டிசம்பர் 31, 2016

புத்தாண்டுச் செய்தி - 2017 "அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்"

Image result for micah: 7:14

“உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்”  

திறவுகோல்வசனம்: மீகா: 7:15 - “உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்”.

இப்புத்தாண்டில் தேவனாகிய கர்த்தர் நமக்குத் தந்துள்ள வாக்குத்தத்தம் இதுதான்.
நடப்பதற்க்கு  அரிதான காரியங்களைத் தான் நாம் அதிசயம் என்கிறோம். நம் வாழ்வில் நினையாத நாழிகையில் எதிர்பாராமல் நடக்கும் நன்மையான ஈவுகளைத்தான் நாம் அதிசயங்கள் என்கிறோம்.

உங்கள் வாழ்விலும், உங்கள் குடும்பத்திலும், உங்கள் தொழில் வியாபாரத்திலும், உங்கள் பொருளாதாரத்திலும், உங்கள் ஊழியத்திலும் நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர் அதிசயங்களைக் காணச் செய்யப் போகிறார். உங்கள் வாழ்நாளில் எதெல்லாம் நடக்கவே சாத்தியமில்லையென கருதினீர்களோ… அவைகளிளெல்லாம் நீங்கள் இனிமேல் தேவனுடைய அற்புதங்களைக் காணப் போகிறீர்கள். முடியவே முடியாது, நடக்கவே நடக்காது என்ற சொற்கள் இனி உங்கள் விசுவாச வாழ்வில் உச்சரிக்க விடவேமாட்டார். இவ்வாண்டு முழுவதும் உங்களை அதிசயங்களைக் காணப்பண்ணுவாராக! ஆமென்! அல்லேலூயா!

மீகா: 7:14 – “கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக”

ஒவ்வொருநாளும் நம் வாழ்வில் அற்புதங்களைக் காண, ருசிக்க என்ன செய்ய வேண்டும்? தேவன் யாருக்கெல்லாம் அற்புதங்களைச் செய்வார்? அற்புதங்களைப் பெற நிபந்தனைகள் என்ன? என்பதையெல்லாம் இப்பகுதியில் தியானிக்கப் போகிறோம். வாருங்கள்.

1.   கர்மேலின் நடுவிலே வாசமாயிருக்கிறவர்களுக்கு கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவார்: மீகா: 7:14

கர்மேல்” என்பதற்கு “கனி தரும் தோட்டம்” என்பது அர்த்தமாம். கர்த்தரின் தோட்டம் – கனி தரும் தோட்டம். அதுவே நம் “நேசரின் தோட்டம்”.

இத்தோட்டத்தில் உன்னதப்பாட்டு : 4:13-16 – “உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச் செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச் செடிகளும், சந்த விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது. தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது. வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக”

கர்த்தருக்கு வாசனைவீசும் நற்கந்தமாய் விளங்குகிற சகலவித தேவஜனங்கள் நிறைந்திருப்பார்கள்; சகல சத்தியத்திலும் நடத்திச் செல்ல ஜீவத்தண்ணீராகிய பரிசுத்தாவியானவரின் நடத்துதல் நீரூற்றாக, துரவாக, வாய்க்கால்களாக உண்டாயிருக்கிறது; வாசனை வீசும் உன் சாட்சியின் வாழ்வு வேதவசனத்தோடு இசைந்து வாடையாக எழும்பி, தென்றலாக மாறி, கர்த்தரின் கனிதரும் நேசரின் தோட்டமாகிய தேவனுடைய சபையில் நற்கந்தமாக வீசுவாயானால்… என் நேசர் தம்முடைய நேசரின் தோட்டத்துக்கு வந்து, தோட்டத்தில் விளைந்த தமது அருமையான கனிகளை புசிப்பார்.

