ஆகஸ்ட் 30, 2016

உங்கள் ஜெபத்தின் வலிமை உங்களுக்கு தெரியுமா?

Image result for  ஜெபம்


திறவுகோல் வசனம்:     யோபு: 21:15 – “சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம் பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்”.

ஜெபத்தைக்குறித்து அறியாதவர்களின் கூற்று இது என்பதை நாம் அறிவோம். இரட்சிக்கப்பட்டவர்கள் கட்டாயம் ஜெபிக்க வேண்டும். ஆனால், இன்று அநேகர் இதை உணர்வதில்லை. அல்லது அறிந்திருக்கவில்லை. பத்து வருட விசுவாசியும் மற்றும் பரம்பரை கிறிஸ்தவ விசுவாசி என்று சொல்பவர்களும்கூட ஜெபத்திற்கென்று பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள்கூட கொடுக்கமாலிருப்பது கசப்பான உண்மையாகும். பத்து நிமிடங்கள் ஜெபிப்பவர்கூட ஒருமணிநேரம் ஜெபிக்க வைக்கவே இச்செய்தியின் நோக்கமாயிருக்கிறது.

ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஜெபிக்காமல் இருப்பது எதைக்காட்டுகிறது என்றால்… “தேவனுடைய தயவின்றி என்னால் சுயமாக எல்லாவற்றையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்” என்பதே. இது சரியானதல்ல. கர்த்தரை மறுதலிப்பதற்கு சமமானது. 

யோவான்: 15:5 – “… என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது…”. யோவான்: 15:4 – “…கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனி கொடுக்கமாட்டீர்கள்”. எனவே, 1யோவான்: 2:6 – “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்”.

நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்து நல்ல ஜெபவீரர் – ஜெபத்திற்கு முன்மாதிரி


Image result for  ஜெபம்

மத்தேயு: 4:2 – நாற்பதுநாள் உபவாசம் 
                                  
லூக்கா: 5:16 –  தனித்துப்போய் ஜெபம்பண்ணினார் 
                       
லூக்கா: 6:12 – மலையின்மேல் ஏறி இரா முழுவதும் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். 
                                            
லூக்கா: 9:28 – ஜெபம் பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார் 
    
லூக்கா: 22:44 – ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்

ஜெபிக்காதவனின் ஆரம்பமும் முடிவும்

Image result for hell

யோபு: 21:7-13 – ஜெபிக்காதவனின் ஆரம்பம் எவ்வளவுதான் செழிப்பாகவும் செழுமையாகவும், வளமாகவும் வளப்புமாகவும், இனிமையாகவும் இன்பமாகவும், திடமாகவும் திட்டமாகவும், பத்திரமாகவும் பாதுகாப்புமாகவும், கூத்தும் கும்மாளமாகவும், களியாட்டும் விளையாட்டுமாகவும், கின்னரத்து இசையின் கிளுகிளுப்பும் சந்தோசமும் உண்டாயிருந்தென்ன? கணப்பொழுதில் பாதாளத்தில் இறங்குவார்கள். 

இப்படிப்பட்டவர்கள்தான் அவரை நோக்கி ஜெபம் பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்”. இது நமக்குத் தேவையா? என சிந்தித்துப் பாருங்கள்.

எனவேதான், யோபு: 21:16 – ல் – “ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக” என்றான்.

கட்டுப்படுத்தப்பட முடியாத தடையற்ற ஜெபம் ஏறெடுத்தல்


தானியேல்: 6:10 – தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்போய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்து வந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்”.

