நவம்பர் 25, 2019

ஆவியின் கனிகள் - Spiritual Fruits part - I


    Image result for spiritual fruits images


திறவுகோல் வசனம்: கலாத்தியர்:5:22,23 - "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்"


கனிகள் 


உலகத்திற்கு பாவம் ஒரு கனி மூலம் தான் வந்தது. (ஆதியாகமம்:3:6)

கனிகளுள் நல்ல கனிகளும் உண்டு; கெட்ட கனிகளும் உண்டு. 

ஆதியாகமம்:1:29 - "பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;"

ஆதியாகமம்:2:17 - "ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்."

தேவன் இந்த உலகத்தை படைத்த போது சகலவித விருட்சங்களையும் ஆகாரமாக கொடுத்தார். ஆனால் ஒரே ஒரு கட்டளையை மட்டும் கொடுத்தார். தோட்டத்தின் நடுவில் இருக்கும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை மட்டும் சாப்பிட வேண்டாமென்று கட்டளையை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்தார்.

சில சமயம் நமக்கு நன்மையான ஈவுகள் கொடுக்கப்பட்டாலும் நாம் அதை தெரிந்துகொள்ளாமல், கெட்ட குமாரனை போல கீழான ஆசீர்வாதத்தையே நாடி போகிறோம்.

அதேபோல் தான் முதல் மனுஷி ஏவாளும் செய்தாள். தோட்டத்திலுள்ள எல்லா கனிகளையும் ருசித்தாலும் இந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை ருசித்து பார்க்க ஆசைப்பட்டாள். சில சமயம் கெட்ட கனிகளும் பார்ப்பதற்கு இனிமையாக தோன்றும். நம்மை அதன் பக்கமாக ஈர்க்கும். ஏவாளுக்கு பகுத்தறிய தெரியாததனால், பார்வைக்கு இன்பமாய் தோன்றினவுடன் அதை புசித்து பாவத்தை உலகத்திற்குள் கொண்டு வந்தாள். 

 நாம் கனி கொடுக்கும்படியாகவும் நமது கனி நிலைத்திருக்கும்படியாகவும் கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். (யோவான் :15:16 - "நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனி கொடுக்கும் படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.")

கர்த்தர் நம்மை இரட்சித்து கெட்ட கனிகளை நம்மை விட்டு அகற்றி, ஆவியின் கனிகளால் நம்மை ஆசீர்வதித்து அலங்கரித்திருக்கிறார். இந்த 9 கனிகளை குறித்து நாம் தியானிப்போம்.


1. அன்பு - Love


1கொரிந்தியர்:13 - ம் அதிகாரம் முழுவதிலும் அன்பை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. 


மூன்று வகையான அன்பு:


1. அகாபே - தேவ அன்பு


ரோமர்:5:8 - "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்."

தேவன் நம்மேல் காட்டும் அன்பு எப்படிப்பட்டது?

  • பாரபட்சமில்லாத அன்பு
  • வஞ்சனையில்லாத அன்பு
  • கபடற்ற அன்பு
  • களங்கமில்லாத அன்பு
  • நிபந்தனையில்லாத அன்பு


தேவன் நமக்கு கொடுத்த பிரதான கட்டளை: 

மத்தேயு:22:37-39 - "இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே."

தேவனிடத்திலும் பிறனிடத்திலும் அன்பாயிருக்க வேண்டுமென்பதே அவர் நமக்கு கொடுத்த கட்டளை.

தேவன் தன்னுடைய அன்பை எப்படி வெளிப்படுத்தினார்?

தேவன் நம்மேல் அன்பு வைத்ததினால் தான் தம்முடைய ஒரே பேரான குமாரனை பலியாகக் கொடுத்தார்.

1யோவான்: 4:8 - "தேவன் அன்பாகவே இருக்கிறார்."
1யோவான்:4:9 - "தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது."

யோவான்:3:16 - "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

1யோவான்:4:10 - "நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது."

கர்த்தர் நம்மேல் அன்பு வைத்ததினால் நாம் மரிக்கவேண்டிய இடத்தில் தம்முடைய குமாரனை கிருபாதார பலியாக கொடுத்தார். அவர் நம்மேல் அன்பு வைத்ததினால், நம்முடைய பாவங்களை பாராமலும், எண்ணாமலும் நம்மை தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். 

