உங்களில் பிதாவின் அன்பில்லை
திறவுகோல்
வசனம்: 1யோவான்: 2:15 – “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்;
ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை”
உலகத்தில் இருப்பவனுக்குள் பிதாவின் அன்பு வர வேண்டும்; இருக்க
வேண்டும்; ஆனால், பிதாவின் அன்பில் உள்ளவனுக்குள்
உலகம் வந்துவிடக் கூடாது.
“பிதா” என்ற சொல் “மேலான நிலை” மற்றும் “உயர்ந்த நிலை”ப்பாட்டைக்
குறிக்கிறதாயிருக்கிறது. மனிதன் அறிந்திராத, எதிர்பார்ப்புக்கும் மேலான அன்பும் பண்பும்
உடையவர்தான் பிதா என்கிற பிதாவாகிய தேவன். அவரது அன்பில் பழுதில்லை; மாயமில்லை; வேறுபாடில்லை;
குறைவில்லை; அப்படிப்பட்டவர்தான் பிதாவாகிய தேவன்.
அப்படிப்பட்டவருடைய பிள்ளைகளான நமக்குள்
பிதாவின் அன்பு இருக்க வேண்டும் என நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாஞ்சை. பிதாவின்
அன்பில் நாம் திளைத்தால் மட்டும் போதாது; அந்த அன்பில் நிலைபெற வேண்டும்.
எனவே, பிதாவின் அன்பு நமக்குள் இருக்க வேண்டும் என வேதம் வலியுறுத்துகிறதைப்
பார்க்கிறோம். பிதாவின் அன்பு நமக்குள் இருக்க வேண்டுமானால், அந்த பிதாவின் அன்பு எப்படிப்பட்டது
என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பிதாவின் அன்பை அறியாமல் பிதாவின் அன்பில் நிலைத்திருப்பது
எப்படி?
பிதாவின் அன்பு எப்படிப்பட்டது?
1.
வெறுமையாக
அனுப்பாதவர்:
முற்பிதாக்களில் கடைசி பிதாவாகிய யாக்கோபு பிதாவின் அன்பு எப்படிப்பட்டது
என்பதை விவரிப்பதை கவனியுங்கள்: ஆதியாகமம்: 31:42 – “என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின்
தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால்,
நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்;
தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று இராத்திரி உம்மைக்
கடிந்துகொண்டார் என்று சொன்னார்”.
இந்த உலகம் நம்மை வெறுமையாக அனுப்பி விடவே பார்க்கும். ஆனால்,
பிதா நம்மை ஒருபோதும் வெறுமையாய் அனுப்பி விட மாட்டார். வெறுங்கையாய், வெறும் மடியோடு
வந்த ரூத்தை போவாஸ், வெறும் மடியோடு அனுப்பிவிடவில்லை. போர்வையை விரி என்று சொல்லி கோதுமையை மடி நிறைய அளந்து போட்டு அனுப்பினான்
(ரூத்: 3:15). தேவனாகிய கர்த்தர் தம்மிடம் வருகிற தம்முடையவர்களை ஒருபோதும் வெறுமையாய்,
வெறுங்கையாய் அனுப்பவே மாட்டார்.
அதுமட்டுமல்ல, நமக்கு தர வேண்டியதை, முறையாக வர வேண்டியதை, பெற
வேண்டியதைக்கூட, தரவும், பெறவும் கூடாதபடிக்கு மறுத்து விட பார்க்கும். நமக்குரியதை
பலவேளைகளில் போராடித்தான் பெற வேண்டியதாயிருக்கிறது. இவ்வுலகம் இப்படித்தான் தேவஜனத்திற்கு
எதிராக இருக்கிறது. இருந்தாலும், நாம் ஆராதிக்கும் தேவனாகிய கிறிஸ்து நமக்காக இரத்தம்
சிந்தி ஜீவனைக்கொடுத்து நம்மை மீட்டெடுத்தவர், நமக்குரியதையும், வேண்டியதையும் நமக்கு
நிச்சயம் தருவார். ஆபிரகாமின் ஆசீர்வாதங்களையும் இயேசுகிறிஸ்து மூலமாய் நமக்கு தந்தருளியிருக்கிறார்.
