கிச்சிலிப்பழம்
(ஆப்பிள் பழம் - APPLE)
திறவுகோல்வசனம்: உன்னதப்பாட்டு: 2:3,5 – “காட்டுமரங்களுக்குள்ளே
கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்பிடியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்;
அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது”
“திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப் பழங்களால் என்னை ஆற்றுங்கள்…”
காட்டு மரங்களுக்குள் சிறந்தது கிச்சிலி மரம். அது தரும் கனியில்
அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள் என அழைக்கப்பட்டாலும்,
எல்லா சூழலிலும், எல்லாராலும் புசிக்கத் தகுந்தவை அல்ல. பிள்ளை பேறுபெற்றவர்கள் மாம்பழம்
சாப்பிட்டால் பிறந்த குழந்தைக்கு சீதளம், மாந்தம் ஏற்படும். பலா பழம் சாப்பிட்டால்
வயிற்றுப் போக்கு ஏற்படும். சர்க்கரை உள்ளவர்கள் வாழைபழம் சாப்பிட முடியாது.
இருப்பினும், பெரும்பாலும் அனைத்து சூழலுக்கும் ஏற்ற கனி கிச்சிலிப்பழம்தான்
என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எப்படிப்பட்ட பெலவீனர்களுக்கும், படுத்த படுக்கையில்
உள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரே பழம் கிச்சிலிப் பழம் மட்டுந்தான்.
பக்கவிளைவற்றது. அனைத்து சத்துக்களும் தன்னகத்தே ஒருங்கே பெற்றது இப்பழம் மட்டுமே.
சத்து நிறைந்தது; சாறு நிறைந்தது; சாரம் உள்ளது; அனைவராலும் விரும்பப்படத்தக்கது.
“கிச்சிலிப்பழத்தால் என்னை ஆற்றுங்கள்” என்று சூலமித்தி கூறுகிறதை
வாசிக்கிறோம். நோய்வாய்ப்பட்டவர்கள், பெலவீனமடைந்தவர்கள், மனமடிவானவர்கள், சோர்வுற்றவர்கள்
இதை பருகினால் உடனே பலமடைந்து ஆற்றப்படுவர்; பெலன் பெற்று தேற்றப்படுவர்; மனதிற்கு
பெலன் தந்து ஆறுதல்படுவர். இப்படிப்பட்ட நல்ல சத்தான கனியை புசிக்கும் எவரும் அதற்குரிய
பெலனை தங்களில் பெறுவார்கள். அதுபோல, கிச்சிலிப்பழம் என்றழைக்கப்படுகிற ஆப்பிள் பழத்தின்
கனி மட்டுமல்ல, ஆப்பிள் என்ற சொல்லில் உள்ள எழுத்தின் பொருளும் நமக்கு நம் குடும்பத்திற்கு
பெலன் தரவல்லவை. அதைப்பற்றி பார்ப்போம்.
கிச்சிலிப்பழம் – ஆப்பிள் பழம் – APPLE
A P P L E
A – Atmosphere – To Creat a Spritual atmosphere in the
family – ஆவிக்குரிய சூழலை குடும்பத்தில் உருவாக்குதல்
P – Partner – Loving your Life Partner Deeply – வாழ்க்கை துணைவரை
ஆழமாக நேசித்தல்
P – Prayer – To give importance to prayer in your family
– குடும்பத்தில் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல்
L – Learn the Bible / Read the Bible – வேதத்தைக் கற்றுக் கொள்ளுதல்
/ வேதத்தை வாசித்தல்
E – Evangelism Work – சுவிசேஷப்பணி செய்தல்
A – Atmosphere – To Creat a Spritual atmosphere in the family – ஆவிக்குரிய சூழலை குடும்பத்தில் உருவாக்குதல்
அ) ஆவிக்குரிய அலங்காரம்:
ஒவ்வொரு வீடும் தேவாலயம்போல் மாற வேண்டும். வீட்டை காணும்போது
அல்லது உள்ளே பிரவேசிக்கும்போது அதன் தோற்றம் அமைப்பு ஆவிக்குரிய உன்னத உணர்வை பிறருக்கு
கொண்டு வருகிறதாய் காணப்பட வேண்டும்.
எண்ணாகமம்: 24:5,6 – “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே,
உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்! அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள
தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள
கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது”.
ஒவ்வொரு அறைகளிலும் அந்தந்த அறைகளுக்குரிய பொருத்தமான வேதவசனங்கள்
எழுதி ஒட்டப்படுதல் மனநிறைவை, தேவ பிரசன்னத்தை உணரும்படி செய்திடும்.
