டிசம்பர் 03, 2016

பொருத்தனையின் புத்திரனும் பிரதிஷ்டையின் புத்திரனும்

Image result for 1samuel 2 3Image result for judges:13

பொருத்தனையின் புத்திரனும் பிரதிஷ்டையின் புத்திரனும்

திறவுகோல்வசனம்: எபிரெயர்: 11:32 – “பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது”.

மேற்கண்ட திறவுகோல்வசனத்தைக் கொண்டு முன்பே நாம் “உறவாடுதலா? உபயோகப்படுதலா?” என்ற தலைப்பின்கீழ் தியானித்தோம். (அதற்கான லிங்க்: http://nesarin.blogspot.in/2016/11/blog-post_19.html இதுதான்). இன்று இதே வசனத்தைக் கொண்டு “பொருத்தனையின் புத்திரனும் பிரதிஷ்டையின் புத்தினும்” என்கிற தலைப்பில் நாம் தியானிக்கப் போகிறோம்.

இந்த வசனத்தில் ஆறு பேரை எபிரேய நிருபக்காரன் குறிப்பிடுகிறார். இந்த ஆறு பேரில் தாவீது ஒருவன் மட்டும் அரசன். தாவீதைத் தவிர மற்ற ஐந்து பேரும் நியாயாதிபதிகள். இதில் சிம்சோன், சாமுவேல் மட்டும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள்.  தனிச்சிறப்பிற்கு காரணம் இவர்கள் இருவரும் நசரேய விரதம் பூண்டவர்கள்.  

நசரேய விரதத்துவத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று, பெற்றோர்களின் பொருத்தனையினால் ஏற்படுவது; மற்றொன்று, தேவனே நசரேயனாக அழைப்பது.

பொருத்தனையின் புத்திரன் சாமுவேல்:

 1சாமுவேல்: 1:11 – “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகலநாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்; அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்”.

குழந்தையில்லாத அன்னாள், தன் நிந்தை நீங்க ஒரு ஆண்குழந்தைபெற வேண்டினாள். மலடி என்கிற அவப்பெயர் நீங்க குழந்தை கேட்பது சரிதான். ஆனால், அதை கர்த்தருக்கென்று நசரேய விரதங்காக்கும்படி அதை வளர்ப்பேன் என சொல்கிறாள் பாருங்கள் அந்த இடத்தில்தான் கர்த்தருக்கு முன்பு உயர்வாக அன்னாள் நிற்கிறாள். பொதுநலத்தில் சுயநலத்தைக் கலப்பவர்கள் இவ்வுலகில் அநேகர் உண்டு. ஆனால், சுயநலத்தில் பொதுநலத்தை கலந்தவள் இந்த அன்னாள் என பார்க்கிறோம்.

அன்னாளின் பொருத்தனையின் விளைவால் வந்தவன்தான் சாமுவேல். எனவேதான், சாமுவேலை “பொருத்தனையின் குமாரன்” என்றும் “பொருத்தனையின் புத்திரன்” என்றும் குறிப்பிடுகிறேன். பொருத்தனையின் மூலம் நசரேயனானவன் சாமுவேல்.

பிரதிஷ்டையின் புத்திரன் சிம்சோன்:

நியாயாதிபதிகள்: 13:2-5 – “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா. அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்கு தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்”.

மனோவாவின் மனைவியும் பிள்ளை பெறாத மலடிதான். ஆனால் அதற்காக அவள் கவலைப்பட்டது போல தெரியவில்லை. குழந்தை வேண்டுமென்று எவ்வித பொருத்தனையும் செய்துகொள்ளவில்லை. மலடி என்று சொன்னால் … திருமணம் முடிந்து ஒன்றிரண்டு வருடங்களில் குழந்தையில்லாமல் இருப்பவளை குறிப்பதல்ல. குறைந்தது ஏழு வருடங்களுக்கு மேல் சென்றும் ஒருத்திக்கு குழந்தை இல்லை என்றால் … அப்பொழுது சமுதாயத்தில் அவளை மலடி என்று சொல்வது அக்காலத்திலிருந்து இக்காலம் வரை உள்ள வழக்கம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இருப்பினும், மனோவாவோ, அவனது மனைவியோ அதைக்குறித்து கவலைபட்டதாக வேதம் கூறவில்லை. குழந்தையற்ற இவளை கர்த்தருடைய தூதனானவர் சந்தித்து, நசரேய விரதங்காக்கும் ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்து கர்த்தருக்காக வளர்க்க வேண்டும் என கட்டளையிடுகிறதைக் காண்கிறோம். தேவனாகிய கர்த்தரே இவர்களுக்குப் பிறக்கப்போகிற குழந்தையை நசரேய விரதம் பூண்டவனாக இருக்கும்படி தெரிந்து கொள்கிறார். சிம்சோன் பிறக்கும்போதே தேவனால் நசரேய விரதமிருக்கும்படி பிரதிஷ்டைப் பண்ணப்பட்டவனாகவே பிறக்கிறான். 

