நவம்பர் 19, 2014

நீ உன்னையறிந்தால்...


லூக்கா: 22:32 - "... நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து..."

நாம் முதலாவது குணப்பட வேண்டும். சீர்பட வேண்டும். ஸ்திரப்பட வேண்டும். அதற்கு நம்மை நாமே அறிய வேண்டும். நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் எந்நிலையில் இருக்கிறோம்? எந்த இடத்தில் இருக்கிறோம்? நாம் விரும்பின, எதிர்பார்த்த அவ்விடத்தில் இருக்கிறோமா? அல்லது வெற்றிடத்தில் செயலற்றவர்களாக இருக்கிறோமா? தேவன் விரும்பின இடத்தில் இருக்கிறோமா? அல்லது வேறொரு விரும்பா இடத்தில் இருக்கிறோமா? நம்மை நாம் அறிந்தால் ... நாம் விரும்பிய உயர்ந்த இடத்தை பெறவும், தேவன் எதிர்பார்க்கும் காரியத்தை நம் வாழ்வில் செய்து முடித்திடவும்  நம்மால் இயலும்.

"நேற்றைய தினம் இறந்து விட்டது - மறந்து விடு
நாளை இன்னும் உருவாகவில்லை - கவலைப்படாதே
இன்றைய தினம் இருக்கிறது - உபயோகித்திடு"


கடந்தகால வாழ்க்கையில் ஏற்பட்ட காரியங்களை சீர்படுத்தி, சுகமாக்கி, நிகழ்கால வாழ்க்கையில் தேவன் சமாதானம் கொடுக்கிறார். எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோளையும் தேவன் தருகிறார்.

நம் வாழ்வில் இழப்புகள் வரும்போதும்... 
நஷ்டங்கள், தோல்விகள் நேரிடும்போதும்...
மற்றவர்களால் புறக்கணிக்கப்படும்போதும்...
நம்பியிருந்தவர்களால் கைவிடப்படும்போதும்...
தேவைகள் சந்திக்கப்படாதபோதும்...
நெருக்கமானவர்கள் நம்மைவிட்டு பிரிய நேரிடும்போதும்....
நம்பிக்கை துரோகம், ஏமாற்றம், மோசம்போகும்போதும்...

நம் வாழ்வில் வருவது விரக்தி... தற்கொலை எண்ணம்... நான் இனிமேல் யாருக்காக வாழ வேண்டும்? ஏன் வாழ வேண்டும்? என்ற எண்ணம் நம் மனது முழுக்க நிரம்பி... செய்வதறியாது திகைத்தவர்களாய் காணப்படுவோம். நல்ல சிந்தனை இருக்காது. இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும்போது... தேவனுடைய வார்த்தைகள் நமக்குள் கிரியை செய்ய நம் மனம் இடம் கொடுக்காது. ஆனாலும், கர்த்தர் நம்மோடு யாரைக் கொண்டாகிலும் அவர் நம்மோடு தொடர்பு கொண்டு பேசுவார். கடந்தகால வாழ்க்கையில் ஏற்ப்பட்ட காரியங்களை சீர்படுத்தி, சுகப்படுத்தி, நிகழ்கால வாழ்வில் சமாதானம் கொடுத்து, எதிர்கால வாழ்விற்கு ஒரு குறிக்கோளையும் தந்து ... அதற்காக வாழவேண்டிய சந்தர்ப்பத்தையும், இலக்கையும் கொடுத்து வாழ வைப்பார். நாம் இவ்விதமாக தேவனால் பலப்படுத்தப்பட்டு ஸ்திரப்படுத்தப்பட்டவர்களாய் இருந்து, நம்மைப்போல வாழ்வை தொலைத்த நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாய் நம்மை உபயோகப்படுத்துவார்.

நாம் வாழ்வது ஒரு வாழ்வு. அது இயேசுவுக்காக வாழ தீர்மானமெடுப்போம். அது அர்த்தமுள்ள வாழ்வாய் காணப்படும். அந்த வாழ்விற்கு பரலோகில் மகிமையான பலன் உண்டு என வேதம் கூறுகிறது. இவ்வுலக பாடுகளுக்காக பயந்து தேவன் தந்த அருமையான ஜீவனையும், ஆத்துமாவையும் எக்காரணம் கொண்டும் இழந்து விடாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இவ்வுலக வாழ்வு பாடு நிறைந்தது. அப்பாடுகளுக்கு ஒரே தீர்வு தற்கொலை மட்டுமே - என பிசாசு நம் மனதில் ஏவிக்கொண்டே இருப்பான். அதற்கு நாம் செவி தரக்கூடாது. நம்மைக் குறித்து தேவனுக்கு ஒரு திட்டம் உண்டு. அது உலகில் நிறைவேறும்வரை போராடுவோம். அதுவே நல்ல போராட்டம்.

