ஆகஸ்ட் 28, 2014

ஊழியருக்கு: "ஞானமாய் செயல்படுங்கள்"


ஒரு இளம் போதகர் திரளான மக்கள் கூடும் ஒரு சபைக்கு மேய்ப்பனாக நியமனம் பெற்றார். 

அந்தச் சபையாரோ (சபைக்குள் ஒருவரையொருவர்) இகழ்கிற, குற்றஞ்சாட்டுகிற, முறையிடுகிற தீய ஆவியை உடையவர்களாய், சாட்சி கெட்டவர்களாய் இருந்தனர். 

இதனால், மிகவும் மனவேதனையடைந்த போதகர் மிக ஊக்கமாக ஜெபித்து ஒரு திட்டத்தை வகுத்தக் கொண்டார். அதன்படி செயல்படவும் ஆரம்பித்தார். 

யாராவது சபை அங்கத்தினரான இன்னொருவரைப் பற்றி குறைகூற வரும்போது  , "பொறுங்கள்... பொறுங்கள்... இதோ இந்த முறையீட்டுப் புத்தகத்தில் நீங்கள் எந்த சகோதரனுக்காவது எந்த சகோதரிக்காவது விரோதமாக சொல்வதையெல்லாம் நான் தெளிவாக எழுதிக் கொள்ள வேண்டும்.... எழுதின பின்பு நீங்கள் அதன்கீழ் உங்கள் பெயர், முகவரி எழுதி கையெழுத்து இட்டு விடுங்கள். 

எனக்கு சமயம் வாய்க்கும்பொது நான், நீங்கள் குறிப்பிட்ட அந்த நபரிடம், நீங்கள் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்களை காண்பித்து, அதிகாரப்பூர்வமாக விளக்கம் கேட்பேன்" என்பார்.

குறைகூற வந்தவர் மெல்ல கழன்றுகொள்வார். இந்தப் போதகர் அந்தச் சபையில் பணியாற்றிய 40 ஆண்டுகாலமும் ஒரு முறையீடாவது அந்த புத்தகத்தில் பதிவாகவில்லை.

ஆம், குறைகூறும், பழிக்கும், இகழும் ஆவி அந்த சபையை விட்டே அகன்று ஓடிற்று.

இறுமாப்பு, பேதமை, தர்க்கங்கள், வாக்குவாதங்கள், பொறாமை, சண்டை, தூஷணம், பொல்லாத சந்தேகங்கள், கெட்டசிந்தை, தேவபக்தியை ஆதாயத் தொழிலாய் கருதுகிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்கள் போன்ற எவையும் நம் சபைகளிலும் இருக்கக்கூடாது. நம் வீடுகளிலும் இருக்கக்கூடாது. (1தீமோத்தேயு: 6:4,5) 

நன்றி: நித்திய பேரின்பம்

ஆகஸ்ட் 27, 2014

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 12. "சமுதாயத்தில் ஆண்களின் பங்கு"


மத்தேயு: 5:13,14 - "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;"; "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;"

தேவன் தம்முடையவர்களை "உப்புக்கும் வெளிச்சத்திற்கும்" ஒப்பிடுகிறார். ஏன்?

உப்பு:  கரைந்து - மறைந்து வேலை செய்யும்

வெளிச்சம் :  எரிந்து - தெரிந்து வேலை செய்யும்

அதாவது, நாம் மறைந்தும், தெரிந்தும் தேவனுக்கு வேலை செய்ய வேண்டும்.

பரிசுத்த வேதாகமத்தில் மறைந்தும், தெரிந்தும் வேலை செய்த தேவ பிள்ளைகள் யாரென ஆய்வு செய்யுங்கள்.

1. சமுதாயத்தில் எல்லாரிடத்திலும் ஆண்கள் நற்சாட்சி பெற வேண்டும்:

லூக்கா: 2:52 - "இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்"

2. விசுவாச கண்ணோட்டம் வேண்டும்:

பாவம் நிறைந்த பட்டணத்தை காணும்போதும், கடினமான விக்கிரகம் நிறைந்த மக்கள் வாழும் பகுதியில் ஊழியம் செய்யும் சூழ்நிலையிலும், எதிர்ப்புகள், போராட்டங்கள் அதிகரிக்கும் வேளையிலும் நாம் விசுவாச கண்ணோட்டத்துடன் அதை எதிர்கொள்ள வேண்டும். சோர்ந்து போகாமல் நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களை நினைவுகூர்ந்து விசுவாச கண்ணோட்டத்துடன் அவைகளை அணுக வேண்டும்.

தேவன், ஆபிரகாமுக்கு 2 வித வாக்குத்தத்தம் தருகிறார்:

  • ஆதியாகமம்: 13:15 - " நீ பார்க்கிற இந்த பூமியை தருவேன்"
  • ஆதியாகமம்: 13:17 - :நீ நடக்கிற பூமியை தருவேன்"

ஆபிரகாமைப்போல நாம் வாழும் பட்டணத்தை, ஊழியம் செய்யம் பகுதியை, தேசத்தை விசுவாசத்தோடு பார்க்கனும். நம்பிக்கையோடு நடக்கனும். அப்போது பட்டணங்களை தேவனுக்காக சுதந்தரிப்போம்.

சங்கீதம்: 12:8 - "மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்."

விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் வாழ்ந்த நாட்களில் பாவிகள், சண்டாளர்கள், துன்மார்க்கர் இல்லாதிருந்தார்களா என்ன? பின்னர் சோதோம்கொமாரா பட்டணத்தார் எதனால் அழிக்கப்பட்டார்களாம்? ஆபிரகாம் சுற்றித்திரிந்த பட்டணங்கள் எல்லாம் நீதிமான்களாலேயா  நிறைந்திருந்தார்கள்? இல்லையே! அதை ஆபிரகாம் எப்படி மேற்கொண்டார்? விசுவாச கண்ணோட்டத்தினால்தானே!

