திறவுகோல் வசனம்: எபேசியர்: 4:15 – “தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும்,
நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக …” என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
புத்தாண்டை எதிர் நோக்கியுள்ள நாம் ... கிறிஸ்து இயேசுவுக்குள் நல்லதொரு வளர்ச்சியை எட்டிவிட ஆயத்தப்படுவோம்.
மத்தேயு: 13:7 – “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப் போட்டது”.
மத்தேயு: 13:26 – “பயிரானது
வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது”.
விதை – எப்பொழுதும்
ஜீவனுள்ளது. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்று ஒரு சொலவடை உண்டு.
மண்ணில் கிடக்கும் விதையானது மழைநீர் பட்டவுடன் முளைவிட ஆரம்பித்து விடும். அதாவது,
வளர ஆரம்பித்து … வளர்ச்சியை நோக்கி பயணப்பட்டு விடும். வளர்ச்சிக்குத் தேவையான காரியங்கள்
அதற்கு தேவைபடும். வளர்ச்சிக்குத் தேவையானவை விதை விதைக்கப்பட்ட இடத்திலேயே அதற்கு
கிடைக்க வேண்டும். அவ்விதைக்கு அந்நிலமே தேவையானதை தரும். அல்லது விதைத்தவன் அதற்கானதை
தர முன்வருவான். இல்லாவிடின் அவ்விதையின் வளர்ச்சி தடைபட்டு விடும்.
விதை – விழுந்த இடங்கள்: 1. வழியருகே 2. கற்பாறை 3. முள் 4. நல்ல நிலம்
விதைக்கு நேரிட்ட பாதிப்பு: 1. பறவைகள் பட்சித்தது 2. வேரின்றி
காய்ந்தது 3. முள் நெருக்கி போட்டது 4. பலன் தந்தது
1.
ஆரம்பமே முடிவானது 2. வேரின்றி உலர்ந்தது 2. பாதிவரை
வந்தும் நெருக்கத்தினால் பலனில்லை 4. நல்லபலன்
1. வேரற்றவன்:
மத்தேயு: 13:6 – “… வேரில்லாமையால் …” - ஒரு விதை வளர முதலில் தேவை வேர். வேர் இருந்தால்தான்
தனக்குத் தேவையான ஆகாரத்தை, நீரை உறிஞ்செடுத்து வளர்ச்சியை நோக்கி செல்லும். வேர் இல்லாவிடின்
நிலத்தில் எவ்வளவுதான் செழுமையான ஆகாரம் (நிலத்தில் – சபையில்) இருந்தாலும் எடுத்துக்கொள்ள
இயலாதே… வளர்ச்சி எவ்விதம் இருக்க முடியும்?
2. பலனற்றவன்:
மத்தேயு: 13:7 – முள் வளர்ந்தபடியால் விதை முளைக்காதபடி விதையை
முள்ளானது மூடிக்கொண்டது. சூரிய வெளிச்சம்படாது; பனித்துளி படாது; மழைநீர் இறங்காது.
தப்பித்தவறி முளைத்தாலும் முள்ளானது நெருக்குகிற நெருக்கங்களினால் அவ்விதையானது வளரமுடியாமலே
குன்றிப்போய் கருகி விடுகிற அபாயம் அதற்கு அதிகமே!
3. களைகளுடன் காணப்பட்டவன்:
மத்தேயு: 13:26 – களைகளின் நடுவே கதிர் விட்ட பயிர். மிகப் பெரிய
ஆச்சர்யம்தான். தன்னைச் சுற்றிலும் ஏராளமான களைகள் காணப்பட்டாலும் கதிர் விடுவதில்
தவறவில்லை. நல்லநிலத்தில் விதைக்கப்பட்டவன் பலன் தருவான். தன்னைச் சுற்றி இருக்கிற
களைகளை குறித்து கவலைப்படாமல் தன் வளர்ச்சியை நோக்கி சீராகப் பயணித்து கதிர் விட்டு
பலன் தருகிறவன். கதிர் தருவதுதான் தன் கடமை; களை பறிப்பது கர்த்தரின் வேலை என்பதை உணர்ந்தவனே
சிறந்தவன்.
இப்படியிருக்க… பிரியமானவர்களே!
புத்தாண்டை எதிர்நோக்கியிருக்கிற நாம் சீரான வளர்ச்சியை நோக்கி
கடந்து செல்வோமாக. வளர்ச்சியை நோக்கி எவ்வாறு கடந்து செல்ல வேண்டும்? எவற்றிளெல்லாம்
நாம் வளர்ச்சி அடைய வேண்டும்? என்பதை குறித்து ஒரு தெளிவு நமக்கு இருப்பது அவசியம்.
