ஜனவரி 23, 2013

"கிறிஸ்து" என்னும் சொல்லின் பொருள்

 
"கிறிஸ்து" என்னும் சொல் "அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்று பொருள்படும். எபிரேய மொழியில் "மேசியா" என்பதாகும்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், ராஜாக்களும் அவர்கள் பதவிக்கென அபிஷேகம் செய்யப்பட்டனர். இவர்களில் யாருமே குறைபாடில்லாதவர்களாய் இருக்கவில்லை. ஆனால், அவர்களிடம் வந்து அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் கடவுளின் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற அபிஷேகம் பெற்ற ஒருவரை தேவன் அவர்களுக்கு வாக்களித்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து.

இயேசுவே 'கிறிஸ்து' என்றால் "உலகத்தின் இரட்சகராகும்படி அவர் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்" என்று பொருள்.

"கிறிஸ்து" என்பது இயேசுவின் பணிசார்ந்த பெயர். அவருடைய பதவியையும், வேலையையும் இது காண்பிக்கிறது.

அவர் காலத்தில் இயேசு என்னும் பெயருடைய பலர் இருந்தனர். ஆனால், கிறிஸ்துவாக இருந்தது அவர் மாத்திரமே.

இயேசு கள்ளக் கிறிஸ்துக்களைப் பற்றி மத்தேயு: 24:24;  மாற்கு: 13:22 - ல் பேசினார். 1யோவான் 2 ல் நாம் அந்திக் கிறிஸ்துவைப் பற்றி வாசிக்கிறோம். ஆனால், கிறிஸ்துவானவர் ஒருவரே.

நமது இரட்சகரைப் பற்றி பேசும்பொழுது நாம் அவரை சாதாரணமாக இயேசு என்று அழைப்போம். அவருடைய பதவியைப் பற்றி பேசினால் நாம் அவரை இயேசு கிறிஸ்து என்றோ கிறிஸ்து என்றோ நாம் அழைப்போம். அவர் மெய்யான கடவுள் என்று நம்பிய போதிலும், நாம் அவரைக் கடவுள் என்னும் பெயரால் அழைப்பதில்லை.

யாத்திராகமம்: 30:30 - ஆரோன் ஆசாரியனாக அபிஷேகம் பண்ணப்படுதல்.

1சாமுவேல்: 16:13 - சாமுவேல் தாவீதை அரசனாக அபிஷேகம் பண்ணுகிறார்.

1இராஜாக்கள்: 19:16 - எலியா எலிசாவை தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணுகிறார்.

எபிரேயர்: 1:9; சங்கீதம்: 45:7 - கடவுள் இயேசுவை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்.

மத்தேயு: 16:16 - சீமோன் பேதுரு: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

அப்போஸ்தலர்: 2:36 - "இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று... அறியக்கடவீர்கள்"