ஜனவரி 16, 2016

உங்களுடைய அன்பினால் அறியப்படுங்கள்

Image result for Jn:3:16

“உங்களுடைய அன்பினால் அறியப்படுங்கள்”

அன்பு எப்போது வெளிப்படுகிறது?

“கொடுப்பதில்” அன்பு தன்னை வெளிப்படுத்துகிறது.

       “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான்: 3:16). என்று வேதம் சொல்கிறது. பிதாவாகிய தேவன் தமது குமாரனை தந்தருளி உலகத்திற்கு தமது அன்பை வெளிப்படுத்தி காண்பித்தார்.

என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்” (கலாத்தியர்: 2:20) என்று அப்.பவுல் கூறுகிறார். அதாவது, நம் ஒவ்வொருவர் மேலும் தனித்தனியாக அன்புகூர்ந்து, தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவகுமாரன் என்கிறார்.

“அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக் கொடுத்தார்” (எபேசியர்: 5:25).

பிதா – குமாரனை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.

குமாரன் – ஒவ்வொருவர் மேலும் அன்புகூர்ந்தார்; சபையில் உள்ள அனைவர்மேலும் அன்புகூர்ந்து தம்மைதாமே அதற்கு ஒப்புக்கொடுத்து தமது அன்பை வெளிப்படுத்தினார் என இதன்மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

“வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்னார்…” (அப்: 20:35). எனவே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எப்பொழுதும் பாக்கியமுள்ளவராக இருப்பதற்கு நம்மேலும் சபையின் மேலும் அன்பை கொடுத்து உரிமையை பெற்றுள்ளார்.

“கிறிஸ்தவர்கள்” என்பதற்குரிய அடையாளமாக, (முத்திரையாக) “அன்பு” விளங்குகிறது


“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” (யோவான்: 13:35) என்கிறார் ஆண்டவர் இயேசு. அன்புகூரத்தக்கவர்களிடத்திலும், அன்புகூரத்தகாதவர்களிடத்திலும் இது போய்ச்சேரும். 

Image result for Jn:3:16

அழகற்றவர்களிடத்திலும், அழகுமிக்கவர்களிடத்திலும் இது காட்டப்படும். ஒவ்வொரு பண்பற்ற செயலுக்கும் இது தயவைத் திரும்ப செலுத்தும்.
அன்பற்ற கிறிஸ்தவ ஊழியங்கள் அனைத்தும் வீணாகிப்போய்விடும். மிகச் சிறப்பாக வெளிப்படுத்திக் காண்பிக்கப்படும் ஆவியின் வரங்களைக் காட்டிலும் “அன்பு” சிறந்தது. வரத்தைக் காட்டிலும் “கிருபை” மேன்மையானது.

நம்மை வெறுக்கிறவர்களிடத்திலும், எதிரிகளிடத்திலும் அன்பு போய்ச்சேரும். சபிக்கிறவர்களை அது ஆசீர்வதிக்கும். வேண்டுமென்றே நம்மைத் தாக்குகிறவர்களுக்காக ஜெபிக்கும். ஒரு கன்னத்தில் அடிக்கப்படும்போது, மறு கன்னத்தைக் காட்டும்.

நம்மிடத்தில் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்துவது, நன்மை செய்யாதவர்களுக்கு நன்மை செய்வது போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்தில் செயல்புரியும். இவ்விதமாக செயல்படுவதால் உன்னதமானவருடைய குமாரர்களாக நீங்கள் மாறுவதில்லை. உன்னதமானவருடைய பிள்ளைகளாக இருப்பதால் மட்டுமே இப்படிப்பட்ட செயல்களை நீங்கள் வெளிப்படுத்திக் காட்டுகிறீர்கள்.