கனிதரும் தோட்டமாகிய கர்மேலுக்கு அடிக்கடி வந்து சென்ற தீர்க்கதரிசிகள் இரண்டுபேர். 1. எலியா 2. எலிசா. கனிகள் நிறைந்த தோட்டத்திற்குள் வானரங்களும், பறவைகளும் ஈர்க்கப்படுவது இயற்கைதானே! கர்மேல் கனிதரும் தோட்டம் மட்டுமல்ல. குளிர்ச்சியான குகைகள் நிறைந்தது. கர்மேல் என்பது ஒரு மலைத் தொடராகும். செழிப்பான தோட்டங்கள் நிறைந்த ஒரு மலைத்தொடர். அக்குகைகள் தேவனோடு தனித்து ஜெபிப்பதற்கு இவர்களிருவருக்கும் பயன்பட்டிருக்கலாம்.

கர்மேல் – கர்த்தரை விட்டுவிலகி விக்கிரகாராதனை செய்த பாவிகளின் நடுவே தன்னை மெய்த்தெய்வமாக நிரூபணம் செய்த இடம் கர்மேல். பக்தி வைராக்கியமுள்ளவர்களின் சொர்க்கபூமி கர்மேல். கர்த்தரோடு உறவாடுகிற இடம் கர்மேல். அடுத்தடுத்து பக்தி வைராக்கியமுள்ள ஆவிக்குரிய தலைவர்கள் எழும்பிய இடம் கர்மேல். தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் வாசம்பண்ணுமிடம் கர்மேல். கர்த்தருக்குள் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிற, கற்றுக் கொள்கிற, சீஷத்துவத்தைப் பெறுகிற இடம் கர்மேல் என்னும் கனிதரும் தோட்டம். அது கர்த்தரின் தோட்டம். அதுவே நமது நேசரின் தோட்டம்.

வேதத்தின் மகத்துவங்களை அறிய விரும்புகிறவர்களும், சீஷத்துவத்தில் வளர விரும்புகிறவர்களும், கர்த்தருக்கு நற்கனிகளை தர வாஞ்சிக்கிறவர்களும், வாசனை வீசுகிற சாட்சி நிறைந்த வாழ்வுவாழ விரும்புகிறவர்களும் இத்தோட்டத்தின் நடுவிலே வந்து வாசம் பண்ண விரும்புவார்கள். சபையாகிய இத்தோட்டத்தில் இணைகிறவர்கள், தேவனாகிய கர்த்தரின் தோட்டத்தின் நடுவிலே வாசம் பண்ண வாஞ்சிக்கிறவர்களுக்கே தேவனாகிய கர்த்தர் தினம் தினம் அற்புதங்களைச் செய்ய வல்லவராயிருக்கிறார்.

சபையோடு இணையாதவர்கள் இணைந்திராதவர்களுக்கு அற்புதஅதிசயங்கள் இல்லை. ஒருவேளை புதியவர்கள் இரட்சிக்கப்படும்படி அவ்வப்போது அற்புதங்கள் நடக்கலாம். அற்புத அதிசயங்களைப் பெற்றும் தேவனோடும் சபையோடும் இணைந்திராதவர்களுக்கு அதிசயங்கள் தாமதமாகலாம். அனுதினமும் அற்புதங்களைக் கண்டிட தேவசபையில் தேவனோடு ஐக்கியப்படுவது மிக அவசியம். ஏனெனில், “இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்” (அப்போஸ்தலர்: 2:47).

நாம் சபையில்தான் வாசம் பண்ண வேண்டும்; அது எந்தளவிற்கு முக்கியமானது என்பதை நாம் உணர்ந்திட தேவனாகிய கர்த்தரே இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவரையும் சபைக்குள் கொண்டு வந்து சேர்க்கிறதை நாம் வாசிக்கிறோம். நாம் சபைக்குள் வந்தால் மாத்திரம் போதுமானதல்ல; நாம் சபை நடுவே, சபைக்குள்தான் வாசம் பண்ண வேண்டுமென்று ஆவியானவர் விரும்புகிறார். பிரிந்து போகிறவன் தன் இச்சையின்படிதான் பிரிந்து போகிறானே தவிர … ஆவியானவரின் சித்தப்படியல்ல. ஆவியானவரின் சித்தம் சபையில் ஐக்கியமாய் இருப்பதுதான்.