கல்வியில் வளர்ச்சி, அறிவில் வளர்ச்சி, தொழிலில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் வளர்ச்சி, ஊழியத்தில் வளர்ச்சி, ஆவிக்குரிய
வாழ்வில் வளர்ச்சி, குடும்ப வாழ்வில் வளர்ச்சி, சபை வளர்ச்சி இப்படி எல்லாவிதங்களிலும்
ஒரு நல்ல வளர்ச்சி பெற நாம் வாஞ்சிப்பது நல்லது. என்றாலும் வேதத்தின் கண்ணோட்டத்தில்
நமது வளர்ச்சி வசனத்தைச் சார்ந்து எவ்விதம் இருக்க வேண்டும் என தியானிப்போம் வாருங்கள்.
1. ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி:
அப்போஸ்தலர்: 22:3 – “நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே
பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே
வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு,
இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக் குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல
நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்”.
ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைய … ஆவிக்குரிய பெற்றோர்களும்,
சரீரப் பிரகாரமான பெற்றோர்களும் நமக்கு அவசியம் தேவை. ஆவிக்குரிய பெற்றோர் கற்றுத்
தருவதை வாழ்வில் கடைபிடித்து வாழ வழிகாட்ட சரீரப்பிரகாரமான பெற்றோர் தேவை. அப்போது
வேதப்பிரமாணத்தின்படி திட்டமாய் போதிக்கப்படவும், தேவனைக்குறித்து வாழ்வில் வைராக்கியமுள்ளவர்களாக
வாழவும் நம்மால் இயலும்.
வளர்ச்சியடைய தன்னடக்கம்,
தாழ்மை தேவை:
a)
லூக்கா: 1:80 – “அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங் கொண்டு, இஸ்ரவேலுக்குத்
தன்னைக் காண்பிக்கும் நாள் வரைக்கும் வனாந்தரங்களிலே
இருந்தான்” யோவான் ஸ்நானகன் என்னும் அந்த பிள்ளை இரண்டு விஷயங்களில் வளர்ந்தது.
1. ஆவியில் 2. தாழ்மையில்.
b)
அப்.பவுல் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச்
செல்ல … தாழ்மையோடு … கமாலியேலின் பாதத்தருகே வளர தன்னை அர்ப்பணித்தான். அதனால்தான்
முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டான் என அறிகிறோம்.
c)
எஸ்தர்: 2:20 – “… எஸ்தர் மொர்தெகாய் இடத்தில் வளரும்போது
அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்து வந்தாள்”
2. உலக வாழ்வில், ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி:
மாற்கு: 4:32 – “விதைக்கப்பட்ட
பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய
நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும்
என்றார்”.
ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் தேவனால் ஒவ்வொருவிதமான நோக்கத்திற்காக
விதைக்கப்படுகிறான். எல்லாரும் ஊழியத்திற்காக விதைக்கப்படுகிறதில்லை; எல்லாரும் உலகப்பிரகாரமான
வேலைகளுக்காக விதைக்கப்படுகிறதில்லை. சிலரை யோசேப்பு, தானியேல், தாவீது போன்று தேசங்களை
ஆளுகை செய்யவும், மோசே, ஆரோன், யோசுவா போன்று தேவஜனங்களை வழிநடத்தவும் கர்த்தர் தெரிந்து
கொள்கிறார். “இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே,
யாருக்குத் தெரியும்?” (எஸ்தர்: 4:14).
விதைக்கப்பட்ட பின்போ …
பஞ்ச காலத்தில் தேவஜனங்களை ஆதரிக்க யோசேப்பு தன் பெற்றோர்களை விட்டு
பிரிந்து எகிப்துக்கு அரசனாக வேண்டியிருந்ததே!
அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து தேவஜனங்களை மீட்க, மோசே தேவனால்
விதைக்கப்பட்டானே!
தேவனால் விதைக்கப்பட்ட பின்போ… விதைக்கப்பட்டவருக்கும், தேவஜனத்திற்கும்
பலன் தருகிறவர்களாக பெரிய பெரிய கிளைகளை விட வேண்டாமா? ஊழியங்கள், சபைகள் பெரிய பெரிய
கிளைகளாகவும், தொழில் வியாபாரங்கள் பெரிய பெரிய கிளைகளாகவும் வளர வளர்ச்சியை நோக்கி
பயணிக்க வேண்டுமென்பது தேவனுடைய விருப்பம் என்பதை அறியுங்கள்.