தேவனாகிய கர்த்தரே, அவன் நசரேயனாயிருப்பான் என முன்குறித்து விட்டார். இது எவ்வளவு பெரிய சிலாக்கியம். ஒரு மனிதன் இவனை நசரேயனாக்கவில்லை. தேவனே இவனை நசரேயனாக்கினார் என காண்கிறோம். எனவேதான் இவனை தேவனால் பிரதிஷ்டைப் பண்ணப்பட்ட “பிரதிஷ்டையின் புத்திரன்” என்றும் “பிரதிஷ்டையின் குமாரன்” என்றும் குறிப்பிடுகிறேன்.

சாமுவேல் – பொருத்தனையினால் நசரேயனாக்கப்பட்டவன்

சிம்சோன் – தேவனால் நசரேயனாக்கப்பட்டவன்

நசரேய விரதத்துவத்தைக் குறித்து விபரமறிய: http://nesarin.blogspot.in/2016/11/blog-post_17.html இதை கிளிக் செய்க.

நசரேயனாக தெரிந்து கொள்ளப்பட்டோ அல்லது அழைக்கப்பட்டோ எப்படியிருப்பினும் … பிறப்பும் சரி, வளர்ப்பும் சரி நசரேயனுக்குரிய முறைமைகளின்படி மாறாமல், மீறாமல் வளர்க்கப்பட வேண்டும். நசரேய விரதம், பிரதிஷ்டை காக்கப்பட வேண்டும். நசரேய விரதம் காக்கப்பட முதலில் பெற்றோரும், பின்பு நசரேய விரதம் காப்பவனும் பொறுப்பாவார்கள். நசரேய விரதம் பாதியில் வருவதல்ல; பிறப்பிலிருந்தே அது ஆரம்பமாவதால் முதலில் பெற்றோர் அதைக் காத்து நடக்கவும், அதின் வழியில் போதிக்கவும் கடமைப்பட்டுள்ளனர். அதை சிறுபிராயத்திலிருந்தே அக்குழந்தைக்கு அறிவுறுத்தவும், போதிக்கப்படவும், வழிநடத்தவும் வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது. இம்முறை இவ்விருவர் (சாமுவேல், சிம்சோன்) விஷயத்திலும் சரிவர பின்பற்றப்பட்டதா? என்பதை சற்று ஆய்வு செய்வோம்.

சாமுவேலின் பெற்றோர்


அ) பொருத்தனையை நிறைவேற்றுதலில் உண்மை:


நசரேய விரதம் காக்க சாமுவேலின் பெற்றோர் என்ன செய்தார்கள்? ஒன்றும் இல்லை. பெற்றோர் என்பதை விட தாய் அன்னாள் என்பது மிகப் பொருத்தமாயிருக்கும். அன்னாளின் கணவனாகிய எல்க்கானா இதில் அக்கறையோ கவனமோ செலுத்தியதாக தெரியவில்லை. ஏனெனில், அவனுக்கு இளைய மனைவியினிடத்தில் ஏற்கனவே குழந்தைகள் இருப்பதினால் இதை அவன் அவ்வளவு பெரிதாக கண்டுகொள்ளவில்லையென புரிகிறது. அவனது மனநிலை … எப்படியோ அன்னாளின் நிந்தை நீங்கயது. அம்மட்டும் சரி என்பது அவனது நிலைப்பாடாக இருந்திருக்கலாம். பெற்றதாய்க்குத்தானே பிள்ளையின் அருமை தெரியும் என்பதுபோல அவளே சாமுவேல் விஷயத்தில் முழு பொறுப்புள்ளவளாக செயல்படுகிறதை வேதத்திலே வாசிக்கிறோம்.

1சாமுவேல்: 1:24,25 – “அவள் அவனைப் பால் மறக்கப்பண்ணின பின்பு, … அவனையும் கூட்டிக் கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது. அவர்கள் ஒரு காளையை பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.”

1சாமுவேல்: 1:28 – “அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்”.

பொருத்தனையை தன் கணவனுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து, பின்பு இருவரும் சேர்ந்து கர்த்தருக்கு பொருத்தனையை நிறைவேற்றுகிறதை காண்கிறோம்.

ஆ) வளர்ப்பு நிலையில் உண்மை:


பிள்ளையாண்டான் பெற்றோரை பிரிந்திருக்கும்படி அந்தச் சிறிய வயதில் எப்படி முடிந்தது. ஏலியினிடம் கொடுக்கும்போது “பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது” (1சாமுவேல்: 1:24) என வேதம் குறிப்பிடுகிறது. தோராயமாக சுமார் ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம். அந்த வயதில் ஒரு காலத்தில் பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கும்போது நமது பெற்றோர்கள் பட்ட அவஸ்தையை அவர்கள் மூலம் கேட்டிருக்கிறோமல்லவா? அப்படியிருக்க… எப்படி சாமுவேல் மட்டும் தன் பெற்றோரை பிரிந்து ஏலியினிடம் இருக்க முடிந்தது? அங்குதான் பெற்றோரின் வளர்ப்பு நிலையை நாம் கவனிக்க வேண்டும்.

அவனை வளர்க்கும்போதே கீழ்க்கண்டபடி இப்படி …சொல்லி சொல்லி வளர்த்திருப்பார்கள். 