ஆதிசபையார் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் அந்நியோந்நியத்திலும் அப்பம் பிட்குதலிலும் ஜெபம் பண்ணுவதிலும் உறுதியாய் தரித்திருந்தனர் (அப்போஸ்தலர்: 2:42). கிட்டத்தட்ட இரட்சிக்கப்பட்டவர்கள் சபையோடு பிணைக்கப்பட்டிருந்தனர் எனச் சொல்லலாம். ஆதிதிருச்சபையார் வாரத்திற்கொரு சபை, மாதத்திற்கொரு கூட்டம் என்று அங்குமிங்கும் அலைந்து திரியவில்லை. சபைகூடிவருதலை அவர்கள் விட்டுவிடவில்லை. உபத்திரவ காலங்களிலும் அவர்கள் ஆராதனை தடைபடவில்லை. ஆங்காங்கே இஸ்ரவேலிலே இருக்கின்ற மலைக்குகைகளில் பக்தி வைராக்கியத்தோடு ஆராதனையில் பங்கு பெற்றனர். எனவேதான், ஆதித்திருச்சபை அற்புத அதிசயங்களை அனுதினமும் கண்டது.
சபைகூடுதலை முக்கியமாய் எண்ணி, சபையில் நடைபெறும் கூட்டங்களில் உண்மையாய் பங்குபெற்று, சபையின் ஊழியங்களோடும் ஊழியரோடும் இசைந்து ஊழியம் செய்து, கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு உண்மையாயிருப்போமானால், தேவன் நம் வாழ்க்கையில் நிச்சயம் அதிசயங்களைக் காணப்பண்ணுவார். ஆமென்! அல்லேலூயா!

2.   தேவனுடைய உரிமைச் சொத்தாய் இருப்பவர்களுக்கு கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவார்: மீகா: 7:14

மீகா: 7:14 – “…தனித்து வனவாசமாயிருக்கிற…”

உபாகமம்: 33:28 – “இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம் பண்ணுவான்…”

அப்போஸ்தலர்: 2:40 – “… மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் …”

லேவியராகமம்: 20:26 – “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்”.

எண்ணாகமம்: 23:9 – “… அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்…”

ஜாதிகளோடே கலவாமல், பாவம் நிறைந்த உலகத்தில் விக்கிரகாராதனை உள்ள வசிப்பிடங்களில் நாம் அதனோடே கலவாமல், தனித்து பரிசுத்தமாய் காத்துக் கொண்டு வாழவும், அவருக்கு மட்டுமே உரிமைச் சொத்தாகவும் நம்மை அர்ப்பணித்து ஒரு பிரதிஷ்டை பண்ணப்பட்ட வாழ்வு வாழ தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தேவன் தம்முடையவர்களை மிகவும் நேசிக்கிறார்; தம்முடையவர்களை தம்முடையவர்களாகவே இருக்கவே எதிர்பார்க்கிறார். பெருவெள்ளமாக பெருக்கெடுத்து வளர்ந்து வரும் மேற்கத்திய நவீன கலாச்சாரத்திலோ, இந்தியக் கலாச்சாரத்திலோ அலசடிப்பட்டு அடித்துச் சென்று விடாதபடி வேதாகமக் கலாச்சாரத்தில் நிலைநிற்க வேண்டும். “எக்ளீசியா” என்ற கிரேக்க வார்த்தைக்கு “வெளியே அழைக்கப்பட்டவர்கள்” என்று அர்த்தமாம். 