நமது ஆவிக்குரிய வளர்ச்சியும், உலகப்பிரகாரமான வளர்ச்சியையும் தேவன்
விரும்புகிறார். வளர்ச்சியை நோக்கி கடந்து செல்ல வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார்.
3. ஒருமனம், ஒற்றுமை, ஐக்கியத்தில் வளர்ச்சி:
குடும்பமோ, சபையோ எதுவாயினும், வளர்ச்சியடைய வேண்டுமானால் … ஒருமனம்,
ஒற்றுமை, ஐக்கியம் மிகமிக அவசியம். ஏனெனில், மாற்கு: 3:24-26 – “ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால்,
அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. ஒரு வீடு
தனக்குத்தானே விரோதமாக பிரிந்திருந்தால், அந்த வீடு நிலை நிற்கமாட்டாதே. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப்
பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே” என்று நமது இரட்சகரும்
மீட்பருமான ஆண்டவர் இயேசுகிறிஸ்து நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறாரே!.
யோபு: 39:4 – “அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து,
அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்”. வரையாடுகள், மான்கள் போன்ற ஊழியர்கள் நொந்து
குனிந்து ஆத்துமாக்களை ஆதாயம் செய்வார்கள். ஆனால், அந்த ஆத்துமாக்களோ, சற்றேனும் சிந்தியாமல்
எல்லா நிலைகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, பலப்பட்டு, நன்கு வளர்ந்த
பின்பு, சபையை விட்டு விலகி வேறு சபைகளுக்கு தாவிச் சென்று விடுவார்கள். அல்லது சபையை
பிரித்து சென்று விடுவார்கள்.
பிரிந்துபோய்தான் சபையை கட்ட வேண்டும் என்பதில்லை; இருக்கின்ற சபையிலேயே
இருந்து கொண்டு சபையை பலப்படுத்தி, பெரிய சபையாக, பெரிய ஊழியமாக மாற்ற பிரயாசப்படலாமே.
நமது வரங்களும், தாலந்துகளும் ஸ்தல சபையிலேயே பயன்படுத்தி ஊழிய வளர்ச்சிக்கு பாடுபடலாமே!
நம்மை இரட்சிப்பிற்குள் நடத்திய ஊழியர்கள், ஆவிக்குரிய வழியிலே வழிநடத்தின போதகர்களுக்கு
விரோதமாக செயல்படாமல், அவர்களோடு இசைந்து ஒருமனதோடு, ஒற்றுமையாக இருந்து ஊழியத்தை கட்டும்படி
உதவலாமே! அது எவ்வளவு பெரிய பாக்கியம்! தனித்துதான் ஊழியம் செய்ய வேண்டுமென்றால் …
அதுதான் தேவசித்தம் என்றால் … தவறேதும் இல்லை. முறைப்படி போதகரிடம் கலந்தாலோசித்தால்
… அவரும் சந்தோஷத்துடன் ஒரு புதிய ஊழியத்தை செய்திட மனப்பூர்வமாக சந்தோசமாக உதவிட முன்வருவாரே!
செய்வீர்களா?!
4. அறிவிலும் ஆலோசனை முதிர்விலும் வளர்ச்சி:
2நாளாகமம்: 10:8 – “முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு,
தன்னோடே வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனை பண்ணி,”
அக்காலங்களிலே ராஜாக்கள் ஒரு காரியத்தை நிருணயம் செய்ய கர்த்தரிடத்தில்
விசாரிப்பார்கள். தீர்க்கதரிசிகளிடத்தில் விசாரிப்பார்கள். தேவசித்தம் என்ன என்பதை
அறிய ஏபோத்து மற்றும் ஊரீம் தும்மீம் என்கிற கற்களைக் கொண்டு அறிவார்கள். இது எதுவும்
இல்லாவிடின், மூப்பர்களிடமாவது விசாரிக்க வேண்டும். ஆனால், சாலமோனின் குமாரனாகிய ரெகோபெயாம்
இவைகளில் ஒன்றையும் நாடாமல் ஒரு புது வழியை உருவாக்குவதை பார்க்கிறோம். ஆனால், அவ்வழிகாட்டிகளோ…
எதிராக நிற்கிற கூட்டத்தின் மனதை அறியாதவர்கள். தற்குறிகள். எடுத்தேன் கவிழ்த்தேன்
என முடிவெடுக்கும் அவசர குடுக்கைகள். அனுபவமற்றவர்கள். வாலிபர்கள்.
