“பட்சமாய் …”
திறவுகோல் வசனம்: 1தெசலோனிக்கேயர்: 2:7,8 – “உங்களிடத்தில் பட்சமாய்
நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுவதுபோல, நாங்கள்
உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல்,
நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க
மனதாயிருந்தோம்”
“பட்சமாய்” – என்ற
இந்த வார்த்தைக்கு “சார்பாக; பக்கமாக; சகாயமாக;
ஆறுதலாக; உதவியாக; மனதுக்கு ஏற்ற விதமாக; இனிமையாக” - என்றெல்லாம் அர்த்தங் காணலாம்.
பட்சமாய் இருப்பவர்கள்
நடந்து கொள்ளும் விதம்:
1.
தாயாக, தாய் மனம் கொண்டிருப்பார்கள்
2.
தாய் போன்ற பராமரிப்பும் காப்பாற்றும் தன்மையுமாயிருப்பார்கள்
3.
வாஞ்சையாயிருப்பார்கள்
4.
இரட்சிப்பிற்கேதுவான நற்செய்தியை அறிவிப்பார்கள்
5.
பிரியமாயிருப்பார்கள்
6.
ஜீவனைக் கொடுக்கவும் மனதாயிருப்பார்கள்
7.
பட்சமாயிருப்பார்கள்
பட்சமாய் இருப்பது என்பது ஒருதலைபட்சமாக ஒரு பக்கமாய் செயல்படுவதல்ல;
இரண்டு பக்கமும் அதாவது இருதிறத்தாருக்கும் இருக்க வேண்டும். பட்சமாயிருப்பது என்பது
இரண்டு பக்கமும் பரஸ்பரம் பரிமாறப்படுகிறதாய் இருக்க வேண்டும். எப்படியெனில் …
1தெசலோனிக்கேயர்: 3:6,7 – “இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து
எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும் குறித்தும், நீங்கள் எப்போதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்
கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல
நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்கள் என்பதைக் குறித்தும், எங்களுக்கு
நற்செய்தி சொன்னதினாலே, சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும்
உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக் குறித்து
ஆறுதலடைந்தோம்”
சபையார் ஊழியர்கள் மேலும், ஊழியர்கள் சபையார் மேலும் ஒருவரிலொருவர்
பட்சமாய் இருக்க வேண்டும் என்று அப்.பவுல் கூறுகிறார். இவ்வாறாகத்தான் தெசலோனிக்கேயா
சபையார் பவுலின் மீதும், பவுல் தெசலோனிக்கேயா சபையார் மீதும் பட்சமாயிருந்தனர் என நிருபத்திலிருந்து
அறிகிறோம். இதேபோல, ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்ப அங்கத்தினருக்குள்ளும், உறவுகளுக்குள்ளும்
காணப்படுமானால் அக்குடும்பங்கள் எவ்வளவு இனிமையானவை என்பதை வார்த்தைகளினால் விவரிக்க
இயலாது. அது கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். சபையானாலும், குடும்ப உறவுகளானாலும்,
சமுதாய நிலையானாலும் இவ்விதமாய் இருப்பது தேவசித்தமாகும். அல்லேலூயா!
குடும்பங்களில் ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொண்டால்தான் சபை
சாட்சியாக நன்றாக இருக்கும்; சபையில் ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொண்டால்தான் சமுதாயம்
நன்றாக இருக்கும்; சமுதாயம் ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து கொண்டால்தான் தேசம் சீர்பட்டு
நன்றாக இருக்கும். இப்படி எல்லா தரப்பிலும் பட்சமாக நடக்கும் பட்சத்தில் பரலோகை இவ்வுலகில்
நாம் காண முடியும்.
ஆனால், குடும்பங்களிலும், சபைகளிலும், சமுதாயங்களிலும் ஒருவரிலொருவர்
பட்சமாய் நடந்து கொள்கிறார்களா? ஏன் அவ்வாறு நடக்க இயலவில்லை? ஒருவரிலொருவர் பட்சமாய்
நடந்து கொள்ள என்ன வழி? இதைக் குறித்து நாம் தியானிப்போம் வாருங்கள்.
