“ஈஸ்டர்” (EASTER)
“ஈஸ்டர்” (EASTER) என்ற வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் ஒரே ஒரு
இடத்தில் அதாவது, அப்போஸ்தலர்: 12:4 – ல் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் ஆங்கில வேதாகமத்தில்
மட்டுமே காணப்படுகிறது. அதற்கு தமிழ் வேதாகமத்தில் “பஸ்கா” என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
“ஈஸ்டர்” என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு சரியானதல்ல. இதில் ஈஸ்டர்
என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காமல், மற்ற வேதாகம பகுதிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது
போலவே “Passover – பாஸோவர்” அதாவது “பஸ்கா” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ் வேதாகமத்தில் பாஸோவர் என்ற ஆங்கில வார்த்தைக்கு பஸ்கா
என்ற வார்த்தையையே பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் வேதாகமத்தையும் ஆங்கில வேதாகமத்தையும்
யோவான்: 13:1 ஐ ஒப்பிட்டுப் பார்க்கும்போது … “பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு …”
; “Now before the feast of the passover, when Jesus” - என்று உள்ளதின்படி, தமிழ் வேதாகமம்
அதனை பஸ்கா என்றே மொழிபெயர்த்திருக்கிறது.
“ஈஸ்டர்” (EASTER) என்ற சொல் புறமதத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
“ச-க்ஷன்” (SAXON) காலத்திய சொல்லாகும். அது சக்ஷன் மக்களின் தேவதையைப் பற்றியதாகும்.
அதாவது, “ஈஸ்ட் ஈஸ்ட்ரா” (EAST EASTERA) என்ற தேவதையைப் பற்றியதாகும். அதன் பண்டிகை
வசந்த காலத்தில் பஸ்கா காலத்தையொட்டி வந்தது. அதனால், ஈஸ்டர் என்ற பெயரை இயேசுவின்
மரணம், உயிர்த்தெழுதல், பரத்துக்கேறுதல், பெந்தெகொஸ்தே ஆகியவைகளைக் கொண்ட காலப்பகுதிக்கு
பயன்படுத்தும்படி முதலில் பேர் கிறிஸ்தவ மண்டல ஆதிக்கத்தால் செய்யப்பட்டது. அது கிறிஸ்தவ
ஸ்தாபனங்களால் எளிதில் புறமதத்தோடு கலந்து கொள்ளும்படி எடுத்த ஒரு பிரயத்தனமாகும்.
கிறிஸ்தவ முறைகளில் காணப்படும் அநேக தளர்த்துதலைப்போல
(CONCESSIONS), இந்தக் காரியத்திலும் இது தளர்த்தப்பட்டு கிறிஸ்தவ மார்க்கத்திற்குள்
நுழைந்தது. ஆனால், இப்பொழுது இந்த வார்த்தை ஒருபோதும் ஈஸ்டர் தேவதையைக் கொண்டாட கிறிஸ்தவர்களால்
பயன்படுத்தப்படுவதில்லை. புராட்டஸ்டன்ட் (PROTESTANTS) மத்தியில் அந்த பெயரை ஒரு காலத்திற்கு
குறிப்பிட்டு பயன்படுத்தியதுபோல பயன்படுத்தாது, குறிப்பிட்ட ஒரு நாளுக்கு மட்டுமே உபயோகிக்கிறார்கள்.
ரோமன் கத்தோலிக்கர்களும் இப்பொழுது அப்படியே உபயோகிக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட நாள்தான்
நமது கர்த்தரின் உயிர்த்தெழுதலை எடுத்துக்காட்டும் ஈஸ்டர் ஞாயிறாகக் கொண்டாடப்படுகிறது.
ஒரு பெரிய கண்ணோட்டத்தில் கத்தோலிக்கர்கள் (CATHOLICS) ஈஸ்டர்
என்ற சொல்லை பெரிய வெள்ளிக்கிழமையையும்
(GOOD FRIDAY), உயிர்த்தெழுந்த பண்டிகையையும் சேர்ந்த காலத்திற்கு உபயோகிக்கிறார்கள்.
அது பஸ்கா காலத்திற்கு ஒரு மறு பெயராக அல்லது இணையான பெயராக வழங்கப்பட்டு வந்தது. கத்தோலிக்கர்கள்
திருப்பலி பூசையை நுழைத்து அதனை அடிக்கடி அனுசரித்தல், நமது கர்த்தரின் மரணத்தை வருடந்தோறும்
மட்டும் அனுசரிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை முழுவதுமாய் வெறுமையாக்கிவிடும் என்ற
நோக்கத்தோடு எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அது அப்படி நடக்கவில்லை.
குறிப்பிட்ட காலத்தில்
கொண்டாடப்படும் பஸ்காவின் ஞாபகார்த்தம் அதன் அர்த்தத்தை இழந்த போதிலும், அந்த ஞாபகார்த்தம்
தொடர்ந்து மெய்யான தேவஜனத்தால் அனுசரிக்கப்பட்டு வந்தது. சபை (THE CHURCH) நிலைத்திருப்பதற்கான
அடிப்படை அஸ்திபாரமும் உன்னதமுமான மையப்பொருளுமான சத்தியமுமான பஸ்காவை அதாவது திருவிருந்து
ஆராதனை மற்றும் கர்த்தருடைய பந்தி அல்லது நற்கருணையை
சரியான காலத்தில் அனுசரிக்கும் ஆதிசபையின் முறைமை சத்தியத்திற்கு பிரதிஷ்டை செய்திருப்பவர்களின்
மத்தியில் அதாவது ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகளில் இன்னமும் தொடர்ந்து வருகிறது.
அநேக நூற்றாண்டுகளாக யூதகாலண்டர் முறைமையின்படி நமது கர்த்தரின் மரணத்தின் தேதியைக்
கணிப்பது வழக்கம். ஆனால், கிறிஸ்தவ மண்டலத்தால் அந்த யூதமுறைமையிலிருந்து விலகி, தற்போது கணிக்கும் முறைமைக்கு
ஒரு மாறுதல் கொண்டு வரப்பட்டது.
நிசேயாவில் (NICE) கி.பி.325 ல் கூடிய எக்குமெனிக்கல் கவுன்சில்
(ECUMENICAL COUNCIL - கிறிஸ்தவ ஆலோசனை சங்கம்) வசந்த காலத்து சமராத்திரிக்குப் பின்வரும்
(SPRING EQUALNOX) முதல் பெளர்ணமியைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையை ஈஸ்டராகக் கொண்டாட
வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
அது நமது கர்த்தரின் மரணத்தை பெரிய வெள்ளிக்கிழமை என்று உலகம்
முழுவதும் ஆசரிக்கும் அனுசரிப்பை நிறுவியதுமல்லாமல், பரிசுத்த வேதாகம சத்திய வசனத்தின்படி
நமது அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்து, நமக்காக பஸ்கா பலியாக சிலுவையில் மரித்ததினிமித்தம்
யூதமுறைமையின்படி பஸ்கா ஆசரிப்பு அனுசரிப்பதை புறக்கணித்தது.
யூதமுறைமையின்படி
பஸ்கா பலியாக ஆண்டவர் இயேசுவே நம் பாவங்களுக்கு பலியானதினிமித்தம், இனி நாம் பலி செலுத்த
வேண்டியதாயிராமல், குமாரனாகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்காகவும் பலியானதினிமித்தம்,
நாம் இப்போது அவரது மரணத்தை நினைவு கூறும் பொருட்டு “திருவிருந்து” என்றும் “நற்கருணை”
என்றும், “கர்த்தருடைய பந்தி” என்றும் சொற்களால் அழைக்கப்படுகின்ற ஆசரிப்பை அனுசரிக்க
ஆணை பிறப்பித்தது.
நாளடைவில் இந்த பெளர்ணமியைத் தொடரும் ஞாயிறு ஈஸ்டராகவும், அதற்கு
முந்தைய வெள்ளிக்கிழமை “பெரிய வெள்ளி” அல்லது “நல்ல வெள்ளி” என்றும் கொண்டாடப்படலாயிற்று.
வெகு நாட்களாக தொடர்ந்து பஸ்கா என்ற வார்த்தையே உபயோகிக்கிப்பட்டது.