3. குழுவாக ஜெபிக்க பழக வேண்டும்:



பட்டணத்தை பிடிக்க, தேசங்களை சுதந்தரிக்க குழுவாக ஜெபிக்க ஆண்கள் முன்வர வேண்டும்.  வாலிபர்களாக, ஆண்களாக, ஓய்வு பெற்ற ஆண்களாக இப்படி பல பிரிவுகளில்  ஆண்களை சிறுசிறு குழுக்களாக பிரித்து (1+3), ஜெபிக்க உற்சாகப்படுத்த வேண்டும்.  ஆண்களின் ஓய்வு நேரங்கள், ஜெபத்திலும், தேவனுக்காக ஊழியம் செய்வதிலும் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

 தானியேல், (1+ 3) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ,  போன்று ஜெப குழுக்கள், ஜெபவீரர்கள் நிறைந்த சபை பட்டணத்தை மட்டுமல்ல, தேசத்தையே அசைக்கும் வல்லமை படைத்தது. ஒவ்வொரு சபைகளிலும் இவ்விதமான எழுப்புதல் ஏற்படுமென்றால் எப்படி இருக்கும்? ஆமென்! அல்லேலூயா!

4. நான்கு வித அதிகாரங்களில் பலப்பட வேண்டும்:


  • விசுவாசிகளின் அதிகாரம்  - Believer  Authority
  • சபையின் அதிகாரம்  - Church  Authority
  • பிரசங்க அதிகாரம்  -  Preacher  Authority
  • சமுதாய அதிகாரம்  - Social  Authority
A. விசுவாசிகளின் அதிகாரம்  - Believer  Authority

விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகும்போது, சமுதாயத்தில் சுவிசேஷத்தை நிலை நாட்டலாம். தேவஜனத்தின் பெருக்கத்தை சாத்தான் எப்போதும் விரும்புவதில்லை. ஆகவேதான், பிறக்கும் எபிரேய ஆண் குழந்தைகளை  நைல் நதியில் வீச கட்டளை பிறப்பித்தான். எஸ்தர் ராஜாத்தியின் காலத்தில் ஆமான் தேவ ஜனத்தை அழிக்க கட்டளை பெற்றான். நவீன காலங்களில் தேவ ஜனத்தை அழிக்க ஹிட்லரை பிசாசு பயன்படுத்தினான். ஹிட்லரின் காலத்தில் சுமார் 20 லட்சம்  யூதர்கள் கொல்லப்பட்டனர். 

B. சபையின் அதிகாரம்  - Church  Authority


மத்தேயு: 16:18 - "இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை"

மத்தேயு: 21:44 - "இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்..."

C. பிரசங்க அதிகாரம்  -  Preacher  Authority 



வல்லமையுள்ள பிரசங்கியாரால் பிசாசுகளை துரத்தலாம். ஜனங்களை விடுவிக்கலாம். தனது வல்லமையுள்ள தேவ செய்தியினால் ஜனங்களை ஆவிக்குரிய வாழ்வில் கட்டியெழுப்பலாம். சோர்ந்திருக்கிற மக்களையும், செயலற்ற ஜனத்தையும் எழுப்புதலாக்கலாம். தேசத்திற்கு உயிர்மீட்சியை கொண்டு வரலாம். உணர்வற்றவர்களை உணர்வடையச் செய்யலாம். அனலாக மாற்றி தேவனுக்காய் பிரகாசிக்க செய்யலாம்.

D. சமுதாய அதிகாரம்  - Social  Authority



சபையில் இருக்கும் பல்வேறுதுறையினரின் தாலந்துகளை ஊழியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுதல். சமுதாய நலத்திட்டங்களை செய்யலாம். "யானையைப் பிடித்து பானைக்குள் அடைக்க முயற்சிக்கக்கூடாது". சபைக்குள் சமுதாயத்தை கொண்டு வராமல், சமுதாயத்திற்குள் சபையை கொண்டு போக முயற்சிக்க வேண்டும். இலவச மருத்துவ சேவை, ஏழை எளியோர் நலிவுற்றவர்களுக்கு ஆடைகள், உணவுகள், இலவச தையல் பயிற்சி போன்றவைகளை சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் சேவை அளிக்கலாம்.

ஆகஸ்ட் 26, 2014

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 11. "சபையோடுள்ள உறவில் ஆண்களின் பங்கு"


முதலில் இரண்டு விஷயங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே எந்த ஒரு ஊழியக்காரரும் பூரணர் அல்ல. எந்த ஒரு ஊழியக்காரரையும் கடவுளுக்குச் சமமாக கருதக்கூடாது. ஊழியருக்கும் பலவீனங்கள் ஏற்படும். அவரிடம் பலமும் உண்டு, பலவீனமும் உண்டு என்பதை உணர வேண்டும். போதகர் எல்லாரையும் பிரியப்படுத்த இயலாது என்பதை உணர வேண்டும். அவரும் மனிதர்தான் என்பதை அறியுங்கள். 

குறைகளை காணாமல் நிறைகளையே காண்கிறவர்களாக இருக்க வேண்டும். குறைகளையே பேசிக் கொண்டிருந்தால் இடறி விழுந்து விடுவோம்.  முறுமுறுக்கிறவர்களாக மாறி விடுவோம். பின்பு அதுவே நமது சுபாவமாக மாறி விடும். அதன்பின்பு, 'பின் மாற்றம்' ஏற்படும்.  தேவன் நம்மை உபயோகப்படுத்த இயலாத பாத்திரமாக மாறி விடுவோம். குறைகள் இல்லாத மனிதரில்லை. குறைகளில் நிறைகளை காண பழக வேண்டும். 

இயேசுகிறிஸ்துவின் 12 சீஷர்களுக்கும் 12 விதமான சுபாவம் இருப்பதை வேதத்தில் காணலாம். கர்த்தரை நமக்கு முன்னாக வைத்து விசுவாச வாழ்வில் முன்னோக்கி நடக்க வேண்டும். நமது விசுவாச வாழ்விற்கு வழிகாட்டிகளாகவும் ஊக்குவிப்பதற்காகவும் தேவன் தமது அடியார்களை வைத்திருக்கிறார். 

சபையின் போதகர் தேவ அழைப்பை பெற்ற தேவ மனிதர். கர்த்தர் அவரோடு இருக்கிறார். நமக்கு சேவை செய்யும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டும், தேவனால் அனுப்பப்பட்டும் இருக்கிற கர்த்தருடைய தாசன். கனத்திற்குரியவர். ஆவிக்குரிய தகப்பன் என்ற சிந்தையுடன் நாம் இருக்க வேண்டும். வயதில் குறைந்தவராகவோ, பெலவீனமானவராகவோ இருக்கலாம். ஆனால், அவருக்குள் இருக்கிற இயேசு பெரியவர். அவர் பலமுள்ளவர். எனவே, போதகருக்குள்ளிருக்கும் அபிஷேகத்தை கனம் பண்ணி கீழ்ப்படிய வேண்டும். அதுவே நமக்கு பரிபூரண ஆசீர்வாதத்தை கொண்டுவரும்.  

