ஜனவரி 19, 2016

தாழ்மையான இடத்தை தெரிந்துகொள்ளுதல்

Image result for humble

தாழ்மையான இடத்தை தெரிந்துகொள்ளுதல்


பெருமை பாவத்தை விளைவிக்கும் ஊற்றாக விளங்குகிறது. தேவனுடைய அரியணையிலிருந்து அவரைத் தள்ளிவிட அவருடைய படைப்புக்களில் ஒருவனாகிய லூசிபர் விரும்பியது பெருமையின் தொடக்கமாகும். அது வானுலகில் நிகழ்ந்தது. அவன் பெருமையில் இறுமாப்பு கொண்டவனாகி, ஆக்கினைக்குள்ளாக வீழ்ந்து போனான் (1தீமோத்தேயு: 3:6). பெருமையை விரும்பி அகங்காரம் கொண்டதால், பரலோகத்திலிருந்து தேவன் அவனைத் தூக்கி எறிந்து விட்டார். அவ்வீழ்ச்சியைத் தனியே அனுபவிக்க இயலாதவனாக லூசிபர் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினான்.

ஆகவே, அவனுடைய தந்திரத்தினாலே பாவம் செய்யும்படி ஆதாமையும் ஏவாளையும் வஞ்சித்து விட்டான். இவ்விதமாகவே, பெருமை மனிதனுடைய உடற்கூறுகளுக்குள்ளாக உட்புகுந்தது. மேலும், நமது வாழ்க்கைப் படகுகள் முழுகிப்போகத்தக்கதாக நாம் ஒவ்வொருவரும் அப்பெருமையைப் பெற்றிருக்கிறோம் என்பது அதனால் ஏற்பட்ட வருத்தத்திற்குரிய விளைவாகும்.

“சுயத்தை தேவனாகக் கருதி, அதனைத் தொழுதுகொள்வதே பெருமை” என்று ஜே.ஓஸ்வால்ட் சேண்டர்ஸ் கூறுகிறார். “தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கும் மேலாக எண்ணச் செய்வது ‘பெருமை’ எனப்படும். தேவனுக்குரிய மேன்மை பாராட்டலைத் தனக்குரியதாக்கிக் கொள்ளும்படி பெருமை அகங்காரம் கொண்டிருக்கிறது”

சாந்தமும் இருதயத்தில் மனத்தாழ்மையும் உடையவராக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் காட்டுவதே கிறிஸ்துவின் உண்மையான சித்திரமாகும். இங்கே, ‘சாந்தம்’ என்னும் சொல் – ஸ்பானிய மொழியில் ‘நொறுக்குதல்’ என்னும் பொருள்படும் சொல்லிருந்து பிறந்தது. அதாவது, ‘பழக்கப்படாத இளம் முரட்டுக் குதிரையைக் கடிவாளம் பூட்டி, அது தன் தலையை மேலும் கீழும் அசைத்து, நேராகவும் ஒழுங்காகவும் ஓடும்படி பழக்கப்படுத்துவது' என்பதே அதன் பொருளாகும்.

அவருடைய நுகத்தை சுமந்து கொண்டவர்களாக அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சாந்தம் மிக்க நம்முடைய கர்த்தர் அழைக்கிறார். அவருடைய சித்தத்தை எவ்விதத்திலும் குறைகூறாது ஏற்றுக்கொள்வது என்பதே இதன் பொருளாகும். அவருடைய சித்தத்தை ஏற்றவர்கள் வீழ்ந்துபோகும்படி சூழ்நிலைகள் அவர்களைத் தாக்கும் வேளையில், “இது உம்முடைய திருவுளச் சித்தமாயிருக்கிறது” என்று கூறத்தக்கதான பலத்தைப் பெற்றிருப்பார்கள்.

தொழுவத்தில் பிறந்து தாழ்மையுள்ளவராக இயேசுகிறிஸ்து காணப்பட்டார். இவ்வுலகின் பெருமையொன்றையும் அப்பிறப்பில் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வாழ்விலும் அவர் தாழ்மையுடையவராகவே காணப்பட்டார். அவ் வாழ்வில் பெருமையோ, அகங்காரமோ, உயர்வு மனப்பான்மையோ அவரிடம் ஒருதுளிகூட காணப்படவில்லை. “மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர்: 2:8). இது அவருடைய மனத்தாழ்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

*நம்முடைய சரியான அளவை நாம் அறிந்திருப்பது நல்லது: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் எளிமையான வேலையொன்றைச் செய்து கொண்டிருந்தபோது, அதனைக்கண்ட நண்பர் ஒருவர், “தளபதி அவர்களே, பெரிய மனிதராகிய நீங்கள் இந்த சிறிய வேலையைச்செய்யக் கூடாது” என்றார். அதற்கு அவர், “நான் பெரிய மனிதன் இல்லை. இவ்வேலையைச் செய்வதற்கு ஏற்ற அளவுடையவன்தான்” என்றார்.

