பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில், ஒருவர் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அது ஒரு அதிக விலையுள்ள காராக இருந்ததால், பல சவுகரியங்களுடன் காரை செலுத்துவதில், ஓட்டுநருக்கு கொஞ்சம் பெருமையும் இருந்தது.
இந்நிலையில் நெடுஞ்சாலையின் ஆள்நடமாட்டம் குறைந்த ஒரு இடத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த அந்த கார் திடீரென ஆஃப் ஆனது. காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, பெட்ரோல் அளவு, பேட்டரி சார்ஜ், ரேடியேட்டரில் தண்ணீர் என எல்லாவற்றை சரி பார்த்தார் ஓட்டுநர். எல்லாமே சரியாக தான் இருந்தது. தனிமையில் நீண்ட பயணத்தை மேற்கொண்டு மகிழ விரும்பியவருக்கு, இப்போது கடும் கோபம் வந்தது.
எவ்வளவு முயன்றும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. முடிவில் தனது தலையெழுத்து என்று நினைத்துக் கொண்டு, சாலையில் செல்லும் மற்ற கார்காரர்களிடம் உதவி கேட்கும் முயற்சியில் இறங்கினார்.
அந்த வழியாக சென்ற பல கார்களும், நிறுத்தாமல் சென்ற போது, ஒரு பழைய காரில் சென்ற முதியவர் காரை நிறுத்தி இறங்கினார். உதவி கேட்டவரிடம் என்ன பிரச்சனை என்று விசாரித்தார். தனது பரிதாப நிலையை கூறி, தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதில் இரக்கப்பட்ட அந்த முதியவர், நான் ஒரு முறை உங்கள் காரை சோதித்து பார்க்கட்டுமா? என்றார்.
ஏற்கனவே மனம் வெறுத்த நிலையில் இருந்த உதவி கேட்டவர், முதியவரின் ஆசையை ஏன் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒத்துக் கொண்டார். நின்று போன காரின் முன் பாகத்தை திறந்த முதியவர், என்னத்தையோ உள்ளே நோண்டினார். பிறகு இப்போது ஸ்டார்ட் செய்து பாருங்க என்றார். எப்படியும் ஸ்டார்ட் ஆக போவதில்லை என்ற நம்பிக்கையில், அதை மனதில்லாமல் ஸ்டார்ட் செய்த ஓட்டுநருக்கு ஒரே ஆச்சரியம். அத்தனை நேரம் பாடுபடுத்திய தனது கார், உடனே ஸ்டார்ட் ஆனது.
முதியவருக்கு நன்றி கூறிவிட்டு, உங்களுக்கு எப்படி இந்த காரில் இருந்த பிரச்சனை குறித்து தெரிந்தது என்று கேட்டார். அதற்கு அவர், “என் பெயர் தான் கார்ல் பென்ஸ் (Carl Benz). நான் தான் நீங்கள் வைத்துள்ள இந்த கார் நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் உரிமையாளர். மேலும் இந்த காரை வடிவமைத்ததும் நான் தான். இந்த காரில் எங்கே என்ன பிரச்சனை ஏற்படும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி ஒரு குட்டி “பை” கூறிவிட்டு முதியவர் இடத்தை காலி செய்தார். ஆச்சரியத்தில் நின்ற ஓட்டுநருக்கு மேற்கொண்டு கூற வார்த்தைகள் எதுவும் இருக்கவில்லை.
அந்த கார் நிறுவனத்தின் உரிமையாளர் கார்களை உருவாக்குவது போல, நம் தேவனும் நம்மை உருவாக்கி இருக்கிறார். சாதாரண ஒரு காரில் என்ன பிரச்சனை இருக்கும் என்பதை ஒரு மனிதனால் நிதானிக்க முடியும் என்றால், நம்மை படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனால் நமக்கு இருக்கும் தேவைகளை அறிந்துக் கொள்ள முடியாதா என்ன?