ஜனவரி 23, 2016

மன்னித்தல்

Image result for forgive

மன்னித்தல்

உள்ளம் நொறுங்குதல் என்பது மற்றவர்களிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமன்று. மற்றவர்கள் மன்னிப்புக் கேட்கும்போது அவர்களை மன்னித்தலும் அதனைச்சாரும்.

சகோதரி.கூரிடென் பூம் நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். 2வது உலகப்போர் முடிந்து விட்டது. ஜெர்மனி நாட்டில் திருச்சபைக்கூட்டம் ஒன்றில் அச்சகோதரி உரையாற்றிக் கொண்டிருந்தார். சித்ரவதைக்கூடத்தில் பலரைக் கொடுமைப்படுத்தின ஒரு போர்வீரனைக் கண்டார். அக்கூட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது பலவித கொடுமைகளுக்கு ஆளான கூரியின் சகோதரி அதன் நிமித்தமாக இறந்தும் போய் விட்டார். அச்சித்திரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தபோது கூரி பலவிதமான சொல்லக்கூடாத அவமானங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகியிருந்தார்.

கூட்டம் முடிவடைந்தது. அந்த மனிதன் கூரியை நோக்கி, “நான் இப்பொழுது கிறிஸ்தவனாக மனந்திரும்பி விட்டேன். தேவன் என்னை மன்னித்திருக்கிறார். நீங்கள் என்னை மன்னிப்பீர்களா?” என்று கேட்டான். கூரியின் உள்ளத்தில் முந்தின நினைவுகள் எழுந்தன. அதோடு உள்ளத்தில் கடும் போராட்டமும் எழுந்தது. கடைசியில் கிருபை வென்றது. மனந்திரும்பின போர்வீரனோடு கைகுலுக்கினார். “சகோதரனே இதயப்பூர்வமாக உம்மை நான் மன்னிக்கிறேன்” என்று கூறினார்.

மன்னிப்பதற்கு சில ஒழுங்குகள்


1. உங்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், அதனை முதலாவதாக உங்களுடைய உள்ளத்தில் மன்னிக்க வேண்டும் (எபேசியர்: 4:32). உங்களுடைய உள்ளத்தில் தங்கியிருக்கும் கோபத்தை இது நீங்கச் செய்யும். உங்களுக்கு எதிராக தவறு இழைத்தவரிடம் சென்று, “உங்களுடைய குற்றத்தை மன்னித்து விட்டேன்” என்று சொல்லத் தேவையில்லை.

2. குற்றம் இழைத்தவர் மனம் வருந்துவார் எனில், உங்கள் வார்த்தைகள் மூலமாக அவரை நீங்கள் மன்னிக்க வேண்டும். எத்தனை முறை மன்னித்திருக்கிறீர்கள் என்று நீங்கள்சொல்ல வேண்டிய அவசியமில்லை (லூக்: 17:4). அவர் என்னென்ன செய்தார் என்பதை முக்கியப்படுத்தாமல் அவரை மன்னித்து விட்டீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள். அவரை நீங்கள் மன்னித்து விட்டீர்கள் என்பதைக் கேட்கவே அவர் விரும்புகிறார். மன்னிக்க மறுக்கும் ஆவியை தேவன் வெறுக்கிறார்.

*சபை தொடங்கின காலகட்டத்தில், விசுவாசத்தின் காரணமாக ஒரு மனிதனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்றும்படி அவனை கொலைக்களத்திற்கு வீரர்கள் நடத்தி சென்றனர். அப்பொழுது அவனுக்கு எதிராக குற்றம் இழைத்த வேறொரு கிறிஸ்தவன் அவன் முன்னர் தரையில் வீழ்ந்து தன்னை மன்னிக்கும்படி மன்றாடினான். ஆனால், அதனை பொருட்படுத்தாது தன்னை விட்டு அகன்று போகும்படி கரத்தை அசைத்து சைகை காட்டியவனாக நெருப்புச்சூளையை நோக்கி சென்றான் அக்கைதி. கிறிஸ்துவுக்காக உயிர் நீத்தோர் பட்டியலில் அவன் பெயர் இடம் பெறவில்லை. “என் சரீரத்தை சுட்டு எரிக்கப்படுவதற்கு கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனமில்லை” (1கொரிந்தியர்: 13:3).

