ஆகஸ்ட் 13, 2016

குடும்பத்தில் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுவது எப்படி?

Image result for Gen: 49:28

திறவுகோல் வசனம்: ஆதியாகமம்: 49:28 – “இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்”

முற்பிதாக்கள்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு

கோத்திரப்பிதாக்கள்: 1. ரூபன் 2. சிமியோன் 3. பென்யமீன் 4. யூதா 5. செபுலோன் 6. இசக்கார் 7. தாண் 8. காத் 9. ஆசேர் 10. நப்தலி 11.எப்ராயீம் 12. மனாசே  (லேவி யை தேவன் தனக்கென தெரிந்து கொண்டார். எனவே, இஸ்ரவேலிலே அவர்களுக்குப் பங்கும் இல்லை; பாகமும் இல்லை. அதேபோல யோசேப்புக்கு பதிலாக அவனது குமரர்களான எப்பிராயீம், மனாசேயை தேவன் தெரிந்து கொண்டார். எனவே, கோத்திரப்பிதாக்கள் பட்டியலில் லேவி மற்றும் யோசேப்பின் பெயர் காணப்படாது)

பிதாக்களின் வேலை என்ன?

1. தங்கள் குடும்பத்தில் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்ட வேண்டும்.

2. பிள்ளைகளின் இருதயத்தை தேவன் பக்கமாய் திருப்பி விட வேண்டும். (யோபு: 1:5) 

3. பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டும். (ஆதி: 49:28).

இந்நாட்களில் குடும்பத்தில் உள்ள ஒரு தகப்பன் - தன் குடும்பத்தை ஒரு கோத்திரப் பிதாவைப்போல கர்த்தருக்குள் வழிநடத்த பழக வேண்டும். அதற்காக தன்னை ஆவிக்குரிய காரியங்களில் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  குடும்பத்தில் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுவது எப்படி?


1.   கட்டளையிட வேண்டும்:

ஆதியாகமம்: 18:19 – “கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்”

2.   நினைவுகூறுங்கள் / தியானித்துப் பேசுங்கள்:

சங்கீதம்: 105:6 – “அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள்” சங்கீதம்: 105:2 – “அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப்பேசுங்கள்

எஸ்றா: 7:10 – “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்”

3.   தெரிவிக்க வேண்டும்:

 யோவேல்: 1:3 – “இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவார்கள்

4.   விவரிக்க வேண்டும்:

 சங்கீதம்: 78:4 – “பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்


பிதாக்கள் ஆவிக்குரிய வாழ்வில் எப்படி இருக்க வேண்டும்?


1.   பராக்கிரமசாலிகளாய் …

1நாளாகமம்: 7:2 – “… தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்… ”.

தன் பிள்ளைகளுக்கு முன்பாக ஆவிக்குரிய வாழ்வில் முன்மாதிரியாக தகப்பனானவன் காணப்பட வேண்டும். எந்தவொரு தேவைகளையும் ஜெபத்தின் மூலம்தான் கர்த்தர் சந்தித்து வருகிறார். அற்புதங்கள் செய்து வருகிறார் என்பதனை தனது அன்றாடக வாழ்வில் பிள்ளைகளுக்கு முன்பாக தெரிய வரும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தன் தந்தை தன் தலைமேல் கைவைத்து ஜெபிக்கும்போது பிள்ளை இவ்விதமாக உணரும் வகையில் அமையப் பெற வேண்டும்….

என் தகப்பன் என் தலையில் கை வைத்து ஜெபிக்கும்போது …

·          ஜெயம் கிடைக்கும் – அற்புதம் நடக்கிறது
·          தகப்பன் எனக்கு சொன்ன வாக்கு பலிக்கிறது
·          பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கிறது
·          ஊக்கமும் உற்சாகமும் உண்டாகிறது
·          அவரது வாயின் வார்த்தையில் வல்லமை வெளிப்படுகிறது
·          அவரோடு கர்த்தருடைய பிரசன்னமும், வல்லமையும் காணப்படுகிறது
·          எவ்வளவு பெரிய தேவைக்கும், பிரச்சினைக்கும் ஜெபத்திலே தீர்வு காண்பார்
·          என் தந்தை எனக்கு ஒரு நல்ல ரோல் மாடல்
·          எனக்கு வரவேண்டிய ஆசீர்வாதம் என் தகப்பனிடம் இருந்துதான் வருகிறது

2.   உருவாக்குபவர்களாய் …

1நாளாகமம்: 7:4 – “அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; …”.