சபை போதகருடன் எப்போதும் நல்ல உறவு இருக்க வேண்டும். இந்த ஊழியத்திற்கு யாரை நியமிக்கலாம், அல்லது  அனுப்பலாம் என போதகர் நினைக்கும்போது, உடனடியாக நமது நினைவு அவருக்கு வரும் வகையில் நமது கீழ்படிதலும், தாழ்மையும், ஒத்துழைப்பும் எந்த சூழ்நிலையிலும் கிடைக்கும் என நினைவில் உதிக்கும் வகையில் போதகரின் மனதில் நாம் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும்.

நமது சிந்தையெல்லாம் இன்னும் தேவனுக்காக என்னவெல்லாம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் சபையை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லலாம்? ஆண்களை சபைக்குள் எப்படியெல்லாம் ஒருங்கிணைக்கலாம்? ஆண்களை சபைக்குள் கொண்டு வரவும் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவும் என்ன வழி? ஊழியங்களில் நமது பங்களிப்பு என்ன? எந்தெந்த விதங்களில் நாம் ஒத்துழைப்பை நல்குவது? என்பதைப்பற்றியே இருக்க வேண்டும். சபைபோதகருடன் கலந்து பேசி, இணைந்து செயல்படவும், சபை தரிசனத்தை நிறைவேற்றவும், நாமும் ஆயத்தமாகி பிறரையும் ஆயத்தப்படுத்த வேண்டும். 

எபேசியர்: 4:16 - "அவராலே (இயேசு) சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற  சகல கணுக்களினாலும் இசையாய்க்கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும்  தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது".

மேற்கண்ட வசனத்தின்படி ஒவ்வொரு ஆண்களின் தகுதியறிந்து சபையில் பயன்படுத்த வேண்டும். திறமையற்றவராக கருதப்படும் ஒரு நபர் உலகில் மற்ற துறைகளில் கொடிகட்டி பறப்பதை நாம் அறிய வேண்டும். எனவே, அப்படிப்பட்டவர்களின் தாலந்துகளை நாம் தேவனுக்கு பயன்பெற செய்ய அதிக கவனமும், சிரத்தையும் எடுக்க வேண்டும்.  


ஆண்களை நான்கு வித ஊழியங்களில் பயன்படுத்தலாம்

1. ஜெப ஊழியம்:

  1. ஜெபக்குழுவை நடத்த சொல்லாம்.
  2. உபவாச ஜெபத்தை நடத்த சொல்லாம்.
  3. சங்கிலி தொடர் ஜெபத்தை நடத்துவதில் உபயோகப்படுத்தலாம்.
  4. வீட்டு ஜெபத்தில் பயன்படுத்தலாம்
  5. ஆண்கள் கூடி ஏரியா வாரியாக - ஏதாவது ஒரு ஏரியாவில் ஜெபிக்க வைக்கலாம். அந்தந்த ஏரியா மக்களை தேவன் சபைக்கு கொண்டு வரும்படியாக ஜெபிக்கலாம். கூடிவரும்போது யாரைப்பற்றியும், எதைப் பற்றியும் குறைகூறக்கூடாது.
  6. வருடம் ஒருமுறை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு குடும்பமாக சபைக்கு வந்து 'குடும்பமாக' ஜெபிக்க வைக்கலாம்.
  7. வாரத்திற்கொருமுறை சபையில் வந்து ஒருமணி நேரம் ஜெபிக்க வைக்கலாம்
  8. ஒரு நாள் ஜெபம்; மூன்றுநாள் ஜெபம்; விசேஷித்த ஜெபநாள்; 12 மணிநேர ஜெபம் ஆகியவற்றை கூறுவித்து நடத்த உற்சாகப்படுத்தலாம்.
  9. ஆடி மாதத்தில் 'ஆடித்தள்ளுபடி ஜெபம்' என்ற தலைப்பில் ஜெபத்தை ஆரம்பித்து நடத்தலாம். அந்நாளில் பிசாசின் கிரியைகளை துரத்தலாம். பிசாசின் கொண்டாட்டத்தை தள்ளுபடி செய்து ஜெபிக்கலாம். ஆடி 28, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி 18 போர்க்கள ஜெபத்தை ஏறெடுக்கலாம். உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழக வரைபடம், மாவட்ட வரைபடம், தாலூகா வரைபடம், பேரூராட்சி வரைபடம், ஊராட்சி வரைபடம் ஆகியவற்றை ஆயத்தம் செய்து அந்நாட்களில் போராடி ஜெபிக்கலாம். அந்நாட்களில் விசேஷித்த கைப்பிரதிகளை அச்சடித்து விநியோகிக்கலாம். இப்படியாக ஒவ்வொரு மாதத்திலும் வருகிற சிறப்பு தினங்களை பக்திவிருத்திக்கான  ஜெப தினங்களாக மாற்ற திட்டமிட வேண்டும்.
  10. ஒரு A4  Sheet ல் எதற்கு ஜெபிக்க வேண்டும்? என்ற விபரத்தை தெளிவாக அச்சடித்து கொடுக்க வேண்டும். ஜெபக்கையேடு ஒரு புத்தகமாக வெளியிடலாம். அதை ஒவ்வொரு தேவபிள்ளையும் வாங்கி பயனடைய ஊக்கப்படுத்த வேண்டும். 
2. ஃபுல்பீட் ஊழியம்:

1. சங்கீதம் வாசிக்க சொல்லாம்
2. வாக்குதத்த வசனம் சொல்ல வைக்கலாம். அதாவது ஆளுக்கு ஒரு வாக்குத்தத்த வசனத்தை வாசிக்க சொல்லாம்.
3.ஊழியரை தாங்குதல்: ஜெபத்தில், உபசரிப்பில், கனத்தில், கீழ்படிதலில்
4. அறிவிப்புகளை வாசிக்க செய்வதில்
5. காணிக்கை எடுக்கச் செய்வதில், பாடல், இசை வாசிப்பில்

3. சபை பணிவிடை ஊழியம்:

'சபை பணிவிடைகள் இந்த வாரம்' என பெயர் எழுதிப் போட வேண்டும். அர்ப்பணிப்போடு செய்கிறவர்கள், அர்ப்பணிப்பில்லாமல் செய்கிறவர்கள், செய்யாதவர்கள் யார்? யார்? என அப்போதுதான் தெரியும். இதன் மூலம் உண்மையுள்ளவர்களை நாம் கண்டறிய முடியும். உருவாக்கவும் முடியும்.