Image result for  daniel: 6:10
நம் ஜெபத்திற்கு யாதொரு தடையும் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அது மனிதர்களாலோ அல்லது குடும்ப உறவினர்களாலோ மற்றும் நமது பிள்ளைகளாலோ அல்லது நம்மை ஆளும் அரசாங்கமோ எதிர்த்தாலும், தடை செய்தாலும் நாம் அதற்கு இணங்கிப் போகாமல் “கட்டுப்படுத்தப்பட முடியாத தடையற்ற ஜெபத்தை தானியேல்போல நாம் ஏறெடுக்க வேண்டும். ஜெபத்திற்கு எந்த தடையும் யாராலும் வராதபடி எதிர்வல்லமைகளை கண்டுகொள்ளாமல் முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும்.
ஜெபத்திற்குப் போகுமுன் தன் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட வேண்டும். நான் இந்த அறையிலே ஜெபிக்கப் போகிறேன். நான் ஜெபத்தை முடித்து வரும்வரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். யார் வந்து அழைத்தாலும் காத்திருக்கச் சொல்லுங்கள். தொலைபேசிக்கு நீங்களே பதிலளியுங்கள். இல்லாவிட்டால் காத்திருப்பில் வையுங்கள் என்று உறுதிபட கூறி விட்டு சென்றால் தடையேதும் கூடுமானவரை வராது. ஜெபத்திற்கு முன் நாம் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் முழுவதுமாக செய்து முடித்து விட வேண்டும். அரைகுறையான கடமைகள் நம் ஜெபங்களுக்கு பெரும் தடைகளகும். அப்படி நேரிடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.  
உதாரணமாக…
ஒருமுறை டாக்டர். பால் யாங்கி சோ அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு போன்கால். உதவியாளர் எடுத்தபோது, மறுமுனையில், “நான் கொரியா நாட்டு ஜனாதிபதி பேசுகிறேன். பால்யாங்கி சோ இருக்கிறாரா? நான் அவரிடம் பேச வேண்டும்” என்றார். உடனே உதவியாளர், “இப்போது முடியாது. ஒருமணி நேரம் கழித்து தொடர்பு கொள்ளுங்கள்” என்றார். தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் ஒருமணிநேரம் கழித்து அதேபோன் கால். இம்முறை பால் யாங்கி சோ எடுத்தார். மறுமுனையில், “நான் கொரிய நாட்டு ஜனாதிபதி பேசுகிறேன். உங்கள் உதவியாளரை உடனடியாக பணிநீக்கம் செய்யுங்கள்” என்றார். அதற்கு பால் யாங்கி சோ அவர்கள், “அப்படி செய்ய இயலாது. ஏனென்றால், நான்தான் அப்படிச் சொல்லியிருந்தேன். பரலோக ஜனாதிபதியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது,  பூலோக ஜனாதிபதியிடம் பேச நேரமில்லை” என்று பதிலளித்தாராம்.
எனக்கன்பானவர்களே! டாக்டர் பால் யாங்கி சோ அவர்கள் ஜெபத்திற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் என் பார்த்தீர்களல்லவா? அவரது ஊழியத்தின் வெற்றிக்குப்பின்னால், அஸ்திபாரமாக இருப்பது ஜெபமே! தானியேல், பால்யாங்கி சோ போன்ற தேவமனிதர்கள் – தங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட முடியாத தடையற்ற ஜெபத்தைக் கொண்டிருப்பவர்களாய் இருந்ததினால்தான் தங்கள் வாழ்வில் அற்புத வல்லமைகளை வெளிப்படுத்தினார்கள் என்பதை மறவாதிருப்போமாக.