“நீ பொருத்தனையினால்தான் பிறந்தாய். நீ எனக்கு  எங்களுக்கு சொந்தமானவன் இல்லை. நீ கர்த்தருக்கு சொந்தமானவன். பால் மறந்தவுடன் கர்த்தருடைய ஆலயத்தில் உன்னை விட்டு விடுவோம். அங்கு தேவனுடைய மனுஷன் ஏலி இருக்கிறார். அவர் உன்னை கர்த்தரிடமாய் நடத்துவார். அவருக்கும் , கர்த்தருக்கும் சேவை செய்வதற்கென்றே நீ பிறந்திருக்கிறாய். எங்களுக்குக்கூட கிடைக்காத மாபெரும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது. சிலூவிலே இருக்கிற ஆலயம் எவ்வளவு அழகானது. நம் தேவனாகிய கர்த்தர் அங்கே வாசமாயிருக்கிறார். அவர் உன்னோடிருப்பார். உன்னுடன் வாசம்பண்ண விரும்புகிறார். உன்னோடு பேசுவார். நீ அவருக்கு சொந்தமானவன் நீ விசேஷமானவன். கர்த்தருக்கென்று நசரேய விரதங் காப்பவன். அதனால்தான் பிறந்த முடி உனக்கு எடுக்காமலும், திராட்சரசங் குடிக்க அனுமதியாமலும் உன்னை கர்த்தருக்கென்று பாதுகாப்பாக காத்து வருகிறோம். நீயும் நசரேய விரதத்தை கடைசி வரை காத்து வர வேண்டும். பெற்றோர்களுடைய அன்பைவிட கர்த்தருடைய அன்பு மேலானது. அவரது ஊழியருடைய அன்பு உனக்கு கிடைக்கும். நீ பாக்கியம் பெற்றவன். எங்களோடு இருப்பதைவிட கர்த்தருடைய ஆலயத்தில் வாசமாயிருப்பதுதான் உனக்கு நலம். கர்த்தருடைய கட்டளையை காத்து நடப்பாயானால் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். உன்னை உபயோகப்படுத்துவார். வருடம் ஒருமுறை நாங்கள் வந்துவந்து உன்னை பார்ப்போம். நாங்கள் உன்னை பார்ப்பதைவிட கர்த்தர் உன்னை பார்த்துக் கொள்வார். அதுவே உனக்கு மேன்மையானது. இவைகளை செய்வதுதான் என்னையும், உன் தந்தையையும் மனமகிழ்ச்சியாக்கும். அப்பொழுதுதான் நீ நசரேய விரதங்காக்கும் நல்ல பிள்ளையாய் இருப்பாய்”.

இப்படியெல்லாம் அன்னாள் சொல்லி சொல்லி வளர்த்திருப்பாளா?! என சந்தேகிக்கிறவர்களுக்கு நான் சொல்வது இதுதான்… 1சாமுவேல்: 2:1-10 வரை உள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள். அங்கே அன்னாளின் ஜெபமும் ஜெபத்தில் சொன்ன வார்த்தைகளின் வல்லமையும், பொருளையும் அறியலாம். இது ஏதோ ஒருநாள் மட்டும் ஜெபித்த ஜெபமாக நாம் கருத இயலாது. திடீரென ஜெபிக்கிறவர்களுக்கு இப்படிப்பட்ட ஜீவனுள்ள ஜெபங்கள் வாயில் வந்துவிடாது என்பதை நாம் அறிவோம். அனுதினமும் கர்த்தரிடமாய் அன்னாள் கருத்தாய் ஜெபிக்கிறவள். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டாரோ இல்லையோ… மடியில் படுத்துக் கொண்டு பால் குடித்துக் கொண்டிருந்த சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் நன்கு கவனமாய் கேட்டிருப்பான். கருவறையில் இருக்கும் கருவே கேட்கின்ற நிலையில் குழந்தை இருக்கும் என அறிவியலாளர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறதே!   அப்படியிருக்க, சாமுவேல் கேட்டிருக்க மாட்டானா? என்ன?!

சபையை குறித்து, போதகர்களைக் குறித்து, ஊழியங்களைக் குறித்து குறைசொல்லி வரும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அக்காலத்தில் பாருங்கள். அன்னாள் தன் குழந்தையிடம் எதை சொல்லி வளர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தாள். அவனது பிரதிஷ்டையைப் பற்றி, பொருத்தனையைப் பற்றி, ஆலயத்தைப் பற்றி, ஆசாரியனைப்பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, தேவனாகிய கர்த்தரைப் பற்றி மிக கவனமாக பக்தி விருத்திக்கேதுவாக தன் மகனுக்கு போதித்து வளர்த்திருக்கிறாள். அப்படி வளர்த்ததினால்தான் சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் தன் பெற்றோரை அச்சிறிய வயதில் பிரிந்து ஏலியிடம் ஆலயத்திலேயே தங்க முடிந்தது என அறிகிறோம்.  