நாம் வசிக்கும் ஒவ்வொரு அறைகளிலும் தேவ பிரசன்னத்தை கொண்டு வர
வழிவகை செய்ய வேண்டும். உபாகமம்: 6:4-9 – வேத வசனங்கள் வீட்டுச்சுவர்களில் அலங்கரிக்க
வேண்டும். சபையின் தரிசனங்கள், இலக்குகள், ஆராதனை நேரங்கள், ஜெப நேரங்களின் கால அட்டவணை
போன்றவைகள் எழுதி கண்களில் படும்படி ஒட்டப்பட வேண்டும்.
ஆ) பரிசுத்தமாக்குதல்:
உபாகமம்: 23:14 – “உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும்,
உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக் கொடுக்கவும், உன் பாளையத்திற்குள்ளே உலாவிக் கொண்டிருக்கிறார்;
ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு,
உன் பாளையம் சுத்தமாயிருக்கக்கடவது”.
வீட்டில் உள்ள வாலிபபிள்ளைகள் கண்டகண்ட நடிகர், நடிகையர் படங்கள்
மற்றும் தேவையற்ற இயற்கை காட்சிகள், வாகன படங்கள், மாம்ச மலைகளின் உடல் தோற்ற படங்கள்
ஆகியவற்றை சுவற்றில் ஒட்டி வீட்டை அசுசிபடுத்துவார்கள். இலவச காலண்டர்கள் மூலமாக வரும்
விக்கிரகபடங்கள் இவைகளை அப்புறப்படுத்தி வீட்டை பரிசுத்தமாக்கி தூய்மைப்படுத்த வேண்டும்.
நமக்கே தெரியாமல் நம் வீட்டில் விக்கிரக சிலைகள், படங்கள், ஜெபமாலைகள், சிலுவைகள் என
புகுந்து விடும். அவைகளை அப்புறப்படுத்தி பரிசுத்தமாக்க வேண்டும்.
செல்போன் ரிங்டோனில் ஒருசில தேவபிள்ளைகள் சினிமா பாடல்களை வைத்திருப்பார்கள்.
அது அகற்றப்பட வேண்டும். வாகனங்களில் தேவையற்ற அடையாளங்கள், அடையாளக் குறியீடுகள் அலங்காரம்
என்ற பெயர்களில் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் பரிசுத்த பிரயாணத்திற்கும், அவரது
சமூகம் நமக்கு முன் சென்று பாதைகளை செவ்வையாக்குவதற்கும் உபயோகமாயிருக்கும். நம் வாகனங்களில்
வசனங்களும், கைப்பிரதிகளும், புதிய ஏற்பாடுகளும், வேதாகமமும் இருப்பது ஆசீர்வாதத்தை
கொண்டு வரும்.
இ) அணுகுமுறை:
நம் வசிப்பிடங்களில் நாம் வாழும்போது, நம்மைச் சுற்றியிருப்போருடன்
நல்ல கிறிஸ்துவ பண்புகளையும், அறநெறிகளையும் நாம் வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய
சொற்கள், அணுகுமுறை நற்பண்புகள் நிறைந்தவையாகவும், இனிமையானதாகவும் காணப்படுதல் மிக
அவசியம். நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற கர்த்தருடைய பிள்ளைகள் என்கிற உணர்வு
நம் இருதயங்களில் எப்போதும் இருக்க வேண்டும். அந்த உணர்வு நம்மை எச்சூழலிலும் நம்மை
ஜீவனுள்ள சாட்சியாக நிலைநிறுத்தும். நம்மிடம் அணுகுபவர்கள் நம்மிடம் தேவபிரசன்னத்தை
காண வேண்டும்.
2பேதுரு: 1:4-8 – உள்ள வசனங்களின் படி “திவ்விய சுபாவமும்”,
ரோமர்: 15:14 – ன் படி “நற்குணங்களும்”, கலாத்தியர்: 5:22 – ன் படி “ஆவியின் கனிகளும்”
நிறைந்தவர்களாய் காணப்படுவோமானால் ஆவிக்குரிய சூழலை எந்த நிலையிலும், எவ்விடங்களிலும்
நம்மால் கொண்டு வரவும், ஏற்படுத்தவும் முடியும் என்பதில் ஐயமில்லை.