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அன்புகூறுகிறவராக இருக்கிறார். அவர் அன்பின் திருவுருவாக வெளிப்பட்டார். அவரது அன்பு ஒன்றே நிலையானது. மாறாதது. அவருடைய அன்பை அளக்க முடியாது. அதனுடைய உயரம், ஆழம், நீளம், அகலம் யாவும் எல்லையில்லாதவை.

அவர் நம்மீது அன்புகூர்வதற்கு காரணமேதுமில்லை. இதற்காக அவரைத் தூண்டிவிடவுமில்லை. அன்புகூரத்தக்கதாக நம்மிடத்தில் எந்த ஒரு சிறப்பும் தகுதியும் இல்லை. என்றாலும் அவர் நம்மீது அன்பைச் செலுத்துகிறார். அவர் அவ்வித பண்பு உடையவராக இருக்கும் ஒரே காரணத்தால் அவ்வாறு அன்பு செலுத்துகிறார்.

மற்றவர்களிடம் நாம் செலுத்தும் அன்பு: 

பெரும்பாலும்அறியாமையை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியாத காரணத்தால் நாம் அவர்களிடத்தில் அன்பு செலுத்துகிறோம். அவர்களைக் குறித்து மேலும் அறிய அறிய, அவர்களுடைய தவறுகளையும் தோல்விகளையும் அதிகமாக அறிவோம். அதனால் அவர்கள் நேசிக்கப்படுவதற்குக் குறைவுடையவர்களாக தோன்றுவார்கள்.

என்றாலும், எத்தகைய தன்மை உடையவர்களாக நாம் இருக்கிறோம் என்பதையும், என்னென்ன தன்மை உடையவர்களாக நாம் இருக்கிறோம் என்பதையும், என்னென்ன செயல்களை செய்கிறோம் என்பதையும் அறிந்திருந்த போதிலும், நமதாண்டவர் இயேசுநாதர் நம்மிடத்தில் அன்பு கூறுகிறார். அவருடைய சர்வ ஞானம் அவருடைய அன்பை நம்மைவிட்டு அகற்றிவிடவில்லை. அவருக்கு முக்கியமற்றவர்கள் என்று எவருமில்லை. சிறப்பற்றவர்கள் என்று யாருமில்லை. இப்புவியில் உள்ள எல்லாரிடமும் அவருடைய அன்பு பாய்ந்து செல்கிறது.

Image result for Jn:3:16

அன்பு செலுத்தாமல் நாம் கிறிஸ்துவைப்போல ஆக முடியாது: 

நேசத்தின் வல்லமையோடும், உணர்ச்சிகளின் வல்லமையோடும், அறிவின் வல்லமையோடும், நாம் தேவனிடத்தில் அன்புகூர வேண்டுமென்று கட்டளை பெற்றிருக்கிறோம். கணவன் மனைவியினிடத்திலும், மனைவி கணவனிடத்திலும் அன்புகூர வேண்டும். விசுவாச குடும்பத்தாரிடத்திலும், இழந்துபோன மனுக்குலத்தினிடத்திலும், ஏன் பகைவர்களிடத்திலும்கூட நாம் அன்புகூர வேண்டும்.

பிறருக்காக நாம் சேவை செய்வதில் நம்மை ஒப்புவித்தால் நாம் அன்புகூருகிறவர்களாக காணப்படுவோம்: 

எப்படியென்றால்… உண்மையான நிலையில் தேவையுள்ளவர்களுக்கு நமது பணத்தைக் கொடுப்பதால் நமது அன்பு வெளிப்படுகிறது. நமது பணத்தைக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பதினாலே யோவான் நமது அன்பை சோதிக்கிறார்.   “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்தும், தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?” (1யோவான்: 3:17).

நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம் என்றும் அவர் வலியுறுத்தி கூறியிருக்கிறார் (1யோவா: 3:16). இதைக்காட்டிலும் மேலான அன்பு வேறொன்றுமில்லை (யோவா: 15:13). இதுவே சிலுவைப்பாதையாக இருக்கிறது.

- Selected -