குடும்பங்களில் பட்சமாயிருத்தல்
1. பாரபட்சமற்ற பட்சமாயிருத்தல்:
ஆதியாகமம்: 37:3,4 – “இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப்
பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும்
அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். அவனுடைய
சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன்
அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப்
பகைத்தார்கள்”.
யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பிடம் பட்சமாய் நடப்பதற்கு எது தடையாக
இருந்தது?
யாக்கோபு, தன் குமாரர் எல்லாரிலும் யோசேப்பை அதிகமாய் நேசித்ததனால்
– யோசேப்பின் சகோதரருக்குள்ளே “பொறாமை” என்கிற ஒரு தீய எண்ணம் உருவாகி அவனிடம் பட்சமாய்
நடந்து கொள்ள முடியாமல் தடையாக நின்றதை காண்கிறோம்.
ஒன்று தகப்பனாகிய யாக்கோபு ஒருதலைபட்சமாக நடந்திருக்கக் கூடாது;
அல்லது அவனது குமாரர்கள் தகப்பனுடைய உள்ளத்தைப் புரிந்து கொண்டு சரி போகட்டும் விடு
என்று இசைந்து போயிருக்க வேண்டும். இது இரண்டுமே நடக்க வழியில்லை. காரணம் … ? யாக்கோபுக்கு
வயதானகாலத்தில் பிறந்தபிள்ளையின்மேல் அதீத பாசம்; அவன் குமாரருக்கோ அதை புரிந்துகொள்ள
இயலாத மதியீனம் நிறைந்த மனது இவையே காரணம். வயதில் முதிர்ந்த யாக்கோபு பிள்ளைகளின்
மனதை புரிந்திருக்க வேண்டும். அப்படி புரிந்திருப்பானானால் மற்ற குமாரருக்கு முன்பாக
பட்சமாய் நடந்து கொண்டிருக்க மாட்டான். எல்லாருக்கு முன்பாக அனைவரையும் சமமாக பாவித்து
நடந்திருப்பான்.
தகப்பனை புரிந்து கொண்ட பிள்ளைகளானால் … “கடைசியாக பிறந்த தம்பி
… நம் தகப்பன் பட்சமாய் நடப்பதுபோல நாமும் தம்பியிடம் பட்சமாய் நடப்போமே …” என்று சொல்லி
நடந்திருப்பார்கள். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. ஒரு குடும்பத்திற்குள் பட்சபாதமோ,
பொறாமையோ, பகையோ யாருக்குள்ளும் சிறிதேனும் வர அனுமதிக்கக்கூடாது. குடும்பத்தலைவரோ,
தலைவியோ கண்டறிந்த மாத்திரத்தில் உடனே அதை ‘களை’ எடுக்க முயற்சிக்க வேண்டும். பட்சபாதமும்
பொறாமையும் பகையும் யாரிடத்திலும் இராதபடி கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடின்,
அது பெரிய குடும்ப உறவுநிலைகளில் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கணவன் மனைவியினிடத்தில் பட்சமாயிருக்க வேண்டும்; மனைவி கணவனிடத்தில்
பட்சமாயிருக்க வேண்டும்; பிள்ளைகள் பெற்றோரிடத்தில் பட்சமாயிருக்க வேண்டும்; பெற்றோர்
பிள்ளைகளிடத்தில் பட்சமாயிருக்க வேண்டும்; மூத்தோர் இளையவரிடத்தில் பட்சமாயிருக்க வேண்டும்;
இளையோர் மூத்தோரிடம் பட்சமாயிருக்க வேண்டும்; அப்படி இருக்க வேண்டுமானால், அன்பானாலும்,
உபசரிப்பானாலும், கரிசனையானாலும், அக்கறையானாலும், அனைத்தும் பட்சபாதமின்றி ஏற்றதாழ்வின்றி
அனைவருக்கும் சமமாக பாவிக்கப்பட வேண்டியது அவசியம். நாம் பெற்ற நமது இரத்த சம்பந்தமான
பிள்ளைகளல்லவா நமது பிள்ளைகள்? அப்படியானால் அவர்கள் நம்மைப்போலவே அதி புத்திசாலிகளாக
இருந்து நமது கிரியைகள் எப்படிப்பட்டது? அதில் வித்தியாசம் உண்டா? என்பதை உடனே கண்டுபிடித்து
விடுவார்கள். பாரபட்சமற்ற கிரியைகளை வெளிப்படுத்துங்கள்.