4. வெளி ஊழியம்: 

1. மரித்த வீட்டில், திருமண வீட்டில், கிராம ஊழியத்தில் உபயோகப்படுத்தலாம். சூழ்நிலைகளின் விவரங்களை அவ்வப்போது போதகரிடம் சொல்லி வரவேண்டும். 
2. ஜீசஸ் படம் சிடி மற்றும் டிவிடி க்களில் ரைட் செய்து விநியோகிக்கச் செய்யலாம்.
3. சுவிஷேச புத்தகங்கள், ஆவிக்குரிய புத்தகங்கள், கைப்பிரதிகள் அச்சடித்து கொடுக்கச் சொல்லாம்.
4. ஜெபநடை ஊழியத்தில் பயன்படுத்தலாம்.
5. தெருப்பிரங்க ஊழியத்தில், தெருபிரச்சார நாடகத்தில் உபயோகப்படுத்தலாம்

ஆண்கள் மூலம் தேவனுடையராஜ்யம் கட்டப்பட ஜெபிப்போம்! செயல்படுவோம்!

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 10. "குடும்பத்தில் ஆண்களின் பங்கு"


தலைமைத்துவத்தில் உள்ள ஒரு ஆண் - தன் குடும்பத்தோடுள்ள உறவில் தனது பங்களிப்பை முழுமையாக கொடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு சிறந்த தலைவனாக, சிறந்த ஒரு ஆசாரியனாக இருக்க வேண்டும்.

தீர்க்கதரிசியைப்போல தனது குடும்பத்தைப் பற்றிய ஆவிக்குரிய தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். குடும்பத்தை   காப்பதில் போஷிப்பதில் வளர்ப்பதில் கவனம் இருக்க வேண்டும். 'சீக்கு வந்த கோழியை சாமிக்கு நேந்திக்கோ' என்பதுபோல பிள்ளைகளை வளர்க்கக்கூடாது. மனைவிக்கு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு நல்லதொரு தகப்பனாகவும் இருக்க வேண்டும்.

மனைவியின் பெலவீனத்தில் உதவ வேண்டும். பெலவீன நேரத்தில்தான் அதிக அன்பு காட்ட வேண்டும். அன்புக்கு பொருள் - எதை, எப்போது கொடுத்தாலும் 'சிறந்ததைக் கொடுக்கும்' என்பதே.


பலவீனம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை:

1. சரீர பலவீனம்     2. ஆவிக்குரிய பலவீனம்

- இவ்விரண்டு பலவீனங்களையும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பரிசுத்தவான்கள் எவ்வாறு மேற் கொண்டனர் என்பதை ஆய்வு செய்து ஒப்பிட்டுப் பார்த்து, அதே வண்ணமாக நாமும் பலவீனங்களை மேற்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

ஆய்வுக்காக சில கேள்விகள்... வேதத்தின் வழியே ஒப்பிட்டு பாருங்களேன்...

பரிசுத்தவான்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு என்ன செய்தனர்?
மனைவியின் பேச்சைக் கேட்டு என்ன செய்தனர்?
புருசனை பிசாசு எப்படி பயன்படுத்துகிறான்?
மனைவியை பிசாசு எப்படி பலவீனப்படுத்துகிறான்?


மனைவியை ஆவிக்குரியப் பெண்ணாக மாற்ற என்ன வழி?

ஆதியாகமம்: 2:24 - "இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்..." என்று சொன்னாரே தவிர... தேவனை விட்டு அல்ல - என்பதை ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில ஆண்கள் தேவனை விட்டுவிட்டு மனைவியே கதியென இருப்பார்கள்.

குறைந்தபட்சம் தினமும் அரைமணி நேரம் குடும்ப ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். வாரத்திற்கு ஒரு தேவசெய்தியை சி.டி.மூலமாக கேட்கச் செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒரு நல்ல ஆவிக்குரிய புத்தகத்தை வாசிக்கப் பழக்க செய்ய வேண்டும்.

விசுவாச வார்த்தைகளை பேச வைக்கவும், விசுவாசிக்கச் செய்யவும் வேண்டும். வாக்குத்தத்தங்களின் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் ஏற்படுத்த வெண்டும். சிறிய நன்மைக்கும் கர்த்தருக்கு நன்றி சொல்ல பழக்குவிக்க வேண்டும்.


 குடும்பத்தை கண்காணிக்க வேண்டும்:

மனைவி மற்றும் பிள்ளைகளின் செயல்களை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் வேண்டும். இதற்குப் பெயர் சந்தேகப்படுவதல்ல. சந்தேகம் வேறு. கண்காணிப்பது என்பது வேறு. சரியான கண்காணிப்பு இல்லாததினால் எத்தனையோ வேதாகம புருஷர்களின் குடும்பங்கள் சிதறிபோனதை வேதத்தில் காணலாம். நடைமுறை வாழ்வில் பல குடும்பங்கள் சீரழிந்து போனதையும் அறிவீர்கள்.

இயேசுகிறிஸ்து அடக்க ஆராதனை செய்ய மாட்டார். எந்த வீட்டுக்குப் போனாலும் சரி. மரித்தோரை எழுப்பி உட்கார வைப்பார் நமதாண்டவர் இயேசு. அதுபோல எந்த சூழ்நிலையையும் மாற்றி அமைக்கத் தெரிய வேண்டும்.

தேவன் எப்போது நமக்குள் கிரியை செய்வார்? பிசாசு எப்போது  நமக்குள் கிரியை செய்வான்? என்பதை மனைவி பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும். மனைவி பிள்ளைகளுக்கு ஆதாம் கற்றுத்தராததினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை நாம் அறிவோம். அதை இன்று வரை முழு உலகமும் அனுபவித்து வருகிறதையும் நாமறிவோம். விழித்திருங்கள்.