தேவன் புதிய ஏற்பாட்டு காலத்தில் மட்டுமல்ல; பழைய ஏற்பாட்டு காலத்திலும் அன்பாகவே இருந்தார். பழைய ஏற்பாட்டு காலத்தில் நியாயப்பிரமாணங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். 

ஆதாம் பாவம் செய்திருந்தும் அவனை கொல்லாமல் அவன் மேல் அன்பு வைத்து அவனுக்கு தோல் உடைகளை கொடுத்து ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார்.  இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொருமுறையும் கீழ்ப்படியாமையினால் தவறுகள் செய்தாலும் அவர்களை முழுவதுமாக அழிக்காமல் அவர்கள் மேல் அன்பு வைத்து அவர்களை மனந்திரும்ப வைப்பதற்காக ஒவ்வொரு காலத்திலும் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பினார். கடைசியில் தம்முடைய ஒரே பேரான குமாரனையும் அனுப்பினார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தம்முடைய அன்பை தேவன் வெளிப்படுத்திக்கொண்டே தான் இருந்தார். ஆனால் ஜனங்கள் அதை உணரவில்லை.

தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது - நாம் தேவனிடமும் மற்றவர்களிடம் அன்புகூரவேண்டுமென்பதே.

இயேசு தான் மனிதனாக வாழ்ந்த நாட்களில் அன்பையே வெளிப்படுத்தினார். கடைசி நாட்களில் மனிதர்களின் அன்பு மாறி போகும்.மாறாத ஒரே அன்பு - இயேசுவின் அன்பு மட்டுமே.

2. எராஸ் - கணவன் - மனைவி அன்பு


மத்தேயு:19:4-6 - "அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்."

எபேசியர்: 5:21-33 - கணவன் மனைவி இல்லற வாழ்க்கையில் எப்படி இசைந்து இருக்க வேண்டுமென்பதை கற்றுக்கொடுக்கிறது.

எந்த ஒரு காரணத்தாலும் பிரிவினை வரக்கூடாது. பிரிவினை என்பது பிசாசினால் கொண்டு வரப்படுகிறது. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டால் பிசாசுக்கு இடங்கொடுக்காமல், தேவ அன்பு வெளிப்படும்படியாக குடும்பத்தில் சமாதானம் நிலவும்படியாக ஜெபத்தினால் குழப்பங்களை தீர்க்கவேண்டும்.

கணவன் மனைவிக்குள்ளான அன்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?


  • பிரிவினையில்லா அன்பு
  • கறைதிரையில்லா அன்பு
  • கீழ்ப்படிதலுள்ள அன்பு
  • பயபக்தியுள்ள அன்பு


தவறு செய்வதில் ஒருமனப்பட்ட கணவன்-மனைவி:

இந்த உலகில் பாவம் வந்ததே ஒரு குடும்பத்தினால் தான். கணவன் தவறு செய்தால் மனைவியும், மனைவி தவறு செய்தால் கணவனும் கண்டிக்க வேண்டும்.