*”நம்மைப்பற்றி தவறாகச் சிந்திப்பதில் எவ்விதத் தாழ்மையும் இல்லை. நம்மைப்பற்றி ஒன்றும் சிந்திக்காமல் இருப்பதே மெய்யான தாழ்மை. என்னைக்குறித்துச் சிந்திக்கத்தக்க அளவிற்கு என்னிடத்தில் ஒரு நன்மையும் இல்லை. தவறுமிக்கவனாகவே இருக்கிறேன். என்னை நான் மறந்து தேவனையே நோக்கிப்பார்க்க விரும்புகிறேன் என்னுடைய எண்ணங்கள் யாவற்றிலும் அவரை நிறைத்துக்கொள்ள அவர் அனைத்துத் தகுதிகளும் உடையவராக இருக்கிறார்” – என்று வில்லியம் கெல்லி என்பவர் கூறுகிறார்.

F.B.மேயர் என்பவர் D.L.மூடி என்ற தேவ மனிதரைக் குறித்து சொன்ன சாட்சி: 

“தம்மைக்குறித்துச் சொல்லப்படுகின்ற புகழ்ச்சியின் எந்தச் சொற்களையும் கேட்கும் ஒருவராக மூடி நடந்துகொள்ளவில்லை. எனவே, அவரை தேவன் பயன்படுத்தியதில் எவ்வித வியப்புமில்லை” என்றார்.

“நம்முடைய சுய மகிமையிலிருந்து நம்மை விலக்கி வைப்போமென்றால் நம்மைக் கொண்டு தேவனால் கூடாதது ஒன்றுமில்லை” என்கிறார் கெஸ்விக் என்பவர். வேறொருவர், “மனிதர்கள் உம்மை புகழ்ந்து கூறுவதை நீர் உட்சுவாசிக்காதவரை தவறேதும் இல்லை” என்கிறார். 

கிறிஸ்துவை அறிக்கை செய்யும் செயலை செய்வதிலிருந்து “தற்பெருமை” என்னும் குணம் பலரை விலக்கி வைத்திருக்கிறது. அதன் நிமித்தம் பலர் நற்செய்தியைக் கேட்காமல் நரகத்தை நோக்கிச் செல்கின்றனர். வேறொருவர் இடறல் அடையும்படி நடந்து கொண்ட பிறகும், அவரிடம் மன்னிப்பு கேட்காதபடி கிறிஸ்தவர்களது உள்ளங்களைக் கடினப்படுத்துவது பெருமையே. தேவன் நம்மை பயன்படுத்தாதபடி தடை செய்வதும் நமது பெருமையே. ஆவிக்குரிய வல்லமை பெருக்கெடுத்து ஓடுவதையும், சாட்சி பகர்வதையும் இது தடுக்கிறது. அதற்கு மாறாக நாம் பெருமையற்றவர்களாக இருப்போமென்றால், அவரால் பயன்படுத்தக்கூடாதபடிக்கு மிகச் சிறியவராக போய்விட மாட்டோம்.

“உங்களிடத்தில் உள்ள பெருமை சாக வேண்டும். இல்லையேல் பரலோகத்திற்குரிய ஒன்றையும் உங்களிடத்தில் காண முடியாது. பெருமை தகாத மனநிலையினால் ஏற்பட்டது என்றும் எண்ண வேண்டாம். தாழ்மையை சிறப்பான குணம் என்றும் நினைக்காதீர்கள். முதலாவது முற்றிலும் நரகமாயிருக்கிறது. மற்றதோ முற்றிலும் பரலோகமாயிருக்கிறது” என்கிறார் வில்லியம் லா என்ற தேவ மனிதர்.

“நான் ஒரு சாதாரண மனிதன். என்னிடத்தில் சிறப்பான வரங்கள் ஏதுமில்லை. நான் சொற்பொழிவாற்ற அறியாதவன். அறிஞனுமில்லை. சிந்தனை சிற்பியும் இல்லை. கிறிஸ்துவிற்கும், என்னுடைய சமுதாயத்திற்கும் ஏதாவது நான் செய்திருப்பேனென்றால் அது இயேசு கிறிஸ்துவிற்கு என்னை முற்றிலும் ஒப்புவித்ததே ஆகும். அதன்பின் நான் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதனைச் செய்ய முயற்சி செய்வதாகும்” என்கிறார் F.B.மேயர். ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் இவ்வித நாட்டமுடையவர்களாக வேண்டும். பெருமை எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அணுவளவும் அணுகவிடாமல் நம்மைக் காத்துக்கொள்ள முனைப்புகாட்ட வேண்டும்
நாம் அறியப்படாதவர்களாக வாழவே முயற்சி செய்ய வேண்டும். நாம் பெருமை கொள்ளுவதற்கு உண்மையாகவே நம்மிடத்தில் ஒன்றுமில்லை. 

“மேன்மையின் தொடக்கம் சிலுவையில் காணும்; மேன்மையின் வளர்ச்சி குறைவில் விளங்கும்; மேன்மையின் பூரணம் இல்லாமையில் காணப்படும். மற்றவர்கள் அறியாதபடி சேவை புரிதலும், காணாதபடி உழைத்தலும் உண்மையான மேன்மையாகும்” என J.N.டார்பி கூறுகிறார்.

தற்புகழ்ச்சியை அழித்துப்போடும்படி கீழ்க்காணும் வசனங்களை அவ்வப்போது நினைவுகூர்தல் நன்று:

பரலோகத்திலிருந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ள மாட்டான் (யோவா: 3:27). என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோவா: 15:5). அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை. நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை. விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும் (1கொரி: 3:7). உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக் கொள்ளாதது யாது? (1கொரி: 4:7).

Thanks: வில்லியம் மெக் டொனால்டு