இ) விசுவாசத்தில் உண்மை:


ஏலியின் நிலை:

“ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்” (1சாமுவேல்: 2:22)
கண்களில் வெளிச்சமற்றவன் (1சாமுவேல்: 3:2)
மக்களின் மனநிலை அறியாதவன் (1சாமுவேல்: 1:13).
பிள்ளைகளை கர்த்தருக்குள் கர்த்தருக்கேற்ற பயத்தில் வளர்க்காதவன் (1சாமுவேல்: 2:12)
கர்த்தருடைய எச்சரிப்பை உதாசீனப்படுத்துகிறவன் (1சாமுவேல்: 2:27-36; 3:18)

ஏலியின் பிள்ளைகள் நிலை: (ஓப்னி, பினெகாஸ்)

1சாமுவேல்: 2:12 – “ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை”.
1சாமுவேல்: 2:17 – மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுக்கும்படி செய்தார்கள்.
1சாமுவேல்: 2:22 – ஆசரிப்புக்கூடார வாசலில் கூடுகிற ஸ்திரீகளோடு சயனித்தார்கள்.
1சாமுவேல்: 2:25 – தகப்பன் சொல்லை மதியாதவர்கள்
1சாமுவேல்: 2,17 – இவர்களின் பாவம் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருந்தது

அன்னாளின் நிலை:

அன்னாள் ஏலியைக் குறித்தும், ஏலியின் பிள்ளைகளைக் குறித்தும் அறியாதவளில்லை. அவர்களின் அத்தனை நீதிகேடுகள், முறைகேடுகள் இஸ்ரேலில் உள்ள அனைவருக்கும் பிரசித்தமாகியிருக்கும்போது, அன்னாளுக்கும் எல்க்கானாவுக்கும் தெரியாமலா போகும்!? 

தெரிந்திருந்தாலும்… அவர்கள் கர்த்தர்மேல் விசுவாசம் உள்ளவர்கள். நான் ஆராதிக்கும் தேவன் நல்லவர். என்னையும், என் மகனையுமோவென்றால் அவர் நேசிக்கிறார். என் பொருத்தனைகளை நான் நிறைவேற்றுவதில் உண்மையாயிருந்ததுபோல, கர்த்தரை நம்பி கர்த்தரிடத்தில் தன் மகனை விட்டு வந்திருக்கிறேன். அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார். 

ஏனெனில், அவர் உண்மையுள்ளவர். ஆசாரியன் உண்மையில்லாமல் போகலாம். ஆசாரியனுடைய பிள்ளைகள் ஒழுக்கமில்லாமல் திரியலாம். ஆனால், நான் ஆராதிக்கும் எங்கள் தேவன் பரிசுத்தர். உண்மையுள்ளவர். உடன்படிக்கையை காப்பதில் வல்லவர். வாக்கு மாறாதவர். தன்னை நம்பியவர்களை அவர் கைவிடாதவர் என்பதில் அன்னாள் உறுதியான விசுவாசத்தில் இருந்ததினால்தான், சாமுவேலை ஏலியின் வசம் ஒப்புவிக்க முடிந்தது.

தனது பொருத்தனையை நிறைவேற்ற வேண்டியது தனது கடமை. பொருத்தனையாக விடப்பட்ட பொருத்தனையின் புத்திரனை வழி நடத்துவது இனி தேவனாகிய கர்த்தர்தான் என்கிற விசுவாசம் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். தேவனாகிய கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையும், விசுவாசமும்தான் அவளை இப்படி செயல்பட வைத்திருக்க வேண்டும்.

சாமுவேலின் நிலை:

அன்னாள் எப்படி இருந்தாளோ, அப்படித்தான் சாமுவேல் இருந்தான். விதை ஒன்று போட, சுரை ஒன்றா முளைக்கும் என பெரியவர்கள் சொல்லும் வண்ணம் சாமுவேல் அன்னாளைப்போலவே, கர்த்தருக்குப் பயந்தவனாய், கீழ்படிகிறவனாய், பரிசுத்தமுள்ளவனாய், பக்தியுள்ளவனாய், விசுவாசமுள்ளவனாய், கர்த்தருடைய சத்தங் கேட்கிறவனாய் இருப்பதைக் காண்கிறோம்.

“அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை” (1சாமுவேல்: 3:1) அப்படிப்பட்ட நாட்களில் சாமுவேல் எப்படி இருந்தான்?

1சாமுவேல்: 2:11 – “அந்தப் பிள்ளையோ ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான்”

1சாமுவேல்: 2:18 – “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்”

1சாமுவேல்: 2:26 – “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான்”.

1சாமுவேல்: 3:19 – “சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை”.

அன்னாள் செய்த பொருத்தனையை சாமுவேல் வீணடித்துவிடவில்லை. காரணம்? அன்னாளின் பக்திக்குரிய வளர்ப்பு அப்படி. சாமுவேல் அதை தனது மரணபரியந்தம் காப்பாற்றினான். 1சாமுவேல்: 3:20 – “சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது”.

ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு அன்னாள் – எல்க்கானா தம்பதிகள் மூலம் நாம் அறியலாம்.