ஜெபிக்கும்போது கர்த்தருடைய தொடுதலை உணருதல்


தானியேல்: 9:21 – “அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருசனாகிய காபிரியேல், வேகமாய் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்”.
Image result for daniel: 9:21
நாம் ஜெபிக்கும்போது, தேவனுடைய தொடுதலை நாம் உணர வேண்டும். அல்லது நம்மை தேவதூதன் தொட வேண்டும். தேவப்பிரசன்னம் உணரப்பட வேண்டும். நம்மேல் கர்த்தருடைய மகிமை இறங்கத்தக்க வகையில் ஜெபத்தை ஏறெக்க வேண்டும்.
ஒருமுறை பரிசுத்தவான்கள் சிலபேர் ஒன்றுகூடி ஜெபித்தார்களாம். அனைவரும் கண்களை மூடி பயபக்தியாய் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, ஒருவர் மட்டும் மற்றவர்கள் எப்படி ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள் என காணும்படி கண்களைத் திறந்து பார்த்தார். ஒவ்வொருவரும் பற்பலவிதமாய் தேவனை கைகள் அசைத்து, உடலை குலுக்கி, கரங்களைத்தட்டி ஆராவரித்து அந்நியபாஷைகளில் ஆராதித்து ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். ஆனால், ஒருவர் மட்டும் முழங்காலில் நின்று, உடலை குறுக்கி ஒடுங்கிபோய் அசையாமல் ஜெபத்திலே கண்ணீரோடு ஜெபிக்கும் காட்சியைக் கண்டார். ஜெபத்தின் முடிவில் அவரை தனியே அழைத்து அதைப்பற்றிக் கேட்டபொழுது, அவர் “நான் ஜெபிக்கும்போது ஆண்டவர் இயேசு என் அருகில் நிற்பதை கண்டேன். எங்கு நான் அசைந்தால் அவரைத் தொட்டு விடுவேனோ என்று எண்ணி என்ன நான் ஒடுக்கி கொண்டு ஜெபித்தேன்” என்றார்.
ஆம் பிரியமானவர்களே! நாம் ஜெபிக்கும்போது, நம்முடைய ஜெபம் கர்த்தரை தொட வேண்டும். அல்லது நாம் கர்த்தருடைய தொடுதலை உணர வேண்டும். இதுவே நம் வாஞ்சையாய் இருக்க வேண்டும்.
தொடுதல்:
சாலமோன் - கர்த்தருடைய இருதயத்தை தொடுகிற ஜெபத்தை ஏறெடுத்தான் (1ராஜாக்கள்: 3:9-13 / 2நாளாகமம்: 7:12 / 6 அதிகாரம்)
பெரும்பாடுள்ள ஸ்திரீ - கர்த்தருடைய வல்லமையின் எல்லையை தொட்டாள் (மத்தேயு: 9:20)
கொர்நேலியு – கேட்கப்படும் ஜெபத்தை ஏறெடுத்தான் (அப்போஸ்தலர்: 10:2)
பவுல் - கர்த்தருடைய இருதயத்தை தொடுகிற ஜெபத்தை ஏறெடுத்தான் (அப்போஸ்தலர்: 9:6)
சாலமோன் தேவனுடைய இருதயத்தை தொடும் வகையில் அவருக்குப் பிரியமானதை ஜெபத்தில் கேட்டான். கேட்டதற்கு மேலாக பெற்றுக் கொண்டான்.
பெரும்பாடுள்ள ஸ்திரீ கர்த்தருடைய வல்லமை கர்த்தரிடத்தில் உண்டு என்பதை அறிந்து அந்த வல்லமையின் எல்லையை தொட்டு சுகம் பெற்றாள்.
கொர்நேலியு தன் ஜெபம் வீணாகாதபடி அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளால் அலப்பாமல் தன் ஜெபங்கள் தேவனால் கேட்கப்படுகிற ஜெபங்களை ஏறெடுத்தான்.
பவுல் தான் கேட்டபடி அவரது சித்தத்தை வாழ்நாளெல்லாம் செய்யும்படி ஊழிய வேலையை கொடுத்துக் கொண்டேயிருந்தார்.
ஜெபத்தை நடத்தினால் – தேவனையும் ஜனங்களையும் ஜெப வார்த்தைகள் தொடும்படி ஜெபியுங்கள் – நடத்துங்கள். கருத்தான ஜெபம் கர்த்தரைத் தொடும்; மக்களை உயிர்ப்பிக்கச் செய்யும். பரலோகத்தை அசைக்கும்.
தொடுகிற ஜெபத்தை செய்யுங்கள் – தொடப்படுகிற ஜெபம் பண்ணுங்கள்

 பெற்றுக்கொள்வோம் என்று அறிந்து ஜெபித்தல்


மாற்கு: 11:24 – “ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்”
Image result for mark: 11:24