அன்புத் தாழ்ச்சியே பொறாமைக்கு காரணம்; பொறாமையே பகைக்கு காரணம்;
பகையே கொலைக்கு காரணம். இதுதான் யாக்கோபின் குடும்பத்தில் நடந்த சம்பவங்களுக்கு அடிப்படை
காரணம். இவை ஏதும் நம் குடும்பங்களில் ஏற்படா வண்ணம் பாரபட்சமற்ற அன்பு பகிரப்படட்டும்.
அனைவரிடமும் பட்சமாய் நடப்போமாக!
2. பட்சமாய் பேசுதல்:
ஆதியாகமம்: 50:20,21 – “நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள்;
தேவனோ, இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக
முடியப்பண்ணினார். ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன்
என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே
பட்சமாய்ப் பேசினான்”.
யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு வெகுவாய் தீமை செய்தார்கள். ஆனால்
அவனோ அதை எண்ணி பழிவாங்க துணியாமல், பயத்தோடிருந்த அவர்களுக்கு தைரியம் சொல்லி ஆறுதலாக
பட்சமாய் பேசினான் என்று பார்க்கிறோம். இதுதான் நல்ல இரட்சிப்பின் அனுபவமுள்ள ஒரு ஆவிக்குரிய
தேவபிள்ளையின் குணலட்சணம். இதைத்தான் ஆவிக்குரிய திவ்ய சுபாவம் என்று வேதம் கூறுகிறது.
இதுபோன்ற திவ்விய சுபாவங்கள் நம்மில் வளர இடங்கொடுப்போமாக!
இவ்வாறாக அடைக்கலமாக தன்னிடமாய் வந்த ரூத்திடம், போவாஸ் பட்சமாய்
பேசினதைக் காண்கிறோம். ரூத்: 2:12,13 – “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக்
கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த
உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய
கண்களில் எனக்குத் தயை கிடைக்க வேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும்
சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல்
சொல்லி, உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்”. ஒரு குடும்பம் என்று
சொன்னால் பட்சமாய் இருக்க வேண்டும். ஒருவரிலொருவர் பட்சமாய் நடப்பதும், பேசுவதும்தானே
குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்?! அப்படியிருக்கும்போது, பட்சமாய் நடப்பதிலும்,
பேசுவதிலும் என்ன தயக்கம் இருக்க முடியும்?!
சமுதாயத்தில் பட்சமாயிருத்தல்
1. சமுதாயத்தில் பட்சமாயிருப்பவர்களே நமது சேர்க்கை
1நாளாகமம்: 12:8 – “காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து,
சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற
வெளிமான் வேகம் போன்ற வேகமுள்ளவர்களாயிருந்து,
யுத்த சேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும்
வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது
பட்சமாய் சேர்ந்தார்கள்”.
சங்கீதம்: 118:6,7 – “கர்த்தர்
என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர்
என் பட்சத்தில் இருக்கிறார்…” – என்று தாவீதரசன் கூறுகிறார். தேவனாகிய கர்த்தர்
தாவீதின்பட்சமாய் இருக்கும்போது சகலமும் அவனுக்கு அநுகூலமாக இருக்கிறதைக் காண்கிறோம்.
கர்த்தர் பட்சமாய் இருக்கும்போது மனிதர்களும் பட்சமாய் வந்து சேருகிறதை காண்கிறோம்.
தாவீது கர்த்தரிடத்தில் பட்சமாய் இருந்தான்; கர்த்தர் தாவீதினிடத்தில்
பட்சமாய் இருந்தார். அதன் விளைவு? சிங்கமுகம் போன்றவர்களும், வெளிமான் வேகமுடையவர்களும்,
யுத்த பராக்கிரமசாலிகளும் அவன் பட்சமாய் வந்து சேருகிறதை காண்கிறோம்.