குடும்பத்தை வேதவாசிப்பிலும் தனி ஜெபத்திலும் ஊக்கப்படுத்த வேண்டும்.

குடும்பத்தின் நிர்வாகம், வரவு செலவு பற்றி கற்றுக் கொடுக்க  வேண்டும்.

கர்த்தருக்கு கொடுப்பதை பற்றி குடும்ப அங்கத்தினர்களுக்கு நன்கு போதிக்க வேண்டும். கொடுத்தலின் ஆசீர்வாதத்தினை புரியும்படி விளக்க வேண்டும். பிள்ளைகளின் கைகளில் காணிக்கை கொடுத்து போடச் சொல்லி கற்றுத் தர வேண்டும்.

ஆண்கள் ஐக்கியம் பகுதி - 9. தலைமைத்துவம்


சங்கீதம்: 128:1 - "கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்"

மேற் கண்ட வசனத்தின்படி, ஆண்கள் தேவனுக்கு பயந்தவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தேவனுடைய நோக்கத்தை செயல்படுத்தவும்,  தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றவும் முடியும். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களையே  அவர் பயன்படுத்துவார். 

ஆண்களின் தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டிய தகுதிகள்


1. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் தகுதி இருக்க வேண்டும்:

அநேக ஆண்களுக்கு தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் தகுதி இல்லாததினால் மனைவிமார்களே  அநேக குடும்பங்களில் குடும்ப பொறுப்பை நிர்வாகித்து வருகின்றனர். 

2. கர்த்தரைக் குறித்ததான தரிசனம் இருக்க வேண்டும்:

தேவனால் என்ன செய்ய முடியுமோ - அதைச் செய்யவே ஆண்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 

3. தேவனோடுள்ள உறவில் உண்மையாயிருக்க வேண்டும்: 

கர்த்தரோடு தினமும் உறவாட வேண்டும். உத்தமமாக வாழ வேண்டும். உண்மைக்கும் உத்தமத்திற்கும் என்ன வித்தியாசம்? கொடுக்கப்பட்ட பொறுப்பில் உண்மை. உத்தமம் - நேசித்து அன்பினால் கர்த்தரின் வேலையை செய்வது.

4. கற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்: 

எனக்கு எல்லாம் தெரியும் என்றல்ல. புதிதாய் பிறந்த குழந்தையைப்போல ஆர்வம் வேண்டும். தேவன் தந்த பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

5. தியாகம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும்:

இயேசுகிறிஸ்து தியாகம் செய்தார். எந்த ஒரு வேலைக்கும் தியாகம் செய்ய பழக வேண்டும். தேவத்திட்டம் நிறைவேற தான் பெற்றுக் கொண்டதையெல்லாம் இயேசுகிறிஸ்து தியாகம் செய்ததுபோல தியாகம் செய்ய முன்வர வேண்டும்.

6. தார்மீக பொறுப்பேற்றுக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்:

தன் பெலவீனத்தில் செய்த தவறுகளையெல்லாம் தானே பொறுப்பெடுத்துக் கொள்ளும் மனப்பான்மை  வேண்டும். சாக்குபோக்கு கூடாது. தார்மீக பொறுப்பேற்றுக் கொள்ள முன்வர வேண்டும். தவறுக்கான பரிகாரத்தையும் பதவி விலகலையும் மனமுவந்து, தானே செய்ய வேண்டும்.

7. வேலைகளை பகிர்ந்து கொடுக்கத் தெரிய வேண்டும்:

கர்த்தருடைய வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொடுக்க தெரிய வேண்டும். பொறுப்புகளை பகிர வேண்டும். மொத்தத்தில் வேலை முடிய வேண்டும். நேர்த்தியாக.

8. ஆவிக்குரிய பார்வை வேண்டும்:

தடைகளையெல்லாம் தனக்கு வந்த தருணமாக, வாய்ப்புகளாக கருத வேண்டும். 

9. விசுவாசத்தில் வளர வேண்டும்:

தன வாழ்நாளெல்லாம் கர்த்தரைச் சார்ந்து வாழப் பழக வேண்டும். 

10. தன் எதிரியைக் குறித்த அறிவு இருக்க வேண்டும்: 

எதிரியின் பலம் - பலவீனம் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

11. கனிவுள்ளவனாக பெருக வேண்டும்: 

(ஆவியின்) கனிகளிலும் பெருக வேண்டும். கனிவுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

12. முன்மாதிரியாக இருக்க வேண்டும்:

தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு நல்ல முன்மாதிரியாகவும், நல்ல ரோல் மாடலாகவும் இருக்க வேண்டும்.

13. தன்னுடன் இருப்பவர்களின் பலவீனங்களை அறிந்திருக்க வேண்டும்: 

தன்னுடன் இருப்பவர்களின் பலவீனங்களை நன்கு அறிந்து , அதை களைந்து, பலவீனமானவர்களின் பலவீனங்களை நீக்கி, பலப்படுத்தி வேலை செய்ய பழக்க வேண்டும்.

ஆகஸ்ட் 21, 2014

தேவனோடுள்ள உறவில் நமது பங்கு - தேவ சாயலாக மாறுவதே


மல்கியா: 2:15 - "அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே..."

ஒவ்வொரு மனிதனும் தன்னைக் குறித்துள்ள தேவ நோக்கத்தை அறிந்திருக்க வேண்டும். தன்னிடம் தேவ நோக்கம், தேவ திட்டம், தேவ சாயல் நிறைவேற பிரயாசப்பட வேண்டும். தன்னைக்குறித்த தேவ நோக்கத்தை அறியாதவர்களை நாம் அறிய செய்யவும், உணரச் செய்யவும் வேண்டும். தவறினால், அப்படிப்பட்டவர்கள் நித்திய ஜீவனை இழக்க நேரிடலாம்.

தமிழ் வேதாகமத்தில் "தேவ பக்தியுள்ள சந்ததி" என உள்ளது. மூல பாஷையில் "தேவ சாயலுள்ள சந்ததி" என உள்ளது.