3. எதிர்த்து செயல்படாமல் தவறுகளை தாங்கிக் கொள்ளுதல்:

எதிர்த்து செயல்புரியாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து துன்பங்களை பொறுத்துக் கொண்டதை நீங்கள் அறிவீர்களே (1பேதுரு: 2:23). அழிந்து போகிற பாவிகளாயிருந்த நாம் இயற்கையாகவே எதிர்த்து செயல்புரிகிறவர்களாகவே இருக்கிறோம். நமக்கு எதிராக இழைக்கப்படும் தவறுகளுக்கு உடனடியாகப் பதில் செலுத்த விரும்புகிறோம். ஆனால், கிருபை அவ்வாறு செயல்படவிடாமல் தடுக்கிறது. அத்தீமைகளை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறது (1பேதுரு: 2:19,20).

4. தீமைக்கு பதில் நன்மை செய்கிறது:

தீமைக்கு பதில் நன்மை செய்யும்படி விசுவாசிகள் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள் (ரோமர்: 12:17,20,21). *மும்பை பட்டணத்தின் தெருக்களின் வழியாக ஒரு யானையை அதனுடைய பாகன், அது துரிதமாக செல்லும்படி தார்க்கோலினால் அதன் முதுகில் குத்திக்கொண்டே இருந்தான். அந்த தார்க்கோல் திடீரென பாகன் கையிலிருந்து தவறி விழுந்து ‘கணீர்’ என்று பெரும் சத்தத்தை எழுப்பியது. அச்சத்தத்தைக் கேட்ட யானை திரும்பிப் பார்த்து அந்த தார்க்கோலை தும்பிக்கையால் எடுத்து தனது எஜமானிடம் திரும்ப கொடுத்தது. பாகனுடைய உள்ளம் உடைந்தது. உள்ளம் நொறுங்குதலை இவ்வாறு வெளிப்படுத்திக் காட்டும் மனிதனை கண்டு இவ்வுலகம் வாய் அடைத்து நிற்கும்.

5. மற்றவர்களை மேன்மையாக நினைத்தல்:

நம்மைக்காட்டிலும் மற்றவர்களை மேன்மையுள்ளவர்களாக கருதுவது உள்ளம் நொறுங்குதலின் இன்னுமொரு சான்றாக விளங்குகிறது (பிலி: 2:3). நம்மைக்’காட்டிலும் மற்றவர்கள் நற்குணம் படைத்தவர்கள் என்பது அதன் பொருள் அல்ல. நமது தேவைகளுக்கு மேலாக மற்றவர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே அவர்களை மேன்மையாக கருதுவது என்பது பொருளாகும். ஆபிரகாமும், லோத்தும் எகிப்து தேசத்திலிருந்து வந்து பெத்தேலுக்கு அருகில் தங்கினார்கள். அவ்விரு மனிதர்களுடைய மந்தைகளை மேய்ப்பதற்குத் தேவையான மேய்ச்சல் நிலங்கள் அங்கு இல்லாதிருந்தது. எனவே, தனக்கு விருப்பமான பகுதியை தெரிந்து கொள்ளும்படி லோத்துவிடம் ஆபிரகாம் கூறினான். அவன் வேண்டாமென்று ஒதுக்கிய பகுதியை தான் எடுத்துக் கொள்வதாகவும் ஆபிரகாம் கூறினான் (ஆதி: 13:1-13). தன்னைக்காட்டிலும் லோத்தை மேன்மையுள்ளவனாக ஆபிரகாம் கருதினான்.

