பிப்ரவரி 14, 2016

விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகிமை

Image result for job:23:12

விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகிமை

 "தேவனே உம்முடைய வார்த்தையின் மகிமையை பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும்" (சங் 119:18)

"அவருடைய (கர்த்தருடைய) வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக் கொண்டேன்"  (யோபு 23:12)

"உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; ..." (எரேமியா: 15:16).

தேவனுடைய வார்த்தைகளின் மகத்துவத்தை பல இடங்களில் வேதத்தை வாசிக்கும் போது பார்க்கலாம். இவ்வளவு ருசியான தேவனுடைய வார்த்தையை நாம் ருசி பார்க்காமல் இருக்கலாமா?. இன்று அனேகர் தேவனுடைய வார்த்தையை ருசிப்பார்க்காத காரணத்தினால் தங்களுடைய வாழ்க்கையில் ருசியில்லாத உணவை அடிக்கடி ருசி பார்க்க நேரிடுகிறது.

யாரிடம் இந்த மகத்தான வார்த்தை நிரம்பியிருக்கிறதோ அந்த மனிதனே பாக்கியவான்.  இந்த உலகத்தில் முதல் ஐசுவரியவான் தேவனுடைய வார்த்தையால் நிரப்பப்பட்டவனே.

விதையென்னும் தேவனுடைய வார்த்தை இல்லாத நிமித்தமே நாம் அடிக்கடி நம்முடைய நோயை தீர்க்க மருத்துவமனைக்கும், பிரச்சினை, வழக்குகளை தீர்க்க உலக மனிதர்களிடமும் செல்ல நேரிடுகிறது.

 விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகத்துவத்தை  தியானிப்போம்


முதல் மகத்துவம்: விதையென்னும் தேவனுடைய வார்த்தை "ஜீவனைத் தருகிறது":


 " நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது"  (யோவான் 6:63). யாரெல்லாம் தேவனுடைய வார்த்தையை உட்கொள்கிறார்களோ அவர்கள் எல்லாம் மரிப்பதில்லை. அவர்கள் நித்திய நித்தியமாக தேவனோடு வாழ்கிறவர்கள். அவர்களுடைய உலக வாழ்க்கையில் ஏற்படும் நோய்களையும், இழப்புகளையும், நஷ்டங்களையும் விதையென்னும் தேவனுடைய வார்த்தை சரி செய்கிறது.

விதையென்னும் தேவனுடைய "வார்த்தையின் குணம்"  -  "உருவாக்குதல்", "சிருஷ்டித்தல்". தேவன் வார்த்தைகளை அனுப்பின போது வானமும் பூமியும் அதிலுள்ள எல்லா வஸ்துக்களும் உருவானதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். "கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் உண்டாயின" (சங் 33:6). "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளை நிற்கும்" (சங்: 33:9). விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகத்துவத்தை இவ்வசனங்களின்படி அறிய முடிகிறது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்த நோயாளிகள் விதையென்னும் அவருடைய வார்த்தையின் மூலம் புதிய உறுப்புகளைப் பெற்றுக் கொண்டதை நாம் சுவிசேஷ புத்தகங்களில் பல இடங்களில் வாசிக்கிறோம். நாமும் நம்முடைய வாழ்க்கையில் புதிய காரியங்களை பார்க்க வேண்டுமானால் தேவனுடைய வார்த்தையை நம்முடைய அனுதின உணவாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய  வாழ்க்கையில் புதிய புதிய கனிகளை, அற்புதங்களை, பலன்களை பார்க்க முடியும்.

  "என் வாயிலிருந்து புறப்படும் வசனம் அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல் அது நான் விரும்புகிறதைச் செய்து நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசாயா 55:11)

 நம்முடைய "உட்கொள்தல்" எப்படி இருக்க வேண்டும்?

ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் தேவன் நமக்குத் தந்த வேதத்தை நன்றாக ஜெபத்துடன் வாசிக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் நன்றாக படித்த வசனங்களை அசைபோட வேண்டும். அப்படி செய்யும் போது மட்டுமே இந்த மகத்தான விதையென்னும் தேவனுடைய வார்த்தை பலன் தரும். எனவே, ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட மகத்தான வார்த்தையை உட்கொள்வோம். அப்போது இதன் வல்லமையை வெளியரங்கமாக  காணலாம்.


இரண்டாவது மகத்துவம்: விதையென்னும் தேவனுடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் "தண்ணீரைப் போல இருக்கிறது":


தண்ணீர் ஒரு இடத்தில் கடந்து போகும்போது என்ன நடக்கிறது என்பது எல்லாரும் அறிந்த ஒரு காரியம். அந்த இடத்தில் தேங்கி நிற்கிற எல்லா அசுத்தத்தையும் அழுக்கையெல்லாம் அடித்துச் செல்கிறது. அதைபோல தேவனுடைய வார்த்தையும் இருக்கிறது, இந்த வார்த்தை ஒருவனுடைய வாழ்க்கையில் கடந்து வருமானால் அங்கு நடக்கிற காரியம் – "பரிசுத்தம்".

"நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்" என்று யோவான் 15:3 ல் விதையென்னும் தேவனுடைய வார்த்தையின் மகிமையைப் பார்க்கிறோம், நம்முடைய வாழ்க்கையில் தேங்கி நிற்கிற பாவம் என்கிற அழுக்கை அடித்துச் சென்று, ஒரு முழுமையான சுத்திகரிப்பை விதையென்னும் தேவனுடைய வார்த்தை உண்டாக்குகிறது என்பதே மேலே சொல்லப்பட்ட வசனத்தின் அர்த்தம்.

இத்தகைய காரியத்தை நன்றாக அறிந்த தாவீது பின்வருமாறு எழுதுகிறார், "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால் தானே" (சங் 119:9)

பாவம் செய்யாமல் வாழ வேண்டும் என்று விரும்புகிற தேவஜனமே!

தேவனுடைய வார்த்தையை எப்பொழுதும் இருதய அறைகளில் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். "நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" (சங் 119:11).

மூன்றாவது மகத்துவம்:  விதையென்னும் தேவனுடைய வார்த்தை "வெளிச்சத்தைத் தருகிறது":


தேவனுடைய வார்த்தை தூய்மையும் கண்களை தெளிவிக்கிறதுமாயிருக்கிறது (சங் 19:8). ஆம்! ஒரு மனுஷன் வெளிச்சத்துக்கு வரும்போது மட்டுமே அவன் தன்னுடைய சரீரத்தில் அல்லது தன்னுடைய வஸ்திரத்தில் ஒட்டியிருக்கிற அழுக்கைப் பார்க்க முடியும்.

இருளில் தொலைந்து போன ஒரு விலையுயர்ந்த பொருளைக் கண்டு பிடிக்க வேண்டுமானாலும் நமக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நமக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. எதற்காகவென்றால்... நம்முடைய பாவத்தைக் கண்டுபிடிக்கவும் பிசாசு கொண்டு வருகிற இருளை அடையாளம் காணவும் நம்முடைய ஆவிக்குரிய முத்துக்களாகிய வரங்களை கண்டுபிடிக்கவும் நமக்கு வெளிச்சம் அவசியம். இந்த வெளிச்சத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் விதையென்னும் தேவனுடைய வார்த்தை என்கிற விளக்கு நமக்கு மிகவும் அவசியம்.

இந்த மகத்தான வார்த்தை என்கிற வெளிச்சம் நம்முடைய வாழ்க்கையில் வரும் போது மட்டுமே நாம் உண்மையான உபதேசத்தையும் உண்மையான ஊழியக்காரனையும் அடையாளம் கண்டு கொள்ளமுடிகிறது.

இன்று அனேகர் ஏமாற்றப்படுவதற்குக் காரணம் அவர்களிடம் விதையென்னும் தேவனுடைய வார்த்தை என்கிற விளக்கு இல்லாததே ஆகும்.   "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங் 119:105).

நான்காவது மகத்துவம்: விதையென்னும் தேவனுடைய வார்த்தை நமக்கு ஒரு "ஆவிக்குரிய உணவாய் இருக்கிறது":


" மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் " (மத் 4:4).

 நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை பலவிதங்களில் சோதிக்க வந்த பிசாசை எப்படியாக எதிர் கொள்கிறார் என்பதை நாம் மத் 4ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். தன்னுடைய மகத்துவம் நிறைந்த மகிமையான வார்த்தையை பிசாசின் கேள்விக்கு பதிலாக வைத்ததுமல்லாமல் அவனை அந்த வார்த்தைகளினால் விரட்டவும் செய்தார்.

நம்முடைய வாழ்க்கையில் வளரமுடியாமல் இருப்பதற்குக் காரணம் நம்முடைய பாத்திரத்தில் தேவனுடைய வார்த்தை நிறைந்து இருப்பதற்குப் பதிலாக உலகத்தின் வார்த்தையே நிறைந்து இருப்பதால்தான்.

இப்படிப்பட்டவர்களைப் பார்த்து அப்.பவுல், "மேலும் சகோதரரே நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல் மாமிசத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேச வேண்டியதாயிற்று" என்கிறார் (1கொரி 3:1). விதையென்னும் தேவனுடைய வார்த்தை இல்லாதவர்களை அப்.பவுல் இவ்வாறு அழைக்கிறார்.

குழந்தைகள் வளர வேண்டுமானால் நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு அவசியமாகிறது போல, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை வளரவேண்டுமானால் எல்லா ஊட்டச் சத்துக்கள் நிறைந்த விதையென்னும் தேவனுடைய வார்த்தையாகிய உணவு தேவைப்படுகிறது.