பாவத்தை விட்டு பரிசுத்தமாய் வாழும்படி உலகத்தை விட்டு வெளியே அழைக்கப்பட்டவர்களின் கூட்டத்திற்கு எக்ளீசியா என்று பெயர். எக்ளீசியா என்ற சொல்லைத்தான் சபைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாவம் நிறைந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ அழைக்கப்பட்டவர்கள் நாம். நாம் அனைவரும் கிறிஸ்து என்னும் மணவாளனுக்கு நியமிக்கப்பட்ட வேறுபிரிக்கப்பட்ட கன்னிகைகள் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்நாட்களில் விசுவாச துரோகம் எங்கும் தலைவிரித்து ஆடும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நாம் தேவனுக்கு உண்மையாயிருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

இஸ்ரவேல் தேசம் பாவத்திலே மூழ்கி விக்கிரகாராதனைக்குள் சென்றபோது கர்த்தருக்காக வைராக்கியமாயிருந்த தேவனுடைய மனிதனாகிய எலியாவின் நாட்களில் தேவன் செய்த அதிசயமான காரியங்களைப் பாருங்கள். தேவனாகிய கர்த்தரையன்றி வேறெந்த தெய்வங்களுக்கும் கையெடுக்காமலும், முழங்கால்களை முடக்காமலும், பணத்திற்காகவும், உலக இச்சைகளுக்காகவும் கர்த்தரை விட்டுப் பின் வாங்காமலும் தீர்க்கதரிசி எலியாவைப் போல தேவனாகிய கர்த்தருக்கு வைராக்கியமாய் இருப்போமானால், அவருடைய உரிமைச் சொந்தாய் மாத்திரம் இருப்போமானால் நிச்சயம் உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தேவன் அதிசயங்களைக் காணப் பண்ணுவார்.

3.   தேவனுடைய மேய்ச்சலை மேய்கிற ஜனங்களுக்கு கர்த்தர் அதிசயங்களைக் காணப் பண்ணுவார்: மீகா: 7:14

1நாளாகமம்: 4:41 – “… தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்”. மேய்ச்சல் இல்லாத இடங்களில் ஜனங்களும் இருக்க மாட்டார்கள்; ஆடுகளும் இருக்காது. எனவே, சபை மேய்ப்பர்கள் ஆடுகளுக்கு தேவையான ஆகாரங்களை ஆயத்தமாக்கி வைத்திருக்க வேண்டும்.

ஏசாயா: 7:18,19 – “அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்”.

மேய்ச்சல் இருக்கிற இடந்தேடி வரும்படி தேவனாகிய கர்த்தர் ஈயையும், தேனீயையும் கூட விசிலடித்து கூப்பிட்டு விடுவாராம். பயில் காட்டி – என்றால் விசிலடிப்பது என்று பொருள். எனவே, நம் சபைகளில் நல்ல ஆரோக்கியமான தரமான தேவனுடைய உபதேசம் நிறைந்த சபையாக, வேதவிளக்கங்களை வியாக்கியானப்படுத்தி கொடுக்கிற சபையாக எப்பொழுதும் ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை இருக்கும் இடத்திற்கு தேவனே ஆத்துமாக்களை விசிலடித்து அழைத்து சபையில் சேர்த்து விடுவார்.

எசேக்கியேல்: 34:14 – “அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்திலே படுத்துக் கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்”.

நல்ல மேய்ச்சலைக் கொடுக்கும் மேய்ப்பனுக்குக்கீழ் மேய்ப்பார். அது நல்ல தொழுவமாயிருந்தால் அங்கேயே படுத்துக் கொள்ளும். அங்கேயே நிரந்தரமாய் தங்கி தாபரித்து மேய்ச்சலை தருகின்ற மேய்ப்பனுக்கு கீழாக ஆவிக்குரிய மேய்ச்சலை மேயும். தொழுவத்திற்கு தொழுவம் மாறாமலிருக்கும். மேய்ச்சலுக்கு மட்டுமல்ல, நல்ல விசாரிப்பும், அன்பும், உபசரிப்பும், அரவணைப்பும் உள்ள இடங்களில் ஆடுகள் படுத்துக்கொள்ளும்.

