நவம்பர் 20, 2019

வெளியரங்கமாய் பலனளிக்கும் உன் பிதா

மத்தேயு:6:18 - "அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்."

நம்முடைய பிதா எப்படிப்பட்டவர்?

1. அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா - Father who see the secret
2. வெளியரங்கமாய் பலனளிக்கும் பிதா - Father who reward openly

சங்கீதம்:44:21 - "தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே."

மாற்கு:4:22 - "வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை."

தேவன் அந்தரங்கத்தில் எதை பார்க்கிறாரோ அதின் அடிப்படையில் வெளியரங்கமாய் பலனளிப்பார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தரங்க வாழ்க்கை (Secret Life), வெளியரங்க வாழ்க்கை (Open life) என்று இரண்டு வாழ்க்கை உள்ளது. உலகம் நம் வெளியரங்க வாழ்க்கையை மட்டுமே அறியும். தேவன் ஒருவரே நம் அந்தரங்க வாழ்க்கையை அறிவார். 

மத்தேயு:26:14 - 16 - "அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்."

யூதாஸ் காரியோத்து இயேசுவின் சீடர்களில் ஒருவன். அவன் இயேசுவோடு இணைந்து பல இடங்களுக்கும் சென்றும்,  அவருடைய போதனைகளை கேட்டுமிருக்கிறான். ஆனாலும், அவன் வெளியரங்கமாக இயேசுவுக்கும் அவர் போதனைகளுக்கும் ஆதரவளிப்பவனாக தெரிந்தாலும் அவன் அந்தரங்கத்தில் எதிர்த்து கொண்டிருந்தான்.

வெளியரங்க வாழ்க்கை - இயேசுவின் சீஷன்
அந்தரங்க வாழ்க்கை - இயேசுவை காட்டிக்கொடுக்கும் எண்ணமுடையவன் (பணஆசை உள்ளவன்)

அவன் அந்தரங்க வாழ்க்கையில் எப்படி  இருந்தானோ அதையே செயல்படுத்தினான். முடிவில் தான் செய்தது தவறு என்று உணர்ந்தான். குற்ற மனசாட்சி குத்தியது. ஆனால் மன்னிப்பு கேட்காமல் தற்கொலை செய்து கொண்டான். ஒருவேளை தன் அந்தரங்க வாழ்க்கையை குறித்து மன்னிப்பு கேட்டு மனந்திரும்பியிருந்தால் அவன் மேலான ஆசீர்வாதம் பெற்றிருப்பான்.

மத்தேயு:26:74,75 - "அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்."

பேதுரு இயேசுவின் சீஷர்களில் ஒருவன். அவன் இயேசுவோடு நெருங்கி இருந்த சீஷர்களில் ஒருவன். அவன் இயேசுவின் போதனைகளை கேட்டு அவரை விசுவாசித்தான்.அவன் வெளியரங்க வாழ்க்கை பரிசுத்தமானதாக விசுவாசம் நிறைந்ததாக இருந்தது. ஆனாலும் சில நேரங்களில் தவறி விழுந்துவிடுவான். அவன் இயேசுவை மறுதலித்தாலும், மனங்கசந்து அழுது ஒப்புரவாகினான். பரிசுத்த ஆவியானவர் அவனை நிறைத்தார். பெரிய அப்போஸ்தலனாக மாற்றி, முதல் பெந்தேகொஸ்தே சபையை நிறுவ செய்தார். 

தேவன் நம் அந்தரங்க வாழ்க்கையை பார்த்து நம் வெளியரங்க வாழ்க்கையை ஆசீர்வாதத்தினால் நிறைப்பார். ஆகவே நாம் அந்தரங்க வாழ்க்கையில் எப்படி இருக்கிறோம் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

1. யாரும் காணாத இடத்தில் எப்படி இருக்கிறோம்?

ஆதியாகமம்:39:8,9 - "அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்."

யோசேப்பு யாரும் காணாத இடம் என்று பாவம் செய்திருக்க முடியும். ஆனால் தன்னை காண்கிற தேவன் ஒருவர் இருக்கிறார்; அவருக்கு விரோதமாக பாவம் செய்ய கூடாது என்ற தெளிவுடன் இருந்ததினால் பாவம் அவனை மேற்கொள்ள முடியாமல் போனது. அவன் அந்தரங்க வாழ்க்கை தெய்வ பயத்துடன் கூடிய பரிசுத்தத்துடன் காணப்பட்டது. அவன் வெளியரங்க வாழ்க்கை ஒரு அடிமையின் வாழ்க்கையாக காணப்பட்டது.  அவனது பரிசுத்த வாழ்க்கையை பார்த்த தேவன் அவனை பார்வோனுக்கு அடுத்த அதிபதியாக மாற்றி அவன் அடிமையாக இருந்த தேசத்தில் அவனை உயர்த்தினார்.  