ஐந்தாவது மகத்துவம்: தேவனுடைய வார்த்தை ஒரு "விதையாயிருக்கிறது":


" தேவனுடைய வசனம் விதையாயிருக்கிறது" (லூக் 8:11). சங்கீதம் ஒன்றை வாசிக்கும்போது விதையென்னும் தேவனுடைய வார்த்தை யாரிடம் இருக்கிறதோ அவன் மட்டுமே செழிப்பான் என அறிகிறோம்.

ஒரு மனுஷன் தன்னுடைய நிலத்தில் விளைச்சலைப் பெருக செய்ய வேண்டுமானால் அவன் அநேக விதைகளை இட வேண்டும்.  நல்ல விதைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவனுடைய விளைச்சல் முழுமையாக இருக்கும், அதுபோல நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நீதியான வாழ்க்கை, பரிசுத்தம், விசுவாசம், ஆவிக்குரிய கனிகள், வரங்கள் பெருக வேண்டுமானால் நாம் தேவனுடைய வசனமாகிய விதையை நம்முடைய இருதயத்தில் விதைக்க வேண்டும். அப்பொழுது  நம்முடைய நிலத்துக்கு தேவனாகிய கர்த்தர் வரும் நாளின்போது நல்ல விளைச்சலை காணமுடியும்.

ஆறாவது மகத்துவம்: தேவனுடைய வார்த்தை "இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிருக்கிறது":



"தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" (எபேசியர் 6:17 மற்றும் எபிரெயர் 4:12). எதற்காக பட்டயம் தேவைப்படுகிறது?

நிலத்தில் தேவையில்லாத களைகள், காஞ்சொறிகள், புதர்கள் வளரும். அப்படி வளருகிற களைகள் நல்ல விளைச்சலைக் கெட்டு போகச் செய்யகூடும். ஆகவே இந்த களைகளை வெட்டிப் போடுவதற்கு நிலத்தின் சொந்தக்காரர் பட்டயத்தைக் கையாளுகிறார்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தமக்கு விரோதமாக சோதனையைக் கொண்டு வருகிற,   தம்முடைய திட்டத்தை உடைத்துப் போடுவதற்கு தடையாக வந்த சாத்தானை வனாந்திரத்தில் தம்முடைய வாயிலிருந்து புறப்படுகிற வசனம் என்கிற ஆவியின் பட்டயத்தால் அகற்றி போட்டதை லூக்கா 4 ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

பாவம் நிறைந்த இவ்வுலக வாழ்வில் நாம் மாசற்றவர்களாய் வாழவும் ஊழியத்தில் ஜெயம் எடுக்கவும், இந்த மகத்தான இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய விதையென்னும் தேவனுடைய வார்த்தை மிக அவசியம்.

ஏழாவது மகத்துவம்: தேவனுடைய வார்த்தை நமக்கு "ஜெபத்தையும், ஜெயத்தையும் கற்றுத் தருகிறது":


" நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" (யோவான் 15:7).
  விதையென்னும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜெபிக்கும் போது நாம் எதைக் கேட்டாலும் உடனே பெற்றுக் கொள்கிறோம் என்பதே இதன் பொருள்.

இன்று அனேகர் தேவனிடம் இருந்து பெற்றுக் கொள்ளாததற்கு காரணம் ... அவர்களிடம் விதையென்னும் தேவனுடைய வார்த்தை இல்லாததே காரணம். ஏனென்றால் விதையென்னும் தேவனுடைய வார்த்தையே ஒரு மனுஷனுக்கு விசுவாசத்தைக் கொடுக்கிறது (ரோமர் 10:17). மாறாக வசனம் இல்லாத பட்சத்தில் அந்த மனுஷனுடைய இருதயத்தில் அவிசுவாசம் என்கிற களைகள், காஞ்சொறிகள் வளருவதை காணலாம்.

  தேவனுடைய வார்த்தை நமக்கு அதிகாரத்தை தருகிறது. என்ன அதிகாரம் கொடுக்கிறது? நாம் தேவனுடைய பிள்ளைகள் என்கிற அதிகாரம்.  நாம் உரிமையாக தேவனிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தகுதி உள்ளவர்கள். இத்தகைய காரியத்தை  தேவனுடைய சீஷர்களாகிய பேதுரு மற்றும் அப்.பவுலின் வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் பார்க்கலாம். இவர்கள் அதிகாரத்தோடு பிசாசுகளை துரத்தினதையும், பிசாசுகள் இவர்களைப் பார்த்து தேவனுடைய மனுஷர்கள் என்று கூறினதையும் நாம் நிருபங்களிலும், அப்போஸ்தலர் நடபடிகளிலும் வாசிக்கிறோம். இவர்களெல்லாம் விதையென்னும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அதன் வல்லமையினால் ஜெயம் பெற்றார்கள் என அறியலாம்.

பிரியமான  தேவஜனமே!

விதையென்னும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நம்முடைய ஆவிக்குரிய வீட்டைக் கட்டும் போது, எந்த சூழ்நிலையிலும் அதாவது புயல் அடித்தாலும், பெரு மழை சொரிந்தாலும் அசையாமல் நிலைத்திருக்க முடியும்  (மத் 7:24,25).