உள்ளம் நொறுங்குதல்
“நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங்: 34:18).
“தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்: 51:17).
“அவர் அதிகமான கிருபை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது” (யாக்: 4:6).
*ஆவிக்குரிய வல்லமையால் யாக்கோபு நிரப்பப்படுவதற்கு முன்னால், அவனுடைய உடல் வலிமை நொறுக்கப்பட வேண்டியிருந்தது (ஆதி: 33:22-32)
* மண்பாண்டங்கள் உடைக்கப்பட்டு வெளிச்சம் பிரகாசித்தபோது, பகைஞர் அச்சமுற்றனர் (நியா: 7:18,19)
* 5 அப்பங்களும் 2 மீன்களும் நொறுக்கப்பட்ட பிறகே, பெருந்திரளான மக்களுக்கு உணவு கிடைத்தது (மத்: 14:19)
*கூரை பிய்க்கப்பட்டு திமிர்வாதக்காரன் மன்னிப்பைப் பெற்றான். உடல்நலமும் அடைந்தான் (மாற்: 2:1-12)
*தைலக்குப்பி உடைக்கப்பட்டு நளததைலம் ஊற்றப்பட்டது; நறுமணமும் கமழ்ந்தது (யோவா: 12:3-5)
*இரட்சகரின் சரீரம் நொறுங்குண்டது; மக்கள் பெருந்திரளாக மீட்கப்பட்டனர் (1கொரி: 11:24)
“முள்ளுகளாலும், ஆணிகளாலும் ஈட்டியினாலும் இயேசுநாதரின் உடல் நொறுக்கப்பட்டவேளையில் பளிங்குபோல மீட்பின் ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து வழிந்தோடியது. மேலும், பாவியைக் கழுவித் தூய்மையாக்கி அவனுக்கு வாழ்வினைத் தந்தருளியது”. பூமிக்குரிய மண்பாண்டமாகிய நமது சரீரங்கள் நொறுங்குண்டால், மற்றவர்களிடம் ஆசீர்வாதம் வழிந்தோடும்(2கொரி: 4:7). “மிகவும் சரியாக உடைந்த மனிதர்களையும், பொருட்களையும், தம்முடைய மகிமைக்கென்று தேவன் பயன்படுத்துகிறார்”.
நொறுங்குதலின் தொடக்கம்
“உண்மையான மனந்திரும்புதல்” நொறுங்குதலின் ஒரு வகைப்படும். இயற்கையில் முரட்டுத்தனமான இளங்குதிரையைபோல நாம் இருக்கிறோம். அந்நிலையில் உழைப்பதற்கு தகுதியற்றவராகக் காணப்படுகிறோம். பரிசுத்த ஆவியானவர் பாவத்தை கண்டித்து உணர்த்துகிறார். மனந்திரும்புவதற்கான சூழ்நிலையைக் கொண்டு வருபவரும் அவரே. அடுத்து அவருடைய நுகத்தை நாம் சுமக்க வேண்டுமென்று இயேசுநாதர் நம்மில் விரும்புகிறார் (மத்: 11:29).
பண்ணையில் விலங்குகளுக்கு நுகத்தடி பூட்டப்படுவது போலவே, உள்ளம் உடைந்த மனிதர்களுக்கு இயேசுநாதரின் நுகம் பூட்டப்படுகிறது. ஆனாலும், அவருடைய நுகத்தடி நமது கழுத்தை அழுத்துவதில்லை; மாறாக, அன்பெனும் மிருதுவான பொருள் அந்த நுகத்தடியைச் சூழவும் பூசப்பட்டுள்ளது.
“நான் சாந்தம் உடையவர்” என்று கர்த்தர் உரைத்தார். ஸ்பானிய மொழியில் அந்தச் சொல், “குதிரையை பழக்கப்படுத்தி நொறுக்குதல்” என்று பொருள்படும்.
உள்ளம் நொறுங்குதலின் வகைகள்
1. உடனடியாக செய்யும் அறிக்கை: உண்மையான அறிக்கை எதையும் மறைப்பதில்லை. காயம் ஆறும்வரை அது காத்திருப்பதும் இல்லை. தாவீதோ ஓராண்டு காலம் காத்திருந்தான்.
