிறது.

7.  32:17  - ஊழியக்காரன் உங்களை காப்பாற்ற மாட்டான்:


8. 32:17  - இதை நிரூபிக்க நிருபங்களை எழுதுவான்: 

9. 32:18 - உங்கள் மொழியிலேயே பேசுவான்:

10.  32:19 - அவர்களைப்பற்றி நினைப்பதுபோலவே - நம் பரிசுத்ததேவனை பற்றியும் நினைப்பர்:

இவைகளை வெல்ல ஒரே வழி: கர்த்தரை நோக்கி அபயமிடுவதுதான் ஒரே வழி. அதாவது முழங்கால்களை முடக்கி, கைகளை வானத்துக்கு நேராக உயர்த்தி கர்த்தரை நோக்கி தேவ ஜனங்கள் மிகுந்த பாரத்தோடு ஜெபிக்க வேண்டும்.

32:21 - அப்பொழுது செத்த முகத்தோடு சத்துரு தலைகவிழ்ந்து வெட்கப்பட்டு திரும்பிச் செல்வான்.

எனக்கன்பான தேவஜனமே!

நாம் வாழும் நாட்கள் கடைசி நாட்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம். ஒருமனமாய் சபைகளில் கூடி, சபைக்கு விரோதமாய், ஊழியங்களுக்கு விரோதமாய், ஜனத்துக்கு விரோதமாய் கிரியை செய்ய நினைக்கிற சாத்தானின் தந்திரங்களை முழங்கால் ஜெபத்தினால் முறியடிக்க முன் வருவோம். சத்துரு வெட்கப்படுகிற நாட்கள் உங்கள் முழங்கால் ஜெபத்தினால் வரட்டும். சபை ஆராதனைகளுக்கு தவறாமல் செல்லுங்கள். விசுவாச வாழ்வில் ஸ்திரமாயிருங்கள். சபைகளில் நடக்கின்ற இரவு ஜெபம், உபவாச ஜெபங்களில் பங்குபெறுங்கள். ஒன்று சேர்ந்து துதியுங்கள். ஜெபியுங்கள். கர்த்தர் உங்கள் நடுவில் மகிமையான காரியங்களைச் செய்வாராக! ஆமென்.