ஜனவரி 09, 2016

கிறிஸ்தவ பெற்றோர்களுக்குரிய ஆலோசனை

Image result for christian family

கிறிஸ்தவ பெற்றோர்களுக்குரிய ஆலோசனை 

குழந்தைகள் - உங்கள் வாழ்க்கையை மாற்றுவது எப்படி?

‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்’ (சங்கீதம் 127:3)

உங்கள் குழந்தை பிறக்கும்போது நீங்கள் இருவரும் சந்தோஷத்தில் மிதப்பீர்கள். இருந்தாலும், இந்தப் புது வரவு உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிடலாம். குழந்தையைக் கவனிப்பதிலேயே நேரமும் சக்தியும் செலவாவதை நினைத்து நீங்கள் ஆச்சரியப்படலாம். குழந்தையைப் பார்த்துக்கொள்ள இரவில் கண் விழிப்பதாலும் மனதளவில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதாலும் உங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம். ஆனால், நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க, சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு  பரிசுத்த வேதாகமம் எப்படி உதவுகிறது என்று பாருங்கள்!

1.  மழலை எப்படி மணவாழ்வை மாற்றுகிறது?

பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது? “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது . . . சொந்த விருப்பங்களை நாடாது, எரிச்சல் அடையாது.” (1 கொரிந்தியர் 13:4, 5). சகோதரிகளே!  நீங்கள் தாயாகும்போது உங்கள் குழந்தைமீதே எப்போதும் கண்ணாக இருப்பீர்கள்; அது லேசாகச் சிணுங்கினால்கூட பதறுவீர்கள். அதுபோன்ற சமயங்களில், தான் ஒதுக்கப்பட்டதுபோல் உங்கள் கணவர் உணரலாம். எனவே, கணவருக்கும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் கணவரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் குழந்தையைக் கவனித்துக்கொள்ள முடியாது என்பதை அவருக்கு அன்பாகப் புரியவையுங்கள்.

“கணவர்களே, . . . மனைவியை நன்கு புரிந்துகொண்டு அவளுடன் வாழுங்கள்.” (1 பேதுரு 3:7) மனைவி உங்கள் குழந்தைக்கே தன் சக்தியையெல்லாம் செலவிடுகிறாள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் மனைவி சோர்ந்துபோகலாம், மன உளைச்சலடையலாம், ஏன் மன அழுத்தத்திற்குக்கூட ஆளாகலாம். சில நேரங்களில், அவள் உங்கள்மேல் எரிச்சலடையலாம். ஆனால், “வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்” என்பதால் பொறுமையாக இருங்கள். (நீதிமொழிகள் 16:32,பொ.மொ.) மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள்; அவளுக்கு ஆதரவாக இருங்கள் (நீதிமொழிகள் 14:29)

நீங்கள் என்ன செய்யலாம்?

அப்பாக்களே, குழந்தையைக் கவனித்துக்கொள்ள உங்கள் மனைவிக்கு உதவுங்கள். தேவைப்பட்டால், உங்கள் தூக்கத்தையும் தியாகம் செய்யுங்கள். மற்ற வேலைகளையெல்லாம் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு குழந்தையோடும் மனைவியோடும் அதிக நேரம் செலவிடுங்கள்

அம்மாக்களே, குழந்தையைப் பார்த்துக்கொள்ள கணவர் உதவ வரும்போது, ‘வேண்டாம்’ என்று சொல்லாதீர்கள். ஒருவேளை, அவர் எதையாவது தவறாகச் செய்துவிட்டால் குறை சொல்லாதீர்கள், அதை எப்படிச் செய்வதென்று அன்பாகச் சொல்லிக்கொடுங்கள்

2.  உங்கள் பந்தத்தைப் பலப்படுத்துங்கள்:

பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது? கணவனும் மனைவியும் “ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) குழந்தை பிறந்த பிறகும்கூட நீங்களும் உங்கள் துணையும் ‘ஒரே மாம்சமாய்,’ அதாவது ஒரே உடலாய், இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்த உங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுங்கள்.

மனைவிகளே, உங்கள் கணவருடைய உதவிக்கும் ஆதரவுக்கும் நன்றி சொல்லுங்கள், அவரைப் பாராட்டுங்கள். அது அவருக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கும்! (நீதிமொழிகள் 12:18) கணவர்களே, உங்கள் மனைவியை எந்தளவு நேசிக்கிறீர்கள் என்பதையும் எந்தளவு உயர்வாகக் நினைக்கிறீர்கள் என்பதையும் அவளிடம் சொல்லுங்கள். குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள பாடுபடும் உங்கள் மனைவியைப் பாராட்டுங்கள் (நீதிமொழிகள் 31:10, 28)

“ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதை நாடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே நாட வேண்டும்.” (1 கொரிந்தியர் 10:24) உங்கள் துணைக்கு எது சிறந்ததோ அதையே செய்யுங்கள்.