 சிம்சோனின் பெற்றோர்


சிம்சோனின் தாயின் பெயர் சொல்லப்படவில்லை. தகப்பன் மனோவா என்று மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் ஏதாகிலும் உண்டா என நமக்கு புலப்படவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. மனோவா அளவிற்கு அவன் மனைவி இல்லை. கர்த்தருடைய தூதனானவர் தன்னிடம் இவ்விதமாய் சொன்னார் என் தன் கணவனிடத்தில் அவள் சொன்னபோது, மனோவா உடனே கர்த்தரிடமாய் ஜெபம் பண்ணினான் (நியாயாதிபதிகள்: 13:8) என வாசிக்கிறோம். மனோவா மிகுந்த பக்தியுள்ளவன் என இதன் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவிடம் சொல்லும்போது அவளும் தீட்டுப்படாதபடிக்கு தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறதை காணும்போது (நியாயாதிபதிகள்:13:14) மனோவாவின் மனைவியினிடத்தில் கர்த்தருக்கு பிடித்தமில்லாத ஏதோ ஒரு விஷயம் மறைவாக இருக்கிறது எனவும், அதை சிம்சோன் பிறக்குமளவும் பரிசுத்தமாய் காத்துக் கொள்ள வேண்டும் என்பது போல இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து. சிம்சோனின் தாயாரின் பெயர் குறிப்பிடப்படாமல் அந்த ஸ்திரீ என குறிப்பிடுவது காணும்போது வேண்டாவெறுப்பாக சொல்லப்பட்டது போல தோன்றுகிறது. இதையேன் இப்படி சொல்கிறேன் என பின்வரும் காரியங்களில் நீங்கள் அறியலாம்.

“தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை” என்றும் “தாயை தண்ணீர்த்துறையில் பார்த்தால், பிள்ளையை பார்க்க தேவையில்லை” என்றெல்லாம் கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அதைப்போல தாய் எவ்வழியோ பிள்ளையும் அவ்வழி. பிள்ளை நசரேய விரதங்காக்க வேண்டுமானால், பிள்ளையின் தாயும் அக்குழந்தையைப் பெறுமளவும் சில கட்டுபாடுகளுடன் இருப்பது தேவனுடைய விருப்பம். அதுமட்டுமல்ல… பிள்ளை பெற்றவுடன் அதை எப்படி வளர்க்க வேண்டும் என்று கர்த்தருடைய தூதனானவர் சொன்னாரோ அதேபோல வளர்ப்பதில் ஜாக்கிரதை உணர்வு வேண்டும். எப்படி வளர்க்க வேண்டும்? என்று தூதனானவரிடம் கேள்வி கேட்டதெல்லாம் சரிதான். அப்படி சொல்லி சொல்லி அல்லவா வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்காததினால் பின்னாட்களில் என்ன நடந்தது என சிம்சோனின் வாழ்வைக்குறித்து வேதத்தில் வாசிக்கிறோமே!

1.   வெறுப்பை ஊட்டி வளர்க்கவில்லை:


நியாயாதிபதிகள்: 14:2 – “… தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்கு கொள்ள வேண்டும் என்றான்”
பெலிஸ்தியரில் மட்டுமல்ல, புறஜாதிகள் எவற்றிலேயும் பெண் கொள்ளக்கூடாதென இஸ்ரவேலரெல்லாரும் அறிந்திருந்த ஒரு வெளிப்படையான சத்தியம். அப்படியிருக்க, சிம்சோன் பெலிஸ்திய பெண்தான் வேண்டும் என தன் தாய் தகப்பனிடம் துணிகரமாக கேட்கிறான் என்றால்… அவனது வளர்ப்பு நிலை சரியில்லை என்றுதானே அர்த்தமாகிது. அவனது தாய் சிறு பிராயத்திலிருந்தே என்ன சொல்லி வளர்த்திருக்க வேண்டும்?

“சிம்சோன் நீ ஒரு நசரேயன்; தேவனால் பிரத்தியேகமாக விசேஷப்படுத்தப்பட்டவன். சவரகன் கத்தி தலையில் படாமலும், திராட்சரசத்தை உனக்கு குடிக்கக் கொடாமலும், பிணத்தினால் தீட்டுப்படாமலும் இதுவரை நாங்கள் உன்னை காத்து வந்தோம். ஏனெனில் நீ தேவனுக்கென்று நசரேயனாய் இருக்கிறாய். நீ தீட்டுப்படலாகாது. இப்பொழுது நீ வளர்ந்து விவரம் தெரிந்தவனாய் இருக்கிறபடியினால், இனி நீ உன்னை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள பிரயாசமெடுக்க வேண்டும். இனிமேல் நீதான் பாதுகாப்பாய் இருந்து கொள்ள வேண்டும். கர்த்தருக்கு பிடிக்காததை மட்டுமல்ல நசரேய பிரதிஷ்டை முறியும்படி நீ எவ்விதத்திலும் நடந்து கொள்ள கூடாது என்பதில் மிக கவனமாய் இருக்க வேண்டும். உன் பிறப்பிற்கு ஒரு நோக்கமுண்டு. தேவன் ஏற்றவேளையில் அதற்காக உன்னை எடுத்துப் பயன்படுத்தும்படி விழிப்பாயிருந்து உன் பிரதிஷ்டையை காத்துக்கொள்ள வேண்டும். தேவன் வெறுக்கிற ஏழு புறஜாதிகளையும் நீயும் வெறுக்க வேண்டும். அவர்களோடு எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்தலாகாது. அவர்கள் நம் தேவனுக்கும் நமது கலாச்சாரத்திற்கும் விரோதமானவர்கள். விசேஷமாக இஸ்ரவேலரை பெலிஸ்தியர்களின் கையினின்று மீட்க வேண்டிய கடமை உனக்கு உண்டு. பெலிஸ்தியர்கள் நமக்கு விரோதிகள். அவர்களுக்கு இரக்கம் காட்டலாகாது. புறஜாதியாரில் பெண் எடுக்கவும் கூடாது; பெண் கொடுக்கவும் கூடாது என்று சொல்லி சொல்லி பெலிஸ்தியர் மீது வெறுப்பை ஊட்டி ஊட்டி வளர்த்திருந்தால், இப்பொழுது பெலிஸ்திய பெண்தான் வேண்டும் என்று சிம்சோன் கேட்டிருக்க மாட்டானல்லவா?! 

