ஆகஸ்ட் 26, 2014

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 11. "சபையோடுள்ள உறவில் ஆண்களின் பங்கு"


முதலில் இரண்டு விஷயங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே எந்த ஒரு ஊழியக்காரரும் பூரணர் அல்ல. எந்த ஒரு ஊழியக்காரரையும் கடவுளுக்குச் சமமாக கருதக்கூடாது. ஊழியருக்கும் பலவீனங்கள் ஏற்படும். அவரிடம் பலமும் உண்டு, பலவீனமும் உண்டு என்பதை உணர வேண்டும். போதகர் எல்லாரையும் பிரியப்படுத்த இயலாது என்பதை உணர வேண்டும். அவரும் மனிதர்தான் என்பதை அறியுங்கள். 

குறைகளை காணாமல் நிறைகளையே காண்கிறவர்களாக இருக்க வேண்டும். குறைகளையே பேசிக் கொண்டிருந்தால் இடறி விழுந்து விடுவோம்.  முறுமுறுக்கிறவர்களாக மாறி விடுவோம். பின்பு அதுவே நமது சுபாவமாக மாறி விடும். அதன்பின்பு, 'பின் மாற்றம்' ஏற்படும்.  தேவன் நம்மை உபயோகப்படுத்த இயலாத பாத்திரமாக மாறி விடுவோம். குறைகள் இல்லாத மனிதரில்லை. குறைகளில் நிறைகளை காண பழக வேண்டும். 

இயேசுகிறிஸ்துவின் 12 சீஷர்களுக்கும் 12 விதமான சுபாவம் இருப்பதை வேதத்தில் காணலாம். கர்த்தரை நமக்கு முன்னாக வைத்து விசுவாச வாழ்வில் முன்னோக்கி நடக்க வேண்டும். நமது விசுவாச வாழ்விற்கு வழிகாட்டிகளாகவும் ஊக்குவிப்பதற்காகவும் தேவன் தமது அடியார்களை வைத்திருக்கிறார். 

சபையின் போதகர் தேவ அழைப்பை பெற்ற தேவ மனிதர். கர்த்தர் அவரோடு இருக்கிறார். நமக்கு சேவை செய்யும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டும், தேவனால் அனுப்பப்பட்டும் இருக்கிற கர்த்தருடைய தாசன். கனத்திற்குரியவர். ஆவிக்குரிய தகப்பன் என்ற சிந்தையுடன் நாம் இருக்க வேண்டும். வயதில் குறைந்தவராகவோ, பெலவீனமானவராகவோ இருக்கலாம். ஆனால், அவருக்குள் இருக்கிற இயேசு பெரியவர். அவர் பலமுள்ளவர். எனவே, போதகருக்குள்ளிருக்கும் அபிஷேகத்தை கனம் பண்ணி கீழ்ப்படிய வேண்டும். அதுவே நமக்கு பரிபூரண ஆசீர்வாதத்தை கொண்டுவரும்.  

சபை போதகருடன் எப்போதும் நல்ல உறவு இருக்க வேண்டும். இந்த ஊழியத்திற்கு யாரை நியமிக்கலாம், அல்லது  அனுப்பலாம் என போதகர் நினைக்கும்போது, உடனடியாக நமது நினைவு அவருக்கு வரும் வகையில் நமது கீழ்படிதலும், தாழ்மையும், ஒத்துழைப்பும் எந்த சூழ்நிலையிலும் கிடைக்கும் என நினைவில் உதிக்கும் வகையில் போதகரின் மனதில் நாம் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும்.

நமது சிந்தையெல்லாம் இன்னும் தேவனுக்காக என்னவெல்லாம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் சபையை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லலாம்? ஆண்களை சபைக்குள் எப்படியெல்லாம் ஒருங்கிணைக்கலாம்? ஆண்களை சபைக்குள் கொண்டு வரவும் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவும் என்ன வழி? ஊழியங்களில் நமது பங்களிப்பு என்ன? எந்தெந்த விதங்களில் நாம் ஒத்துழைப்பை நல்குவது? என்பதைப்பற்றியே இருக்க வேண்டும். சபைபோதகருடன் கலந்து பேசி, இணைந்து செயல்படவும், சபை தரிசனத்தை நிறைவேற்றவும், நாமும் ஆயத்தமாகி பிறரையும் ஆயத்தப்படுத்த வேண்டும். 

எபேசியர்: 4:16 - "அவராலே (இயேசு) சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற  சகல கணுக்களினாலும் இசையாய்க்கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும்  தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது".

மேற்கண்ட வசனத்தின்படி ஒவ்வொரு ஆண்களின் தகுதியறிந்து சபையில் பயன்படுத்த வேண்டும். திறமையற்றவராக கருதப்படும் ஒரு நபர் உலகில் மற்ற துறைகளில் கொடிகட்டி பறப்பதை நாம் அறிய வேண்டும். எனவே, அப்படிப்பட்டவர்களின் தாலந்துகளை நாம் தேவனுக்கு பயன்பெற செய்ய அதிக கவனமும், சிரத்தையும் எடுக்க வேண்டும்.  