 நம் சந்ததியை கர்த்தருக்கேற்ற வகையில் முழங்கால் யுத்த வீரர்களாய், ஜெபவீரர்களாய் உருவாக்கிட வேண்டும். உலகம், மாமிசம், பிசாசை ஜெயிப்பதற்கு – உபவாசிப்பவர்களாய், விழித்திருந்து ஜெபிக்கிறவர்களாய், பரிசுத்தமானவர்களாய், தேவபக்தியுள்ளவர்களாய், ஆராதனை வீரர்களாய், துதிப்பவர்களாய், கர்த்தரின் சேனைகளாய் பிதாக்கள் தங்கள் பிள்ளைகளை உருவாக்குபவர்களாய் இருக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் நமது பிள்ளைகள் மற்றவர்களுக்கு முன்பாக ஜீவனுள்ள தேவனுக்கு சாட்சிகளாக விளங்கிட வேண்டுமல்லவா?! இந்த உலகம் தங்கள் பிள்ளைகளை சம்பாதிக்க உருவாக்குகிறது. நாமோ சாட்சியாக நிற்க உருவாக்கிடுவோம்.

3.   வாசல் காக்கிறவர்களாய் …

1நாளாகமம்: 9:19 – “… அவர்கள் பிதாக்கள் கர்த்தருடைய பாளையத்திலே வாசஸ்தலத்திற்குப்போகிற வழியைக் காவல் காத்ததுபோல, வாசஸ்தலத்து வாசல்களைக் காத்து வந்தார்கள்”

வாசஸ்தலத்திற்குப் போகிற வழியைக் காவல் காக்க வேண்டும். ஏனென்றால், பிரசங்கி: 5:1 – “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம்”. இக்காலகட்டத்தில் சபையில் வாலிபர்கள் மற்றும் வாலிப சகோதரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணம்.. உலகம் அவர்களை இழுத்து விடுகிறது. பெற்றோரிடம் ஏதாவது காரணங்களை நம்புவதற்கு ஏதுவாகச் சொல்லி ஆராதனையை விட்டு விலகி ஓடி உலக சிநேகதர்களோடு நேரத்தை வீணாக செலவிடுகிறார்கள். ஆதாம் அன்றைக்கு தன் மனைவியாகிய ஏவாளை கண்டுகொள்ளாமல் விட்டதன் காரணமாக செய்யக்கூடாததை செய்து ஆதாமையும் செய்ய வைத்து விட்டாள். எனவே, பிதாக்கள் – பிள்ளைகளை மட்டுமல்ல… மனைவியையும் காக்க வேண்டும். ஒரு தகப்பன் தன் வீட்டின் வாசலையும் தேவாலயத்திற்கு போகும் வழியையும் காப்பதில் கவனமாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், … குடும்ப அங்கத்தினர்கள் பின்மாற்றத்திற்குட்பட நேரிடும். வாசலை காப்பதில் விழிப்புடன் இருங்கள்.

வாசல் வழியாகவோ, பக்கவழியாகவோ உலகம் மாமிசம் பிசாசு என்கிற சிறுநரிகள் நுழைந்திடாமல் வாசலை காப்போம். உள்ளிருந்து கெடுக்கும் குழிநரிகள் – அதாவது, ஃபேஸ்புக், டுவிட்டர், வலைதளங்கள், வாட்ஸ்அப்புகள், செல்போன்கள், தொலைக்காட்சிகள், சீரியல்கள் … போன்ற குழிநரிகள், குடும்பம் என்னும் தோட்டத்திற்குள்ளிருந்து சேதம் வரவழைக்கும் இவைகளையும் சிறைப்பிடித்து வெளியேற்றுவோம்.