எதற்காக நீங்கள் ஜெபிக்க முழங்கால்படியிட்டீர்களோ… அதை நீங்கள் பெறுவீர்கள் அல்லது பெற்றுக் கொண்டீர்கள் என்பதை நிச்சயித்து ஜெபம் பண்ணுங்கள். ஜெபத்தை முடியுங்கள். இல்லாவிடின் பயனிராது.
உதாரணமாக …
1)   ஆதியாகமம்: 27:26-38 – வரை ஈசாக்கு தன் இரு குமாரர்களில் மூத்தவனை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அதில் முந்திக்கொண்டவன் யாக்கோபு. பிந்தி வந்த ஏசா, அதை அறிந்து, “என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்திமிட்டு அழுதான்” என்று ஆதியாகமம்: 27:38 ல் வாசிக்கிறோம்.
2)   ஆதியாகமம்: 49:1 – “யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்” என்றான்.
3)   யாத்திராகமம்: 33:1 – “தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:”
மேற்கண்ட வேதபுருஷர்கள் அனைவரும் தங்கள் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் கர்த்தரால் கனப்படுத்தப்படும்; தாங்கள் சொன்னதின்படி காரியம் வாய்க்கச் செய்யும்; வம்சங்கள் தலைமுறைகள் ஆசீர்வதிக்கப்படும் என்பதை நன்கு அறிந்திருந்தனர். அதனால்தான் அவர்கள் தங்கள் வாயின் வார்த்தைகளில் கவனமாயிருந்தார்கள். அவர்கள் ஆசீர்வதித்தால் அது ஆசீர்வதிக்கப்படும். சபித்தால் சபிக்கப்பட்டுப் போகும் என்பதை அறிந்திருந்தனர்.
தங்கள் வாயினால் பேசுவதை, சொன்னதை கர்த்தர் நிச்சயமாய் நிறைவேற்றுவார் என்பதை உணர்ந்திருந்தனர். தங்கள் வார்த்தைகளை அவர்களே மதித்தனர். கனப்படுத்தினர். அவை கர்த்தரால் அங்கீகரிக்கப்படும். யார் யாருக்கு எப்படிப்பட்ட, என்னென்ன ஆசீர்வாதங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதை கர்த்தருடைய சித்தப்படி ஜெபத்திலே பெற்று அவரவர்களுக்குரிய ஆசீர்வாதங்களை தருகிறவர்களாயிருந்தார்கள். தங்கள் ஜெபத்திலும், தேவனோடுள்ள உறவிலும், வார்த்தைகளிலும், வாக்குத்தங்களிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும், உறுதியும் மிக்கவர்களாயிருந்தார்கள். தேவனிடத்திலிருந்து அதை பின்வரும் சந்ததிகளுக்கு பெற்றுத்தருவதில் உறுதிப்பட்டிருந்தார்கள்.
நீதிமொழிகள்: 18:21 – மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்”.
மத்தேயு: 17:20 – “… இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம் …”
மத்தேயு: 21:21 – “… இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும்”
மாற்கு: 11:23 – “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”.
கர்த்தர் சொல்வதே மெய்தான். அதை இரண்டுதரம் வலியுறுத்துகிறார் என்றால் எந்தளவிற்கு அது உண்மை என்பதை அறியுங்கள். அப்பொழுது நீங்கள் ஜெபத்தில் கேட்பதைப் பெறுவீர்கள்.

மறுரூபம் உண்டாக்கும் ஜெபம் ஏறெடுத்தல்

லூக்கா: 9:29 – “அவர் ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது”.
ஜெபிக்கும் மனிதன் நாளுக்கு நாள் மறுரூபம் அடைவான். தேவனோடு அனுதினமும் உறவாடுகிற மனிதன் மறுரூபம் அடைவான். கர்த்தரோடு சஞ்சரிக்கின்ற மனிதன் மறுரூபமடைவான்.
மறுரூபம் என்றால் என்ன?
அப்போஸ்தலர்: 26:10,11 – முன்பு சபைகளை மூர்க்கவெறி கொண்டு பாழாக்கி துன்பப்படுத்துகிறவனாய், தூஷிக்கிறவனாய், சிறையிலடைப்பவனாய் இருந்தான். இது முன்னிருந்த நிலை.
அப்போஸ்தலர்: 26:18 – இப்பொழுது இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் அதிகாரத்தினின்று தேவனிடத்திற்கு திருப்பி விடுதல், கட்டப்பட்ட கண்களைத் திறத்தல், சபைகளை நிறுவுதல், சுவிசேஷத்தை பிரபல்யப்படுத்துதல், நிரூபங்களை எழுதுதல், மூப்பர்களை ஏற்படுத்துதல் – இது பின்னிருந்த நிலை.
2கொரிந்தியர்: 5:17 – “… ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” என்ற வேதவார்த்தையின்படி பவுலின் பழைய வாழ்வு மாறி கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வை பெற்றுக் கொண்டான். இதற்குப் பெயர்தான் மறுரூபமாகுதல் என்று பெயர்.
தேவனாகிய கர்த்தர் அப்.பவுலைக் குறித்து அனனியா என்பவனிடம் சொல்லும்போது, அப்போஸ்தலர்: 9:11 – “… அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” என்றார். காரணம்? 
சபைகளை பாழாக்குகிறவன், துன்பப்டுத்துகிறவன் என்றுதான் அனனியா பவுலைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்தான். அதனால் அவன் பெயரைக் கேட்டவுடனே பயந்தான். அவன் பயத்தை தேவனாகிய கர்த்தர் போக்கும்படி “… அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” என்றார். ஜெபிக்கிறவன் மற்றவர்களை அச்சுறுத்த மாட்டான். பிறருக்கு அச்சமுண்டாகும் வகையில் வாழவும் மாட்டான். அவனது அணுகுமுறை மென்மையாகவும், மிருதுவாகவும், இனிமையாகவும், ஆவிக்குரியதாகவும் காணப்படும். அவனிடத்தில் முரட்டுத்தனமோ, மூர்க்க வெறியோ காணப்படாது என்பதை அனனியா போன்று இருக்கும் நமக்கு உணர்த்தும்படி “… அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” என்கிறார்.
ஜெபம் ஒரு மனிதனை மறுரூபமாக்கும். சுபாவங்களை மாற்றும். நடக்கையை மாற்றும். எண்ணங்களை மாற்றும். சிந்தனையை மாற்றும். பேச்சை மாற்றும். உடையை மாற்றும்.