எடின்பரோ பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் எழுதிய ஆய்வு கட்டுரைகளை வகுப்புகளில் வாசித்துக் காட்டி சமர்ப்பிக்க வேண்டும். அதை கிறிஸ்தவ பேராசிரியர் ஸ்டூவர்ட் பிளேக்கி மேற்பார்வை செய்தார். ஒரு இளைஞன் தனது ஆய்வுரையை இடதுகரத்தில் பிடித்த வண்ணம் வாசித்தான். அதைகண்ட பேராசிரியர், “உனது வலது கரத்தில் பிடித்துக்கொண்டு படி” என்று இடிமுழக்கமிட்டார். கடுமையான சொற்களைக்கேட்ட மாணவன் தனது வலது கரத்தை உயர்த்திக் காட்டினான். வலகரத்தின் முன்னங்கையை அங்கே காணவில்லை. சிறிது நேரம் தயங்கி நின்ற பேராசிரியர் அம்மாணவனிடம் சென்று, தோளின்மேல் தனது கரத்தை வைத்து, கன்னங்களில் கண்ணீர் வடித்தவராக, “எனக்கு இது தெரியாது. தயவு செய்து என்னை மன்னிப்பாயா?” என கேட்டார். அந்நாளில் தன்னைத் தாழ்த்தி, அவர் மன்னிப்பு கேட்டது அந்த இளைஞனின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தியது.
சிலகாலம் சென்றபின் விசுவாசிகள் நிறைந்த கூட்டத்தில் இந்நிகழ்ச்சியை பற்றி சொல்லப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில், ஒருவர் மேடையை நோக்கி வந்தார். கூட்டத்தை நோக்கி திரும்பிய அவர், தனது வலது கரத்தை உயர்த்திக் காட்டினார். மணிக்கட்டுவரைதான் அந்தக்கை இருந்தது. “நான்தான் அந்த மாணவன். பேராசிரியர் பிளேக்கி என்னை கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்தினார். அன்றைக்கு கடுமையாகப் பேசியதை சரிசெய்யாது இருந்திருப்பாரென்றால், அவரால் என்னைக் கிறிஸ்துவிடம் வழி நடத்தியிருக்க முடியாது” என கூறினார்.
2. தனிப்பட்ட முறையில் அறிக்கை செய்ய வேண்டும்: “நாங்கள்” என்று சொல்லக்கூடாது. “நான்” என்றே அறிக்கை செய்ய வேண்டும். “பிதாவே, நாங்கள் ஏதாவது தவறு செய்திருப்போமென்றால்” என்று செய்யும் அறிக்கை ஒரு அறிக்கை அல்ல.
3. எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்வதே உண்மையான அறிக்கை:
நியுயார்க் செனடர் டி.அமெடோ என்பவர் ஜப்பானியரைப்போல பேசி, நீதிபதி ஐடோவை பரியாசம் செய்தார். மனவருத்தம் கொண்ட செனடர் பின்னர், “அவ்வாறு நான் நடந்து கொண்டது மிகவும் வருத்தத்திற்குரியது; முற்றிலும் தவறாகும். நகைச்சுவை என கருதி மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டேன். நீதிபதி ஐடோவின் உணர்ச்சிகளுக்கு எதிராக நான் செய்த குற்றத்திற்காக வருந்துகிறேன். மனதார மன்னிப்பை வேண்டுகிறேன்” என அறிக்கை செய்தார்.
4. அதை பெயர் சொல்லி அறிக்கையிட வேண்டும்: பாவத்தை அதனுடைய பெயர் சொல்லி அழைக்க வேண்டும். புறம்பேசுதல், கோபம், இருசாராரையும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்குதல், குறைகூறி இளைஞர்களை விரட்டுதல் ஆகியவற்றை பெயர் சொல்லி ஒப்புக்கொள்ள வேண்டும்.
5. அது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்: “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்” என்று சொல்வதில் பயனில்லை. “நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்றால் நான் உங்களை மன்னிப்பேன் என்று சொல்வதும் பயனற்றது.
6. அது பாவத்தின் அளவைக் குறைத்து சொல்வதாக இருக்ககூடாது: “என்னுடைய நடத்தை சரியில்லை” என்பார்கள். பிறகு, “என்னுடைய நடத்தை சரியில்லை” என்று கூறுவார்கள். பிறகு, “நான் தவறாக நடந்து கொண்டேன்” என்பார்கள். சிலர் தங்களுடைய பாவத்தை, “சிறிய பிழை” என்றோ, “தவறான முடிவு” என்றோ கூறுவார்கள்.
