திறவுகோல் வசனம்: மத்தேயு:21:1
- 9
‘கழுதை’ என்றவுடனே நமக்கு நினைவில்
வருவது ‘அழுக்கு மூட்டைகளை சுமக்கும் ஒரு மிருகம்’. ஆனால், இந்த பூமியில் ஒரு நாள்
ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து ஏழை தச்சனுக்கு மகனாக பிறந்து, மூன்றரை வருடம் ஊழியம்செய்து,
ஒரு கழுதையின் மேல் ஏறி பவனி வந்தார். அவர் தாழ்மையுள்ளவர்.
சகரியா:9:9 –“சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.”
ஆம்! அவர் நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு,
நமக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, இன்றும் ஜீவனுள்ள தேவனாக, ராஜாதி
ராஜாவாக வெள்ளை சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்.
அன்று இயேசுவை சுமந்து சென்ற கழுதையை குறித்து பார்ப்போம்.
1.கட்டப்பட்ட கழுதை:
மத்தேயு:21:1,2
- “அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; ”
இயேசுவை சுமக்க போகிற கழுதை முதலாவது
கட்டப்பட்ட நிலைமையில் இருந்ததது. ஆம், இன்றும்
நாம் வாழும் பகுதியில் உள்ள மக்கள் கட்டப்பட்ட நிலையில்
இருக்கிறார்கள். பாவ கட்டு, சாப கட்டு, சாத்தானின் கட்டு, மரணக்கட்டு, குடும்பக்கட்டு,
பில்லிசூனிய கட்டு, பாரம்பரிய கட்டு என அநேக ஆத்துமாக்கள் கட்டப்பட்டு விடுதலையின்றி
தவிக்கின்றனர். அப்படிப்பட்ட கட்டுகளில் வாழும் மக்களை இயேசு தமது சீஷர்களாகிய நம்மை
பார்க்க சொல்கிறார்.
2.இருவழிச் சந்தியில் நின்ற கழுதை:
மாற்கு:11:4 – “அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக்கண்டு, அதை அவிழ்த்தார்கள்.”
இருவழிகள் மத்தேயு : 7: 13,14
1. ஜீவ வழி
2. மரண வழி
இரண்டு நினைவுகள் – 1 இராஜாக்கள்:
18:21
எலியாவின் நாட்களில் ஜனங்கள் இரண்டு
நினைவுகளால் நிறைந்திருந்தனர். ஒன்று, கர்த்தராகிய தேவன்; மற்றொன்று பாகால். இன்றும்
சில மக்கள் சபைக்கு வரும்போது, “நாங்கள் இயேசுவையும் தொழுது கொள்ளுகிறோம்; எங்கள் தெய்வங்களையும்
தொழுது கொள்ளுகிறோம்” என்பார்கள். ஆனால் அது தவறு. கர்த்தர் தெய்வமென்றால் கர்த்தரை
பின்பற்று; பாகால் தெய்வமானால் பாகாலை பின்பற்று.
அநேக ஆத்துமாக்கள் இவ்விதமான இருவழிச் சந்திகளில்
இருமனமுள்ளவர்களாக மலைத்து நிற்கின்றனர்.
3.வாசலருகே நின்ற கழுதை
மாற்கு:11:4 – “அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.”
இரட்சிக்கப்பட ஒரே வாசல் இயேசு
கிறிஸ்து மட்டுமே.
யோவான்:10:9 – “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.”
யோவான்:14:6 – “அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”
நோவாவின் பேழைக்குள் சென்று இரட்சிக்கப்பட
ஒரே வாசல்தான் இருந்தது. ஆசரிப்புக்கூடாரமாகிய தேவாலயத்துக்குள் செல்லவும் ஒரே வழிதானிருந்தது.
கட்டியிருந்த கழுதை வாசலுக்குள்ளே
இல்லை; வாசலருகே தான் நின்றது. அது கட்டப்பட்டிருந்ததால் வாசலுக்குள் பிரவேசிக்க முடியவில்லை.
அநேக ஆத்துமாக்கள் கட்டப்பட்ட நிலையில் வாசலுக்குள் பிரவேசிக்க முடியாமல், வாசலுக்கு
அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இரட்சிப்பு கொடுக்க ஒரே வழி – “இயேசு” மட்டுமே.
அப்போஸ்தலர்:4:12 – “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.”
1 தீமோத்தேயு:1:15 – “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது”
4.சீஷர்களால் கட்டவிழ்க்கப்பட்ட கழுதை:
மாற்கு:11:4 – “அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.”
பலவித கட்டுகளால் கட்டப்பட்டிருக்கும் மக்களை விடுதலையாக்கும் பணி இயேசுவின் சீஷர்களாகிய நம்முடையது. சுவிசேஷமாகிய
பட்டயத்தால் சாத்தானின் கட்டுகளிலிருந்தும், பாவக் கட்டுகளில் இருந்தும் நாம் ஜனங்களை விடுவிக்கவேண்டும்.
மத்தேயு:28:19, 20 – “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ”
கழுதையை கட்டவிழ்த்துக்கொண்டு
வர இயேசு பெரிய பலசாலிகளை அனுப்பவில்லை. அவருடைய வார்த்தையின்படி செய்ய, கீழ்ப்படிகிற
சீஷர்களையே அனுப்பினார்.
5.கழுதையை கட்டவிழ்க்கையில் தடை:
மாற்கு:11:5 – “அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.”
ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் மூலமாய்
விடுதலையடையும்போது சாத்தான் பற்பலவிதத்தில் தடை செய்கிறான். சகேயு இயேசுவைப் பார்க்க
வரும்போது, அவரைப் பார்க்க முடியாதபடி ஜனக்கூட்டம் தடையாயிருந்தது (லூக்கா:19:3). திமிர்வாதக்காரன்
இயேசுவால் தொட்டு சுகமாகாதபடி ஜனக்கூட்டம் தடையாயிருந்தது (மாற்கு:2:3-5). எரிகோவில்
குருடன் பார்வையடைய முடியாதபடி ஜனக்கூட்டம் தடையாயிருந்தது (லூக்கா:18:35-43).
சுவிசேஷம் சொல்லும்போது, இவ்வகையான
தடைகள் வந்தால், அதை நாம் வேத வசனத்தினால் மேற்கொள்ள வேண்டும். கழுதையை சீஷர்கள் கட்டவிழ்க்கும்போது,
தடை வந்தது. ஆனால் அவர்கள் ஆண்டவரின் கட்டளைப்படி, “இது ஆண்டவருக்கு வேண்டும்” என்றார்கள். (லூக்கா:19:34)
விசுவாசத்தினால் அவருடைய வார்த்தையின்படி
முன்னேறும்போது இத்தடைகள் சூரியனைக்கண்ட பனிதுளிகள் போல் எளிதில் நீங்குகிறது. ஆசீர்வாதமடைகிறார்கள்.
6.இயேசுவிடம் வந்த கழுதை:
மாற்கு:11:7 – “அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து,”
நாம் ஆத்துமாக்களை இரட்சித்து,
இயேசுவிடம் கொண்டு வர வேண்டும்.
யோவான்:6:37 – “ என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை”
மத்தேயு:11:28 – “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”
7.வஸ்திரங்கள் போடப்பட்ட கழுதை:
மாற்கு:11:7 – “அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; ”
இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள்
மன்னிக்கப்பட்டு விடுதலையடைந்த மனுஷனுக்கு, தேவன் அருளும் ஆவிக்குரிய விலையேறப் பெற்ற
வஸ்திரங்கள் தரிப்பிக்கப்படுகிறது. முற்றிலும்
புதிய சிருஷ்டியாகிறான். (2கொரிந்தியர்:5:17)
- இரட்சிப்பின் வஸ்திரம் – ஏசாயா:61:10
- நீதியின் வஸ்திரம் – வெளிப்படுத்தின விசேஷம்:19:8
- துதியின் வஸ்திரம் – ஏசாயா:61:3
- பரிசுத்த வஸ்திரம் – யாத்திராகமம்:28:2
- வெண் வஸ்திரம் – வெளிப்படுத்தின விசேஷம்:3:5
- சித்திரத்தையலாடை – சங்கீதம்:45:13,14
- உயர்ந்த வஸ்திரம் – லூக்கா:15:22
இந்த வஸ்திரங்கள் யாவும் இரட்சிக்கப்பட்டு,
கர்த்தருக்கு கீழ்ப்படியும் மனுஷனுக்கு அருளப்படுகிறது. கிறிஸ்துவுக்குள் ஒரு மகிமையான
புதிய அனுபவம் உண்டாகிறது. (சவுல் பவுலானது போல்)
8.ஆண்டவர் இயேசுவை சுமக்கும் கழுதை:
மாற்கு:11:7 – “அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின் மேல் ஏறிப்போனார்.”
வஸ்திரங்கள் போடப்பட்ட கழுதையின்
மேல் இயேசு ஏறினார். பாக்கியமான கழுதை! பரிசுத்தர் அதன் மேலிருக்கிறார். அதற்கு இஷ்டமான
பாதையில் இனிப்போக முடியாது. தாறுமாறாய் ஓட முடியாது. அவர் நடத்துகிற வழியில் அவரை
சுமந்து கொண்டு போக வேண்டும். இனி இயேசுவே அதன் நல்ல மேய்ப்பர். (யோவான்:10:11 – “நானே நல்ல மேய்ப்பன்; நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”)
ஒரு காலத்தில் உலகத்தின் அழுக்குகளையெல்லாம்
(அழுக்கு வஸ்திரமூட்டைகளை) சுமந்து, அலுத்து இளைத்துப்போன கழுதை, இப்போது தனது சிருஷ்டி
கர்த்தாவாகிய இயேசுவை சுமக்கிறது.
அவரை சுமக்கும் மக்களின் தேவையை
அவர் அறிவார். ஆகவே நாம் ஒன்றுக்கும் கவலைப்பட தேவையில்லை. (1பேதுரு:5:7)
இயேசுவை சுமக்கும் கழுதை பெற்ற பாக்கியம்:
மாற்கு:11:8-10 – “அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.”
·
கழுதை நீதியின் பாதையில்,
பரிசுத்த பாதையில், இரட்சிப்பின் பாதையில், ஆண்டவருக்கு பிரியமான பாதையில் நடந்து செல்கிறது.
·
ஓசன்னா!!! ஓசன்னா!!! என்ற
இனிய பாடலின் வாழ்த்தொலி கேட்டு ஜெய கம்பீரத்தோடு ராஜாதி ராஜாவை சுமந்து கொண்டு எருசலேம்
பட்டணத்துக்கு நேராக மகிழ்ச்சியோடு முன்னேறி செல்கிறது.
·
அதற்கு தேவையான யாவும்
அதன் காலடியில், அதன் முன்னே வந்து விழுகிறது.
இயேசுவை சுமக்கும் கழுதை பெறும்
பாக்கியம் இதுதான். நாமும் இந்த பாக்கியத்தை பெற இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து,
கட்டுண்டவர்களை விடுதலையாக்கி, இரட்சிப்பின் பாதையில் நடத்தி, பரம எருசலேமுக்கு நேராய்
நடத்தி செல்வோம்!!!