"அன்பின் அதிகாரம்"
1கொரி: 13 ஆம் அதிகாரம்
அன்பு நீடிய சாந்தமுள்ளது – அது பொறுமையற்றதல்ல. உடனடியாக எதிர்ச்செயலும் புரிவதில்லை
அன்பு தயவுள்ளது – “நான் உம்மீது அக்கறை கொண்டிருக்கிறேன்” என்று சொல்லும்படியான சிறிய செயல்களைச் செய்ய நாட்டம் கொண்டு அதற்குரிய வழியைத் தேடுகிறது.
அன்புக்குப் பொறாமையில்லை – மற்றவர்களிடத்தில் இது பொறாமைப்படுவதில்லை. மற்றொருவரைப்போல இருக்க வேண்டுமென்றோ, அவருக்கு என்னென்ன உடைமைகள் இருக்கின்றனவோ அதுபோலத் தனக்கும் வேண்டும் என்றோ அன்புகூறுகிறவர் நினைப்பதில்லை
அன்பு தற்பெருமையோடு நடைபோடுவதில்லை – அது இறுமாப்பாயிராது.
தான் அடைந்திருப்பது அனைத்தும் கர்த்தரிடத்திலிருந்து வந்தது என்பதை அன்புகூறுகிறவர் உணர்ந்திருப்பார். அன்பு தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைத்தவிர வேறொன்றையும் செய்யாது.
அன்பு அயோக்கியமானதை செய்யாது – அது தற்பொழிவை நாடாது. தனது வலிமை, புகழ்ச்சி, செல்வம் அல்லது பதவி ஆகியவற்றில் மேன்மை பாராட்டாது. அன்பு தன்னலம் நாடாது.
அன்பு சினமடையாது – கைப்பிடியை விட்டு எளிதாகக் கழன்று பறக்காது
அன்பு தீங்கு நினையாது – யோபுவின் நண்பர்கள் கூறியதுபோல், ஒருவருடைய நெருக்கடிக்கு அவனுடைய பாவமே காரணம் என்று அன்பு கூறுவதில்லை
அன்பு அநிநியாயத்தில் சந்தோஷப்படுவதில்லை – நீதியற்றமுறையில் மனிதர்கள் நடத்தப்படும்போது அது களிகூறுவதில்லை. ஒருவேளை மனிதர்கள் அப்படி நடத்தப்படுவதற்குரிய செயல்களைச் செய்திருப்பினும் அது மகிழ்ச்சியடையாது
*** எத்தனைமுறை தவறுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அன்பு எண்ணுவதில்லை***
அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படும் – சத்தியம் வெற்றி பெறும் வேளையில், அதனால் ஏற்படும் புகழ்ச்சி யாரைச் சார்ந்திடினும் அதில் அன்பு சந்தோஷப்படும்
அன்பு சகலத்தையும் தாங்கும் – தனது பாரத்தையும் மற்றவர்களுடைய பாரத்தையும் அது தாங்கும். நெருக்கடிகள், உபத்திரவங்கள் மற்றும் வேதனைகள் ஆகியவை உண்டாகும்போது மனந்தளராது எல்லாவற்றையும் தாங்கும்
அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும் – தவறு என்று உறுதி செய்யும்வரை மற்றவர்கள் சொல்லுகிறவர்களை விசுவாசிக்கும். இதற்காக அன்பை ஏமாளி என்றோ, சரியான முடிவு எடுக்கத்தெரியாத மூடன் என்றோ நினைத்துவிடக்கூடாது
அன்பு – சகலத்தையும் நம்பும் – தற்போது காணப்படும். இடர்பாடுகளையும், நம்பிக்கையற்ற நிலையையும் பொருட்படுத்தாது. நல்லது நிகழும் என்று எதிர்பார்க்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது – எவ்விதத் தடையுமின்றி அன்பின் வல்லமையும் பயனும் தொடரும். கடைசியில் அன்பு வெல்லும்.