7. பாவத்தைக் கைவிடும் நோக்கோடு பாவ அறிக்கை செய்ய வேண்டும்: *குற்ற உணர்வைக் கொண்ட ஒருவர் வருமானவரி இலாகாவிற்கு இவ்வாறு எழுதினார்: “கடந்த ஆண்டு என்னுடைய வருமானவரி அறிக்கையில் உண்மையான வருமானத்தைக் காட்டவில்லை. அதனால் என்னால் சரியாக உறங்க முடியவில்லை. ஆகவே, இத்துடன் ரூ.1000/- க்கான காசோலையை அனுப்புகிறேன். இன்னும் எனக்கு தூக்கம் வரவில்லையென்றால் மீதித்தொகையை அனுப்புவேன்” என்றார்.
*வயது முதிர்ந்த ‘ஜோ’ மரணப்படுக்கையில் படுத்திருந்தார். தனக்கும் ‘ஜிம்’ என்பவருக்கும் இடையே உண்டாயிருந்த மனவருத்தத்தைக் குறித்து நினைவு கொண்டார். இன்னும் அதை சரி செய்யவில்லையே என்ற நினைவு அவரை உணர்த்தியது. ஜிம்மை அழைப்பித்தார். படுக்கையில் அமர்ந்த ‘ஜிம்’மைப்பார்த்து, “நண்பரே, என்னுடைய தவறை அறிக்கை செய்யாமல் நித்தியத்திற்கு செல்ல அச்சம் உடையவனாக இருக்கிறேன். எல்லாவற்றையும் சரிசெய்து கொள்ள விரும்புகிறேன்” என கூறினார். எல்லாம் நன்றாகத் தோன்றியது. ‘ஜிம்’ அந்த அறையை விட்டு வெளியே சென்றபோது, “ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நான் சுகமடைந்து விட்டேனென்றால், இப்பொழுது நடந்த யாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று கூறினார் ஜோ.
8. அது சாக்குப்போக்காக அமையக் கூடாது: “இதைச் செய்யும்படி பிசாசு என்னைத் தூண்டிவிட்டது” என்றோ, “இது என்னுடைய முந்தின இயல்பு” என்றோ சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. முன்கோபப்பட்டு விட்டு, “பலவீனம்” என்று அதற்கு மறுபெயர் சூட்டமாட்டேன்.
9. தற்காத்துக் கொள்வதற்கு முயற்சி செய்வதாக அந்த அறிக்கை அமையக்கூடாது: அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் தனது பாவத்தைக் குறித்து அறிக்கை செய்தார். “ஆம், அது தவறுதான்” என்று சொன்னவர் அடுத்த மூச்சில், “அதை எதிர்த்து நாங்கள் உண்மையாகப் போராடுவோம்” என்று கூறினார்.
10. பாவத்தை சுட்டி காட்டியவரை தாக்குவதாக அது அமையக்கூடாது: திருமதி. கிளாரி பில் கிளிண்டன், “ஆம், அது சரியில்லைதான்; ஆனாலும் இந்த விசாரணை யாவும் எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம்” என்று தன் கணவருக்கு ஆதரவாக அறிக்கை செய்தார்.
சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு ஜார்ஜ் விட்பீல்ஃட் நல்லதொரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்:
“அவருடைய ஊழியத்தின் காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சி. அவர் தவறிழைத்து விட்டதாக கடுமையாக தாக்கி எழுதப்பட்ட கடிதம் ஒன்றை பெற்றார். அதற்கு அவர் எழுதிய பதில் சுருக்கமாகவும், பண்பு மிக்கதாகவும் இருந்தது.
“உங்களுடைய மடலுக்காக என் இதயங்கனிந்த நன்றிகள். நீங்களும் எனது ஏனைய எதிரிகளும் எனக்கு எதிராக ஏறெடுக்கும் குற்றச்சாட்டுகளைக்காட்டிலும், என்னைக் குறித்த தரங்குறைந்த குற்றங்களை நான் அறிவேன். கிறிஸ்துவுக்குள்ளான அன்புடன் – ஜார்ஜ் விட்ஃபீல்ட் – என்பதே அவர் எழுதிய பதில்.
நன்றி: வில்லியம் மெக் டொனால்டு