ஏன் ஒருவனைப் படைத்தார்? "தேவ சாயலுள்ள சந்ததியை பெறவும், தேவ சாயலாக மாறவும், மாற்றவும்  படைத்தார்.

ஆதியாகமம்: 1:27 - "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார்..."

மத்தேயு: 5:48 - "...பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்"

தேவசாயலாக மாற அழைக்கப்பட்டவர்கள் பூரணசற்குணனாக இருக்க வேண்டும். பூரணசற்குணனாக மாறுவதே தேவசாயல்.


தேவ சாயலில் இரண்டு காரியம் இருக்கிறது:

1. தேவனுடைய குணாதிசயம் 

 (1பேதுரு: 1:16 - "நான் பரிசுத்தர், ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்...")

2. தேவனுடைய வல்லமை 

 ( யோவான்: 14:12 - "...என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்")


இவையிரண்டிலும் எதுவும் குறையக்கூடாது

தேவனுடைய ஒரே நோக்கம்:

ரோமர்: 8:29 - "... தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்."

யானை - யானையை குட்டி போடுகிறது; கழுதை - கழுதையை குட்டி போடுகிறது; அதுபோல தேவ சாயலாக படைக்கப்பட்ட மனிதன் - தேவசாயலாக பிள்ளைகளை பிறப்பிக்க வேண்டும். அதற்கு மாறாக மாம்சீக குணாதிசயம் கொண்ட பிள்ளைகளை பிறப்பித்தான். ஏன்? 

மனிதனுடைய கீழ்ப்படியாமை பாவத்தை கொண்டு வந்தது.  ரோமர்: 3:23 - "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி...". பாவம் - தேவ சாயலை இழக்கச் செய்து விட்டது.

தேவசந்ததியைப் பெற ஆதாமுக்கு கட்டளை. ஆனால், பாவ சந்ததியைப் பெற்றான். பாவத்தை நீக்கி, பாவ சந்ததியை தேவசந்ததியாக மாற்ற வேண்டும். அதாவது, பாவ சந்ததியை தேவசாயலாக மாற்ற வேண்டும். 

இந்து மதம் சொல்கிறது: "பாவ நிக்கிரகம்; துஷ்ட பரிபாலனம்" என்று. அதாவது, பாவியையும், துஷடனையும் அழிக்க வேண்டும் என்று. அதற்காக கடவுள் 10 அவதாரம் எடுப்பார் என்கிறது.

பரிசுத்த வேதாகமம் சொல்கிறது: பாவத்தை நீக்கி, பாவ சந்ததியை - தேவ சந்ததி, தேவசாயலாக மாற்ற வேண்டும் என்கிறது. அதற்காகவே, "பாவிகளை இரட்சிக்க (மீட்க) கிறிஸ்து இயேசு உலகிற்கு வந்தார்" என்று வேதம் சொல்கிறது. நமதாண்டவர் இயேசு கிறிஸ்து பாவத்தை வெறுக்கிறார். பாவியையோ நேசிக்கிறார்.

ஆதாம் தேவசாயலாக படைக்கப்பட்டான். தேவசாயலான பிள்ளைகளை பெற வேண்டும். ஆனால் அவன் பெறவில்லை. எனவே, பூமியில் தேவநோக்கம் நிறைவேறவில்லை. எனவே, தேவ நோக்கம் பூமியில் நிறைவேற, நாம் பிறரை தேவசாயலாக மாற்ற பிரயாசப்பட வேண்டும். 

ஒருவன் பாவ சாயலோடு மரிக்க நேர்ந்தால் அவன் நித்தியத்தை இழந்து விடுவான். நித்தியத்தை அடைய பாவ சாயலை மாற்றுகிற வல்லமையுள்ள தேவனாகிய இயேசுவிடம் வந்து மனந்திரும்பி,  பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று தேவ சாயலை தரித்துக் கொள்ளும்போது நித்திய ஜீவனை பெற முடியும்.

நம்மைக் குறித்த தேவ திட்டம், தேவ நோக்கம், தேவ சாயலை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.  அநேகருக்கு வசனம் தெரியும்; ஆனால், சத்தியம் தெரியாது. 

வேதத்தில் உள்ள வசனம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது ... சத்தியம் தெரிந்திருக்க வேண்டும்.  அப்போதுதான்  தேவ நோக்கம், தேவ திட்டம் நம்மில் நிறைவேற இடங் கொடுப்போம்.

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 8



ஆண்கள் ஐக்கியத்தை பலப்படுத்துவது எப்படி?

1. ஜெபம்

2.  அவர்களோடு உறவை பலப்படுத்ததல்

3. அவர்களை விசாரிப்பது

4. தேவைப்படும்போது உதவுவது

5. அவர்களோடு சேர்ந்து நேரம் செலவழிப்பது

6. சாட்சி கேசடடுகளை, சி.டி க்களை, புத்தகங்களை கொடுத்து, வாங்குவது

7. ஒருவருக்கொருவர் வீட்டுக்கு வந்து போவது

இப்படி மேலே சொல்லப்பட்ட ஆவிக்குரிய ஆலோசனைகளின்படி செய்து சபையையும், தேவனுடைய ராஜ்யத்தையும் கட்டியெழுப்ப எனது வாழ்த்துக்கள். 

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 7



எங்கு எப்போது புருஷர் கூட்டத்தை நடத்தலாம்?

1. சபையில் மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்

2. வட்டாரத்தில் வாரம் ஒருமுறை நடத்த வேண்டும்

3. வசதிக்கேற்ப நேரத்தை அமைத்துக் கொள்ளுதல்

4. எல்லோரும் வந்துபோக வசதியுள்ள இடத்தில் வட்டார ஐக்கியத்தை வைத்துக் கொள்ளலாம்

ஐக்கியத்தை காத்துக் கொள்ள ஆலோசனைகள்

1. ஐக்கியமாயிருக்க வேண்டியது தேவ சித்தம் - 1 கொரிந்தியர்: 12:8

2.  எல்லோரும் சமமதிப்புடையவர்கள் - 1கொரிந்தியர்: 12:13

3. தன் நிலையை விட்டு வேறு நிலைக்கு ஆசைபடக்கூடாது - 1கொரி: 12:15,16

4. எல்லோரும் ஒரே நிலைக்கு ஆசைபடக்கூடாது - 1கொரி: 12: 17

5. யாரையும் வேண்டாம் என்று சொல்லக்கூடாது - 1கொரி: 12:21

6. பெலவீனமானவர்களே மிக அவசியமானவர்கள் - 1கொரி: 12:22-24

7. பிரிவினை கூடாது - 1கொரி: 12:25,26


ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 6



வராத புருஷர்களை தவறாமல் சபைக்கு வர வைப்பது எப்படி? 