யோவான்: 6:67-69 – “அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்திரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.

ஒரு ஆத்துமாவை நித்திய ஜீவ வசனங்களுக்குள் கொண்டு வந்து இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கவும், அறியவும் செய்து விட்டால் போதும் … அந்த ஆடுகள் தொழுவத்தை விட்டு நீங்காமல் படுத்திருக்கும். ஒரு மேய்ப்பனின் வேலை இதுதான் – யோவான்: 10:9 – “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்”. ஒரு ஆத்துமாவின் தாகம் இயேசுகிறிஸ்துவால்தான் தீர்க்கப்பட முடியும். எனவே, எந்தவொரு ஆத்துமாவையும் கிறிஸ்துவுக்குள் சென்று மேய்ச்சலைக் காணச் செய்து விட்டால் போதும், உள்ளும் புறம்பும் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்போது மேய்ச்சலையும், தொழுவத்தையும் விட்டு நீங்காது. இவ்விதம் செய்வோமானால் …. அப்பொழுது ஊழியத்தில் தேவனாகிய கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவார்.

சங்கீதம்: 95:7 – “அவர் நம்முடைய தேவன்; அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே”.

கர்த்தர் நம்மை மேய்க்கிறவர். புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறவர். தேவனுடைய சத்தியமே நமது மேய்ச்சலாகும். எனவே, நாம் தேவனுடைய சத்திய வசனத்தை வாசிக்க வேண்டும்.

ஆடுகள் மேய்ந்தபின் தனியே அமர்ந்து அசைபோடும். அதுபோல நாம் வாசித்த சத்திய வசனங்களை தியானம் செய்ய வேண்டும்.

சங்கீதம்: 1:2,3 – “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிரா மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”.
நாம் வேதத்தை வாசித்து தியானிக்கும்போது நமக்குள் நடப்பதென்ன? நமக்குள் தேவனுடைய வார்த்தையானது, தேவன் மேலுள்ள விசுவாசத்தை அளவில்லாமல் பெருகச் செய்யும். அப்படிப் பெருகும் விசுவாசம் நமது வாழ்க்கையில் அதிசயங்களைக் காணச் செய்யும்.

எனவே, எனக்கன்பானவர்களே!

கர்த்தருடைய சரீரமாகிய சபையில் ஐக்கியமாயிருங்கள். சபையில் கொடுக்கப்படும் நல்ல கொழுமையான ஆகாரங்களினால் செழுமை பெறுங்கள். ஆத்துமாவில் பலப்படுங்கள். உபதேசங்களில் ஊன்றக் கட்டப்படுங்கள். நல்ல மேய்ச்சலே நம்மை பலப்படுத்தும். ஆகவே, தேவனுடைய வசனத்தை இரவும் பகலும் வாசித்து தியானியுங்கள். அப்பொழுது உங்கள் வாழ்வில் தேவனாகிய கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவார். ஆமென்! அல்லேலூயா!

தேவனுடைய சபையாகிய நேசரின் தோட்டத்தின் நடுவே வாசம் பண்ணுகிறவர்களுக்கும், தங்களை தேவனுக்கு உரிமைச் சொத்தாக கொண்டவர்களுக்கும், கர்த்தருடைய மேய்ச்சலை மேய்கிறவர்களுக்கும் இப்புத்தாண்டின் நாளில் மட்டுமல்ல … ஆண்டு முழுவதும் அதிசயங்களை காணப்பண்ணுவாராக! ஆமென்! அல்லேலூயா!

உங்கள் அனைவருக்கும், நேசரின் தோட்டம் ஏஜி சபையின் சார்பாக புது வருட வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.

“கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்” (எண்ணாகமம்: 6:24-26)