நெருக்கமான சூழ்நிலைகளில் நம்முடைய மனது என்ன சொல்கிறது - என்பதல்ல; தேவன் என்னை என்ன செய்யச் சொல்கிறார் என்பதையே நாம் சிந்திக்க வேண்டும்.

நெருக்கப்படுகின்ற காலங்களில் அவரே என் தஞ்சம் என சங்கீதக்காரன் தாவீது கூறுவதை நாம் நினைவு கூர்வோம் (சங்கீதம்: 9:9).

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார் என சங்கீதம்: 107:6 ல் வாசிக்கின்ற வண்ணமாக கர்த்தரை நோக்கி கூப்பிட் வேண்டும். அப்பொழுது இக்கட்டுகள் எப்படிப்பட்டதாயிருந்தாலும், அது நம்மை விட்டு நீங்கும்.

இன்று ஊழியம் செய்து வரும் அநேக கர்த்தருடைய தாசர்களில் பலர் மரணத்தை நோக்கி ஒரு காலத்தில் ஓடினவர்கள்தான். அந்நிலையில் ஆண்டவருக்கு அர்ப்பணித்ததினிமித்தம்... இன்று கர்த்தரால் வல்லமையாக பயன்படுகிற கனத்திற்குரிய பாத்திரமாக விளங்கி வருகின்றனர். மனமுடைந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலையும், ஆசீர்வாதத்தை வழங்கும் நீரூற்றுகளாகவும் இருக்கின்றனரே! உங்களை கர்த்தருக்கு அர்ப்பணித்தால் தேவன் உங்களையும் அவ்விதமாய் எடுத்து உபயோகப்படுத்துவார். உங்களால் எத்தனையோ பல்லாயிரக்கணக்கானோர் ஆறுதலைப் பெறுவார்கள். விடுவிக்கப்படுவார்கள். ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

அதற்கு முதலில் நீங்கள்...  குணப்பட வேண்டும். அதற்கு கர்த்தரிடம் தங்களை அர்ப்பணிப்பீர்களா?

இப்பொழுது நீங்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள்? எந்த இடத்தில் இருக்கிறீர்கள்? எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறீர்கள்? உங்களை நீங்கள் அறிந்து... உண்மை நிலையை கர்த்தரிடம் எடுத்துரையுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார்.

உன்னைக் குறித்த தேவ சித்தம் என்ன?

லூக்கா: 22:32 - "... நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து..."  - இதுதான். ஆம். நீங்கள் மற்றவர்களை - சகோதரரை ஸ்திரப்படுத்த வேண்டும்.

உலக கவலைகளில் சிக்கி மாண்டு போக அல்ல...
தோல்விகளால் துவண்டு போக அல்ல...
நஷ்டங்களால் நலிவடைந்து நடைபிணமாக அல்ல...
பயத்தினால் ஓடிப் போக அல்ல...

தேவனால் பயன்படுத்தப்பட்டு - பயத்தை, சாத்தானை துரத்தியடிக்கிறவர்களாய் மாறப்போகிறீர்கள். கர்த்தருடைய நாமத்தைக் கொண்டு பலத்த அற்புதங்களை செய்கிறவர்களாக மாறப் போகிறீர்கள். அழிக்க நினைத்தவனுக்கு முன்பாக நின்று நித்திய ஜீவனை அறிவிக்கவும், சுதந்தரிக்கிறவர்களாகவும்  நிலைநிறுத்தப்பட்டுள்ளீர்கள் என்பதை மறந்து போகாதீர்கள். உங்களை வெல்ல நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள். பலங் கொண்டு திடமனதாயிருங்கள். கர்த்தர் உங்கள் முன்னே போகிறார். 

ஜெயக்கிறிஸ்து முன் செல்கிறார்... ஜெயமாகவே நடத்திடுவார்...