பிப்ரவரி 15, 2017

“முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”

Image result for கிரீடம்
“முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”

திறவுகோல் வசனம்: உன்னதப்பாட்டு: 3:11 – “சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”.

தமிழக கிராமப்புறங்களில் ஒருவித பழக்கவழக்கம் மக்களிடையே உண்டு. அதென்னவெனில், பெண்பிள்ளையில்லாத வீடுகளில் ஆண்பிள்ளைக்கு தலையில் சடை பின்னி, பூ வைத்து, தாவணி போட்டு அழகு பார்ப்பார்கள். ஆண்பிள்ளையில்லாத வீடுகளில் பெண்பிள்ளைக்கு ஆண்பிள்ளைக்குரிய ஆடைகளை அணிவித்து வாடா போடா என்று அழைத்து இல்லாத குறையை போக்கிக் கொள்வது வழக்கம்.

அதுபோல, சாலமோனின் தாயாருக்கு ஒருவித பழக்கம் இருந்திருக்கிறதுபோல… அதென்னவெனில், சாலமோனின் சிறுவயதிலேயே தன் மகனுக்கு இராஜ கிரீடம் சூட்டி சூட்டி மகிழ்வாள். எதிர்காலத்தில் தன் மகன் நாடாள வேண்டும் என்ற கனவுகளோடு அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின ராஜ முடி தாங்கிய அக் கிரீடமானது பின்னாட்களில் எப்படி சாலமோனுக்குக் கிடைத்தது என்பதைக் குறித்து இப்பகுதியில் நாம் தியானிப்போமாக.

பெற்றோர்களின் கனவுகள் எல்லாம் பிள்ளைகளின் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் விருப்பமாயிருந்தாலும், அது நிறைவேற வேண்டுமானால் அதற்கு அந்த பிள்ளைகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். அதற்கு தேவ கிருபையும், தேவச் செயலும் நேரிட வேண்டும். பிள்ளைகளைக் குறித்ததான கனவுகள் எப்போதும் பெற்றோர்களுக்கு மிக உயர்வானதாகவே காணப்படும். தங்களைப் பார்க்கிலும், தாங்கள் அடைய முடியாத உச்சத்தை, தன் பிள்ளைகள் அடைய வேண்டும் என்பதே ஒவ்வொரு தாய் தந்தையின் விருப்பமாயிருக்கும். அதற்காகவே தங்கள் வாழ்நாளெல்லாம் போராடி பிரயாசப்படுவார்கள். இதை ஒவ்வொரு பிள்ளைகளும் உணர்ந்திட வேண்டியது மிக அவசியம்.

நீதிமொழிகள்: 27:24 – “செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?” என்று வேதம் கேட்கிறது.

செல்வம் நிலையாது; கிரீடம் நிலைநிற்குமோ? இரண்டுமே நிலையானதல்ல. இவையிரண்டும் அவரவர் வாழ்வில் நிலைநிற்க தேவதயவு, தேவ கிருபை தேவை. செல்வமும் நிலையான கீர்த்தியும் நிலைநிற்க நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கு சாலமோனின் தாயார் சூட்டின முடியோடிருக்கிற அவரை பார்க்க வேண்டும்.  

சாலமோனுக்கு கிரீடம் வருவதற்கு முன்பு இந்த கிரீடம் வேறு இரண்டு பேருக்கு கிடைத்தது. மூன்றாவதாகத்தான் சாலமோனுக்கு கிடைத்தது.

1.   சவுலின் கிரீடம்:

1சாமுவேல்: 8:20 – “சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்த வேண்டும் என்றார்கள்”.

இஸ்ரவேலுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று ஜனங்கள் வற்புறுத்திக் கேட்டபடியினால், ஜனங்களின் விருப்பத்திற்கேற்ப கிடைத்த கிரீடம்தான் சவுலுக்கு கிடைத்த கிரீடம்.

1சாமுவேல்: 8:7 – “அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்”.

ஜெபத்தினாலோ, விசுவாசத்தினாலோ, தேவசித்தத்தினாலோ இஸ்ரவேலுக்கு ராஜா ஏற்படுத்தப்படவில்லை. தேவனுடைய ஆளுகை வேண்டாம் என்று உதறி, புறஜாதியாரைப்போல மனித ஆளுகை – ராஜா வேண்டும் என கேட்டதினால் சவுலுக்கு கிரீடம் கிடைத்தது.

