இந்தப் பகுதியின் முக்கியமான கருத்து ஒருவரில் ஒருவர் உள்ள உறவை சார்ந்ததாகும். நமக்கு தேவனோடு சரியான உறவு இருக்குமானால் நம் அருகில் இருக்கும் ஜனங்களோடும் உறவு சரியாய் இருக்கும். தேவனிடத்தில் அன்பாய் இருக்கிறேன் என கூறிக் கொண்டு சகோதரனைப் பகைத்தால் அவன் பொய்யன் என வேதம் கூறுகிறது. (1யோவான்: 4:20).
1. தேவனோடு உள்ள உறவு: (ரோமர்: 12:1-2)
அ) சரீரத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுத்தல்: (ரோமர்: 12:1)
இரட்சிக்கப்படுவதற்கு முன்பு பாவ இன்பத்திற்காக நம்முடைய சரீரத்தை செலவிட்டோம். இப்பொழுது அவருடைய மகிமைக்காக உபயோகிக்க வேண்டும். கிறிஸ்தவர்களுடைய சரீரம் தேவனுடைய ஆலயம் என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. (1கொரிந்தியர்: 6:19,20). ஏனென்றால், தேவனுடைய ஆவி அவனுக்குள் வாசமாயிருக்கிறார்.(ரோமர்: 8:9). கிறிஸ்துவை நம்முடைய சரீரத்தில் மகிமைப்படுத்துவது நம்முடைய சிலாக்கியம். ஜீவபலியாகிய இயேசு கிறிஸ்துவே அதற்கு சரியான உதாரணம். அதில், கிறிஸ்துவின் பூரண கீழ்படிதல் இருந்தது. ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற வார்த்தை எக்காலத்தும் ஒப்புக் கொடுக்க வேண்டும்.
ஆ) நம்முடைய மனதை தேவனுக்கு ஒப்புக் கொடுத்தல்: (ரோமர்: 12:2)
உலகம் நம்முடைய மனதை (சிந்தையை) கட்டுப்படுத்த விரும்புகிறது. ஆனால், தேவன் நமது மனதை மறுரூபமாக்க வேண்டும் என விரும்புகிறோம். வேதத்தில் வாசித்துப் பாருங்கள்: எபேசியர்: 4:17-24; கொலோசெயர்: 3:1-13.
இ) நம்முடைய சித்தத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்: (ரோமர்: 12:2)
ஒருவனுடைய மனது சரீரத்தை கட்டுப்படுத்துகிறது. ஆனால், சித்தம் மனதை கட்டுப்படுத்தகிறது. அநேகர் தங்களுடைய சித்தத்தை தங்களுக்கு இருக்கிற சுய சக்தியினால் (Will Power) கட்டுப்படுத்தலாம் என நினைக்கின்றனர். ஆனால், அதில் தோல்வி அடைகிறார்கள். ஆனால், நமது சித்தத்தை தேவனுடைய வல்லமைக்கு ஒப்புக் கொடுத்து ஜீவிக்கும்போது வெற்றியுள்ள கிறிஸ்தவனாக ஜீவிக்க முடியும். நம்மடைய ஒழுங்குபடுத்தப்பட்ட ஜெபத்தின் மூலமாக நமது சித்தத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். என்னுடைய சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபிக்க வேண்டும்.
2. சக விசுவாசிகளோடு உள்ள உறவு: (ரோமர்: 12:3-16)
ரோம சபையில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இதை எழுதுகிறார். ஒருவருக்கொருவர் உள்ள உறவை சரீரத்தில் அவயவமாகப் பாவித்து விவரிக்கிறார்.
ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் ஒரு பகுதியாக ஜீவிக்கிறார்கள். ஒவ்வொருவரும் நடப்பிக்க வேண்டிய ஆவிக்குரிய கிரியைகள் உண்டு. சரீரத்தைக் கட்டி எழுப்புவதற்கும், அதை சரீரத்தின் மற்ற அவயவயங்களை
பூரணப்படுத்துவதற்கும் வரங்கள் அளிக்கப்படுகிறது. நாம், மற்ற ஒவ்வொருவருக்கும் சொந்தம். கிறிஸ்துவின் அவயவயத்தின் வளர்ச்சிக்கும், ஆவிக்குரிய ஊழியத்திற்கும் நாம் முக்கியமானவர்கள்.
அ) உண்மையான மதிப்பீடு: (ரோமர்: 12:3)
ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனுடைய ஆவிக்குரிய வரங்கள் என்ன? ஸ்தல சபையில் அவனுக்குரிய ஊழியங்கள் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒவ்வொரு விசுவாசியும் அவன் செய்யக் கூடாத வேலையைச் செய்து, தன்னை எண்ண வேண்டுவதற்கு மிஞ்சி எண்ணுவதாகும். சிலர் தங்களைக் குறித்து எண்ண வேண்டியதற்குக் குறைத்து எண்ணுவதும் தவறாகும். உதாரணம்: மோசே.
ஆ) உண்மையான கூட்டுறவு: (ரோமர்: 12:4-8)
ஒவ்வொரு விசுவாசிக்கும் வித்தியாசமான வரங்கள் உண்டு. சரியான அளவில் சரீரமாகிய சபை வளருவதற்கு ஏதுவாக தேவன் இந்த வரங்களை அருளியிருக்கிறார். ஒவ்வொரு கிறிஸ்தவனும் விசுவாசத்தின் மூலமாக தன்னுடைய வரத்தை செயல்படுத்த வேண்டும். நம்முடைய ஊழியத்தின் பலனை நாம் ஒரு வேளை பார்க்க முடியாவிட்டாலும் தேவன் அதைப் பார்த்து ஆசீர்வதிப்பார்.
இ) விசுவாசிகளின் ஆறு வித ஊழியம்: (ரோமர்: 12:6-8)
1. தீர்க்கதரிசனம் 2. ஊழியம் 3. போதித்தல் 4. புத்தி சொல்லுதல் 5. பகிர்ந்து கொடுத்தல் 6. இரக்கம்
ஆவிக்குரிய வரங்கள் சபை கூடி எழுப்புவதற்காகக் கொடுக்கப்படுகிறது. சபையினுடைய விசுவாசிகளின் நடுவே அவர்களின் உறவை இந்த வரங்கள் கட்டி எழுப்புகிறது.
3. எதிராளி அல்லது விசுவாசிகளோடு உள்ள உறவு: (ரோமர்: 12:17-21)
தேவனுக்கு கீழ்படிகிறவர்களுக்கு விரோதிகள் இருக்கத்தான் செய்வார்கள். பவுலுக்கும் மற்ற அனைவருக்கும் விரோதிகள் இருந்தனர். இயேசு கிறிஸ்து இருக்கிற எல்லா சத்துருவிலும் - சொந்த வீட்டாரே சத்துரு என்றார். சத்துருக்களுக்கிடையே பதில் செய்தல் (பழி) கூடாது (ரோமர்: 12:19) என வேதம் கூறுகிறது. இப்பகுதியில் உள்ள வசனங்கள் வாசிக்க எளிதாய் இருக்கும். ஆனால், கடை பிடிப்பதே காரியம்.