எப்போதுமே எதிராக வருகிற கூட்டம் ஒரு முடிவோடுதான் வந்து நமக்கெதிரே
நிற்பார்கள். கேள்வி கேட்பார்கள். நமது பதில் எதிராக நிற்கிற கூட்டத்திற்கு சாதகமாக
அல்லது இணக்கமாக இல்லாத பட்சத்தில் பின்விளைவுகள் மிகக் கடினமானதாகவே இருக்கும் என்பதை
நாம் அறிந்து புரிந்து வைத்திருக்க வேண்டும்.
எடுக்கும் முடிவும், கொடுக்கும் பதிலும் மிகச் சரியாக இருக்க வேண்டும்.
இல்லாமற்போனால்… எந்த பின்விளைவுகளுக்கும் நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
நீதிமொழிகள்: 11:14 – “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்
உண்டானால் சுகம் உண்டாகும்”. ஆலோசனை கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டியதுதான் நல்லது.
தவறில்லை. ஆனால், முடிவு நாம்தான் தேவசித்தப்படி எடுக்க வேண்டும்.
ஜனங்களை நடத்த சாலமோன் கர்த்தரிடம் ஞானத்தைக் கேட்டான். மகனோ கர்த்தரிடம்
கேளாமல் வாலிபரிடம் கேட்கிறான். அறிவில் முதிர்ச்சியும், ஆலோசனையில் தேவதயவும் நமக்கு
கிடைக்கும்படி தேவனிடம் கேட்க வேண்டும்.
5. கீர்த்தியில், வசனத்தில் வளர்ச்சி:
1சாமுவேல்: 3:19,20 – “ சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட
இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக
விடவில்லை” “சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள
சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது”.
காரணம்? “அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே
விழுந்துபோக விடவில்லை”
யோபு: 8:11 – “சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?”. அதுபோல வேதவசனமில்லாமல் நம் ஆவிக்குரிய வாழ்விலும், உலக வாழ்விலும் எவ்வித வளர்ச்சியையும் காண இயலாது.
1பேதுரு: 2:3 – “நீங்கள்
வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல்
வாஞ்சையாயிருங்கள்”.
சங்கீதம்: 92:12 – “நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள
கேதுருவைப்போல் வளருவான்”.
பனையைப் போலும், கேதுருவைப் போலும் கர்த்தருடைய ஜனத்தின் வளர்ச்சி
காணப்படும்.
ஏசாயா: 44:3-5 – “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல்
ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என்
ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள
அலரிச் செடிகளைப்போல வளருவார்கள்”.
வசனத்தில் தாகமுள்ளவனுக்கு
கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:
1.
ஆசீர்வாதம் 2. அபிஷேகம், 3. பின்வரும் சந்ததிக்கு ஆசீர்வாதம்
4. அபரிமிதமான வளர்ச்சி
இதனால், இப்படிப்பட்டவர்களினால்
சபைக்கு ஏற்படும் நன்மை: ஊழிய வளர்ச்சி
– சபை கட்டப்படுதல்
ஏசாயா: 44:5 – “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின்
பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன் தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப் போட்டு,
இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்”.
6. இயேசுவை அறிகிற அறிவில் வளர்ச்சி:
2பேதுரு: 3:18 – “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின்
கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்”.
அவரைக் குறித்து அறிகிற அறிவு நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தும்.
யோவான்: 17:3 – “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும்
அறிவதே நித்திய ஜீவன்”.
பிலிப்பியர்: 3:8 – “என் கர்த்தராகிய இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும்
நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்”.
பிலிப்பியர்: 3:10 – “… நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின்
வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான
மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத்
தகுதியாகும்படிக்கும்”
கிறிஸ்து இயேசுவைக் குறித்து நாம் அறிகிற அறிவு குறைவானது. இன்னும்
நாம் அவரை அறிய வேண்டிய பிரகாரம் இன்னுமதிகமாய் அறிய வேண்டும். அது நம் ஆத்துமாவை மென்மேலும்
பலப்படுத்தும். விசுவாச வாழ்வில் ஸ்திரப்படுத்தச் செய்திடும்.
இவ்விதமாக, “தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம்
வளருகிறவர்களாயிருக்கும்படியாக …” முன்னேறிச் செல்வோம். ஆவிக்குரிய வளர்ச்சியில் வரப்போகிற
புத்தாண்டில் ஒரு உன்னத அனுபவத்தைப் பெறுவோம். கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
ஆமென்! அல்லேலூயா!