  • ஆதாமும் ஏவாளும் இந்த காரியத்தை செய்ய தவறி, இருவரும் பாவத்தை செய்தனர். பழத்தை சாப்பிட்டு, தவறு செய்தனர். தேவன் அவர்களை கேட்கும் போது ஒருவர்மேல் ஒருவர் குற்றஞ்சாட்டினார்கள். பிசாசு அவர்களிருவருக்கிடையில் பாவத்தை கொண்டு வந்து கீழ்ப்படியாமையை கொடுத்து பின்னர் பிரிவினையை கொண்டு வர முயற்சி செய்தான். அனனியா சப்பீராளும் தவறு செய்வதில் ஒருமனப்பட்டிருந்தார்கள். 
  • மனைவி குழியில் விழுந்துவிட்டாள்;உடனே கணவனும் சேர்ந்து குழியில் குதித்து விட்டால் ஏதாவது பிரயோஜனம் உண்டாகுமா? விழுந்த மனைவியை தூக்கியெடுத்து காப்பாற்றும் வழிகளை முயற்சிக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள கணவனின் கடமை. ஆனால் ஆதாமோ இந்த காரியத்தில் பொறுப்பற்ற கணவனாக இருந்துவிட்டார்.
  • தேவன் ஒன்றை சொல்லியிருக்க, தன் மனைவி அதற்கு முரணானதை சொல்ல - ஆதாம் தேவ வார்த்தையை விட்டுவிட்டு தன் மனைவியின் வார்த்தைக்கு செவிகொடுத்தான்.நல்லதும் பிரயோஜனமான காரியங்களை சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மனைவியின் ஆலோசனை தேவனுக்கோ, ஆவிக்குரிய வளர்ச்சிக்கோ முரண்பாடாக இருந்தால் கணவன் தன் மனைவிக்கு புத்திசொல்ல வேண்டும். இதற்காக தான் வேதாகமத்தில் ஆதாம் - ஏவாள் தோட்டத்தை இழந்ததும், அனனியா - சப்பீராள் ஜீவனையே இழந்ததும், ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் இஸ்மவேல் என்னும் நீங்காத வேதனை உருவானதும் நமக்கு திருஷ்டாந்தங்களாக எழுதப்பட்டுள்ளது.
  • ஆவிக்குரிய குடும்பத்தில் தவறான காரியத்தை தூண்டும் நபரை மற்றவர் வேத வசனம் மூலம் எச்சரிக்க வேண்டும். ஆவிக்குரிய குடும்பங்களை தகர்ப்பதற்கு பிசாசு பல முயற்சிகள் எடுத்து வருகிறான். தேவ ஆவிக்குள் ஒருமனமாய் வாழும் குடும்பங்களை உடைப்பதற்காக கணவன் - மனைவி இவர்களுள் யாரோ ஒருவருக்குள் இடம்பிடித்து தன் ஆலோசனையை விதைக்க துடிக்கிறான்.பிசாசு ஒரு குடும்பத்திற்குள் பிரிவினையை கொண்டு வர முதலாவது அவர்களுக்குள் தொடர்பை துண்டிக்க முயற்சி செய்கிறான். பல நாட்கள் பேசாமலிருக்கும்படி செய்து விடுகிறான். ஒரே வீட்டில் இருப்பார்கள்;ஆனால் பேசிக் கொள்ளாமல் இருப்பார்கள். முடிவில் விவாகரத்து செய்து விடுவார்கள். பிரிவினைக்கு இடங்கொடுக்காமல் தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படிய வேண்டும்.
  • எனவே தவறு செய்ய தூண்டும் ஆலோசனை வரும்போது தேவ ஆவியின் ஒத்தாசையுடன் அதை முறியடித்து உண்மையும் நன்மையுமாவைகளுக்கு ஒருமனப்பட வேண்டும்.

3. பிலேயா - சகோதர அன்பு


எபிரேயர்:13:1 - "சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது."

சங்கீதம்:133:1 - "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?"

1யோவான்:4:20,21 - "தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்."

நாம் தேவனிடத்தில் அன்பு கூருவது போல  சகோதரனிடத்திலும் அன்பு கூரவேண்டுமென்பதே கற்பனை. 

யோசேப்பை அவனது சகோதரர்கள் பகைத்து வெறுத்து ஒதுக்கினார்கள். அடிமையாக விற்றுப்போட்டார்கள். ஆனாலும் அவர்களை அவன் வெறுக்காமல் அன்பு செலுத்தினான். அவனிடம் அவர்கள் உதவிக்காக வந்து நின்ற போது அவர்கள் தனக்கு செய்த அநேக கெடுதியினிமத்தம் பழி வாங்காமல் அவர்கள் மேல் அன்பாக இருந்தான். அவனது சகோதரர்கள் யோசேப்பு பெரிய ஸ்தானத்திலிருப்பதினால் தங்களை பழிவாங்குவான் என்று நினைத்து மன்னிப்பு கேட்டார்கள். யோசேப்பு சகோதர அன்பினால் நிறைந்தவனாய், அவர்களுக்காக அழுது அவர்களிடம் பட்சமாய் பேசினான். இது தான் சகோதர சிநேகம்! (ஆதி:50:19-21)

தொடர்ந்து ஆவியின் கனிகளைக் குறித்து தியானிப்போம் அடுத்த பதிவில்....