போப்பின் மதம் (PAPACY) அரசியல் செல்வாக்குடன் ஸ்தாபிக்கப்பட்டபின், இந்த மதம் அரசாங்கத்தின்
தயவைப் பெற்றிருக்கிறது என்று அறிந்த புறமதத்தினர், இம்மதத்தில் மந்தை மந்தையாக சேர
ஆரம்பித்தனர். இச்சமயத்தில்தான் பஸ்காவுக்குப் பதில் ஈஸ்டர் என்ற பெயர் இடம் பெற்றது.
ஏனென்றால், அதே சமயத்தையொட்டி புறமதத்தினர் தங்களுடைய ஈஸ்டர்
தேவதையின் பண்டிகையை கொண்டாடினர். அப்பழக்கத்தினையுடைய புறமதத்தினருடைய செல்வாக்கையும்
பெரும் கூட்டத்தையும் சம்பாதிக்க பேரவா திட்டங்களையுடைய கிறிஸ்தவ மத குருக்கள் கையாண்ட
அநேக முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது புறமதத்தினரை வசீகரித்து கிறிஸ்துவினுடையவர்களாக்க
மத குருக்கள் கையாண்ட வழிகளில் ஒன்று. அவர்களது பண்டிகையை கிறிஸ்தவ மயமாக்குதலாகும்.
யூதர்கள்
இன்னும் வசந்த காலத்து சமராத்திரிக்காகக் காத்திருந்து அமாவாசை நாளில் தங்கள் முதல்
மாதத்தின் முதல் தேதியை உறுதிப்படுத்தி, அதிலிருந்து 14 நாட்கள் கழித்து பெளர்ணமி அன்று
பஸ்காவை அனுசரித்து வருகிறார்கள். அவர்கள் அதை செய்து கொள்ளட்டும். அவர்களுக்கு அதில்
முழு உரிமை உண்டு. அதனால் நமக்கென்ன வந்தது? நாம் கிறிஸ்தவர்கள். பஸ்காவை ஆசரிக்க நாம்
ஒன்றும் யூதர்கள் அல்ல. கிறிஸ்துவின்
இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள்.
எனவே, கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும்படி திருவிருந்து
என்கிற கர்த்தருடைய பந்தியை ஆசரிக்க (அப்பமும் இரசமும் புசிக்க பானம் பண்ண) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளோம்.
இந்த யூத முறைமைக்கும் கிறிஸ்தவ
முறைமைக்கும் கணிப்புகளில் சில சந்தர்ப்பங்களில் சுமாராக ஒரு மாத கால அளவு வித்தியாசம்
வருகிறது. அதனால் ஒரு கேடும் வரப்போவதில்லை. பாதகமில்லை. நாள் நட்சத்திரம், அமாவாசை
பெளர்ணமி, ராகு, கேது, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து அனுசரிக்கவோ, ஆசரிக்கவோ நாம்
புற மதத்தினர் அல்ல. யூதரும்
நாம் அல்ல. நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட்டவர்களும் அல்ல. நமக்காக பஸ்கா பலியான
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள். விஷயம் இதுதான். கர்த்தர் வருமளவும்
நாம் அவர் மரணத்தை தெரிவிக்கிறோம். நினைவு கூருகிறோம். திருவிருந்து என்கிற நற்கருணையை
தவறாது ஆசரிக்க வேண்டும் அவ்வளவுதான்.
நமது கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எடுத்துக்
காட்டும் எந்த ஒரு ஞாபகார்த்தமும் அவருடைய ஜனங்களுக்கு மிகவும் மதிப்பிற்குரியதாயிருக்கிறது.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்பவர்களுக்கும், மரணத்தை தெரிவிப்பவர்களுக்கும்
ஈஸ்டர் ஞாயிறு மட்டுமல்ல, ஒவ்வொரு ஞாயிறும்
உயிர்த்தெழுதல் ஞாயிறுதான். வாருங்கள்! நமது இரட்சகரும் மீட்பருமாகிய உலகின் பாவம்
சுமந்து தீர்த்த பஸ்கா பலியான தேவாட்டுக்குட்டியுமான கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவை
தொழுது கொள்ளுவோம். ஒவ்வொரு ஞாயிறு ஆராதனையிலும் தவறாது தொழுவோம் வாருங்கள்.