2.
பட்டயத்துக்கு
தப்புவிப்பவர்:
யாத்திராகமம்: 18:4 – “என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று
பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் …” எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த
ஜனங்களை விடுவிக்க மோசே கடந்து போனபோது, பார்வோனின் கரம் அவன்மேல் மேற்கொள்ளாதபடிக்கு,
பிதாவாகிய தேவன் மோசேயை பார்வோனின் பட்டயத்துக்கு தப்புவித்தார் என்று வாசிக்கிறோம்.
3.
நெருக்கப்படுகிற
காலங்களில் வெளிப்படுகிறவர்:
1சாமுவேல்: 2:27 – “… உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின்
வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு
வெளிப்படுத்தி,”
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் பார்வோனின் கொடுமையை
தாங்கக்கூடாமல் தவித்தபோது பிதாவாகிய தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்பட்டார். மனம்
இரங்கினார். மோசேயை அனுப்பி வைத்தார்.
4.
தேடினால்
தென்படுகிறவர்:
1நாளாகமம்: 28:9 – “என் குமாரனாகிய சாலமோனே, நீ உன் பிதாவின்
தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா அருதயங்களையும்
ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர்
உன்னை என்றைக்கும் கைவிடுவார்”.
5.
ஞானம்
தருகிறவர்:
6.
பேசவும்,
ஜெபிக்கவும் உதவுபவர்:
மத்தேயு: 10:20 – “பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின்
ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்”
ரோமர்: 8:26 – “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு
உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால்,
ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்”.
நாம், பேச அறியாதிருக்கும்போதும், நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள
வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபோதும், பிதாவின் ஆவியானவரை அனுப்பி நம்மை பேசவும்,
ஜெபிக்கவும் வைக்கிறார். உதவி செய்கிறார். நமது பெலவீனங்களில் பெலன் தருகிறார்.
7.
அதைரியத்தை
போக்குபவர்:
மத்தேயு: 10:28-31 – “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல்,
சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும்
நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை
விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும்
தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்;
அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”.
8.
நீதிமான்களை
பிரகாசிக்கச் செய்கிறவர்:
மத்தேயு: 13:43 – “அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே
சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்…”
9.
ஒருவனாகிலும்
கெட்டுப் போவது பிதாவின் சித்தமல்ல:
மத்தேயு: 18:14 – “இவ்விதமாக சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்
போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல”
10. கடைசிநாளில் நம்மை உயிர்த்தெழுச் செய்வதே பிதாவின்
சித்தம்:
யோவான்: 6:39 – “அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து
போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது”.
11. குமாரனால் மீட்கப்படும்படி அருளை தருகிறவர்:
யோவான்: 6:65 – “ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு
வரமாட்டான் …”
யோவான்: 6:44 – “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால்
அவன் என்னிடத்தில் வரமாட்டான்”.
12. பிதாவின் கையிலிருந்து பறிக்க முடியாது:
யோவான்: 10:29 – “அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும்
பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக் கொள்ள ஒருவனாலும்
கூடாது”.
13. அநேக வாசஸ்தலங்களை நமக்காக வைத்திருக்கிறவர்:
யோவான் 14:2 – “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு…”
14. பரிசுத்த ஆவியானவரை நமக்காக கொடுத்திருக்கிறார்:
அப்போஸ்தலர்: 1:5 – “என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம்
நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்”.
நாம் மீட்கப்படும்படிக்கு முத்திரையாக பரிசுத்தாவியானவரை பிதாவாகிய
தேவன் நமக்கு தந்திருக்கிறார் (எபேசியர்: 4:30).
15. நாம் நித்தியஜீவனை அடையும்படிக்கு, தம் ஒரேபேறான
குமாரனை தந்தருளினார்:
யோவான்:
3:16 – “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்
நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”.
1யோவான்:
4:8-10 – “… தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத்
தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய
பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதாலே அன்பு
உண்டாயிருக்கிறது”.