சிம்சோனின் பெற்றோரின் வளர்ப்புநிலை சரியில்லை என அறிகிறோமல்லவா?!

2.   கேள்வி வரைமுறையற்ற வளர்ப்பு முறை:


நியாயாதிபதிகள்: 14:8,9 – “… இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது. அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக் கொண்டே நடந்து, தன் தாய் தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்” என  வாசிக்கிறோம்.

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக சாப்பிட வைத்து சரீர வளர்ச்சியில் வளர்த்திருப்பார்களே தவிர, உலகில் எப்படி வாழ வேண்டும்? சமுதாயத்தில் எப்படிப்பட்ட அணுகுமுறை இருக்க வேண்டும்? கர்த்தருக்கேற்ற பக்தி, பரிசுத்தத்தில் எப்படி விளங்க வேண்டும்? உறவுமுறைகள் எப்படி சீராக பேணிக்காத்தல்? போன்றவைகளை சொல்லி வளர்ப்பதில்லை. திருமணத்திற்கு பின்பு மகள் தன் கணவனிடத்திலும், மகன் தன் மனைவியினிடத்திலும் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு வாழத்தெரியாமல் அவமானப்பட்டு நிந்தையோடு மருகிக்கொண்டிருப்பார்கள். ஆளும் வளரணும். அதற்கேற்ற அறிவும் வளரணும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நல்லொழுக்கத்தில் வளர்க்க கவனமெடுக்க வேண்டும்.
சிம்சோன் தேனை தாய் தகப்பனுக்கு கொடுத்தானாம். அதை அவர்கள் வாங்கி சாப்பிட்டார்களாம். எந்த கேள்வியும் இல்லை. என்ன பெற்றோர் இவர்கள். “மகனே, தேன் உனக்கு எங்கு எப்படி கிடைத்தது?” என்று எந்தவொரு விசாரிப்பும் இல்லை. கொடுத்தான் தின்றார்கள். அவனை மட்டும் இவர்கள் சாப்பாட்டு ராமனாக வளர்க்கவில்லை. இவர்களும் இப்படித்தான் இருப்பார்கள்போல தெரிகிறது. எது எப்படி எந்த வழியாக வந்தாலும் சரி. நமக்கு அது லாபமாகவோ, இன்பமாகவோ இருந்தால் போதும் என்கிற மனநிலை இவர்களுக்கு இருந்து இருக்கிறது. வந்தது சரியான நேர்மையான வழியா? தவறான வழியா? என ஆராய நேரமில்லை. அவசியமுமில்லை. இது ஒரு தவறான போக்கு. முதிர்ச்சியான பெற்றோர் அல்ல எனக்காட்டுகிறது. ஒரேஒரு கேள்வி மட்டும் பெற்றோர் கேட்டிருந்தால் போதும் … சிம்சோன் திருந்தி நல்லவனாக மாற வாய்ப்பு ஒருவேளை இருந்திருக்கலாம். அவனது நசரேய உடன்படிக்கை உடையாமல் காக்கப்பட்டிருக்கலாம். கேட்க வேண்டிய கேள்விகளை பிள்ளைகளிடத்தில் கேட்க வேண்டிய நேரத்தில் கேட்க தயங்கினால் … அவர்களது ஒழுக்கநிலை எவ்வளவு சீரழியும் என்பதை பெற்றோர்கள் முதலில் அறிய வேண்டும்.

நசரேய விரதங்காக்கும் ஒருவன் மரித்த பிரேதத்தண்டையில் போகக்கூடாது. தொடவும் கூடாது. சிம்சோன் செத்த சிங்கத்தின் மார்புகூட்டுக்குள் உள்ள தேனை சுவைத்து. தன் பெற்றோருக்கும் தருகிறான். எப்படி இந்த பிரதிஷ்டையின் நோக்கம் தவறியது? கர்த்தருடைய தூதனானவர் சொன்ன கட்டளையின்படி சிம்சோனை வளர்க்கத்தவறிய பெற்றோரால் வந்த விளைவுதானே இது!?  

சிம்சோனுக்கு கர்த்தருடைய தூதனானவர் சொன்ன கட்டளையும் தெரியவில்லை; பெற்றோரைக்குறித்த பயமும் இல்லை. பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்திருந்தால், கர்த்தருடைய கட்டளைகளில் வளர்த்திருந்தால் பரிசுத்தமும், கற்பனையை பாதுகாக்கும் அறிவும் இருந்திருக்குமே! “பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்” (நீதிமொழிகள்: 29:15) என வேதம் கூறவில்லையா? அதுதான் சிம்சோன் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

3.   பிள்ளைகள் பெற்றோருக்குள் நல்ல உறவு இல்லை:


நியாயாதிபதிகள்: 14:9 – “… அந்தத் தேனை சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை”.

