நவம்பர் 03, 2014

தேறினவனாக நிறுத்தும்படி ...



கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படி ...

(ஊழியருக்கான தேவ செய்தி)

கொலோசெயர்: 1:26 - "உங்கள் பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்த சபைக்கு ஊழியக்காரனானேன்".

சபை ஊழியர்களை தேவன் எதற்காக சபைக்கு நியமித்திருக்கிறார் என்பதை முதலில் நன்கு அறிந்து, அதற்கு அர்ப்பணித்து அந்த தேவ நோக்கம் நிறைவேற பிரயாசப்பட வேண்டும் என அப்.பவுல் கூறுகிறார் (கொலோசெயர்: 1:25-29).

1. சபை இன்று கிறிஸ்துவை விவரிக்க வேண்டும்:

யாத்திராகமம்: 13:14 - "பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்: நீ அவனை நோக்கி, ..." 

பஸ்கா பண்டிகையின் அடையாளத்தை பெற்றோர் பிள்ளைகளுக்கு விவரிக்க வேண்டும்.

நியாயாதிபதிகள்: 2:10 - "அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்ட பின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த  கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப் பின் எழும்பிற்று".

சபை இன்று கிறிஸ்து இயேசுவை விவரிக்க வேண்டும். இது சபையின்மீது உள்ள தேவனுடைய திட்டமாகும்.

இதை செய்யாத பட்சத்தில் அடுத்த தலைமுறை என்னவாயிருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.  (அப்போஸ்தலர்: 4:17-20). கர்த்தரை அறியாத சந்ததியின் நிலை என்னவாகும் என்பதை நாமறிவோம்.

2. மனிதனோடு உள்ள தொடர்பு:


கொலோசெயர்: 1:28 - "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்".

தம்மிடம் வருகிற எவரையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்த... ஊழியர்களுக்கு எல்லா ஞானமும் வேண்டும் என அப்.பவுல் கூறுகிறார்.

நீதிமொழிகள்: 27:23 - "உன் ஆடுகளின் நிலைமையை நன்கு அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு" என வேதம் எச்சரிக்கிறது.

ஏனென்றால், ஜனங்கள் வித்தியாசமான கோணத்தோடு சபைக்கு வருகிறார்கள். எப்படியென்றால், அன்று யோவான்ஸ்நானகனைக் காணச் சென்ற மக்களைப்போல...

மத்தேயு: 11:7-9 - "... எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ?  மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ?..." என யோவான் ஸ்நானகனைப் பற்றி இயேசு கூறுவதை வாசிக்கிறோம்.

அ)  காற்றில் அசையும் நாணலைப் பார்க்க வரும் கூட்டம்:

- இயற்கை காட்சிகளை இரசிக்கிற இரசனை நிறைந்த மக்கள்

- சபை கட்டிடம்,  பாடல் ஆராதனையை இரசிக்க வருகிற மக்கள்

- நாணல் போல அசையும் மக்களை கண்டு குற்றம் பிடிக்க வரும் மக்கள்

ஆ)  மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனை காண வரும் கூட்டம்:

- தேவ செய்தியை பக்தி வினயமின்றி வெறும் - பிரசங்கத்தைக் (சொற்பொழிவு போல) கேட்க வரும் மக்கள்

- போதகரின் தோரணையை காணவரும் மக்கள்

- போதகருடைய ஆளத்துவத்தை இரசித்து வரும் மக்கள்

இ)  தீர்க்கதரிசியை காண வரும் கூட்டம்:

- அற்புதங்களை எதிர் பார்த்து வருகிற மக்கள்

- தேவைகளை எதிர் நோக்கி வரும் மக்கள்

- குறி கேட்க வரும் மக்கள்

இப்படிப்பட்ட பல்வேறு மாறுபட்ட எண்ணங்களோடு, எதிர்பார்ப்புகளோடு மக்கள் வருவார்கள். மேற்கண்ட மக்கள் திரளிடம் ஸ்திரமான விசுவாசத்தை நாம் காண முடியாது. இப்படி நாடி வரும் மக்களை பரிசுத்த ஆவியானவர்தாம் ஊழியர்களிடம் அனுப்பி வைக்கிறார். எதற்காக? அவர்களை கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாக நிலைநிறுத்தவே.

3.  இயேசுவையே அறிவிக்க வேண்டும்:

கொலோசெயர்: 1:28 - "எந்த மனுசனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து..."