அந்தரங்க வாழ்க்கை - பரிசுத்த ஜீவியம்
வெளியரங்க வாழ்க்கைகௌரவமான அடிமை

வெளியரங்கமான பலன்: 

அடிமையாக போன தேசமாகிய எகிப்தின் இரண்டாம் அதிபதியாக மாற்றம்

2. வெற்றி அடைந்திருக்கும் போது எப்படி இருக்கிறோம்?

நெகேமியா:9:25,26 - "அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்."

இஸ்ரவேல் ஜனங்களை குறித்து நெகேமியா சொல்லுகிற காரியத்தை இங்கே பார்க்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் அடிமையாக எகிப்து தேசத்தில் பாடனுபவித்து தாங்க முடியாமல் தேவனை நோக்கி மன்றாடினார்கள். தேவன் அவர்களை கண்ணோக்கி பார்த்து, அவர்களை மோசேயை கொண்டும் யோசுவாவை கொண்டும் நடத்தி வந்து கானானை சுதந்தரிக்க செய்தார். அவர்களுக்கு தேவையான எல்லா காரியங்களையும் கொடுத்தார். 

யாத்திராகமம்:2:23-25 - "இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்."

அவர்கள் எல்லாவற்றையும் பெற்று கொண்டு திருப்தியாக இருக்கையில், அவர்கள் தேவனை மறந்தார்கள். அவர்கள் கீழ்ப்படியாமற்போனார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தை தூக்கி எறிந்தார்கள். கண்டித்த தீர்க்கதரிசிகளை கொலை செய்தனர்.தேவனுக்கு கோபமூட்டுகிற காரியத்தை செய்தனர். கிடைத்த பலன் என்ன தெரியுமா? அவர்கள் மீண்டும் மீண்டும் அடிமைத்தனத்துக்கு போனார்கள். ஆசீர்வாதத்தை இழந்தார்கள். சுதந்தரித்த பொருட்களை இழந்து போனார்கள். காரணம், அவர்கள் புசித்து திருப்தியாக இருக்கையில் (வெற்றி அடைந்திருக்கையில்) "தேவனை மறந்தார்கள்". 

நீ புசித்து திருப்தியாயிருக்கையில்.... தேவனை மறவாதே! அவர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி சொல்லு!!!

சங்கீதம்:103:1,2 - "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே."

தாவீது தான் ராஜாவாக மாறின போதிலும் தேவனை மறக்காமல், அவரை அனுதினமும் நினைத்து அவர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி சொன்னான். தான் ஆடு மேய்க்கிறவனாக இருந்த காலத்தில் தேவனை எப்படி துதித்து ஆராதித்து அவருக்கு நன்றி செலுத்தி வந்தானோ, அதே போல அவன் இராஜாவான பிறகும் தான் செய்து வந்தபடியே கர்த்தருக்கு நன்றி செலுத்தினான். அவன் புசித்து திருப்தியாக இருக்கையில் இஸ்ரவேல் ஜனங்களை போல தேவனை மறக்காமல் அவர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி செலுத்தினான். அவன் தேவனை நினைத்ததினால், அவனுடைய விளக்கு என்றைக்குமே அணைந்து போகாமல் எரிந்து கொண்டேயிருக்கும் என்று வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்தார்.

இன்று நீங்கள் யோசித்து பாருங்கள். நீங்கள் வெற்றி அடைந்திருக்கும்போது, எப்படி இருக்கிறீர்கள்? இஸ்ரவேல் ஜனங்களை போல தேவன் செய்த நன்மையை மறக்கிறீர்களா அல்லது தாவீதை போல நன்றி சொல்லுகிறீர்களா? உங்களை உய்த்து ஆராய்ந்து பாருங்கள்.

நீங்கள் அந்தரங்க வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமாக நடந்து கொண்டால், வெளியரங்கமாக பலனளிப்பார். வெளியரங்கமான பலனை பெற்று ஆசீர்வாதமாக வாழ கர்த்தர் உங்களுக்கு கிருபையளிப்பாராக! ஆமென்!