நானே சர்வ வல்லமையுள்ள தேவன்
ஆதியாகமம்:35:11
–
“பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.”
நாம் ஆராதிக்கும் கர்த்தர் “எல்ஷடாய் - சர்வ வல்லமையுள்ள தேவன்”
எல்ஷடாய்
:
ஆபிரகாமுக்கு கர்த்தர் “எல்ஷடாய்” என்ற நாமத்தின் மூலம் சந்தித்து அவனை ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம்:17:1,2 – “ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.”
- வாழ்வாதாரத்தை தரும் தேவன்
ரோமர்:4:19 – “அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.”
- சாராளின்
கர்ப்பம் செத்து போயிற்று; இருந்தாலும் அவன் அதை எண்ணாதிருந்தான். ஏனென்றால், வாக்குப்பண்ணின
தேவன் அதை நிறைவேற்றுவார். உடன்படிக்கை பண்ணினவர் அதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார்
என்பதை ஆபிரகாம் நன்றாக அறிந்திருந்தான்.
- தேவன் நம் சூழ்நிலைகளை பயன்படுத்தி, தமது
சர்வ வல்லமையை நம் வாழ்வில் வெளிப்படுத்துவார். ஆனால், நாம்
அதை அறிவதில்லை; அதனால் தேவன் ஏன் சோதனைகளை அனுமதித்தார் என்று அவரை கேள்விக்கேட்கிறோம்.
எபிரேயர்:11:11 –
“விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.”
- சாராளின்
செத்துப்போன கர்ப்பத்தை எல்ஷடாய் தேவன் உயிர்ப்பித்தார். வெறுமையை தேவன் மாற்றுவார்.
அதேபோல நம்முடைய வாழ்விலும் செத்துப்போன நிலையில் இருக்கும் எல்லா காரியங்களையும் உயிர்ப்பிக்க
எல்ஷடாய் தேவனால் முடியும்.
- ஆபிரகாம்
சாராள் இருவரும் பிள்ளை இல்லாமல் எத்தனை நாள் ஏங்கியிருப்பார்கள்?! தனக்கு ஒரு வாரிசு
இல்லையே என்று மனமுடைந்து இருந்த அவர்கள், தங்கள் வாழ்க்கையில் தேவனை பின்பற்றி அவருடைய
வாக்குத்தத்தங்களை விசுவாசித்தார்கள். வாக்குத்தத்தங்கள் குறிப்பிட்ட காலங்களில் நிறைவேறியது.
- ஆசீர்வாதத்தை தரும் தேவன்
யோபு:1:1
–
“ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.”
- யோபு
உத்தமனாக, தேவனுக்கு பயந்தவனாக, மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக வாழ்ந்து வந்தான். ஆனால் கர்த்தர்
அவன் வாழ்வில் சோதனைகளை அனுமதித்தார். அதற்காக அவன் கர்த்தரை மறுதலிக்கவோ தூஷிக்கவோ
இல்லை. மாறாக சோதனைகளை சகித்து கொண்டான்.
யோபு:1:22
- “இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.”
- இதையெல்லாம்
பார்த்துக்கொண்டே இருந்தே தேவன் அவனை இன்னும் பல மடங்கு ஆசீர்வதித்தார்.
யோபு:5:17
– “இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.”
“சர்வ
வல்லவருடைய சிட்சை அற்பமானது அல்ல; அது நம்மை பண்படுத்தி, நம்மை விளைச்சலுக்கு ஆயத்தப்படுத்துகிறது.”
யோபு:42:12
– “கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.”
- தன்னிறைவை தரும் தேவன்
ரூத்:1:20,21
– “அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.”
- பஞ்ச
காலத்திலே அப்பத்தின் வீடாகிய பெத்லகேமை விட்டு, புறஜாதிய நாடான மோவாபுக்கு நிறைவாக
போன நகோமி குடும்பம், யாவற்றையும் இழந்து திரும்பவும் தன்னுடைய சொந்த ஜனத்தாரிடத்திற்கு
வந்தார்கள்.