ஆண்களை நான்கு வித ஊழியங்களில் பயன்படுத்தலாம்

1. ஜெப ஊழியம்:

  1. ஜெபக்குழுவை நடத்த சொல்லாம்.
  2. உபவாச ஜெபத்தை நடத்த சொல்லாம்.
  3. சங்கிலி தொடர் ஜெபத்தை நடத்துவதில் உபயோகப்படுத்தலாம்.
  4. வீட்டு ஜெபத்தில் பயன்படுத்தலாம்
  5. ஆண்கள் கூடி ஏரியா வாரியாக - ஏதாவது ஒரு ஏரியாவில் ஜெபிக்க வைக்கலாம். அந்தந்த ஏரியா மக்களை தேவன் சபைக்கு கொண்டு வரும்படியாக ஜெபிக்கலாம். கூடிவரும்போது யாரைப்பற்றியும், எதைப் பற்றியும் குறைகூறக்கூடாது.
  6. வருடம் ஒருமுறை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு குடும்பமாக சபைக்கு வந்து 'குடும்பமாக' ஜெபிக்க வைக்கலாம்.
  7. வாரத்திற்கொருமுறை சபையில் வந்து ஒருமணி நேரம் ஜெபிக்க வைக்கலாம்
  8. ஒரு நாள் ஜெபம்; மூன்றுநாள் ஜெபம்; விசேஷித்த ஜெபநாள்; 12 மணிநேர ஜெபம் ஆகியவற்றை கூறுவித்து நடத்த உற்சாகப்படுத்தலாம்.
  9. ஆடி மாதத்தில் 'ஆடித்தள்ளுபடி ஜெபம்' என்ற தலைப்பில் ஜெபத்தை ஆரம்பித்து நடத்தலாம். அந்நாளில் பிசாசின் கிரியைகளை துரத்தலாம். பிசாசின் கொண்டாட்டத்தை தள்ளுபடி செய்து ஜெபிக்கலாம். ஆடி 28, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி 18 போர்க்கள ஜெபத்தை ஏறெடுக்கலாம். உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழக வரைபடம், மாவட்ட வரைபடம், தாலூகா வரைபடம், பேரூராட்சி வரைபடம், ஊராட்சி வரைபடம் ஆகியவற்றை ஆயத்தம் செய்து அந்நாட்களில் போராடி ஜெபிக்கலாம். அந்நாட்களில் விசேஷித்த கைப்பிரதிகளை அச்சடித்து விநியோகிக்கலாம். இப்படியாக ஒவ்வொரு மாதத்திலும் வருகிற சிறப்பு தினங்களை பக்திவிருத்திக்கான  ஜெப தினங்களாக மாற்ற திட்டமிட வேண்டும்.
  10. ஒரு A4  Sheet ல் எதற்கு ஜெபிக்க வேண்டும்? என்ற விபரத்தை தெளிவாக அச்சடித்து கொடுக்க வேண்டும். ஜெபக்கையேடு ஒரு புத்தகமாக வெளியிடலாம். அதை ஒவ்வொரு தேவபிள்ளையும் வாங்கி பயனடைய ஊக்கப்படுத்த வேண்டும். 
2. ஃபுல்பீட் ஊழியம்:

1. சங்கீதம் வாசிக்க சொல்லாம்
2. வாக்குதத்த வசனம் சொல்ல வைக்கலாம். அதாவது ஆளுக்கு ஒரு வாக்குத்தத்த வசனத்தை வாசிக்க சொல்லாம்.
3.ஊழியரை தாங்குதல்: ஜெபத்தில், உபசரிப்பில், கனத்தில், கீழ்படிதலில்
4. அறிவிப்புகளை வாசிக்க செய்வதில்
5. காணிக்கை எடுக்கச் செய்வதில், பாடல், இசை வாசிப்பில்

3. சபை பணிவிடை ஊழியம்:

'சபை பணிவிடைகள் இந்த வாரம்' என பெயர் எழுதிப் போட வேண்டும். அர்ப்பணிப்போடு செய்கிறவர்கள், அர்ப்பணிப்பில்லாமல் செய்கிறவர்கள், செய்யாதவர்கள் யார்? யார்? என அப்போதுதான் தெரியும். இதன் மூலம் உண்மையுள்ளவர்களை நாம் கண்டறிய முடியும். உருவாக்கவும் முடியும்.

4. வெளி ஊழியம்: 

1. மரித்த வீட்டில், திருமண வீட்டில், கிராம ஊழியத்தில் உபயோகப்படுத்தலாம். சூழ்நிலைகளின் விவரங்களை அவ்வப்போது போதகரிடம் சொல்லி வரவேண்டும். 
2. ஜீசஸ் படம் சிடி மற்றும் டிவிடி க்களில் ரைட் செய்து விநியோகிக்கச் செய்யலாம்.
3. சுவிஷேச புத்தகங்கள், ஆவிக்குரிய புத்தகங்கள், கைப்பிரதிகள் அச்சடித்து கொடுக்கச் சொல்லாம்.
4. ஜெபநடை ஊழியத்தில் பயன்படுத்தலாம்.
5. தெருப்பிரங்க ஊழியத்தில், தெருபிரச்சார நாடகத்தில் உபயோகப்படுத்தலாம்

ஆண்கள் மூலம் தேவனுடையராஜ்யம் கட்டப்பட ஜெபிப்போம்! செயல்படுவோம்!