ஆகஸ்ட் 21, 2014

தேவனோடுள்ள உறவில் நமது பங்கு - தேவ சாயலாக மாறுவதே


மல்கியா: 2:15 - "அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே..."

ஒவ்வொரு மனிதனும் தன்னைக் குறித்துள்ள தேவ நோக்கத்தை அறிந்திருக்க வேண்டும். தன்னிடம் தேவ நோக்கம், தேவ திட்டம், தேவ சாயல் நிறைவேற பிரயாசப்பட வேண்டும். தன்னைக்குறித்த தேவ நோக்கத்தை அறியாதவர்களை நாம் அறிய செய்யவும், உணரச் செய்யவும் வேண்டும். தவறினால், அப்படிப்பட்டவர்கள் நித்திய ஜீவனை இழக்க நேரிடலாம்.

தமிழ் வேதாகமத்தில் "தேவ பக்தியுள்ள சந்ததி" என உள்ளது. மூல பாஷையில் "தேவ சாயலுள்ள சந்ததி" என உள்ளது.

ஏன் ஒருவனைப் படைத்தார்? "தேவ சாயலுள்ள சந்ததியை பெறவும், தேவ சாயலாக மாறவும், மாற்றவும்  படைத்தார்.

ஆதியாகமம்: 1:27 - "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார்..."

மத்தேயு: 5:48 - "...பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்"

தேவசாயலாக மாற அழைக்கப்பட்டவர்கள் பூரணசற்குணனாக இருக்க வேண்டும். பூரணசற்குணனாக மாறுவதே தேவசாயல்.


தேவ சாயலில் இரண்டு காரியம் இருக்கிறது:

1. தேவனுடைய குணாதிசயம் 

 (1பேதுரு: 1:16 - "நான் பரிசுத்தர், ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்...")

2. தேவனுடைய வல்லமை 

 ( யோவான்: 14:12 - "...என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்")


இவையிரண்டிலும் எதுவும் குறையக்கூடாது

தேவனுடைய ஒரே நோக்கம்:

ரோமர்: 8:29 - "... தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்."

யானை - யானையை குட்டி போடுகிறது; கழுதை - கழுதையை குட்டி போடுகிறது; அதுபோல தேவ சாயலாக படைக்கப்பட்ட மனிதன் - தேவசாயலாக பிள்ளைகளை பிறப்பிக்க வேண்டும். அதற்கு மாறாக மாம்சீக குணாதிசயம் கொண்ட பிள்ளைகளை பிறப்பித்தான். ஏன்? 

மனிதனுடைய கீழ்ப்படியாமை பாவத்தை கொண்டு வந்தது.  ரோமர்: 3:23 - "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி...". பாவம் - தேவ சாயலை இழக்கச் செய்து விட்டது.

தேவசந்ததியைப் பெற ஆதாமுக்கு கட்டளை. ஆனால், பாவ சந்ததியைப் பெற்றான். பாவத்தை நீக்கி, பாவ சந்ததியை தேவசந்ததியாக மாற்ற வேண்டும். அதாவது, பாவ சந்ததியை தேவசாயலாக மாற்ற வேண்டும். 

இந்து மதம் சொல்கிறது: "பாவ நிக்கிரகம்; துஷ்ட பரிபாலனம்" என்று. அதாவது, பாவியையும், துஷடனையும் அழிக்க வேண்டும் என்று. அதற்காக கடவுள் 10 அவதாரம் எடுப்பார் என்கிறது.

பரிசுத்த வேதாகமம் சொல்கிறது: பாவத்தை நீக்கி, பாவ சந்ததியை - தேவ சந்ததி, தேவசாயலாக மாற்ற வேண்டும் என்கிறது. அதற்காகவே, "பாவிகளை இரட்சிக்க (மீட்க) கிறிஸ்து இயேசு உலகிற்கு வந்தார்" என்று வேதம் சொல்கிறது. நமதாண்டவர் இயேசு கிறிஸ்து பாவத்தை வெறுக்கிறார். பாவியையோ நேசிக்கிறார்.

ஆதாம் தேவசாயலாக படைக்கப்பட்டான். தேவசாயலான பிள்ளைகளை பெற வேண்டும். ஆனால் அவன் பெறவில்லை. எனவே, பூமியில் தேவநோக்கம் நிறைவேறவில்லை. எனவே, தேவ நோக்கம் பூமியில் நிறைவேற, நாம் பிறரை தேவசாயலாக மாற்ற பிரயாசப்பட வேண்டும். 

ஒருவன் பாவ சாயலோடு மரிக்க நேர்ந்தால் அவன் நித்தியத்தை இழந்து விடுவான். நித்தியத்தை அடைய பாவ சாயலை மாற்றுகிற வல்லமையுள்ள தேவனாகிய இயேசுவிடம் வந்து மனந்திரும்பி,  பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று தேவ சாயலை தரித்துக் கொள்ளும்போது நித்திய ஜீவனை பெற முடியும்.

நம்மைக் குறித்த தேவ திட்டம், தேவ நோக்கம், தேவ சாயலை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.  அநேகருக்கு வசனம் தெரியும்; ஆனால், சத்தியம் தெரியாது. 

வேதத்தில் உள்ள வசனம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது ... சத்தியம் தெரிந்திருக்க வேண்டும்.  அப்போதுதான்  தேவ நோக்கம், தேவ திட்டம் நம்மில் நிறைவேற இடங் கொடுப்போம்.