மாற்றங்களையும் மாறுதல்களையும் ஏற்படுத்திய ஜெபங்கள்


யாக்கோபு ஜெபித்தான் –   மாமனார் லாபானும், உடன் பிறந்த சகோதரன் ஏசாவும் யாக்கோபை கொலை செய்யலாம் என்று புறப்பட்டு வந்த சிந்தையை யாக்கோபின் ஜெபம் மாற்றியது. விடியும் முன் விமோசனம் கிடைத்தது. உனக்கொரு விடியல் உண்டு. (ஆதியாகமம்: 32:24)
ஆபிரகாம் ஜெபித்தான் – தன் சகோதரனின் மகன் லோத்துவை காப்பாற்றியது. (ஆதியாகமம்: 18:22)
ஆபிரகாமின் ஜெபித்தான் - செத்த கர்ப்பத்தை உயிர்ப்பித்தது. சரீரம் செத்தநிலை மாறியது. குழந்தைபேறு உண்டாயிற்று (ரோமர்: 4:19-21).
எஸ்தர் ஜெபித்தாள் – தேசம்,  யூதகுலம் காப்பாற்றப்பட்டது. பிராணனை வாங்க சட்டம் போட்டவன், இப்பொழுது தன் பிராணனைக் காத்துக் கொள்ள எஸ்தரிடம் கெஞ்சி கதறி நிற்கிறான் (எஸ்தர்: 7:6,7). ஜெபம் சரித்திரத்தையே மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது.
யோசுவா ஜெபித்தான் – இயற்கையே அவன் வசமானது. சூரியனும் சந்திரனும் அசையாமல் அதினதின் நிலையில் நின்றது (யோசுவா: 10:12)
யோபு ஜெபித்தான் – அவன் சிநேகிதர்களின் மீறுதல் மன்னிக்கப்பட்டு சிறையிருப்பு நீங்கியது (யோபு: 42:8,10).

உங்களது ஜெபங்கள் –

·          உங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். கொண்டு வரும்.
·          உங்கள் சத்துருக்கள் சமாதானத்திற்கு வர வேண்டும். வருவார்கள்.
·          உங்கள் உறவுகளை இரட்சிப்புக்குள் கொண்டு வர வேண்டும். வருவார்கள்.
·          செத்தநிலையில் உள்ள ஆசீர்வாதங்கள், செத்த, இழந்த, மீட்க இயலாதவைகளை உயிர்ப்பிக்க வேண்டும். உயிரடையும்.

வேதத்தில் உள்ள திருஷ்டாந்தங்கள் அனைத்தும் வாசித்து இரசிப்பதற்கல்ல. மெச்சிக்கொள்வதற்கும் அல்ல. அதன் பாதையில் நாம் விசுவாசித்து நடப்பதற்கே என்பதை அறியுங்கள்.

ஜெபம் உங்கள் வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மாற்றங்களை ஆசீர்வாதங்களை கொண்டு வரும். நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக் கொள்கிறதற்கும் மேலாக பெரிய காரியங்களை நடப்பிக்கும். ஜெபம் சாதாரணமான உங்களை அசாதாரணமானவர்களாக மாற்றும். இருக்கின்ற இடங்களில் உயர்வை கொடுக்கும். ஜெபம் சத்துருக்களை ஓட வைக்கும். சத்துருக்களின் நடுவே பந்தியை ஏற்படுத்தும்.

GOD BLESS YOU

குறிப்பு : இந்த தளத்தில் வெளியிடப்படும் செய்திகள் தங்களுக்கு பயனுள்ளதாகவும் ,ஆசீர்வாதமாகவும் இருக்குமானால் கீழே உள்ள கருத்துப்பெட்டியில் (Comment Box) சாட்சியாக விளங்கிட கருத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.