தேவன் வழங்க வேண்டிய நியாயமான தண்டனையை எவ்வாறு நிறுத்தி வைத்திருக்கிறாரோ, அதுபோல அன்பு இரக்கம் பாராட்டுகிறது. நன்றியில்லாதவர்களிடத்திலும், பொல்லாங்கானவர்களிடத்திலும் அன்பு தயவு பாராட்டுகின்றது. தீர்ப்புச் செலுத்துவதற்கும், குற்றம் சுமத்துவதற்கும் இது பொறுமையைக் காட்டி மன்னிக்கிறதற்குத் துரிதமாகச் செயல்புரிகிறது. அது மனதிற்கு இன்பம் அளிக்காத விசுவாசிகளிடத்திலும் இயேசுகிறிஸ்துவை காண விழையும்.
கர்த்தருடைய அன்பினின்று நம்மைப்பிரிக்கத்தக்கது உண்டா என்று அண்டசராசரம் முழுவதையும் பவுல் அலசிப் பார்க்கிறதை நாம் ரோமர்: 8 ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். ஆனாலும் பவுலால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் அன்பைவிட்டு விசுவாசியைப் பிரிக்க இயலாது”. தொடர்ந்து மாறுதல் அடையும் இவ்வுலகில், மாறாத கிறிஸ்துவின் அன்பு நமக்கு உறுதி தரக்கூடியதாக இருக்கிறது. அவருடைய அன்பு ஒருபோதும் இளைப்படையாது. அது மாற்றமடைவதுமில்லை.
மேலும், அவருடைய அன்பு தூயமையானதாகும். அதிலே தன்னலத்தையும், அநீதிக்கு இசைந்துபோகும் தன்மையையும், தகாத நோக்கத்தையும் காண முடியாது. அது கறையற்றதும், தீட்டு இல்லாதததுமாயிருக்கிறது. அவருடைய கிருபையைப் போன்றே, அவருடைய அன்பும் இலவசமாகத் தரப்படுகிறது. தரித்திரர்களும், பிச்சைக்காரர்களும், நற்குணம் எதுவுமில்லாத பாவிகளுமாக நாம் இருப்பதனால் அவருடைய மகத்துவமான ஈவுக்காக என்றென்றும் நன்றிக்கடன் உடையவர்களாக இருக்க வேண்டும்.
அவருடைய அன்பு வியத்தகு வகையில் பாகுபாடற்றுச் செயல்புரிகிறது. நல்லோர் மீதும், தீயோர் மீதும் ஒரேவிதமாகக் கதிரவனை ஒளிதரச் செய்கிறது. எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லாருக்கும் மழை பொழியக் கட்டளை இடுகிறது. இவ்வன்பு தியாக மனப்பான்மை உடையதாக இருக்கிறது என்பது எல்லாவற்றிருக்கும் மேலாக நமக்கு அதிக வியப்பை அளிக்கிறது. தன்னுடைய விலையை அது கணக்கிடுகிறதில்லை. அவ்வன்பு பரிசுத்த தேவனுடைய குமாரனை கல்வாரி சிலுவைக்கு அனுப்பியது. அங்கே மிக உயர்ந்ததோர் செயலை நமக்காக நிறைவேற்றியுள்ளது.
மரணத்தைக் காட்டிலும் வலிமையான அன்பை நாம் சிலுவையில் காண்கிறோம்.அந்த அன்பு எல்லா அறிவிற்கும் மேற்பட்டதாயிருக்கிறது. இது தெய்வீகமானது. ஒப்பற்றது. நாம் பரலோகத்தை சேரும் வேளையில், உலகில் அவதாரம் எடுத்த இயேசுவின் அன்பை நோக்கிப் பார்ப்போம். அப்பொழுது தெளிவான பார்வை உடையவர்களாக இருப்போம். கூர்ந்த அறிவுடையவராக காணப்படுவோம். அதுவரை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் காணும் தேவனுடைய அன்பை முழுவதுமாக உணரமுடியாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! அந்நாளை விரைவில் கொண்டு வாரும்!
- Selected -