P – Partner – Loving your Life Partner Deeply – வாழ்க்கை துணைவரை ஆழமாக நேசித்தல்
அ) ஏற்ற துணை:
ஆதியாகமம்: 2:18 – “பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது
நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்”. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
எப்படிப்பட்ட திருமணம் நடந்திருந்தாலும் சரி… தேவன் அவர்களுக்கு ஏற்றத் துணையைத்தான்
உண்டாக்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அப்படியிருக்க, ஏன் ஒருசில கணவன் மனைவிக்குள்
பிரிவினைகள்? கருத்து வேறுபாடுகள்?
ஏனென்றால், வைத்து வாழ வழி தெரிவதில்லை. தேவன் கொடுத்த
துணை என்னவோ ஏற்ற துணைதான். அதை வைத்து வழிநடத்தவோ, கையாளவோ தெரிவதில்லை. அதனால்தான்
கருத்து வேறுபாடுகளும், பிரிவினைகளும். எதையும் சரியாக கையாளுகிற முறையை அறிந்திருந்தால்
சீறும் சிங்கத்தைக்கூட அடக்கியாளலாம். பாயும் பாம்பைக்கூட பெட்டியில் அடக்கலாம். கையாளும்
விதத்தைக் கர்த்தரிடம் சாலமோன் கேட்டதைப்போல (1இராஜாக்கள்: 3:5-14) ஜெபத்தில் தேவனிடம்
கேட்டால், “… கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்” தேவனாகிய
கர்த்தர் கையாளும் திறனை உங்களுக்குக் கற்றுத்தருவார்.(சங்கீதம்: 144:1).
ஆ) கிச்சிலிப் பழங்களால் ஆற்றுங்கள்:
தேவன் தந்த துணைவரை நேசியுங்கள். ஆழமாக நேசியுங்கள். யோபுவின்
மனைவியைப்போல, ஆசீர்வாதம் இருக்கும் வரை மட்டும் நேசிப்பது, குறைவு ஏற்பட்டதும் ‘ஜீவனை
விடு’ என்பது போன்ற நிலை வேண்டவே வேண்டாம். கிச்சிலிப்பழம் எப்படிப்பட்ட பெலவீனனையும்
பெலப்படுத்தக்கூடிய சத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதுபோல, நாமும் நம் துணைவருக்கு/துணைவிக்கு
எந்த நிலையிலும், எச்சூழலிலும் ஆற்றித்தேற்றிட, ஆறுதல் மற்றும் ஆதரவு தந்திடும் வகையில் காணப்பட வேண்டும்.
உங்களிடம் நல்ல இருதயம் உண்டு நல்ல மனமும் உண்டு. அதற்குள் நல்ல குணங்களும், திவ்விய
சுபாவங்களும் உண்டு. அதை அவ்வப்போது உங்கள் துணையிடம் வெளிப்படுத்துங்கள்.
இ) அக்கரைக்குப் போங்கள்:
மத்தேயு: 8:18 – “பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக்
இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்” மக்கள் நெருக்கடியிலிருந்து தன்னை
விடுவித்துக் கொள்ள அக்கரைக்குப் போனார்.
யோவான்: 14:12,13 – யோவான்ஸ்நானகன் தலை சிரச்சேதம் பண்ணப்பட்ட
சங்கதியை இயேசு அறிந்தவுடன், அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று அக்கரைக்கு அழைத்துச்
சென்றார்.
வாழ்க்கைத் துணைவரை/துணைவியை நேசிக்கும் ஒவ்வொருவரும் இப்படியிருக்க
வேண்டும்.
வியாபாரச்சூழலில் நெருக்கம், உறவினர்களின் போராட்டம், ஊழியத்தில் சுணக்கம்,
சத்துருக்களினால் ஏற்படும் மனமடிவு போன்ற சூழ்நிலைகளில் மனஅழுத்தம், மனப்போராட்டம்
ஏற்பட்டு மனம் அலசடிப்படும் வேளைகளில் துணையை அக்கரைக்கு அதாவது, சபைக்கோ, ஜெபத்திற்கோ,
ஊழியத்திற்கோ அல்லது அருகாமையிலுள்ள சுற்றுலா இடங்களுக்கோ அழைத்துச் சென்று வர வேண்டும்.
அப்போது அவர்களின் மனஇறுக்கம் தளரும். மனக்குழப்பம் நீங்கி நிம்மதியும், மனத் தெளிவும்,
புத்துணர்வும் அடைவார்கள்.
வாழ்வின் சூழலுக்கேற்ப அவ்வப்போது “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்”
என குடும்பத்தோடு சென்று வாருங்கள்.