எந்த மனுஷனையும் தேறினவனாக நிலைநிறுத்த வேண்டுமானால், இயேசுவையே அறிவிக்க வேண்டுமேயொழிய வேறில்லை என அப்.பவுல் கூறுகிறார்.

தங்களுக்கு உரியவைகளுக்காக இயேசு கிறிஸ்துவை தேடக்கூடாது. பணத்திற்காகவோ, புகழுக்காகவோ நம்மை விட்டுக் கொடுக்கக் கூடாது.

அ)    2நாளாகமம்: 16:2 - "அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம் பண்ணுகிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:" என வாசிக்கிறோம்.

முதலில் கர்த்தரை விற்றான்
இரண்டாவது தன்னையே விற்றான்.

தனக்கு வந்த நெருக்கத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவன் தன்னையே விற்றான். பின்பு, தன்னோடுள்ள கர்த்தரையே விற்றான்.

வயிற்றிற்காக சத்தியத்தையும், சுயமரியாதையையும் இழக்கத் துணிபவர்கள் இவர்கள்.

ஆ)     2நாளாகமம்: 16:12 - "ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதி கண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்" என வேதம் கூறுகிறது.

இதை பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு வருத்தத்தோடு எழுதியிருக்கிறார் என்பதை பாருங்கள். 

என் மக(ள்)ன் என்னைத் தேடவில்லையே...
என் ஜனம் என்னைத் தேடவில்லையே... - இப்படிப்பட்டவர்களை இன்றும் ஆவியானவர் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்.

இப்படிப்பட்டவர்களுக்காக எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம், புத்தி சொல்லுகிறோம்.

இ)    துர் உபதேசங்களிலிருந்து சபையை தப்புவிக்க வேண்டும்:


2சாமுவேல்: 18:26 - "ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடி வருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டு வருகிறவன் என்றான்"

துர் உபதேசங்களை அடையாளம் காட்டிக் கொடுக்க வேண்டும். சாதோக்கின் குமாரன் அகிமாஸ் - அவன் செய்தி இல்லாதவன். ஜாமக்காரன் இனம் கண்டு பிடித்து சரியாகச் சொன்னான்.

இன்றைய காலகட்டங்களில் அநேக துர் உபதேசங்கள் சபையை நோக்கி வருகிறது. அதை ஊழியர்கள் இனம் கண்டு பிடித்து, சபைக்கு சொல்லி எச்சரிப்பதுதான் ஞானமாகும்.

ஆடுகளுக்கு, அதன் எதிராளிகளைக் குறித்து, அதன் தந்திரங்களை குறித்து, அதன் தவறுகளைக் குறித்து, திட்டமாக சொல்லியிருந்தால், அது எதிரிகளுக்கு தப்பித்து, தன்னைக் காத்துக் கொள்ள முடியும். சொல்லாவிட்டால், எவன் எதிரி? யார் நண்பன்? யார் பகைவன்? என தெரியாமல் வீழ்ந்து விடும்.

சங்கீதம்: 74:5 - "கோடாரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்".

4. தேவனோடு உள்ள தொடர்பு:

கொலோசெயர்: 1:29 - "அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்".


"வல்லமையின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்"

வல்லமையினால் அல்ல;  'வல்லமையின்படி'  என்பதை கவனியுங்கள்.

'அவர் எனக்குள் சொல்வதின்படி போராடுகிறேன்' என்று பொருள்.

தேவ நடத்துதலின்படி மனிதன் செயல்பட வேண்டும். என் சித்தம் அல்ல; கடவுளின் சித்தமே எனக்குள் நடைபெறுகிறது என்ற நிலை இருத்தல் அவசியம்.

ஜனங்களுக்கு ஆசீர்வாதம் பெற்றுத்தர நாம் போராட வேண்டும்.

மனிதன் தன் விருப்பத்தை நிறைவேற்ற பலத்தினால் போராடுவான்;  நாமோ... தேவ பலத்தின்படி, தேவ நடத்துதல்படி போராடுகிறோம்.

பெருங்கூட்டத்தை கொண்டு வர பிரயாசப்படுவது நல்லதுதான்; அதைவிட மேலானது, கொண்டு வந்த மனிதரை கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாக நிலை நிறுத்துவதுதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஒரு சபை தரமுள்ள சபையாக காணப்பட அதன் ஊழியர் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். கர்த்தர்தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.