உன்னதப்பாட்டு :2:15 – “திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே”

4.   தாழ்மையுள்ளவர்களாய் …

1நாளாகமம்: 29:15 – “உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்…”
யாக்கோபு: 4:10 – “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்”

ஆபிரகாம்பூமி தாங்கக்கூடாத ஆஸ்தியுடையவனாய் இருந்தான்                                                                             ஈசாக்கு – நூறு மடங்கு பலனைப் பெற்றான்                                                                        யாக்கோபு – இருபரிவாரங்களுக்கு அதிபதியானான் 

– இந்த முற்பிதாக்கள் மூவரும் கர்த்தரால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டு ஐசுவரியவான்களாயிருந்தாலும்….

எபிரெயர்: 11:13 – “இவர்ளெல்லாரும், … பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்” என்று முற்பிதாக்களின் தாழ்மையை குறித்து வேதம் விவரிக்கிறதை காண்கிறோம்.

கர்த்தருக்கு முன்பாக தாழ்மையை தரித்து மேன்மையைப் பெறுவோம்.

5.   அழுகிறவர்களாய் / ஆர்ப்பரிக்கிறவர்களாய் …

எஸ்றா: 3:12 – “முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்”.

ஆவிக்குரியவைகளை, மற்றும் ஆவிக்குரிய காரியங்களை நம் கண்கள் காணும்போது புளகாங்கிதமடைவோமாக. உள்ளான மகிழ்ச்சியை உணர்வோமாக. ஆத்துமாவிலே களிகூர்தலை அனுபவிப்போமாக. மெய்யாகவே நாம் உணரப்பட்டால்… கண்களில் தானாகவே கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமற் போகும் அளவு வெளிப்படும். அதை அடக்கி விடாமல் அழுதுவிட வேண்டும். அழுதலும், ஆர்ப்பரித்தலும் ஆவிக்குரிய அடையாளங்கள்தான். ஆவியில் நாம் கதறி அழும்போது, கண்ணீர் சிந்தும்போது… அதைக்காண்கிற பலர்… ஏன்? சிலர்… நம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் நமது பிள்ளைகள் பக்திவிருத்தியடைவார்கள். மனமாற்றமடைவார்கள்.

6.   மறைக்காமல் அறிவிப்பவர்களாய் …

யோபு: 15:18 – “ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்”

கர்த்தர் செய்த நன்மைகளை பக்திவிருத்திக்கேதுவாய் பிள்ளைகளுக்கு சாட்சியாக அறிவிக்க வேண்டும். நன்மைகள் மட்டுமல்லாது… சிலவேளைகளில் நாம் தவறு செய்து தேவனால் சிட்சிக்கப்படும்போது, அந்த சிட்சைகளும் பக்திவிருத்திகேதுவாக நம் பிள்ளைகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும். நாம் பெற்ற சிட்சை தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள். கர்த்தருக்குப் பயந்து நடப்பார்கள்.

அப்போஸ்தலர்: 20:26,27 – “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்”.

7.   நம்பிக்கையுள்ளவர்களாய் …

சங்கீதம்: 22:4 – “எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்”   

நமது விசுவாசத்தை நம்பிக்கையை பிள்ளைகளுக்கு விவரிப்போமாக. விசுவாசத்தினால் பெற்ற நன்மைகள், நம்பிக்கையினால் பெற்ற விடுதலை, மீட்பு அனைத்தையும் கற்றுக் கொடுப்போம். எதிரான சூழ்நிலையில் நமது நம்பிக்கை எப்படிப்பட்டதாயிருந்தது? எப்படி அவிசுவாசத்தை மேற்கொண்டோம்? அசைவற்ற நம்பிக்கையை எவ்விதம் பெற்றோம்? நம்பிக்கையின் பலன் போன்றவற்றை பிள்ளைகள் அறியும்படி செய்வோம். பெருகட்டும் விசுவாசம். வளரட்டும் தேவசந்ததி. ஆமென்! அல்லேலூயா!