ஈ) அதைரியப்படுத்தாதிருங்கள்:
எஸ்தர்: 6:13 – “ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய
சிரேஷீக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன்
மனைவியாகிய சிரேஷீம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்;
அவன் யூதகுலமானால், நீர் அவனை
மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்”
சிநேகிதர்கள், உறவினர்கள், அறிமுகமற்றவர்கள் யாராயிருந்தாலும்
அதைரியப்படும்படி பேசலாம். ஆனால், துணைவரோ/துணைவியோ அப்படி பேசலாகாது. அப்படிப்பேசினால்
ஏற்ற துணை அல்ல, வினை. ஏற்கனவே நொந்துபோய்தான் துணைவரோ/துணைவியோ மனம் விட்டு, நம்பி,
உங்களிடம் பேசுகிறார். அதற்கு ஆறுதலாகவோ, அல்லது மாற்றுக் கருத்து அதாவது தீர்வு உண்டாக,
சமாதானம் உண்டாக வழி சொல்ல வேண்டியதை விடுத்து, அதைரியப்படும்படி பேசுவது அழகல்ல. அது
அனைத்து சுவைகளை தன்னகத்தே கொண்டுள்ள ஆப்பிளின் சுவையல்ல. திவ்விய சுபாவமல்ல. ஆழமான
அன்புடையவர்களின் பண்பு இதுவல்ல. நம்பி வாழும் நம் துணைவரே/துணைவியே நம்மை அதைரியப்படுத்தினால்
நம்மை வேறு யார்தான் ஆற்றித் தேற்ற முடியும்?!
எனவே, உங்கள் துணைவர்/துணைவியை ஆழமாய்
நேசியுங்கள். ஆழமான அன்பில் அழிவில்லை. ஆழமான அன்பு ஆசீர்வாதத்தையும் குடும்பத்தில்
சமாதானத்தையும் கொண்டு வரும்.
P – Prayer – To give importance to prayer in your family – குடும்பத்தில் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல்
ஆதாமின் காலங்களில் மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள பலிபீடங்கள்
கட்டி, பலி செலுத்தி, பலியின் மூலம் தொடர்பு கொண்டான். பின்பு, மோசேயின் நாட்களில்
ஆசரிப்புக்கூடாரத்தில் உடன்படிக்கை பெட்டியின் மூலம் தொடர்பு கொண்டனர். சாலமோனின் நாட்களில்
தேவாலயத்தில் ஜெபம் பண்ணுவதின் மூலம் தொடர்பு கொண்டனர். மொத்தத்தில் ஜெபமே தேவனுக்கும்
மனிதனுக்கும் ஒரு தொடர்பு நிலையை ஏற்படுத்தியது.
ஜெபமில்லாவிட்டால் தேவனுக்கும் மனிதனுக்கும் தொடர்பும் உறவும் இல்லாமல் போய்விடும். அப்படி தொடர்போ
உறவோ அற்ற நிலையில் காணப்படும் ஒருமனிதனுடைய வாழ்வில் பிசாசின் கிரியைகள் அதிமதிகமாய்
காணப்படும். அப்படிப்பட்டவர்களால் நிம்மதியாய் வாழ இயலாது. கண்ணீர், துக்கம், கவலை,
நித்தமும் போராட்டம் என தொடர்ந்தேர்ச்சியாய் சாத்தானால் வாட்டி வதைக்கப்படுவார்கள்.
அவைகளிலிருந்து தப்ப ஒரே வழி – ஜெபம் மட்டுமே.
அநேகருக்கு ஜெபம் தெரியும்; ஆனால் ஜெபிக்கத் தெரியாது. ஜெபம்
அறிவார்கள்; ஆனால், ஜெபம் பண்ண அறியார்கள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்களுடைய ஜெபம்
என்கிற பலிபீடம் இடிந்துபோய் பாழாய்க் கிடக்கிறது. அதை புதுப்பிக்கத் தெரியவில்லை.
எடுத்துக்கட்டவும் ஆளில்லை.
குடும்ப ஜெபம்:
அனைத்து குடும்பங்களிலும் குடும்ப பலிபீடத்தை பிசாசு உடைக்க
விரும்புகிறான். குடும்ப ஜெபம் மிகவும் பலவீனப்பட்ட நிலையில்தான் அநேக குடும்பங்களில்
காணப்படுகிறது. அதேபோல தனி ஜெபமும் குறைந்தே காணப்படுகிறது. இந்நாட்களில் சபையாக கூடி
ஜெபிப்பதிலும் குறைவிருக்கிறது. ஞாயிற்றுகிழமை ஆராதனைக்கு வருகிறதைபோல ஜனங்கள் ஜெபத்திற்கும்
சபைகளை நோக்கி வரும் காலம் உண்டாக விழிப்போடு ஜெபிப்போம்.