இஸ்ரவேலரின் பிரச்சினையை சற்று உற்றுக் கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நமக்குப் புலப்படும். வனாந்திரத்தில் கன்றுக்குட்டியை வழிபட்டு விக்கிரகாராதனைக்குள் சென்றார்கள். இங்கு புறஜாதியாரைப்போல ஒரு ராஜாவைக் கேட்டு மனித வழிபாட்டிற்குள் கடந்து செல்கிறார்கள்.

இவ்விரண்டு இடங்களிலும் தேவ ஆளுகையை விட்டு விலகி விக்கிரக ஆராதனைக்குள் நுழைவதை நாம் காண முடியும்.

கிரீடம் – “ஆளுகை”  “அதிகாரம்”  “கீர்த்தி” யைக் காட்டும். கிரீடம் மற்றும் ராஜமுடி தேவனால் கொடுக்கப்படுகிறது. நாம் ஆராதிக்கும் தேவன் இராஜாக்களைத் தள்ளி இராஜாக்களை ஏற்படுத்துகிறவர். அப்படி ராஜ அதிகாரம் பெற்றவர்கள் ராஜாதி ராஜாவாகிய கர்த்தருக்கு கீழ்படிந்து இராஜாங்கத்தில் தேவசித்தம் செய்ய வேண்டும். அப்படி செய்ய மறுத்திட்டபோது கிரீடம் இடம் மாறுகிறது. கிரீடம் நிலையற்றதாகிறது.

2.   தாவீதின் கிரீடம்:

1சாமுவேல்: 13:14 – “இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள் மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ள வில்லையே என்று சொன்னான்”.

சவுலின் கிரீடம் தாவீதுக்கு செல்ல காரணம் – சவுலின் கீழ்படியாமை மட்டும் காரணமல்ல

தாவீது – கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவன். எப்படி? தாவீது துதிப்பவன், ஜெபிப்பவன், ஆராதிப்பவன், புகழ்ந்து பாடுவன். இவைகள்தான் கர்த்தரின் இருதயத்தைத் தாவீது கவர்ந்து கொண்டதின் இரகசியம்.

துதிப்பவனுக்கே கிரீடம்
ஜெபிப்பவனுக்கே கிரீடம்
ஆராதிப்பவனுக்கே கிரீடம்
கர்த்தரைப் பாடுகிறவனுக்கே கிரீடம்

தாவீதுக்கு – மக்களால் மனிதனால் கிரீடம் வரவில்லை. சவுலினால் வரவில்லை. ஆவிக்குரிய தகுதியினால் வந்தது. முதலில் ஆவிக்குரிய தகுதி; பின்பு, கிரீடம்.

சாமுவேல் – இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ண வந்த போது – அவனுக்கு முன்பாக வந்தவர்களின் தோற்றத்தை, முகத்தைக் கண்டு மதிப்பிட்டான். (1சாமுவேல்: 16:6).

சவுலின் வேலைக்காரன் தாவீதின் திறமையைக் கண்டான் (1சாமுவேல்: 16:18)

கர்த்தரோ, தாவீதின் இருதயத்தைக் கண்டார் (1சாமுவேல்: 16:7); சங்கீதம்: 45:1 – “என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக்குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி”. ஆம்! தேவனாகிய கர்த்தர் தாவீதிடம் இப்படிப்பட்ட இருதயத்தைக் கண்டார்.

கிரீடம் – தோற்றத்திற்கும், உருவ அமைப்பிற்கும், திறமைக்கும் அல்ல; நல்ல இருதயத்திற்கே கிரீடம்.

சவுலுக்கு அடுத்து கிரீடம் சவுலின் குமாரனாகிய யோனத்தானுக்கு போக வேண்டிய கிரீடம் – தாவீதுக்கு கிடைத்தது.

ஏன் யோனத்தானுக்கு கிரீடம் கிடைக்கவில்லை?

ராஜாவுக்கு அடுத்து அவரது குமாரனுக்கு கிடைக்க வேண்டியதுதானே முறை?!

“… கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?”

எப்படி இந்த முறை அல்லது வரிசை மாறியது?!!  

யோனத்தான் வேண்டுமானால் தாவீதுக்கு நல்ல நண்பனாக, நல்ல மச்சினனாக இருந்திருக்கலாம். நட்பின் இலக்கணம், நட்பிற்கு ஒரு உதாரணம், உயிர் காப்பான் தோழனாக இருந்திருக்கலாம். அவைகளெல்லாம் நல்ல சுபாவங்கள் தானே தவிர தேவனுடைய இருதயத்தை கவர்ந்து கொள்ளாது.

வேதம் சொல்வதென்ன? உபாகமம்: 6:5,6 – “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக. இன்று நான் உனக்கு கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது”.
மனிதனோடு உறவாடுவதைவிட மேலானது தேவனோடு உறவாடுவது ஆகும். யோனத்தான் இதில் குறைவு காணப்பட்டான்.

தேவனாகிய கர்த்தருக்குத் தேவையெல்லாம் – தன்னிடத்தில் அன்பு கூறுகிறவன்; தன்னை மகிமைப்படுத்துகிறவன்; தன்னைத் துதிக்கிறவன்; தன்னைப் பாடுகிறவன்; தன்னை ஆராதிப்பவன்; தன்னிடம் ஜெபிப்பவன் மட்டுமே. இதை அறிந்தவர் கிரீடமும் ராஜமுடியும் கீர்த்தியும் அடைவர்; அறியாதவர் அனைத்தையும் இழந்தவராவார்.

இருதயத்திற்கேற்றவனைக் கர்த்தர் தேடும்போது – யோனத்தான் கர்த்தருக்கு முன்பாக தகுதியற்றவனாய் காணப்பட்டான். மனுஷனுக்கு முன்பாக நட்பில் தகுதியானவனாகக் காணப்பட்டவன், கர்த்தருக்கு முன் தகுதியிழந்தவனாக காணப்பட்டான். வெறும் மனித உறவுகள், மனுஷீக சம்பாஷனைகள், மனித நட்புகள் அனைத்தும் கர்த்தருக்கு முன்பாக ஒன்றுமேயில்லை.

3.   சாலமோனின் கிரீடம்:

தாவீதுக்கு அடுத்து அப்சலோமும், அப்சலோமுக்கு பின்பு அதோனியாவும் தாவீதின் கிரீடத்துக்கு ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவரும் அதை அடையமுடியவில்லை. சவுலிடமிருந்த கிரீடம் தாவீதிடம் வந்தது; தாவீதிடம் இருந்த கிரீடம் சாலமோனுக்கு கிடைத்தது எப்படி?

தாவீதின் குமாரன் என்பதினால் மாத்திரம் சாலமோனுக்கு கிரீடம் கிடைக்கவில்லை. கிரீடத்தை அவன் யாரிடமிருந்தும் தட்டிப் பறிக்கவுமில்லை. கிரீடம் அவனுக்கு வந்தடையத்தக்க தகுதியை அவன் பெற்றிருந்தான். அவ்வளவே.

அப்சலோமும், அதோனியாவும் ஆசைப்பட்டனர். ஆனால், அதற்குரிய ஆவிக்குரிய தகுதிகளை தங்களிடம் வளர்த்துக் கொள்ளவோ, தேவனாகிய கர்த்தரின் இருதயத்தை கவர்ந்து கொள்கிற நற்குணங்களோ அவர்களிடத்தில் இல்லாதிருந்தது. தாவீது ராஜாவுக்கு குமாரனாக பிறந்திருந்தால் மட்டும் போதும் என அவர்கள் கருதியிருந்தனர். இராஜகுமாரர்கள் என்கிற தகுதி ஒன்று போதும் என மனக்கணக்கிட்டிருந்தனர்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருப்பதே போதும் இரட்சிப்படைவதற்கு என கருதுவது மிக ஆபத்தானது. ஒவ்வொரு ஆத்துமாவும் தனிப்பட்ட விதத்தில் தேவனுடைய இரட்சிப்பையும், பாவ மன்னிப்பையும் பெற்று மீட்பு பெற வேண்டியது அவசியம்.

