நவம்பர் 26, 2019

ஆவியின் கனிகள் - Spiritual Fruits part - II



கடந்த பகுதியில் முதலாவது கனியான அன்பை குறித்து பார்த்தோம். தொடர்ந்து மற்ற கனிகளை குறித்து தியானிப்போம்.

2. சந்தோஷம் - Joy


லூக்கா:2:10 - "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."

சந்தோஷம் - ஆனந்தம், மகிழ்ச்சி, களிகூறுதல்

இயேசு இந்த உலகத்தில் மனிதனாக அவதரித்த போது, அது ஜனங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கிற்று.இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் வரும்போது மிகுந்த சந்தோஷம் உண்டாகும். ஆவிக்குரிய சந்தோஷம் உண்டாகும். இது துன்பங்கள், பாடுகள் மத்தியிலும் காணப்படும் சந்தோஷம். இது தேவ கிருபையினால் நமக்கு வருவது; இது நமது இரட்சிப்பின் சந்தோஷம்.

"இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே"

யோவான்:15:11 - "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்."

பிலிப்பியர்:4:4 - "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்."

நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். கர்த்தருடைய இரட்சிப்பின் சந்தோஷம் நம் மனதில் நிலைத்திருக்க வேண்டும்.

இரட்சிக்கப்படும்போது நாம் ஆவிக்குரிய சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். அடிக்கடி நமது இரட்சிப்பைக் குறித்து தியானித்து அதற்காக சந்தோஷத்துடன் நன்றி செலுத்துவது நமது கடமை.

சங்கீதம்:35:9 - "என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்."

தாவீது, தேவன் தன்னை இரட்சித்ததை நினைத்து களிகூர்ந்து, எந்நாளும் நன்றி சொல்லி மகிழ்ந்தான். இரட்சிக்கப்பட்ட புதிதில் அனுதினமும் மகிழ்ச்சியை அனுபவித்து களிகூர்ந்து நன்றி சொல்லி வருவோம். கொஞ்ச காலத்தில் நமக்கு வரும் துன்பங்கள், பாடுகள், சோதனைகள் நம் சந்தோஷத்தை குலைத்து விடும். நம்மை பாவத்தில் தள்ளி, நமது இரட்சிப்பின் சந்தோஷத்தை கெடுத்து விடும். தாவீது, பத்சேபாளிடத்தில் பாவம் செய்து தனது இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்தான். ஆனாலும் தனது பாவத்தை அறிக்கை செய்து மனந்திரும்பினான். மீண்டும் தான் இழந்த சந்தோஷத்தை பெற்றுக்கொண்டான்.

சங்கீதம்:51:12 - "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்."

பின்மாற்றத்திலிருந்து திரும்பவும் கர்த்தருக்குள் வரும்போது நாம் இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் பெற்றுக்கொள்கிறோம்.

கெட்டகுமாரன் தான் செய்த பாவத்தை நினைத்து வருந்தி, திரும்பவும் தன் தகப்பனிடம் சென்று மன்னிப்பு கேட்டு, இழந்து போன இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டான்.

லூக்கா:15:32 - "உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்."

லூக்கா:19:10 - "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்."

ஆம்! இழந்து போன இரட்சிப்பின் சந்தோஷத்தை நாம் பெறவேண்டுமென்பதற்காக இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்தார். அவர் பிறப்பிலே சந்தோஷம் உண்டாயிற்று.

இயேசுவின் பிறப்பில் சந்தோஷம் - ஏன்?

பாவம், வியாதிகள், வேதனைகள், போராட்டங்கள் ஆகியவற்றில் சிக்கியிருக்கும் மனிதனுக்கு இயேசுவின் மூலம் ""விடுதலை உண்டு" என்பது நற்செய்தி அல்லவா? நரகத்திற்கு செல்ல வேண்டிய நம்மை மீட்டெடுக்க இயேசு பிறந்தது நமக்கு சந்தோஷம் தானே!?!!

தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளான நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ரோமர்:14:17 - "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது."

நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

சங்கீதம்:118:24 - "இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்."

ஒவ்வொரு நாளும் கர்த்தர் உண்டு பண்ணின நாள். ஆகவே எதை கண்டும் கவலைப்படாமல் மகிழ்ந்து களிகூறுவோம்.

ஆபகூக்:3:17-19 - "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்."

எந்த இழப்பு நேர்ந்தாலும் என்ன தொல்லை வந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்து தேவனுக்குள் களிகூறுவதே ஆவியின் கனியாகிய சந்தோஷத்தின் அறிகுறியாகும்.

ஏசாயா:51:11 - "அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்."

ஏசாயா:35:10 - "கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்."

ஒரு நாள் வரும்! நாம் பரம சீயோனுக்குள் சேருவோம். அப்பொழுது நித்திய சந்தோஷம் நமது தலைமேல் இருக்கும்.

3.சமாதானம் - Peace

சமாதானம் என்பது நாம் பாவம் செய்து மனம் நொருங்குண்டு தேவனிடம் மன்னிப்புக்கு கெஞ்சி, பயம் கலக்கம் நீங்கி, மன்னிப்பை பெற்றுக்கொண்ட நிச்சயத்தை அடையும்போது உண்டாகும் சலனமற்ற தெய்வீக அமைதி எனலாம்.

சமாதானத்தின் தேவன்:

2கொரிந்தியர்:13:11 - "சமாதானத்திற்கு காரணராகிய தேவன்"

நமது சமாதானத்தைக் கெடுக்க நினைக்கும் சாத்தானை நமது காலின் கீழ் நசுக்கிப்போடும் சமாதானத்தின் தேவன் அவர். (ரோமர்:16:20)

ஏசாயா:9:6 - "சமாதான பிரபு"

ஏசாயா:53:5 - "நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது."

யோவான்:14:27 - "தன்னுடைய சமாதானத்தை நமக்காக வைத்துப்போயிருக்கிறவர்"

நாம் பாவிகளாக இருக்கையில், சமாதானமின்றி வாழ்ந்து வந்தோம். நமது பாவங்களுக்கேற்ற தண்டனையை அடைந்த பின்னர் தான் நமக்கு சமாதானம் உண்டாகும். நாம் அனுபவிக்க வேண்டிய ஆக்கினையை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் சிலுவையிலே சிந்திய இரத்தத்தினாலே பிதாவிடம் நமக்கு சமாதானம் உண்டாகி இருக்கிறது.

கொலோசெயர்:1:20 - "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று."

நாம் செய்ய வேண்டியது:

மாற்கு:9:50 - "ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் "

இயேசு கிறிஸ்து மூலமாக ஆத்தும சமாதானத்தை பெற்று கொண்ட நாம் மற்றவர்களோடும் சமாதானமாக இருக்க வேண்டும்.

ரோமர்:12:18 - "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்"

ஆத்தும சமாதானமின்றி வாழ்கிறவர்களை நிலையான சமாதானம் அளிக்கும் சமாதான பிரபுவாகிய இயேசுவண்டை வழிநடத்தி அவர்களும் சமாதானம் பெற வழிசெய்வது நமது கடமையாகும்.

சமாதான வாழ்த்துதல்:

லூக்கா:10:5,6 - "ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்."

- ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும் போது அவ்வீட்டாரை சமாதானத்தை கூறி வாழ்த்த வேண்டும்.

ஏசாயா:52:7 - "சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன"

- எங்கும் சமாதானத்தை கூற வேண்டும்.

சமாதானத்தோடு வாழ்வதன் இரகசியம்:

1. கர்த்தருடைய வேதத்தை நேசிக்க வேண்டும். 

சங்கீதம்:119:165 - "உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை."

2. கர்த்தருடைய கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும்

ஏசாயா:48:18 - "ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்."

3. நன்மை செய்ய வேண்டும்

ரோமர்:2:10 - "முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்."

4. ஆவியின் சிந்தையுடையவர்களாக இருக்க வேண்டும்

ரோமர்:8:6 - "மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்."





தொடரும்.....