குடும்ப ஜெபம் குறைவுபட்டால் குடும்பத்தில் குறைவு வரும். அந்த
குறைவு ஒன்றோடு நின்று விடாது. ஒவ்வொன்றிலும் குறைவுகள் தொடர ஆரம்பிக்கும். வாழ்க்கை
படகு மூழ்குவதற்குள் குடும்ப ஜெபம் செப்பனிடப்பட வேண்டும்.
குடும்ப ஜெபம் எப்படியெல்லாம் செப்பனிடலாம்?
காலையில் எழுந்ததும் குடும்பமாக ஜெபிக்கலாம். இரவில் தூங்கச்
செல்லுமுன் குடும்பமாக கூடி ஜெபிக்கலாம்.
காலையில் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது ஜெபித்து அனுப்பலாம்
சமைக்கத் தொடங்கும்முன் ஜெபித்து சமையலை ஆரம்பிக்கலாம்
சாப்பிடும் முன் ஜெபித்து சாப்பிட வைக்கலாம்
வீட்டில் எந்த வேலை செய்ய ஆரம்பித்தாலும், ஜெபித்த பின்னரே ஆரம்பிக்கலாம்
பிரயாணம் செய்யும் முன் ஜெபித்து தொடங்கலாம்
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கியவுடன் உபயோகப்படுத்தாமல்,
பிரதிஷ்டை செய்து ஜெபித்த பின் பயன்படுத்தலாம்
பிள்ளைகள் படிக்கும் முன் ஜெபித்து பின்பு படிக்கவோ, எழுதவோ
செய்யலாம்
விடுமுறை நாட்களில் குடும்பமாக ஒரு நாள் உபவாசித்து ஜெபிக்கலாம்
சரீரத்தில் பெலவீனப்படும் நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள்
ஒவ்வொருவரையும் ஜெபிக்க வைக்கலாம்
மாதத்தில் ஒருமுறையாவது குடும்ப ஜெபத்திற்கு ஸ்தலசபை போதகரை
அழைத்து வழிநடத்தச் சொல்லலாம்
விசேஷ தினங்களில் பிறந்தநாள், திருமண நாள், நினைவுநாள் வீடுகளில்
ஜெபக்கூட்டங்கள் நடத்தலாம்
L – Learn the Bible / Read the Bible – வேதத்தைக் கற்றுக் கொள்ளுதல் / வேதத்தை வாசித்தல்
வேதத்தை வாசித்தால் மட்டும் போதாது. அதை கற்றுக் கொள்ள முயற்சிக்க
வேண்டும். வேதத்தை வாசிப்பது என்பது வேறு; கற்றுக் கொள்வது என்பது வேறு. வாசித்தால்
மட்டும் போதாது கற்றுக் கொள்ள வேண்டும். வேதாகம பின்னணியம், வேதத்தின் அட்டவணை, ஒவ்வொரு
வசனத்தின் ஆழமும் விளக்கமும் அறிதல், ஆராய்தல், தியானித்தல், வசனத்தை மனனம் செய்தல்,
நடைமுறைப்படுத்துதல், விசுவாசித்தல், வசனத்தைக் கொண்டு சொல்லிச் சொல்லி ஜெபித்தல் என
நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் ஏராளம் ஏராளம் உண்டு.
நாம் நம் வேதத்தைக் கற்றுக் கொண்டது சமுத்திர ஜலத்தில் ஒரு துளியளவுதான்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது… ஏராளம்! ஏராளம்! அப்பப்பா… அதை நினைத்தால் உள்ளம்
உவகை கொள்ளும்! வேதத்தின் மகத்துவங்களை அறிய நம் மனம் விரும்ப வேண்டும். வேத வசனத்தின்படி
வாழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும். வேதத்தை வாசிக்கவும் கற்றுக் கொள்ளவும் நாம் நேரத்தையும்,
காலத்தையும், சமயத்தையும் சற்று ஒதுக்கித்தான் தீர வேண்டும்.
சபையில் நடக்கின்ற வேதபாட வகுப்பில் தவறாமல் சென்று பயின்று
வர வேண்டும். வேதத்தை வாசிக்க வாசிக்க நம்மில் மாபெரும் மாற்றங்கள் உருவாகும். மறுரூபமடைவோம்.