1. ஜெபம்

2. உறவை அதிகப்படுத்துதல்

3. பிரச்சினைக்கு பரிகாரம் (தடைகளை அகற்றுதல்)

4. சபையின் அவசியம், தெரிந்து கொள்ளப்பட்ட நோக்கத்தை எடுத்துச் சொல்வது

5. மாதிரியாக இயேசுவை பார்க்கச் சொல்லுதல்

6. அழைத்து வருதல் (சபைக்கு வரும்போது) 

7.  பாதுகாத்தல் (வந்த பின் நின்று விடாமல்)

செயல்படாதவர்களை செயல்பட வைக்க என்ன செய்வது?

1. ஜெபம்

2. செயல்பட முடியாத காரணத்தை அறிதல்

3. எந்த வகையில் பயன்படுத்த முடியுமோ அதில் பயன்படுத்துதல்

4. என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டு செயல்பட வைத்தல்

5. எவ்வளவு முடியுமோ அதையே ஆரம்பத்தில் செய்ய வைத்தல்

6. படிப்படியாக செய்ய வைத்தல்

7. எல்லாவற்றிலும் செயல்படக் கற்றுக் கொடுத்தல்

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 5



தலைவர்களை நியமித்தல்

1. முழு சபையின் புருஷர்களுக்கு ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட வேண்டும். அதில் தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர் இருக்க வேண்டும்

2. வட்டாரா அளவில் ஒரு தலைவரும், உபதலைவரும் இருக்க வேண்டும். கமிட்டியில் உள்ளவர்களே இதிலும், அவர்கள் வட்டாரத்திலும் இருக்கலாம்

3. தலைவர்கள் நல்ல ஆவிக்குரிய பண்புகளோடும், ஊழியருக்கு கட்டுப்பட்டு நடக்கிறவர்களாகவும், தாகத்தோடு செயல்படுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்

4. சகலத்தையும் அன்புடன் செய்பவராக இருக்க வேண்டும்.

5. வேறு எதையும் (வீணாக) பேச அனுமதிக்கக் கூடாது

6. புருஷர் ஐக்கியத்திற்கு மட்டும் தலைவர்களாக இருப்பார்கள்

7. ஒரு வருடம் இந்த பதவியில் இருக்கலாம். அவசியமானால் கூட்டிக் கொள்ளலாம்

புருஷர்களை தரம் பிரித்தல்

1. சபையிலுள்ள மொத்த புருஷர்கள் எத்தனை பேர்?

2. தவறாமல் சபைக்கு வருபவர்கள் எத்தனை பேர்?

3. அவ்வப்போது சபைக்கு வருபவர்கள் எத்தனை பேர்?

4. வராமலிருப்பவர்கள் எத்தனை பேர்?

5. செயல்படுபவர்கள் எத்தனை பேர்?

6. செயல்படாதவர்கள் எத்தனைபேர்?

7. ஒன்றுமே செய்யாதவர்கள், செய்ய இயலாதவர்கள் எத்தனை பேர்?



ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 4



ஆண்கள் ஐக்கியத்தில் - தலைவரின் வேலைகள்

1. ஆண்கள் ஐக்கியத்தை வளர்ப்பதிலே நல்ல வாஞ்சை இருக்க வேண்டும்

2. உண்மையாக தெய்வ பயத்தோடு செயல்படுத்துதல் வேண்டும்

3. சபையில் ஆண்களின் எண்ணிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டும்

4. வாரந்தவறாமல் பங்கெடுப்பவர்கள் எத்தனை பேர்? அவ்வப்போது வருபவர்கள் எத்தனை பேர்?

5. ஆவிக்குரிய காரியங்களில் வளர்ந்தவர்கள் எத்தனை பேர்?  வளராதவர்கள் எத்தனை பேர்?

6. இவைகளை எல்லாம் எப்படி சரி செய்வது? ஜெபத்தோடு தேவ வழி நடத்துதலோடு சரி செய்ய வேண்டும்

சில பொதுவான ஆலோசனைகள்

1. ஜெபிக்க வேண்டும்

2. சரியான குறையை கண்டு பிடித்து சரியாக பதில் சொல்ல வேண்டும்

3. அவர்களுக்கு என்ன முடியுமோ, எவ்வளவு முடியுமோ அதையே செயல்படுத்தச் சொல்லுங்கள்

4. அடிக்கடி உறவை ஏற்படுத்துங்கள்

5. தெரியாதவைகளை கற்றுக் கொடுங்கள்

6. மனம் விட்டு பேசி செயல்படுங்கள்

7. பிடிக்காததை கட்டாயப்படுத்தாதீர்கள்

8. எல்லாரையும் அரவனைத்து செயல்படுங்கள்

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 3



ஆண்கள் ஐக்கியத்தினால் ஏற்பட்ட நன்மைகள்

1. ஆவிக்குரிய காரியத்தில் ஆண்கள் வளர்ந்திருக்கிறார்கள்

2. சபைக்கும், ஊழியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்

3. குடும்பத்திலே நல்ல பொறுப்புள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள்

4. அநேக ஆண்கள் விசாரிக்கப்பட்டு ஐக்கியத்தின் நன்மையை பெற்றிருக்கிறார்கள்

5. சபை கட்டப்பட ஆண்கள் ஐக்கியத்தின் மூலம் உதவி செய்யப்பட்டுள்ளது

6. பல ஊழியங்கள் ஆண்கள் ஐக்கியத்தின்  மூலம் நடைபெறுகிறது

ஆண்கள் ஐக்கியத்தில் ஏற்படும் பிரச்சினைகள்

1. சரியான நேரத்தில் ஆரம்பித்து முடிப்பதில்லை

2. கொஞ்சம் பேர் இருந்தால் கூட்டம் நடத்துவதில்லை

3. யார் நடத்துவது என்பதில் சில நேரங்களில் பிரச்சினைகள்

4. ஒருவர் ஒத்துழைக்காமல் போகும்போது தவறான முடிவை எடுப்பது

5. தலைவராக இருந்தால் மட்டும் செயல்படுவது

6. ஒருவருக்கொருவர் கடன் பிரச்சினையில் சிக்கிக் கொள்வது

7. பாகுபாடு பார்ப்பது

8. தேவையில்லாத காரியங்களை பேசும்போது


ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 2


ஆண்கள் ஐக்கிய நிர்வாகிகள்

1. சபையில் ஆண்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 3 முதல் 4 பேர் வரை நியமிக்கப்படலாம்