சாலமோன் தாவீதுக்கு குமாரனாகப் பிறந்திருந்தும் அதை மட்டும் மேன்மையாக எண்ணி இறுமாந்திடாமல், தேவனோடு தனிப்பட்ட முறையில் உறவாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடியவன். கருத்தோடு ஜெபிப்பவன். இராஜாவானதினால் மட்டும் ஜெபிப்பவனல்ல. அப்பொழுது மட்டும் திடீரென ஜெபம் வந்துவிடாது. ஜெபிக்கக்கூடிய ஒருவனால்தான் எவ்விடத்திலும், எந்நிலையிலும் ஜெபிப்பவனாக இருக்க முடியும். அதுவும் தூக்கத்தில் கூட மிகத் தெளிவாகவும், கருத்தாகவும் ஜெபிக்கும் ஜெப ஆவி உடையவனாய் இருக்கிறான். தாவீதின் பிள்ளைகளில் சாலமோன் மட்டுமே நன்கு ஜெபிக்கக்கூடியவனாய் இருந்திருப்பதை வேதத்தில் காண்கிறோம் (1இராஜாக்கள்: 3:5-14).

சவுலுக்கு நிலைத்திராத கிரீடம்
யோனத்தானுக்கு கிடைக்காத கிரீடம்
அப்சலோமுக்கு வாய்க்காத கிரீடம்
அதோனியாவுக்கு அடையமுடியாத கிரீடம்
தாவீதுக்கும், அவனது குமாரனாகிய சாலமோனுக்கும் கிரீடம் வாய்த்தது.

காரணம்?

தாவீது – துதிப்பவன்; ஆராதிப்பவன்; பாடுபவன்; ஜெபிப்பவன்

சாலமோன் – கருத்தாய் ஜெபிப்பவன்

உன்னதப்பாட்டு: 3:11 – “சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”.

இதன் பொருள் என்ன?

சாலமோனை – இரட்சகர் இயேசுவுக்கு ஒப்பிடுகிறேன்

கலியாண நாள் – நாம் இரட்சிக்கப்பட்ட நாள்; அவரோடு உடன்படிக்கை செய்த நாள்

மனமகிழ்ச்சியின் நாள் – ஞாயிறு ஆராதனை; வாரந்தோறும் ஆராதனையில் மனமகிழ்ச்சியோடு ஆராதித்தல்

சீயோன் குமாரத்திகளே – சபையோரே! கர்த்தரால் மீட்கப்பட்டவர்களே!

இப்பொழுது வசனத்தை இப்படி வாசித்துப் பாருங்களேன்…

“கர்த்தரால் மீட்கப்பட்டவர்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய (தேவனை) இயேசுவை இரட்சிக்கப்பட்ட நாளிலும், ஞாயிறு ஆராதனையிலும் கிரீடம் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”

சங்கீதம்: 34:5 – “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை”

கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்தும், சாபங்களிலிருந்தும், வியாதிகளிலிருந்தும், மரணக்கட்டிலிருந்தும், நரகாக்கினையிலிருந்தும் மீட்டெடுக்க, தம் ஜீவனையே நமக்காக பலியாகக் கொடுத்தார். அதற்கு இவ்வுலகம் கொடுத்த பரிசு – தலையில் முள்கிரீடம்.

நம்மை மீட்க தலையில் முள்கிரீடம் சூட்டப்பட்டு ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள். மீட்படைவீர்கள்.

நம் வாழ்வு நிலைபெற, வாழ்வு வளம் பெற, செல்வம் நிலைத்திருக்க ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நினைத்துப் பார்த்திராத மேன்மை பெற ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நிலையற்ற வாழ்வில் நிம்மதி பெற ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நிலையற்ற வாழ்வில் நிரந்தரமான ஆசீவாதம் பெற ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நம் தலையில் கிரீடம் சூட்டி மகிழ, அவர் தம் தலையில் முள்கிரீடம் சூட்டிக் கொண்ட ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நம் வாழ்வில் அனைத்தும் ஈடேற, நிலைபெற – துதியுங்கள், ஜெபியுங்கள், பாடுங்கள், ஆராதியுங்கள்

கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!