இரக்கம் காட்டுங்கள்
இரக்கம் கிறிஸ்துவோடு இணைந்து செல்கின்றது. அவரிடமிருந்து இரக்கத்தைப் பிரிக்க முடியாது. மூழ்கித் தவிப்போருக்கு, கிறிஸ்துவைப்போல ஆறுதல் அளித்து, நம்பிக்கையை கொடுத்து தேற்ற வேண்டிய கடமை நமக்குண்டு. ஆண்டவர் இயேசு இதைச் செய்தார் (எபி: 13:5,6). உடன்பிறந்த சகோதரனைக் காட்டிலும் நெருங்கி நிற்கும் நண்பராக அவர் விளங்குகிறார்(நீதி: 18:24).எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்று தவறாக நாம் நினைத்துக் கொள்கிறோம். நமக்குச் சமமானவர்கள் என்று நாம் கருதும் எல்லைக்குள் பொருந்தாதவர்களை தாழ்வாகப் பார்க்கும் இயல்பு நம்மை பற்றிக் கொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், எல்லோரும் சமமாகப் படைக்கப்படவில்லை. சிலர் மற்றவர்களைவிட மிகுந்த அறிவுடையவர்களாக உள்ளனர். சிலர் அழகுடையவர்களாக இருக்கின்றனர். திறமையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் உடல் ஊனமுற்றவராக பிறக்கின்றனர்.
இரக்கம் பாராட்டுகிறவனாக நான் இருப்பேனென்றால், இந்த வேறுபாடுகளுக்கு வெவ்வேறு சலுகை காட்டுகிறவனாக இருப்பேன். மற்றவர்களால் இளப்பமாக நடத்தப்படுகிறவர்களிடம் என்னுடைய இருதயம் நோக்கமாக இருக்கும். இவ்வுலகம் மனிதர்களை எடைபோடுகிறதுபோல, நான் மதிப்பிட மாட்டேன். அனைவரையும் மதிப்புமிக்கவர்கள் என்றே எண்ணுவேன். தேவனுடைய குமாரன் அவர்களுக்காக மரித்ததன் காரணமாக, அவர்கள் அழிந்து போகக்கூடியவர்கள் அல்லர் என்பதை உணர்வேன். தேவன் அவர்களை எவ்வாறு மதிப்பிடுகிறாரோ, அவ்வாறே நானும் மதிப்பிடுவேன்.
* அமெரிக்கா சென்று பிரிட்டனுக்கு திரும்பி வந்த ஒரு ஊழியரிடம், “அமெரிக்காவில் உங்களை மிகவும் கவர்ந்தது எது?” என கேட்டபோது, “பெரும் செல்வந்தரின் மகன் வில்லியம் போர்டன் என்பவர் நகரத்தின் ஏழைகள் இல்லத்தில் வாழும் ஒரு பிச்சைக்காரனின் தோளின்மீது தன் கையை போட்டுகொண்டதே என்னை மிகவும் கவர்ந்தது” என்றார்.
* உயர்ந்த மனிதர்களுக்கு என்று தரப்பட்ட வசதிகள் நிறைந்த இடத்தில் தங்காமல் ஜே.என்.டார்பி என்பவர், வயது முதிர்ந்த தம்பதிகள் வாழ்ந்த எளிமையான கூடத்தில் தங்குவதையே தெரிந்து கொண்டார்.
இயேசுவுக்கு நல்ல சீஷனாக இருக்கும் ஒருவன்…
*வயது முதிர்ந்தவர்களோடும், வீட்டில் அடைப்பட்டு கிடப்பவர்களோடும் இரக்கம் பாராட்டுவான்
*நோய்வாய்பட்டவர்களையும், விபத்தில் காயமடைந்தவர்களையும் நேரில் சென்று பார்ப்பான்
*வேலையற்றவர்களுக்கும், மரணம் சந்தித்த வீடுகளுக்கும் உணவு கொண்டுபோய்த் தருவார்
*நடக்க முடியாமல் சக்கர வண்டியில் செல்லும் இளைஞனிடம் தானாக சென்று உரையாடுவான்
*மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுகுழந்தைகளை அரவணைத்து செல்வான்
*உடல் ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், தனிமையில் வாழ்பவர்கள், மனவருத்தம் உடையவர்கள் ஆகியோரைபற்றி அக்கறையுடையவராக இருப்பான். இப்படிப்பட்டவர்களிடம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இரக்கம் பாராட்டி நற்கிரியைகளால் அன்புகூர்ந்ததுபோல அன்புகூறுவான்
மேற்கு மிக்சிகன் மாநிலத்தில் 15 வயது நிரம்பிய சிறுவன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டான். “கீமாதெரஃபி” என்ற சிகிச்சையினால் தலையிலிருந்த முடியெல்லாம் கொட்டிவிட்டது. நோயின்முடிவு என்னவாகும் என தெரியாத நிலையில், பள்ளிக்குச் சென்றால் வெட்கத்தையும், அவமானத்தையும் அனுபவிக்க வேண்டியதாகுமே! பள்ளிக்கு திரும்பிய முதல்நாளில் வியப்பு காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். ஞானமுள்ள சிறுவர்கள் புதியமுறையில் இரக்கத்தை வெளிப்படுத்திக் காண்பித்தார்கள். அந்த நண்பர்களின் செயல் அச்சிறுவனுடைய வேதனையைக் குறைத்தது. இவ்வித இரக்கம் நம்மிடத்திலும் காணப்பட வேண்டும்.
“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்: 5:7)
நன்றி: வில்லியம் மெக் டொனால்டு