2. இவர்கள் போதகரால் நியமிக்கப்பட வேண்டும்

3. இவர்கள் ஒரு வருடம் பொறுப்பிலிருப்பார்கள். நல்ல ஊழியத்தின் பொருட்டு ஊழியரின் ஆலோசனையின் பேரில் பல ஆண்டுகள் இருக்கலாம்

4. சபையில் ஆண்கள் ஐக்கியத்திற்கு மட்டும் பொறுப்பாளராக இருப்பார்கள்

5. தலைவர்கள் நல்ல ஆவிக்குரிய தரம், சபை பாரம், ஊழிய வாஞ்சை, ஊழியருக்கு உதவியாக இருக்க வேண்டும்

6. எந்த முடிவு எடுத்தாலும், ஊழியரின் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டும்

 7. தலைவர்கள் ஆண்கள் ஐக்கியத்தை வளர்க்க, மாதம் ஒருமறை கூடி ஜெபித்து, தேவ வழி நடத்துதலை அறிய வேண்டும்

ஆண்கள் ஐக்கிய கூடுகை

1. எங்கே கூடுவது? சபையிலா அல்லது பாஸ்டர் அனுமதியுடன் ஒரு வீட்டிலா? 

2. எத்தனை நாட்கள் கூடுவது? மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை

3. எந்த கிழமை கூடுவது?

4. எந்த நேரம் கூடுவது? 

5. ஊழியரோடு ஆண்களும் கூடி முடிவு எடுக்க வேண்டும் 

ஆண்கள் ஐக்கிய கூட்டம் நடத்துவது எப்படி?

1. ஆரம்ப ஜெபம்

2. ஒரு பாட்டு

3. ஒரு வசனம்

4. ஒரு தலைப்பில் கலந்துரையாடல்

5. சபை வளர்ச்சி பற்றி திட்டமிடல்

6. செயல்படுத்த வழிமுறைகளை ஆராய்தல்

7. ஒருவருக்கொருவர் ஜெபித்தல்

8. முடிவு ஜெபம்

9. தேவையானால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை கூட்டிக் கொள்ளலாம்

10. ஆண்கள் ஐக்கிய கூடுகை சரியாக 1 மணி நேரத்தில் முடிக்கப்பட வேண்டும்

11. மாதம் ஒருமுறை ஆண்கள் ஐக்கிய கூடுகை ஆண்கள் ஜெபமாக இருக்க வேண்டும்

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 1



ஆண்கள் ஐக்கியம்

நம்முடைய ஸ்தாபன ஊழிய பிரிவுகளில் ஆண்கள் ஐக்கியமும் ஒன்று. இந்த ஐக்கியம் ஆரம்பித்த பிறகு சபையும், ஆண்களும், குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். முதலாவது ஆண்களுக்குள்ளே ஐக்கியம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் இதை வெற்றிகரமாக நடத்த முடியும். அநேக சபைகளில் சம்பிரதாய அதாவது கடமைக்கான ஆண்கள் ஐக்கிய கூடுகை நடைபெறுகிறது. இந்த முகாமிற்குபின் உண்மையான ஆண்கள் ஐக்கிய கூட்டம் நடைபெற வாழ்த்துகிறோம்.

ஐக்கியத்தை நடத்துவது எப்படி?

1. சபை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கைகொடுங்கள்

2. விசாரியுங்கள், வரவேற்றுப் பேசுங்கள், அன்பை வெளிப்படுத்துங்கள், உற்சாகப்படுத்துங்கள்

3. அவர்களோடு நல்ல ஆவிக்குரிய ஐக்கியத்தை, உறவை ஏற்படுத்துங்கள்

4. உறவை பலப்படுத்துங்கள்: நேரடியாகவோ, போனிலோ பேசுங்கள்

5. தேவையான (போது) முடிந்த உதவியை செய்யுங்கள்

6. சமமாக எல்லோரும் மதிக்கப்பட வேண்டும்

7. மனம் விட்டுப் பேசுங்கள்

8. உலகத்திலிருந்து, உலக ஐக்கியத்திலிருந்து வெளியே வந்தவர்கள், ஆண்டவரோடும், சபையோடும், விசுவாசிகளோடும் ஐக்கியத்தை எதிர் பார்ப்பார்கள்

ஆண்கள் ஐக்கிய நோக்கம்

1. ஒவ்வொரு ஆண்களும், அவர்களது திறமைக்கு தக்கதாக - தேவனுக்கு, சபைக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு பிரயோஜனப்பட வேண்டும்

2. ஆண்கள் ஆவிக்குரிய கரியங்களில் வளர வேண்டும். அதாவது, ஜெபம், ஆராதனை, வேதவாசிப்பு, தியானம்

3. சபைக்காரியங்களில் ஈடுபாடுடையவராக இருக்க வேண்டும்

4. நல்ல குடும்ப தலைவராக, கணவனாக, தகப்பனாக, மகனாக இருக்க வேண்டும்

5. தேவன் சாட்சி சொல்லும் நபராக மாற வேண்டும்

6. நூறு சதவீத வளர்ச்சிக்கு நடத்துதல்

7. சபையிலுள்ள ஆண்கள் (புருஷர்கள்) அனைவரையும் ஒருவரோடொருவர் முழுசபையாக ஐக்கியப்படச் செய்வது

8. ஒவ்வொரு வட்டாராமாக ஐக்கியப்படச் செய்தல்

9. ஒவ்வொரு புருஷரும் எந்த நிலையிலிருக்கிறார்கள் என அறிந்து கொள்வது

10. சகல சத்தியத்திலும் வளர்க்க பாடுபடுதல்

11. படிப்படியான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துதல்

12. ஆண்கள் புருஷர் மத்தியில் எழுப்புதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்