ஒருவருக்கொருவர் பேச, பாராட்ட, கவனித்துக் கேட்க நேரம் ஒதுக்குங்கள். தாம்பத்திய உறவில் சுயநலமில்லாமல் நடந்துகொள்ளுங்கள். உங்கள் கணவருடைய (அல்லது மனைவியுடைய) தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள். “ஒருவருக்கொருவர் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் இருந்துவிடாதீர்கள்; . . . இருவரும் ஒத்துக்கொண்டால் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்கு இணையாதிருக்கலாம்” என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:3-5) இந்த விஷயத்தைப் பற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசுங்கள். பொறுமையாக இருந்தால்... புரிந்துகொண்டு நடந்தால்... உங்கள் மணவாழ்வு இனிக்கும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

கணவன் மனைவியாக உங்கள் இருவருக்கென்று நேரம் செலவிடுங்கள்

ஒருவரையொருவர் நேசிக்கிறீர்கள் என்பதைச் சின்னச் சின்ன விஷயங்களில்கூட காட்டுங்கள். உதாரணத்திற்கு, ஒரு சிறிய பரிசை அல்லது க்ரீட்டிங் கார்டை கொடுங்கள்

3.  பிஞ்சு பருவத்திலேயே சொல்லிக்கொடுங்கள்:

பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது? “பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயது முதல் அறிந்திருக்கிறாய்;” அவை உனக்கு ஞானத்தைத் தந்து . . . உன்னை மீட்புக்கு வழிநடத்துபவையாக இருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:15)

உங்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக்கொடுக்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். கருவில் இருக்கும்போதே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறமை குழந்தைகளுக்கு இருக்கிறது. வயிற்றிலிருக்கும் சிசுவால் உங்கள் குரலை கண்டுபிடிக்கவும் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

கைக்குழந்தையாக இருக்கும்போதே புத்தகங்களை வாசித்துக் காட்டுங்கள். உங்கள் குழந்தை பெரியவனான பிறகும், வாசிக்கும் பழக்கத்தை விடாமலிருக்க இது உதவும்.

பிஞ்சு பருவத்திலிருந்தே கர்த்தரைப் பற்றியும் அவரது மகத்துவத்தைப் பற்றியும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களைப்பற்றியும் கதையாகப் பேசுங்கள், குழந்தை கேட்கும்படி ஜெபம் செய்யுங்கள். (உபாகமம் 11:19) குழந்தையோடு விளையாடும்போதும், கர்த்தருடைய படைப்பைப் பற்றி பேசுங்கள். (சங்கீதம் 78:3, 4) பிள்ளை வளர வளர, இயேசு மீது உங்களுக்கு இருக்கும் அன்பை புரிந்துகொள்வான். உங்களைபோல் அவனும் இயேசு மீது அன்பு காட்டுவான்.

நீங்கள் என்ன செய்யலாம்?

குழந்தையை நல்ல விதத்தில் வளர்க்க ஞானத்தைத் தரும்படி கர்த்தர் இயேசுவிடம் கேளுங்கள்

முக்கியமான வார்த்தைகளையும் விஷயங்களையும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருங்கள், குழந்தை அவற்றை சீக்கிரத்தில் கற்றுக்கொள்ளும்

மழலை மணவாழ்வை மகிழ்விக்க முடியும்

நாட்கள் செல்லச் செல்ல, நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் வரும். பிள்ளை வளர்ப்பு உங்களை அன்பானவர்களாக, கனிவானவர்களாக, பொறுமையுள்ளவர்களாக மாற்றும். உங்கள் குழந்தையைக் கவனிப்பதில் இருவரும் சேர்ந்து உழைக்கும்போது... ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும்போது... மணவாழ்வு மணம்வீசும்.

“கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும்   பலன்” என்ற வார்த்தைகள் உண்மை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் (சங்கீதம் 127:4)

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

குடும்பத்தைக் கவனிக்கும் என் கணவருக்கு (அல்லது மனைவிக்கு) நன்றி காட்டும் விதமாகக் கடந்த வாரத்தில் நான் என்ன செய்தேன்?

குழந்தையைப் பற்றி மட்டுமே பேசாமல் எங்களைப் பற்றி எப்போது கடைசியாகப் பேசினோம்?

- Selected -