பிப்ரவரி 16, 2017

மனுஷர் வசனமா? தேவவசனமா?

Image result for 2Thess:2:13

“மனுஷர் வசனமாகவா? தேவவசனமாகவா?”

திறவுகோல்வசனம்: 1தெசலோனிக்கேயர்: 2:13 – “ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்டபோது அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக் கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது”

முதலாவது, தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டீர்கள்

இரண்டாவதாக, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாக ஏற்றுக் கொண்டீர்கள்

மூன்றாவதாக, மெய்யாகவே அது தேவவசனந்தான் என்று விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது

தேவவசனத்தை சபையில் உள்ள தேவஜனங்கள், தேவஊழியர்கள் மூலமாய் கேள்விப்படுகிறார்கள். வசன விளக்கங்களை, தேவசெய்தியாக கேட்கிறார்கள். கர்த்தருடைய வசனங்களை தேவார்த்தையாக பிரசங்கமாக தேவஊழியர்கள் மூலம் கேட்கிறார்கள்.

அந்த பிரசங்கமானது தேவஜனங்களுக்கு தேவ செய்தியாக வழங்கப்படும்போது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாகவே ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளையும் ஏற்றுக் கொண்டதினால் தேவஊழியர்கள் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

பேசுகிறது ஒரு மனிதன் என்றாலும், அவர் ஒரு தேவ அழைப்பை பெற்ற முழுநேர ஊழியர் என்பதினால், அவர்மேல் உள்ள கர்த்தருடைய அபிஷேகத்தைக் கண்டதினால், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் தேவ வார்த்தைகளாக விசுவாசத்தோடு ஏற்றுக் கொண்டதினால், அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள்ளே பெலன் செய்கிறதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்கின்றீர்கள். வெளியரங்கமான அற்புதங்கள் நடக்கும்போது அவை அடையாளமாக மாறுகின்றன.

2கொரிந்தியர்: 4:5 – “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்”.

அப்போஸ்தலனாகிய பவுல் கூறும்போது, “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்…” என்கிறார். அதாவது, ஒரு தேவஊழியர் தன் சுயபிரஸ்தாபத்தையோ, பேர் பிரஸ்தாபத்தையோ சுய தம்பட்டம் செய்யாமல் … “… இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்” என்கிறார்.

2தீமோத்தேயு: 3:10,11 – ல் சொல்லும்போது, “நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும், … துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்…” என்று தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார்.

ஒரு ஊழியர் தன் வாழ்வில் ஏழு காரியங்களை வெளிப்படுத்தி வாழ்ந்திட வேண்டும். வாழ்வில் எதிர்வரும் வெவ்வேறான சூழ்நிலைகளில், சாதக மற்றும் பாதகமான சூழலில், நம்மைப் பின்பற்றுபவர்களுக்கும், நம்மை காண்கிறவர்களுக்கும் முன்பாக எப்போதும் இவ்வேழு காரியங்களை சுபாவங்களை வெளிப்படுத்தி தங்களை தேவஊழியர் என ரூபிக்க தவறிவிடக்கூடாது.

தேவஊழியரின் வாழ்வில் எதிர்வரும் அனுபவங்களே நற்சாட்சியின் செய்தியாக மாறுகிறது. அதுவே தேவனுக்கு மகிமையும், தேவஜனங்களுக்கு சாட்சியாகவும், வாசிக்கப்படும் நிரூபங்களாகவும் மாறுகிறது.


பவுலிடம் காணப்பட்ட ஏழு சுபாவங்கள்:


1.   பவுலின் போதகம்
   2.   அந்த போதகத்தின்படியான நடக்கை
   3.   திசை மாறா நோக்கம்
   4.   விசுவாசம்
   5.   கிறிஸ்துவின் மேலும், வெறுப்பவர் மேலும் மாறாத அன்பு
   6.   உபத்திரவத்திலும், நம்பிக்கையிலும் பொறுமை
   7.   கிறிஸ்துவுக்காக படும் துன்பங்கள் பாடுகள்

எச்சூழலிலும் இந்த ஏழு காரியங்களை இழந்துவிடக் கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் இதை வெளிப்படுத்தி தங்களை தேவமனுஷர் என்றும், தேவஊழியர் என்றும் நிருபிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களே மெய்யான தேவமனிதராவார். அப்படிப்பட்டவர்களே மெய்யான ஊழியர். பிரசங்கிக்க தகுதியுடையவர்.

பவுலின் இந்த ஏழு சுபாவங்கள் பலபேரை கவர்ந்திழுத்தது இரட்சிப்பிற்குள் மட்டுமல்ல… முழுநேர ஊழியத்திற்கும், அதோடுகூட பவுலைப்போலவே அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் மாற்றச் செய்தது. தன் வழிகளில் மாறுபாடின்றி வாழவும், ஊழியம் செய்யவும் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டவன் அப்.பவுல். அதனால் பலபேர் மீட்கப்படவும், பலபேர் கட்டியெழுப்பப்படவும், பல பட்டணங்கள், பல தேசங்கள் மீட்படையவும் மறுரூபமாகவும் முடிந்தது.

ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்வு மாறினால் பலபேர் மாறுவார்கள்; பல பட்டணங்கள் மறுரூபமாகும். பல சபைகள் கட்டப்படும். அதற்கு அப்.பவுலைப் போன்றதொரு அர்ப்பணிப்பும், மேலே கண்ட ஏழு சுபாவங்களும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது, ஜனங்கள் நாம் பேசும்போது, அதை மனுஷர் வார்த்தையாக அல்ல; தேவவார்த்தையாக தேவவசனமாக ஏற்றுக் கொள்வார்கள். அப்பொழுது அந்த வசனங்களை அவர்கள் விசுவாசிக்க ஆரம்பிப்பார்கள். அப்பொழுது நாம் சொன்ன அந்த தேவவசனம் அவர்களுக்குள்ளே பெலனாய் விளங்கும்; அற்புதங்கள் நடக்கும். நம்மை தேவமனுஷனாக பார்ப்பார்கள்.

ஊழியர்களின் வாழ்வை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. 20, 25 வருடங்களுக்கு முன்பு உள்ள கிறிஸ்தவ உலகம் வேறு; இன்றைக்கு உள்ள கிறிஸ்தவ உலகம் வேறு என்பதை ஊழியர்கள் உணரவேண்டிய தருணம் வந்து விட்டதென்று நினைக்கிறேன். எப்படிப்பட்ட ஊழியனையும் ஏற்றுக் கொள்ளும் காலம் இதுவல்ல. சரியற்ற ஊழியரை புறக்கணிக்க தவறுவதில்லை. நற்செய்திகளைவிட துர்ச்செய்திகள் வெகுவேகமாக பரவக்கூடிய தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் வந்திருக்கிறோம்.

எனவே, நமது போதகம் மேம்பட்டதாயும், வேதாகம விளக்கங்கள் தரமுள்ளவையாகவும், ஆத்துமாவை ஊன்றக் கட்டுகிறதாயும், உயிர்ப்பிக்கிறதாயும், அனல்மூட்டி எரிய விடுகிறதாயும், ஆழமான சத்தியங்களை வெளிக்கொணருகிறதாயும் காணப்பட வேண்டும். அதற்கு ஜெபஜீவியம் குறைவின்றி, பழுதின்றியும், வேதத்தின் தியானம் கிரமமாகவும், ஆவியானவரின் வழிநடத்துதலை வெளிப்பாடுகளை பெற தகுதியையும் பரிசுத்தத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். போதக சமர்த்தனாக விளங்க வேண்டும்.

போதக சாமார்த்தியத்தோடு பிரசங்கித்தால் மட்டும் போதாது. பிரசங்கித்திற்கேதுவான மற்றும் பிரசங்கித்ததின்படியான நடக்கை நம்மிடம் காணப்பட வேண்டும். பிரசங்கம் எவரும் செய்திட இயலும். ஆனால், பிரசங்கித்தின்படி நடப்பது மிக கடினமான காரியம். நடப்பதின்படியே பிரசங்கிப்பதே நலம். அதுவே அனைவராலும் வரவேற்கப்படக்கூடியது. பின்பற்றக்கூடியது. நம்பகமானது.

நமது அழைப்பும் அபிஷேகமும் இலக்கை நோக்கி ஒரே நோக்கத்தோடு செல்ல வேண்டும். நம்மை எதற்காக அழைத்தாரோ, அதை அடையும்படி அபிஷேக வல்லமையை தேவன் கொடுத்துள்ளார். அந்த அபிஷேகத்தோடு நோக்கம் தவறாமல், குறிக்கோளை நோக்கி ஆசையாய் பின் தொடர வேண்டும்.

திசை மாறா நோக்கம் செயல்படுத்த கர்த்தர் மேல் நாம் கொண்ட விசுவாசம் மாறாததாயிருக்க வேண்டும். இருந்தாலும் இல்லாவிட்டாலும், விடுவித்தாலும் விடுவிக்காமற்போனாலும், கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும், நேசித்தாலும் நேசிக்கா விட்டாலும், இன்பமானாலும், துன்பமானாலும், வாழ்வானாலும் சாவானாலும், பஞ்சமோ பசியோ, எதுவானாலும் நாம் கிறிஸ்துவின்மேல் வைத்த விசுவாச உறுதியில் நிலைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட பாதைகளில் மனம் தளராது விசுவாச ஓட்டத்தில் சீராக பயணித்து ஜெயம் பெறும்பொழுது, அதை கண்டவர்கள் பலபேர் விசுவாசித்து பின் தொடருவார்கள்.

தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பு மட்டும் போதும் என தேவன் சொல்லவில்லை. உன்னை நீ நேசிப்பதுபோல பிறனையும் நேசி என்றார் நமது ஆண்டவர் இயேசு. நேசிப்பவரையே நேசிப்பது அன்பல்ல; உன்னை வெறுப்பவர்களையும் நேசிப்பதுதான் உண்மையான தேவ அன்பு. அந்த அன்பை நம் ஊழியங்களில் வெளிக்காட்டும்போதுதான் ஆவியானவரின் வல்லமை பரிபூரணமாக நம்மிடம் கிரியை செய்ய ஆரம்பிக்கும். 

காட்டிக் கொடுப்பவர், வஞ்சிப்பவர், ஏமாற்றுபவர், வீழ்த்தத் துடிப்பவர், நன்மைக்கு தீமை செய்பவர், காரணமின்றி பகைப்பவர், வேண்டுமென்றே இழிவுபடுத்துபவர், பலவீனங்களை தாக்குபவர், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர், வளர விடாதவர், ஆசீர்வாதங்களை தடுப்பவர், துரோகம் இழைப்பவர், பதிலுக்கு பதில் செய்பவர், பழி வாங்குபவர், கோள் சொல்பவர் என இப்படிப்பட்டவர்களை நேசித்துப் பாருங்களேன். தேவ அன்பு உங்கள் உள்ளங்களில் பரிபூணமாக வாசம் செய்யும். அதன் பலன் மிகுதி.

இப்படிச் செய்வதினால் இவ்வுலகம் உங்களை பரிகாசம் பண்ணும். பண்ணட்டுமே! கிறிஸ்துவையும் அப்படித்தானே இவ்வுலகம் பரிகாசம் பண்ணியது. பாராளும் பரமனுக்கே பரிகாசமானால், உங்களுக்கும் எனக்கும் என்ன செய்யாது இந்த உலகம். எதை வேண்டுமானாலும் செய்யட்டும். கிறிஸ்துவை நேசிக்கும் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட அன்பை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம். ஆவிக்குரிய வாழ்வில் பழகினவர்களுக்கு இது சாத்தியமே. இப்படிப்பட்ட அன்பே தேவன் விரும்பும் தெய்வீக அன்பாகும்.

தேவஊழியனின் பண்புகளில் சிறந்தது பொறுமை. இது உள்ளவர்களின் வாழ்வில் வெற்றிகள் அவர் வசமாகும். தோல்வியின் அஸ்திபாரமே பொறுமையின்மைதான். கொக்கிற்கு உள்ள பொறுமை, வெற்றிக்கு வழி. 

உபத்திரவத்தில் பொறுமையாயிருப்பது பல நன்மைகளை கொண்டு வரும். நாம் எதின்மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறோமோ, அதை அடையும் வரை பொறுமை தேவை. கோழிமுட்டை குஞ்சுபொரிக்க வேண்டுமானால் 21 நாட்கள் பொறுமையோடு காத்திருக்க வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. 15 நாளில் வெளிப்பட முயற்சிக்குமானால் அது கருவழிந்த பிண்டமாகி விடும். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு. அந்தக் காலம் வரை காத்திருப்பதற்குப் பெயர்தான் பொறுமை என்பது. அது தேவஊழியனுக்கு மிக அவசியம். பதறாத காரியம் சிதறாது. தேவசித்தம் நிறைவேறும்வரை காத்திருப்பதற்குப் பெயர்தான் பொறுமை என்பது.

கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடுகள் துன்பங்களுக்கு பரலோகில் பலன் உண்டு என்பதை நாம் அறிவோம் (மத்தேயு: 5:10-12).

2தீமோத்தேயு: 1:8 – “ஆகையால், நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக் குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி”

2தீமோத்தேயு: 2:3 – “நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி”

2தீமோத்தேயு: 4:5 – “நீயோ, எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, குவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று”

எபிரெயர்: 13:3 – “கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்”.

மேற்கண்ட வசனங்களிலெல்லாம் கிறிஸ்துவுக்காக தீங்கநுபவிக்கும்படி அப்.பவுல் ஆலோசனை கூறுகிறதை வாசிக்கிறோம். இது  எப்படிப்பட்ட தீங்கநுபவித்தல் தெரியுமா?

ஒன்று, கிறிஸ்துவுக்காக நாமே விரும்பி தீங்கநுபவித்தல். அதற்கு பலன் மேன்மையான உயிர்த்தெழுதல் என்று வேதம்சொல்கிறது (எபிரெயர்:11:35).

மற்றொன்று, நாம் விரும்பாமலே நமக்கு தீங்கநுபவிக்கும்படி கொடுக்கப்படுவது; எதிர்பாராதது; தேவசித்தம். யோபுவுக்கு வந்த பாடுகள் போல.

விரும்பி ஏற்கும் தீங்குகளுக்கும் சரி, விரும்பாமல் எதிர்பாராமல் தேவனால் கொடுக்கப்பட்டு வரும் தீங்கானாலும் சரி அது நமக்கு பலனைக் கொண்டு வரும்.

தேவஊழியன் பாடுகளை நன்றாய் சகிக்க முன் வர வேண்டும். பாடுகளிலிருந்து வெளிவர பிரயாசமெடுக்க விரும்பாமல், பாடுகளை தாங்கிக்கொள்ள பெலன் பெறும்படி ஜெபிக்கலாம். தேவமனுஷனுக்கு வரும் பாடுகள் அனைத்தும் பிறர்க்கு ஆசீர்வாதத்தை கொண்டு வரவே தேவன் அனுமதிக்கிறார்.

சரி விஷயத்திற்கு வருவோம்….

ஒரு தேவஊழியன் மனிதன்தான். ஒரு தேவமனுஷனைக் கொண்டுதான் தேவன் தம் ஜனத்தை வழிநடத்தி வருகிறார். சபையாகட்டும், தேவபிள்ளையாகட்டும் யாராயிருந்தாலும் யாரோ ஒரு தேவமனுஷனைக் கொண்டுதான் வழிநடத்துகிறார்; பேசுகிறார். அவர் மூலமாய் கொடுக்கப்படும் தேவசனத்தை மனுஷர் வசனமாய் ஏற்றுக் கொள்ளாமல் தேவவசனமாய் ஒரு விசுவாசி ஏற்றுக் கொள்வாரானால், அப்படி ஏற்றுக் கொண்டவருக்கு அந்த வசனமே தேவபெலனைக் கொடுக்கும். காரியங்களை வாய்க்கப்பண்ணும். சாதாரணமாய் கருதினால் ஒரு பலனும் இராது. தேவவசனமாய் கருதினால் கருதிய காரியம் வாய்க்கும்.

எனவே, ஒவ்வொரு வாரமும் ஆராதனைகளில் கொடுக்கப்படும் தேவவசனங்களை நீங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்? எப்படி அங்கீகரிக்கிறீர்கள்? மனுஷர் வசனமாகவா? தேவவசனமாகவா?நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்களோ? அப்படியே அந்தமாதிரிதான் கிரியை செய்யும்.

கொடுக்கப்படும் தேவவசனம் உங்களில் பெலன் தருவதும் தராததும் உங்கள் வசமே அந்த உரிமை தரப்பட்டுள்ளது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?! ஞாயிறு ஆராதனையில் வெறுமையாய் சென்று பெலனை பெற்று திரும்பப் போகிறீர்களா?! அல்லது வெறுமையாய் சென்று வெறுங்கையாய் திரும்பப் போகிறீர்களா?!

“நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன்நடையைக் காத்துக் கொள்” என்று பிரசங்கி எதற்கு சொன்னார்? என்பதை உணர்ந்தால் பெலனை பெறலாம் (பிரசங்கி: 5:1). 

தேவஜனம் கூடுகிற எவ்வகை கூடுகையானாலும் சரி…. அதில் கொடுக்கப்படுகிற தேவசெய்தியை மனுசர் வசனமாக கருதாமல் தேவவசனமாக ஏற்றுக் கொள்கிற இருதயத்தை பெற்றிருப்போமானால் பாக்கியசாலிகள்தான்.

சபைகளில் கொடுக்கப்படும் தேவவசனத்தை அற்பமாய் எண்ணாமல், ஏனோதானோவென்று கேட்காமல், தெரிந்த சத்தியம் தானே என உதாசீணம் பண்ணாமல் கருத்தாய் கேட்டு விசுவாசித்தால், முன்பே அவ்வசனத்தை கேட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் உங்கள் வாழ்வில் அவ்வசனம் கிரியை செய்ய பெலனுள்ளதாய் அது மாறும். அதற்கு நீங்கள் இடங் கொடுப்பீர்களா?

“ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்டபோது அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக் கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது”

ஆம்! பிரியமானவர்களே!

உங்களுக்குள் நீங்கள் விசுவாசிக்கிற வசனம் தேவவசனமாக பெலன் செய்ய நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம். கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!