பிப்ரவரி 15, 2016

மறைப்பது தேவனுக்கு மேன்மை – ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை

Image result for proverbs: 25:2

மறைப்பது தேவனுக்கு மேன்மை – ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை


  நீதி: 25:2 – “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை”

தேவன் ஏன் காரியத்தை மறைக்கிறார்? அதன் தாற்பரியம் என்ன? நம்மைக் குறித்து தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாத திட்டங்களை சாத்தான் கண்டறியக் கூடாது என்பதற்காக காரியத்தை மறைக்கிறார். அப்படியானால்… தேவன் மறைத்து வைத்துள்ள காரியத்தை மனிதன் கண்டறிவது எப்படி? கருகலானவைகளை காண்பது எப்படி?

அதற்கு மனிதன் காரியத்தை ஆராய வேண்டும். ஜெபத்துடன் வேதத்தை வாசித்து காரியத்தை ஆராயும்போது, பரிசுத்த ஆவியானவர் கருகலானவைகளையும், மறைவானவைகளையும் வெளிப்படுத்துவார். நம்மைக் குறித்து தேவன் வைத்திருக்கும் எதிர்கால ஆசீர்வாதங்கள், நிகழ்கால காரியங்களை, தேவதிட்டங்களை கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, வேததியானத்தின் மூலம் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் வெளிப்பாடுகள் கிடைக்கும். அது நம் வாழ்விற்கு மேன்மையை கொண்டு வரும்.

சில அரசியல் தலைவர்களை பத்திரிக்கை நிருபர்கள் அணுகி கட்சியின் நிலவரங்கள் மற்றும் கூட்டணி சேர்வது பற்றி அவர்களின் வாயைக்கிளறி அவர்களது திட்டங்களை அறிந்து பத்திரிக்கையில் வெளியிட முற்படுவார்கள். அதற்கு அரசியல்வாதிகளின் பதில் இப்படியாகத்தான் இருக்கும்: “அப்படியா!!!” “ஆகட்டும் பார்க்கலாம்” “நோ… கமெண்ட்ஸ்”  :கருத்துச் சொல்ல விருப்பமில்லை" “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” “கற்பனைகளுக்கெல்லாம் பதில் தர இயலாது” – என்று காரியங்களை மறைக்கும் பொருட்டு, பட்டும் படாமலும், பொத்தாம் பொதுவாகவும், உறுதியற்ற பதிலாகவும்தான் சொல்வார்கள். அல்லது புன்முறுவல், புன்கையோடு அமைதி காப்பார்கள். காரணம் என்ன? எதிர்க்கட்சிகளுக்கு இவர்களது திட்டம் வியூகம் மற்றும் கூட்டணி பற்றி முன்கூட்டியே தெரிந்தால் அதற்கு எதிராளிகள் சமாதி கட்டி விடுவார்கள். இதன் விளைவு? கட்சியில் பிளவும் - தேர்தலில் தோல்வியும் ஏற்படும்.

இதுபோலதான் தேவன் நம்மை எப்படியெல்லாம் நம்மை ஆசீர்வதிப்பார்? எவ்வழிகளிளெல்லாம் நம்மை நடத்துவார்? என சாத்தானுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டால்… அவன் நமக்கு வாழ் நாளெல்லாம் தொல்லைகள் கொடுத்துக் கொண்டேயிருப்பான். வழிகளெல்லாம் தடைகளை கொடுப்பான். முன்னேறவே விட மாட்டான். முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவானல்லவா?! எனவேதான், நம்மைக் குறித்த அவரது திட்டத்தை மற்றும் காரியத்தை,  சாத்தான் கண்டறிய முடியாதபடி மறைக்கிறார். மறைத்து வைத்துள்ளார். அவனுக்குத்தான் மறைத்து வைத்திருக்கிறாரே தவிர, நமக்கு மறைத்து  வைக்கவில்லை.

ஆனால், நாம் அதைப் பெற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உண்டு. தேவனால் மறைத்து வைக்கப்பட்டுள்ள நம் வாழ்வைக் குறித்த தேவதிட்டத்தை, காரியத்தை அறிந்து கொள்ள, வெளிப்பாடுகளை பெற்றுக் கொள்ள பரிசுத்த வேதாகமத்தின் வாயிலாக “காரியத்தை ஆராய” வேண்டும். வேதத்தை அனுதினமும் ஆராய்ந்து தான் எதையும் நாம் பெற முடியும்.

எதனால் அப்படி? ஏனென்றால்… சாத்தான் கர்த்தருடைய வேதத்தை வாசிக்க மாட்டான். அதில் உள்ள சத்தியத்தை அறிந்தாலும் தேவரகசியமோ, வெளிப்பாடோ அவனுக்கு புரியாது. விளங்காது. அதற்கு பரிசுத்த ஆவியானவர் துணை வேண்டும். அவனுக்கோ அது இல்லை. தேவனோ… சாத்தானுக்கு மறைத்து வைத்துள்ளார். வேதத்தை வாசித்து தியானிப்பவர்களுக்கோ அவர் காரியத்தை வெளிப்படுத்துகிறார். ஏனென்றால்… நமக்கு சத்திய ஆவியானவர் உண்டு. அவரை நாம் பெற்றிருக்கிறோம். அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். "வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின்படி சொல்லா விட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை" (ஏசாயா: 8:20).

தேவனாகிய கர்த்தர் மனிதனுக்கு வேண்டிய அனைத்து ஆசீர்வாதங்களையும் தம்முடைய திருவசனத்திற்குள் ஒருவரும் அறியாதபடி மறைத்து வைத்துள்ளார். பரிசுத்த ஆவியினால் வேத வசனங்களையெல்லாம் முத்திரித்து இருக்கிறார். அதை ஆவியின் நிறைவை அபிஷேகத்தை பெற்றவர்கள் மட்டுமே வெளிக்கொண்டு வருகிறார்கள். அவ்வசனத்தின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

வேத தியானம்தான் சகலவித ஆசீர்வாதங்களையும் கொண்டு வரும். வசனத்தைக் கொண்டுதான் நம்மை குணப்படுத்துகிறார். சங்: 107:20 - “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்”

எனவே, வசனத்தின் காரியத்தை விளங்கிக் கொள்ள வசனத்தை ஆராய வேண்டும். ஆராய ஆராயத்தான் ஆவியானவரின் வெளிப்பாடுகள் மற்றும் மறைந்திருக்கும் கருகலானவைகள் நம் கண்களுக்கு புலப்படும். "தேவனே உம்முடைய வார்த்தையின் மகிமையை பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும்" (சங் 119:18) என தாவீதைப்போல ஜெபிப்போம்.

“கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்” (ஏசா: 34:16).