பிள்ளைகள் பெற்றோர் உறவுநிலையானது மிகவும் பிணைப்புள்ளது. தொப்புள்கொடி உறவென்று உலகமும், இரத்தசம்பந்தமான உறவு என்று வேதமும் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவை பற்றி குறிப்பிடுகிறது. பெற்றோர் பிள்ளைகளுக்குள் முக்கியமான காரியங்களில் வெளிப்படைத்தன்மை தேவை. குறிப்பாக பிள்ளைகள் தங்களுக்குரியவைகளை பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒளிவுமறைவு இருக்கலாகாது. அது அவர்களுக்கு கண்ணியை வருவித்துவிடும். எந்த விஷயமானாலும், காரியமானாலும் முழுபாதுகாப்பும், உத்தரவாதமும், உண்மையுமான அன்பும் கண்டிப்பும் நிறைந்த நல்வழி நமது பெற்றோர் மட்டுமே நமக்கு காட்ட முடியும் என்பதை பிள்ளைகள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட உறவுநிலை சிம்சோனுக்கு இல்லாததினால்தான் அவனது நசரேய விரதத்தின் உடன்படிக்கை செத்த ஈ யினால் அல்ல; செத்த சிங்கத்தினால் முறிந்து போனது. செத்த ஈ பரிமளத்தைலம் முழுவதையும் நாறப் பண்ணுமாம். அதுபோல செத்த சிங்கமும் செத்த ஈ க்கு சமம்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என் சிறுபிள்ளைகளே. உயிரோடு இருக்கும்வரைதான் சிங்கம்; உயிர் போய் விட்டால், அது சிங்கமாயிருந்தாலும் பிரேதம்தான். பிள்ளைகள் பெற்றோர்களிடம் மனம்விட்டுப் பேசி பழக வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கி விசாரிக்க வேண்டும். அவர்களது மனஐயங்களுக்கு நல்லாலோசனைகள் வழங்க முன்வர வேண்டும். இல்லாவிடின் பரிமளதைலம் போன்ற வாசனை வீசும் ஆவிக்குரிய வாழ்வு இவ்வுலகில் நாற்றமெடுக்கும் வாழ்வாக மாறிவிட சாத்தான் கிரியைகளை நடத்தி விடுவான். பிள்ளைகள்தான் நமது சொத்து. அவர்களது எதிர்கால நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களை கர்த்தருக்காக வளர்த்திட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம்தான் கர்த்தர் கொடுத்திருக்கிறார். எனவே, பிள்ளைகளுடன் உறவுநிலையை சீராக்குங்கள். மனம்விட்டுப் பேச இடங் கொடுங்கள். உங்களிடம் அணுகமுடியாத தூரத்தில் அல்ல; பிரியத்துடன் எப்போதும் அணுகக்கூடியவர்களாக இருப்பது நலம்.

4.   நல்லொழுக்கங்களை கெடுக்கும் சம்பாஷணைகள்:


நியாயாதிபதிகள்: 14:12,13 – “சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்தண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும், முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன். அதை எனக்கு விடுவிக்காதேபோனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும், முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்க வேண்டும் என்றான்”.

1கொரிந்தியர்: 15:33 – “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என வேதம் கூறுகின்ற வண்ணமாய் சிம்சோன் போன இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் கூட இருக்கும் வாலிபரை விடுகதை சொல்கிறேன் என்று சொல்லி வம்பிழுக்கிறான். ஒருவகையில் பார்த்தால் இது ஒரு பந்தயம் அல்லது சூதாட்டம்போல் தெரிகிறது. விடுகதையின் விடை சிம்சோனைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வழிவகையில்லை. ஏனெனில், அது அவனுடைய சொந்த அனுபவத்திலிருந்து கேட்கப்பட்ட விடுகதை. அவனே விடுவித்தாலொழிய வேறுவழியில்லை. எனவே, அவர்கள் இதை விடுவிக்காமற்போனால் தனக்கு முப்பது துப்பட்டியும், முப்பது மாற்று வஸ்திரமும் ஆதாயம்தான். அதை உறுதி செய்து கொண்டே விடுகதையை போடுகிறான். (என்ன செய்வது வரப்போகிறவள் சிம்சோனுக்கு உண்மையாக இல்லையே!).

போனது எதற்கு? காரியம் முக்கியமா? வீரியம் முக்கியமா? போன காரியத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதில் மட்டுமே சிம்சோன் கவனமாயிருந்திருக்க வேண்டும். அவனோ, வாலிபரோடு தேவையற்ற சம்பாஷணை வைத்ததினால் வீண் வம்பு மற்றும் பிரச்சினைகள். ஆகாத சம்பாஷணையினால் அழிவுதான் மீதம்.

“வம்பும் வாதும் ஒரு நசரேயனுக்கு தேவையற்றது; நீ கர்த்தருக்காக தெரிந்து கொள்ளப்பட்டவன்; நோக்கம் தவறவிடக்கூடாது; பிறரோடு பழகும்முறை, பேசும்விதம் எப்படி இருக்க வேண்டும்” என பெற்றோர் நன்கு வாழ்க்கைமுறைகளை கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அதில் அவர்கள் தவறிவிட்டனர்.

5.   ஏழாம் கட்டளையை மீறினான்:


நியாயாதிபதிகள்: 16:1 – “பின்பு, சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்”.