- தேவன்
நிரப்ப நினைத்தால், அதற்கு முன் கண்டிப்பாக வெறுமையாக்குவார். பின் நம்மை நிறைவுள்ளவர்களாக
மாற்றுவார்.
“அவர்
தன்னில் தானே நிறைவுள்ள தேவன். அவரில் குறைவுகளே இல்லை. அவர் நம்முடைய குறைவுகளை நிறைவாக்க
போதுமானவர்”
யோவான்:15:5
– “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.”
ஒருவேளை நகோமி தன்னுடைய குடும்பத்தாரை இழக்காதிருந்தால்,
தேவனுடைய மீட்பின் திட்டம் ரூத் மூலமாக நிறைவேறியிருக்காது. தேவனின் நினைவுகள் நம்
நினைவுகள் போல அல்ல.
நகோமியின் வாழ்வில் பெரிய மாற்றம் நடந்தது. தனக்கு
தேவன் இவ்வளவு சோதனைகளை அனுமதித்து விட்டாரே என்று மனம் சோர்ந்து போனாலும், பின் தேவனின்
திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்தாள். ரூத் மூலமாக தாவீதின் வம்ச வரலாறு தொடங்கியது. அந்த
வம்சத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார்.
எல்ஷடாய் தேவனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. அவர்
நித்தியமானவர். அவர் நமக்கு அளித்த வாக்குத்தத்தங்களை ஏற்ற வேளையில் நிறைவேற்றுவார்.
அவருடைய சர்வ வல்லமையை தேவன் நம் மூலமாக வெளிப்படுத்துவார்.
மோசே மூலம் பார்வோனிடம் தம்முடைய சர்வ வல்லமையை
வெளிப்படுத்தின தேவன், நம் மூலமாக நம்மை சுற்றிலும் உள்ளவர்களிடம் அவரின் வல்லமையை
வெளிப்படுத்துவார். அப்போது, நம் சத்துருக்கள் சிதறுண்டு போவார்கள்.
சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மிடம் உடன்படிக்கையை ஏற்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
தேவன் யாக்கோபுக்கு உடன்படிக்கை ஏற்படுத்த “சர்வ
வல்லமையுள்ளவர்” என்ற நாமத்தில் வெளிப்பட்டார்.
யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவுக்கு பயந்து விலகி
ஓடி வந்த இடத்திற்கு போய், தேவன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் படி சொன்னார்.
ஆதியாகமம்:35:1,2 – “தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.”
யாக்கோபு ஏசாவுக்கு பயந்து ஓடி வந்த போது மிகுந்த
பயத்தோடு கர்த்தரை சேவித்து கொண்டிருந்தான். பயபக்தியுடன் இருந்தான். அவனை குறித்து
கர்த்தரின் திட்டத்தை அறியாதவனாக இருந்தான். ஆகவே கர்த்தர் அவனை திரும்ப அதே இடத்திற்கு
போய் பலிபீடத்தை உண்டாக்க சொன்னார்.
1. உனக்கு
தரிசனமான தேவனுக்கு பலிபீடத்தை உண்டாக்கு
2. அந்நிய
தெய்வங்களை விலக்கிப்போடு
3. உன்னை
சுத்தம் பண்ணிக்கொள்
- இந்த
உபவாச நாட்களில் நம்மை நாமே உய்த்து ஆராய வேண்டும். நாம் எதில் குறைவாக இருக்கிறோம்
என்பதை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்.
1.
பலிபீடத்தை
உண்டாக்க வேண்டும்:
ஆதியாகமம்:35:7 – “அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன்
சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.”
ஏல்பெத்தேல் – தேவனின் வீடு
ஆதியாகமம்:28:17 – “அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.”
பெத்தேலின்
சிறப்பம்சம்:
பெத்தேல்
“தேவனுடைய வீடு” எனப்படும். தேவன் யாக்கோபுக்கு தன்னுடைய உடன்படிக்கையை பெத்தேலில்
கொடுக்கிறார்.
- பெத்தேலில்
ரெபேக்காளின் தாதியாகிய தெபோராளை கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் செய்யப்பட்டாள். (ஆதியாகமம்:35:8)
அதே மரத்தின் கீழ் உட்கார்ந்து, நியாயாதிபதிகள் காலத்தில் தெபோராள் இஸ்ரவேலை நியாயம்
விசாரித்து வந்தாள். (நியாயாதிபதிகள்:4:5)
- கர்த்தர்
தம்முடைய தீர்க்கதரிசிகளை பெத்தேலுக்கு அனுப்பி தம்முடைய நியாயத்தீர்ப்பை கொடுத்துக்கொண்டே
இருந்தார். ஏனென்றால் பெத்தேலில் விக்கிரகவழிபாடு இருந்தது. (ஆமோஸ்:3:14)
தேவனுடைய வீடாகிய பெத்தேலை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள
வேண்டும். நாமே தேவன் தங்கும் வீடாக இருக்கிறோம்.
1கொரிந்தியர்:3:17
– “ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.”
தேவன் வாழும் நம் உள்ளத்தில் பரிசுத்தம் இருக்க
வேண்டும். பலிபீடத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டியவை பரிசுத்தமாகவும் சுத்தமாகவும் இருக்க
வேண்டும். பூரணமாகவும் இருக்க வேண்டும். ஆபேலை போல தேவன் அங்கீகரிக்கும்படியான பலியை
முழுமனதோடு செலுத்த வேண்டும்.
ஆதியாகமம்:4:4 – “ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர்
அங்கிகரித்தார்.”
நம்மை நாமே பலியாக தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுக்க
வேண்டும். ஏனென்றால், தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காக கல்வாரி சிலுவையில்
பலியாக ஒப்புக்கொடுத்தார். அவருடைய சமூகத்தில் நம்மை நாமே ஒப்புக்கொடுத்து முழுஉள்ளத்தோடு
அவரை ஆராதிக்க வேண்டும்.
2. அந்நிய தெய்வங்களை விலக்கிப்போடவேண்டும்
யாத்திராகமம்:20:4
– “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்”
நம்மிடம் அந்நிய தெய்வங்களுக்குரிய எந்தவொரு அச்சடையாளங்களும்
இருக்கக்கூடாது; விக்கிரக ஆராதனை தேவனின் பார்வையில் அருவருப்பானது.
2கொரிந்தியர்:6:14-18 – “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.”
1யோவான்:5:21 – “பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.”
விக்கிரக ஆராதனை என்பது கல்லால் ஆன சிற்பங்களை தொழுது கொள்வது
மட்டுமல்ல; இறந்தவர்களை தொழுதுகொள்வது, நமக்கு பிடித்த பிரபலமானவர்களை நமஸ்கரிப்பது
போன்ற காரியங்களும் விக்கிரக ஆராதனை தான்.
1கொரிந்தியர்:10:14 – “ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.”
ஆகையால் யாக்கோபு தன்னிடமும் தன் ஜனங்களிடமும் உள்ள அந்நிய தெய்வங்களின்
சுரூபங்களை கர்வாலி மரத்தின் கீழ் புதைத்தான். யாக்கோபு தன்னை மாத்திரம் அல்ல தன் குடும்பத்தாரையும்
தன் ஜனங்களையும் செவ்வைப்படுத்தினான்.
3. உன்னை சுத்தம் பண்ணிக்கொள்
தேவன் நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பது “பரிசுத்தம்”
மட்டுமே. ஏனென்றால் அவர் பரிசுத்தர். அவர் பாவத்தை பாராத சுத்த கண்ணராக இருக்கிறார்.
நாம் பரிசுத்தமாயிருந்தால் தேவன் நம்மில் நிரந்தரமாக
வாசம் செய்வார். ஏனெனில் நாமே அவர் தங்கும் ஆலயம். அவர் தங்கும் ஆலயமாகிய நம் உள்ளத்தை
சுத்தமாக காத்துக் கொள்ள வேண்டும்.
லேவியராகமம்:11:45
–
“நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.”
சில வேளையில் பழைய மனுஷனுக்குரிய நடக்கைகள் வரும்.
அதை களைந்து போட வேண்டும். இரட்சிக்கப்படுவதற்கு முன் செய்த காரியங்கள் நினைவுக்கு
வரும்; ஆனால் அவை எல்லாவற்றிலேயும் நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஜெயங்கொள்ள வேண்டும்.
எபேசியர்:4:22-24 – “அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
யோசுவா:3:5 – “யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.”
நம்மை சுத்தமாக காத்துக்கொள்ள…
“பாவத்திற்கு விலகி ஓடு; பிசாசிற்கு எதிர்த்து
நில்”
எப்படி
சுத்தம் பண்ணவேண்டும்?
1. வேதவசனத்தினால்
சங்கீதம்:119:9 – “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.”
யோவான்:17:17
– “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.”
- - ஒருவன் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் அவன் வேதவசனத்தை
நன்கு கற்று அதின்படி வாழ்வதினால் மட்டுமே ஆகும்.
-
- வேதவசனம் அவன் கால்கள் தீமைக்குள் நடவாதபடி ஏற்ற நேரத்தில் அவனை
எச்சரித்து செவ்வைப்படுத்தும்.
2.
ஜெபிப்பதினால்
அனுதினமும் நாம் ஜெபிப்பதினால், உலகம் மாம்சம் பிசாசு நம்மை
மேற்கொள்ளாது.
·
உலகம் – பூமிக்குரிய கீழானவைகளை
போதிக்கும்; அபத்தமானவைகளை போதிக்கும்; இழிவானவைகளை போதிக்கும்.
·
மாம்சம் –
மாம்சத்தின் கிரியைகளை போதிக்கும் (கலாத்தியர்:5:19,20)
·
பிசாசு –
நரகத்துக்கு கொண்டு செல்வான்.
எனவே, நாம் தினமும் ஜெபிப்பதினால் நம் வழியை செவ்வைப்படுத்திக்கொள்ள
முடியும்.
3. பரிசுத்த ஆவியின் நிறைவு
அப்போஸ்தலர்:2:3 – “அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.”
பரிசுத்த ஆவியின் அக்கினி நமக்குள்ளே வரும் போது, நம்முடைய ஆவி
ஆத்துமா சரீரம் சுட்டெரிக்கப்படும். பரிசுத்த அக்கினி வரும்போது அசுத்தங்கள் சுட்டெரிக்கப்படும்.
- பழைய ஏற்பாட்டில் … அக்கினி முட்செடியில் எரிந்தது; குத்துவிளக்கில் எரிந்தது;
பலிபீடத்தில் எரிந்தது. முட்செடிக்கும் குத்துவிளக்குக்கும் ஒன்றும் ஆகவில்லை; ஆனால்
பலிபீடத்தில் இருந்த பலிமிருகத்தை அக்கினி பட்சித்தது.
- நம்மை நாமே பலிபீடத்தில் ஒப்புக்கொடுத்தால், பரிசுத்த ஆவியின்
அக்கினி நம்மில் இருக்கும் வேண்டாத அசுத்தங்களை சுட்டெரிக்கும். நம்மை பரிசுத்த ஆவியானவர்
சுத்தப்படுத்துவார்.
இம்மூன்று காரியங்களையும்
யாக்கோபு செய்ததினால், அவனை சர்வ வல்லமையுள்ள தேவன் ஆசீர்வதித்து உடன்படிக்கை பண்ணினார்.
"எத்தனாக இருந்த யாக்கோபு இஸ்ரவேலாக
மாறினான்."
நாமும் யாக்கோபை போல இந்த 3 காரியங்களிலும் நம்மை செவ்வைப்படுத்திக்கொண்டால்,
சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மோடும் நம் சந்ததியோடும் உடன்படிக்கை பண்ணுவார்.
ஆமென்!