சிங்கமுகம் – தாவீதின் சத்துருக்களுக்கு
வெளிமான் வேகம் – தாவீதின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு
யுத்த சேவகரான பராக்கிரமசாலிகள் – தாவீதின் சத்துருக்களை முறியடிப்பதற்கு
அது மட்டுமா?
1நாளாகமம்: 12:22 – “அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவி செய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால்,
அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்”.
கர்த்தரை தாவீது தன் பட்சமாய் எப்போதும் தக்க வைத்துக் கொண்டான். அதன் பலனை அவன் கண்டான்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?
சங்கீதம்: 146:5 – “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,
தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்”
நம்மைச் சுற்றிலும் உள்ள சமுதாயத்தில் உள்ள பலவான்களையும் பராக்கிமசாலிகளையும்
நம்பட்சத்தில் பட்சமாய் வரவழைக்க நம் தேவனால் கூடும். நாம் கர்த்தருடைய பட்சத்திலிருந்தால்
… அப்படிப்பட்டவர்களை அவர் நம்பட்சத்தில் சேர்ப்பார். பட்சமாயிருப்பவர்களே நமது சேர்க்கையாயிருக்கட்டும்.
தேவனுடைய ராஜ்யத்தை கட்ட தடையாயிருக்கும் தடைகளை முறியடிக்க இப்படிப்பட்ட பட்சமாய்
நடப்பவர்கள் நம்மைச் சுற்றி, நமது சபைகளைச் சுற்றி காணப்படுவார்களாக!
2. சமுதாயத்தில் பட்சமாய் பேசும் அதிகாரிகள்:
2நாளாகமம்: 30:22 – “கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள
எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்;…”
எசேக்கியா இராஜா, லேவியர்களோடு இணக்கமாய் பட்சமாய் பேசினான் என்று
வாசிக்கிறோம். அதனால் விளைந்தது என்ன? ஜனங்கள் பஸ்காவை ஆசரித்தனர்; ஏழுநாள் பண்டிகைகளை
கொண்டாடினர்; ஸ்தோத்திரபலிகளை கர்த்தருக்கு ஏறெடுத்தனர்; கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தனர்.
ஆராதனைக்கு எவ்வித தடைகளும் இல்லை. ஆவிக்குரிய வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் ஊக்குவிப்பாக
இருந்தது. அதுபோல, நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் நம்மிடம் பட்சமாய் பேசுகிறவர்களுமாய்,
ஆவிக்குரிய ஆராதனைகளுக்கு உதவிகரமாய், சுவிஷேச நற்செய்திப் பணிக்கு திறந்த வாசலாய்,
ஆலயத்திற்கு இடம் வாங்க, கட்டிடம் கட்ட அனுமதிக்கிறவராய், தேவஜனங்களுக்கு பாதுகாவலராய்
இருக்க கர்த்தர் நம்பட்சத்தில் இருக்க பிரயாசமெடுப்போம். அவர் நம்பட்சத்தில் இருந்தால்…
இருக்கும்படி நாம் நடந்து கொண்டால் சமுதாயத்தில் இருக்கும் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்,
அதிகாரங்களும் நம்மிடம் பட்சமாய் பேசிட கர்த்தர் அருள் செய்வார்.
அப்.பவுல் தன் பிந்திய அந்திய காலத்தில் சுவிசேஷத்தை அறிவிக்க தடையேதும்
இரா வண்ணம், அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு
என்னும் பேர் கொண்ட நூற்றுக்கு அதிபதி மூலம் தேவன் பவுலை பட்சமாய் நடத்திட உதவினார்.
அப்போஸ்தலர்: 27:1,3 – “… பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த
வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த
யூலியு என்னும் பேர் கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்.
… யூலியு
பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு
உத்தரவு கொடுத்தான்”.
மெலித்தா தீவிக்கு வந்தபோது அத்தீவில் அப்.பவுல் சுவிஷேசத்தை அறிவிக்க,
மெலித்தா தீவின் தலைவன் புபிலியு என்பவன் பட்சமாய் ஏற்றுக் கொண்டான் என்று வாசிக்கிறோம்.
அப்போஸ்தலர்: 28:7 – “தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர் கொண்டவனுடைய நிலங்கள்
அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக் கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்”.
சபையில் பட்சமாயிருத்தல்
1. விதவைகள் விஷயத்தில் பட்சமாயிருத்தல்:
அப்போஷ்தலர்: 6:1 – “அந்நாட்களில், சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள்,
தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு
விரோதமாய் முறுமுறுத்தார்கள்”.
ஆதித்திருச்சபையில், பந்தி விசாரிப்பில் கிரேக்க விதவைகளை சரிவர
விசாரிப்பு இல்லை என்ற ஒரு புகார் எழுந்ததை வாசிக்கிறோம். விதவைகள் ஏற்கனவே, தங்கள்
புருசரை இழந்து பல இன்னல்களுக்கு ஆளானவர்கள். எனவே, அவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு
பலவீனமான நிலையில் இருப்பவர்கள். அவர்களுக்கு தேவை அன்பும் அரவணைப்பும் சரியான விசாரிப்பும்.
இது ஆதிதிருச்சபையில் சற்று குறைவுபட்டுவிட்டது. இதனால் சபையில் முறுமுறுப்புகள் ஏற்படுகிறதை
காண்கிறோம்.
விதவைகள் விஷயத்தில் சரியான விசாரிப்பு திட்டமாய் ஏற்படுத்தப்பட
வேண்டும். அவர்கள் பலவீனமானவர்களானபடியால் அவர்களிடத்தில் பட்சமாய் நடந்திட வேண்டும்.
விதைவைகள் மட்டுமல்லாது, கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியோர்
– இவர்களெல்லாம் சபையில் இருப்பார்களேயானால் சரியான முறையான அன்பான விசாரிப்பு இவர்களுக்கு
அதிகம் தேவைப்படும். அதை பாரபட்சமின்றி பட்சமாய் நடப்பிக்க பிரயாசப்படுவோமாக!
2. புறஜாதிகள் விஷயத்தில் பட்சமாயிருத்தல்:
கலாத்தியர்: 2:11-14 – “… பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல்
குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து
சிலர் வருகிறதற்கு முன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப்
பயந்து விலகிப் பிரிந்தான். மற்ற யூதரும்
அவனுடனே கூட மாயம் பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.
இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது,
எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக
நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்
முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம் பண்ணலாம்?”.
சபையில் இப்படிப்பட்ட ஒழுங்கீனங்கள் வருவதை தேவனாகிய கர்த்தர் விரும்பவில்லை.
சபையின் மேய்ப்பர்கள் மனிதருக்கு அஞ்சாமல், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வசனத்தை நிறைவேற்ற
பாடுபட வேண்டும். மனுசனுக்கேற்ப வேஷமிடாமல், மனுசரைப் பிரியப்படுத்தாமல், தேவநீதியை
நிறைவேற்றும்படி புறஜாதியார் விசயத்தில் பட்சமாய் நடக்க பிரயாசப்பட வேண்டும். சபை போதகப்
பிதாக்கள் மட்டுமல்ல, சபையில் உள்ள தனவந்தர்களும், மேன்மக்களும், புறஜாதியார் விஷயத்தில்
பட்சமாய் நடந்து கொண்டு, தங்களில் குற்றம் சுமராதிருக்க சரியான சத்தியத்தில் போதிக்கப்பட
வேண்டும்.
குடும்பங்களிலும், சபைகளிலும், சமுதாயங்களிலும் ஒருவரிலொருவர் பட்சமாய்
நடந்து கொள்கிறார்களா? ஏன் அவ்வாறு நடக்க இயலவில்லை? ஒருவரிலொருவர் பட்சமாய் நடந்து
கொள்ள என்ன வழி? இதுதான் கேள்வி. அதற்கான விடை இதுதான்:
குடும்பங்களிலும், சபைதனிலும், சமுதாயத்திலும் பட்சமாய் நடந்திட
அன்பு தாழ்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். ஒவ்வொருவரும் யாவரிடமும் பட்சமாய்
நடந்து கொள்ள உறுதியான தீர்மானம் எடுப்போமானால் நல்லதொரு மாற்றத்தை ஆவிக்குரிய வாழ்விலும்,
சபைகளிலும், சமுதாயத்திலும் நாம் காணலாம். ஆமென்! அல்லேலூயா!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!