நற்குணசாலிகளாக திகழ்வோம் (அப்போஸ்தலர்: 17:11).
E – Evangelism Work – சுவிசேஷப்பணி செய்தல்
ஆக்கில்லா பிரிஸ்கில்லா குடும்பமாக தேவனுடைய ராஜ்யத்தை குறித்து
திட்டமாய் விவரித்து ஊழியம் செய்தான் (அப்போஸ்தலர்: 18:26). தங்களின் உலகப்பிரகாரமான
கூடாரத் தொழில் செய்துகொண்டே ஊழித்தை செய்து வந்வர்கள் இவர்கள் (அப்போஸ்தலர்:
18:3). காரியம் இப்படியாயிருக்க, இவர்களைப்போல நாமும் ஏன் பகுதிநேர ஊழியமோ, பவுலைப்போல
முழுநேர ஊழியமோ செய்திட முன்வரக்கூடாது?!
2தீமோத்தேயு: 4:2 – “சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு…”
1கொரிந்தியர்: 9:16 – “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும்,
மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை
நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ”.
இவ்வசனங்கள் அனைத்தும் நமக்குத் தெரியாததல்ல… அறியாததல்ல. பலமுறை
காதால் கேட்டதுதான். என்ன …. உணர்வுதான் சற்று மந்தம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இவ்வசனங்களுக்கு
தங்களை அர்ப்பணிக்க உணர்வடைந்தால் போதும் எழுப்புதல் வெகு சீக்கிரத்தில் அனைவரிலும்
பற்றியெரியும்.
சுவிசேஷப்பணி எங்கிருந்து ஆரம்பிப்பது?
வேறு எங்கு? நம் வீட்டிலிருந்துதான்.
ஏனென்றால்….
தேவனுடைய நியாயத்தீர்ப்பு முதலில் தேவனுடைய வீட்டிலிருந்துதான்
முதலில் தொடங்குமாம் 1பேதுரு: 4:17 – “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது;
முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின்
முடிவு என்னமாயிருக்கும்?”
முதலில் நம்வீட்டில் ஆரம்பிக்க வேண்டும். நம் வீட்டில் இன்னும்
யார் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என கண்டறிந்து இரட்சிப்பிற்குள் வழிநடத்தப்பட
கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, நம் சுற்றத்தார் யாரெல்லாம் இன்னும் சந்திக்கப்பட
வில்லை என கண்டறிந்து, சுவிசேஷம் சொல்ல வேண்டும்.
மூன்றாவதாக, நம் சுற்றுப்புறத்தார் இயேசுவை அறியாதோர் அறிந்திட
சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும்.
நான்காவதாக, நமது ஏரியாவில், நமது தெருவில், நமது கிராமத்தில்
சந்திக்கப்படாதோர் சந்திக்கப்பட பிரயாசமெடுக்க வேண்டும்.
ஐந்தாவதாக, நமது பட்டணத்தில், அடுத்தடுத்துள்ள பட்டணங்கள் மற்றும்
கிராமங்கள் சந்திக்கப்பட கடந்து செல்ல வேண்டும்.
மிக முக்கியமாக, வாரந்தோறும் ஞாயிறு ஆராதனைக்கு செல்லும்போது,
வெறுங்கையாய் போகாமல், வாராவாரம் ஒரு புதிய ஆத்துமாவோடு ஆராதனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
அதற்கொரு உறுதியான தீர்மானம் எடுங்கள். நம்மை மீட்ட இயேசுவுக்கு நாம் செய்யும் மிகப்
பெரிய சேவை இது.
கிச்சிலிப்பழம் என்று
சொல்லப்படுகிற ஆப்பிள் பழத்தில் அத்தனை பழங்களிலும் உள்ள சத்துக்களும் நிறைவாகவும்
முழுமையாகவும் இதில் காணப்படுவதால் இது சத்தான சுவைமிக்க பழமாகக் காணப்படுவதுபோல்,
மேலே கண்ட சொற்களின் சுவைகளை நம் வாழ்வில் காண்பிப்போமானால் நம் ஆவிக்குரிய வாழ்வும்,
பூமிக்குரிய வாழ்வும் ஆசீர்வதிக்கப்பட்ட சாட்சி நிறைந்த வாழ்வு வாழ இயலும். அப்படிப்பட்ட
குடும்பம் தேவனால் வழிநடத்தப்பட்டு என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் பெறுவர்.
கர்த்தர்
தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!