பிதாவின்
அன்பு பழைய ஏற்பாட்டில் பலவிதங்களில் பல பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஆனால், எவ்வகையில் அவை வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், மேலே கண்ட (யோவான்: 3:16 / 1யோவான்:
4:8-10) இவ்விரு வசனங்களில் வெளிப்படுத்தப்பட்டதைப்போல சிறப்பாக பிதாவின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய
வசனங்கள் வேறெதுவுமில்லையென்றே நான் கருதுகிறேன்.
ஆம்
பிரியமானவர்களே!
மீண்டும்
ஒருமுறைகூட இந்த வசனங்களை பொறுமையோடே வாசித்துப் பாருங்கள்.
“தேவன்,
தம்முடைய ஒரேபேறான குமாரனை … தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”
“தம்முடைய
ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால்
தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது”
“நாம்
தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல”,
“அவர்
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத்
தம்முடைய குமாரனை அனுப்பினதாலே அன்பு உண்டாயிருக்கிறது”.
பிதாவாகிய
தேவன் ஆதாம் ஏவாளிடம் தாம் வாக்குப்பண்ணினபடியே, தமது ஒரே பேறான குமாரனை இவ்வுலகிற்கு
பலியாக ஒப்புக் கொடுத்தார்.
நம்மில்
எத்தனைபேர் இவ்விதமாய் ஒப்புக் கொடுக்க முன்வர முடியும்?
நான்
நான் என்று சொல்லிக்கொள்ள முடியும். ஆனால், அந்த சூழ்நிலை வரும்போதுதான் நமது மனவலிமை
எப்படிப்பட்டதென்று நமக்கே தெரிய வரும்.
அப்படிப்பட்ட
சூழ்நிலை ஆபிரகாமுக்கு வந்தபோது, தனது நேசகுமாரனை பலிகொடுக்க எவ்விதமான மனவலிமை பெற்றவனாய்
இருந்தான் என அவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிதாவின்
அன்பு எப்படிப்பட்டதென்று பாருங்கள்.
ரோமர்:
5:7,8 – “நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத்
துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”.
இப்படிப்பட்ட
பிதாவின் அன்பிற்கு பாத்திரவான்களாகிய நீங்கள், பிதாவின் அன்பை விட்டு உலகத்தில் அன்பு
கூறுவது தகுமோ என்பதை நீங்களே நிதானித்துப் பாருங்கள். உலகில் உள்ள அன்பு அனைத்தும்
மாறிப்போகும்; மறைந்தும் போகும். ஆனால், பிதாவின் அன்பு ஒருநாளும் மாறிப்போகாது.
ரோமர்:
8:32 – “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்
கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?
உலகில்
உள்ள அன்பு எப்படிப்பட்டதென்று நீங்கள் அனுபவப்பூர்வமாக அறிந்திருப்பீர்கள். உலகில்
காட்டப்படும் அன்பு மாயமானது, நிலையற்றது, பாரபட்சமுள்ளது என்பதை அறிவீர்கள்.
உலகில்
கிடைத்திராத அன்பு என் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு தர விரும்புகிறார். தேவனுடைய அன்பை
நீங்கள் அறிந்திராத முன்பே என் தேவன் உங்களுக்காக யாவையும் செய்து முடித்தவராய், இப்போது
இருகரம் நீட்டி உங்களை அன்போடு அழைக்கிறார். அழைப்பை ஏற்பீர்களா?
அன்பு
காணா உலகத்தில் அன்பைத்தேடி அலைகின்றீர்களா? மெய்யான அன்பு காட்ட ஒருவர் உண்டு. அந்த
அன்பின் தேவன் தமது ஒரேபேறான தமது நேச குமாரனையே நமக்காக பலியாக தந்து, நம்மை மீட்கும்படி,
அன்போடு உங்களை அழைக்கிறார்.
அன்பை
அறிந்த நீங்கள் தேவனது மெய்யான அன்பை விட்டு விலகி விடாதிருங்கள். உலகம் காட்டும் மாயையான
அன்பில் விழுந்து விடாதிருங்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!