6. உடனடியாகக் கீழ்படிதல்:

தேவனுடைய சித்தத்திற்கு காலம் தாழ்த்தாது கீழ்படியக்கூடிய விசுவாசியிடம் உள்ளம் நொறுங்கிய நிலையைக் காண முடியும் (சங்: 32:9). யோனா தன் வாழ்க்கையில் இப்பாடத்தை கடினமான முறையில் கற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அப்.பவுல் கர்த்தருடைய அழைப்பை பெற்றவுடன் “மாம்சத்தோடும், இரத்தத்தோடும் யோசனை பண்ணாமல்” உடனடியாக கீழ்படிந்து புறப்பட்டுப் போனான் என்று கலாத்தியர்: 1:16 ல் வாசிக்கிறோம்.

7. பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்களில் அமைதியைக் காத்துக் கொள்ளுதல்: 

வாழ்க்கையில் பிரச்சினைகள் எழும் சந்தர்ப்பங்களில் உள்ளம் நொறுங்கிய மனிதன் தன் அமைதியைக் காத்துக் கொள்கிறான். பிரச்சினைகளால் நெருக்கப்படும்போது கட்டுப்பாடற்ற வெறித்தனமாக, பயத்துடனோ, அங்கலாய்ப்புடனோ, முரட்டுத்தனமாகவோ நடந்து கொள்ள கூடாது (ரோமர்: 8:28). வாழ்வில் உண்டாகும் குறுக்கீடுகள் அனைத்தும் எரிச்சலானவை, தொல்லை மிகுந்தவையாக காணப்படலாம். ஆனால், தேவனே நம்மிடத்தில் அனுப்புகிறார் என உணரவேண்டும். எத்தியோப்பிய மந்திரியினடத்தில் பிலிப்பை அனுப்பியவர் அவரே (அப்: 8:26-29). தர்சுப்பட்டணத்தானாகிய சவுலைத்தேடும்படி பர்னபாவை அனுப்பியவரும் அவரே (அப்: 9:10-16). நம்முடைய வழிகளில் மனிதர்களை தேவன் அனுப்புகிறார். குறுக்கீடு செய்யும் மனிதர்களை தேவனுக்கு கீழாக அமர வைத்து அவன் வந்த நோக்கத்தை பேசும்போது தேவையற்ற மனிதன் அவ்விடம் விட்டு போய்விடுவான். எனவே, குறுக்கீடுகள் தேவனிடத்தில் இருந்தே வருகின்றன. அதாவது உங்களது கால அட்டவணை தேவனுக்கு உகந்தபடி மாற்றப்படுகின்றது. வழிப்புள்ள கிறிஸ்தவன் தனக்கு வரும் குறுக்கீடுகள் யாவும் தேவன் தரும் அரிய சந்தர்ப்பங்கள் என்றே கருதுகிறான்.

8. அடிமையைப்போல் வாழ்தல் (லூக்கா: 17:7-10):

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்தைக் குறித்து, தான் கொண்டிருக்க வேண்டிய மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும்? அடிமையானவன் தன்நலன் குறித்து எண்ணாமல், தன்மீது ஒன்றன்மேல் ஒன்றாக சுமத்தப்படும் வேலைகளை மனமுவந்து ஏற்றிட விருப்பமுடை யவனாக இருக்க வேண்டும். இதற்குரிய நன்றியையும் அவன் எதிர்பார்க்கக்கூடாது. எல்லா அலுவல்களையும் நிறைவேற்றிய பிறகு, அவ்வேலைப் பளுவை சுமத்தியவர் தன்னலம் மிக்கவர் என்று குறைகூறவும் கூடாது. மேலும், பெருமைபடுவதற்கோ தன்னைப் புகழவோ அங்கே ஒரு ஆதாரமும் இல்லை. அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்றே நம்மைக் குறித்து அறிக்கை செய்ய வேண்டும். அதாவது, தேவனுக்கும் பிறருக்கும் நாம் எவ்விதப் பயனுமற்றவர்கள் ஆவோம். சுயத்தின் அடித்தளம் இப்படி தகர்க்கப்பட வேண்டும். சாந்தத்துடனும் மனத்தாழ்மையுடனும் எல்லா அலுவல்களையும் நிறைவேற்றிய பின்னர் என்னுடைய வேலையைத்தவிர வேறொன்றையும் தான் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்.

நன்றி: வில்லியம் மெக் டொனால்டு