ஒவ்வொரு இஸ்ரவேலனும் பத்து கட்டளையை பாராமல் மனனம் செய்திருப்பான். தன் வாழ்வில் அனுதினமும் கடைபிடிப்பதில் மிக கவனமாயிருப்பான். எல்லா எபிரெய பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு இதை போதிப்பதில் மிகவும் அக்கறையும், கவனமும் செலுத்துவார்கள். ஒவ்வொரு இஸ்ரவேல் வம்சத்தானும் மோசேயின் பத்து கட்டளைகளையும் நன்கு அறிந்திருப்பான். அதிலும் சிம்சோன் நசரேயன். அதிக விரதத்துவனாக இருக்க வேண்டும். ஆனால் அவன் செய்தது என்ன? அவன் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு தீர்வு வேசி வீட்டிலா கிடைக்கும்? எப்படிப்பட்ட போதனைகளில் இவன் வளர்ந்திருப்பான்? இவன் பெற்றோர் சிறுவயதிலிருந்து என்ன சொல்லி வளர்த்தார்களோ தெரியவில்லை. மொத்தத்தில் வளர்ப்பும் சரி … வளர்ந்த விதமும் சரி… எதுவுமே சரியில்லை என தெளிவாக தெரிகிறது.

6.   இரகசியங்காப்பதில் தவறினான்:


நீதிமொழிகள்: 11:12,13 – “… புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்”

நீதிமொழிகள்: 25:9 – “நீ உன் அயலானோடே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக் குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே”

கர்த்தருடையவர்கள் இரகசியங்களை காப்பதில் கவனமாயிருப்பார்கள். ஏனெனில் அவர்கள் மிகுந்த பொறுப்புடையவர்கள். கர்த்தருக்கு பயந்தவர்களிடத்தில் தேவனுடைய இரகசியம் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது. தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுகிற, கிரியை நடப்பிக்கிற மாபெரும் திட்டம், செயல்பாடுகளை தேவன் தருகிறபடியால்… அதற்குரிய நன்மைகளையும், பலத்தையும் தருவதினால் அதின் எண்ணிக்கையின் தொகையை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அவர்களை நம்பி ஒரு கூட்ட தேவஜனம் இருக்கிறது. ஊழியம் இருக்கிறது. தொடர்ந்து அந்த பயணத்தை செய்ய தடையேதும் வரா வண்ணம் தேவனுடைய இரகசியசெயல்கள் காக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், இதை சிலர் அலட்சியப்படுத்தினார்கள். அதன் விளைவுகள்? படுமோசமானவையாக மாறிப்போயின.

வேதத்திலே இரகசியங் காக்கத்தவறியவர்கள்: (எசேக்கியா ராஜாவும் சிம்சோனும்)

அ)        2இராஜாக்கள்: 20:13 – “அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றுமில்லை”.

அதன் விளைவு?

2இராஜாக்கள்: 20:17,18 – “இதோ நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமணையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்”

ஆ)                  நியாயாதிபதிகள்: 16:16,17 – “இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: … அவளிடத்தில் சொன்னான்”.

அதன் விளைவு?

நியாயாதிபதிகள்: 16:21 – “பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக் கொண்டிருக்க வைத்தார்கள்”.

நசரேய விரதம் காக்கப்பட முதலில் பெற்றோரும், பின்பு நசரேய விரதம் காப்பவனும் பொறுப்பாவார்கள். நசரேய விரதம் பாதியில் வருவதல்ல; பிறப்பிலிருந்தே அது ஆரம்பமாவதால் முதலில் பெற்றோர் அதைக் காத்து நடக்கவும், அதின் வழியில் போதிக்கவும் கடமைப்பட்டுள்ளனர். அதை சிறுபிராயத்திலிருந்தே அக்குழந்தைக்கு அறிவுறுத்தவும், போதிக்கப்படவும், வழிநடத்தவும் வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது. இம்முறை இவ்விருவர் (சாமுவேல், சிம்சோன்) விஷயத்திலும் சரிவர பின்பற்றப்பட்டதா? என்பதே இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆரம்ப நோக்கம். இதன் அடிப்படையில்தான் நாம் தியானித்தோம்.

எனவே, பொருத்தனையின் குமாரனாகிய சாமுவேலின் பெற்றோர், எல்க்கானா – அன்னாள் அதை சரிவர பின்பற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறிதேனும் கூட – சிம்சோனின் பெற்றோராகிய மனோவாவும் அவன் மனைவியும் சரிவர எடுத்துக் கொள்ளவில்லை என இந்த ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

ஒரு பெற்றோர் எப்படி குழந்தையை ஆவிக்குரிய வகையில் வளர்க்க வேண்டும்? என்பதற்கு எல்க்கானா – அன்னாள் தம்பதிகளும், ஒரு பெற்றோர் எப்படி குழந்தையை ஆவிக்குரிய வகையில் வளர்க்கக் கூடாது? என்பதற்கு மனோவா தம்பதியினரும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

நாம் நம் பிள்ளைகளை எப்படி வளர்க்கப்போகிறோம்? இன்றே ஓர் தீர்மானம் எடுப்போம். ஏசாயா: 8:18 – “இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்”. இருக்க பிரயாசமெடுப்போமாக! ஆமென்! அல்லேலூயா!

கர்த்தர் உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக!