பிப்ரவரி 05, 2013

இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் அடையாளங்கள் - ஒரு விளக்கம்

ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரைக் குறிக்க ஒன்று அல்லது பல எழுத்துக்களை இணைத்து உருவாக்கி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினர். பல கிறிஸ்தவ சபைகள் வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டு இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, IHS என்னும் பெயராக்கம் இயேசுவின் திருப்பெயரைக் குறிக்கவும், ICXC என்னும் பெயராக்கம் கிறிஸ்துவைக் குறிக்கவும் பயன்படுகின்றன.

 "ICXC" ஒரு விளக்கம்:
  
கிழக்கத்திய கிறிஸ்தவ சபைகளில் மிகப் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் கிறிஸ்து பெயராக்கம் "ICXC" என்னும் கிரேக்க வடிவம் ஆகும். 

இது "இயேசு கிறிஸ்து" என்னும் பெயரின் சுருக்கம் ஆகும். இது ΙΗΣΟΥΣ ΧΡΙΣΤΟΣ ("IHCOYC XPICTOC") (Iesous Christos) என்னும் இரு கிரேக்க சொற்கள் ஒவ்வொன்றின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் கொண்டு ஆக்கப்பட்டது. திருப்படிமங்களில் இப்பெயராக்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, படிமத்தின் இடப்புறம் "IC", வலப்புறம் "XC" என்று எழுதப்படுவதுண்டு. இது புனிதம் நிறைந்த பெயர் என்பதைக் குறிக்க எழுத்துகளின் மேல் கோடு இடுவது வழக்கம்.
இப்பெயர் "இயேசு கிறிஸ்து ஜெயமெடுக்கிறார்" என்னும் பொருளைக் குறிக்க "ICXC NIKA" என்று எழுதப்படுவதும் உண்டு. இயேசு கிறிஸ்துவை "ஆண்டவர்" எனச் சித்தரிக்கும் கீழைச் சபைப் படிமங்களில் அவருடைய வலது கை விரல்கள் IC, X, C எனக்குறிப்பன போல எழுதப்படுவது வழக்கம்.


"IHS" ஒரு விளக்கம்:


 
இலத்தீன் மொழி மரபைச் சார்ந்த மேலைக் கிறித்தவ சபைகளிடையே, நடுக்கால ஐரோப்பாவில் தொடங்கி இன்றும் கத்தோலிக்கர் மற்றும் புரட்டஸ்டாண்ட் சபையினர் நடுவில் வழக்கமாக "IHS" அல்லது "IHC" என்னும் கிறிஸ்து பெயராக்கம் பயன்படுகிறது. இந்த எழுத்துகள் "இயேசு"வைக் குறிக்கும் கிரேக்கப் பெயரின் முதல் மூன்று எழுத்துகள் ஆகும். அவை "அயோட்டா-ஏட்டா-சிக்மா" (iota-eta-sigma) என்னும் மூன்று எழுத்துகள்.
கிரேக்கத்தில் "அயோட்டா" எழுத்து "I" எனவும், "ஏட்டா" எழுத்து "H" எனவும், "சிக்மா" எழுத்து பிறைவடிவில் "C" என்றோ அல்லது சொல்லிறுதியில் வரும்போது "S" என்றோ எழுதப்படும்.

இலத்தீன் அரிச்சுவடியில் "I" என்னும் எழுத்தும் "J" என்னும் எழுத்தும் 17ஆம் நூற்றாண்டுவரை முறையாக வேறுபடுத்தப்படாதிருந்ததால், "JHS", "JHC" எனும் வடிவங்களும் "IHS", "IHC" எனும் வடிவங்களும் தம்முள் இணையானவையே.

"IHS" என்னும் கிறிஸ்து பெயராக்கத்தை "Iesus Hominum Salvator" என்னும் இலத்தீன் சொற்றொடரின் சுருக்கமாகக் கொண்டு விளக்குவதும் உண்டு. இச் சொற்றொடருக்கு "இயேசு மனிதரின் மீட்பர்" என்பது பொருள். மேலும் "IHS" என்னும் கிறிஸ்து பெயராக்கத்திற்கு "In Hoc Signo" என்னும் இலத்தீன் விளக்கம் தருவதும் உண்டு. இதற்கு "இந்த அடையாளத்தின் வழியாக" ("In This Sign") என்பது பொருள். மன்னன் காண்ஸ்டன்டைன் தம் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டபோது அவர் சிலுவை அடையாளத்தைக் கொடியாகக் கொண்டுசென்று போரிட்டால் வெற்றியடைவார் என்று ஒரு காட்சியில் அறிந்ததாக ஒரு கதை உண்டு. அக்கதையின் பின்னணியில் தரப்படும் விளக்கமே "இந்த அடையாளத்தின் வழியாக" என்பதாகும் இத்தகைய விளக்கங்களைப் "பிற்பெயராக்கங்கள்" (backronyms) என்பர்.

இயேசுவின் பெயரைக் குறிக்கும் "IHS" என்னும் பெயராக்கம் மக்களிடையே பரவ புனித சீயேனா பெர்னார்தீனோ (Saint Bernardino of Siena) முக்கிய பங்களித்தார். சூரியனைப் பின்னணியாகக் கொண்டு இப்பெயராக்கம் செய்து, இயேசு என்னும் பெயர் அனைத்திலும் சிறந்தது என்று அவர் குறிப்பிட்டார்.


                      INRI  -  ஒரு விளக்கம்:


                                                           

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது பிலாத்துவின் கட்டளைப்படி சிலுவையில் ஒரு குற்ற அறிக்கை எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் எழுதிவைக்கப்பட்டது. இலத்தீன் தொடர் "Iesous Nazarenus Rex Iudaeorum" என்றிருந்தது. அதன் சுருக்கச் சொல்லாக்கம் INRI என வரும் அதன் பொருள்: நாசரேத்து இயேசு யூதர்களின் ராஜா என்பதாகும். (யோவான்: 19:19). இப்பெயர் வழக்கமாக இயேசுவைத் தாங்கும் சிலுவையில் எழுதப்பட்டிருக்கும்

 

☧   - ஒரு விளக்கம்:


இயேசுவுக்குத் "அபிஷேகம் பெற்றவர்" என்னும் சிறப்புப் பெயர் வேதாகமத்தில் உண்டு. அது எபிரேயத்தில் "மேசியா" எனவும் கிரேக்கத்தில் Christos எனவும் வரும். இக்கிரேக்கச் சொல்லில் உள்ள "கி" (Chi), "றோ" (Rho) என்னும் முதல் இரு எழுத்துக்களும் கிரேக்கத்தில் முறையே "X" எனவும் "P" எனவும் எழுதப்படும். இவ்வாறு ☧ (XP) என்னும் அடையாளம் "கிறிஸ்து" (அபிஷேகம் பெற்றவர்) என்னும் பொருளில் இயேசுவுக்கு அடைமொழியாயிற்று.

 

"மீன்" (ΙΧΘΥΣ) அடையாளம் ஒரு விளக்கம்:

 

கிரேக்க மொழியில் "இக்துஸ்" (ΙΧΘΥΣ, ἰχθύς = ikhthús, ichtus) என்னும் சொல் "மீன்" என்று பொருள்படும். இந்த கிரேக்கச் சொல்லில் அடங்கியுள்ள ஐந்து எழுத்துகளையும் தனித்தனியே பிரித்து அவை ஒவ்வொன்றும் தனித்தனிச் சொற்களின் முதல் எழுத்துக்கள் என்று கொண்டு விளக்கம் அளிப்பது வழக்கம் அதன் விவரம் இதோ:
  • (I, Iota) : ΙΗΣΟΥΣ (Iêsoûs) « இயேசு » ; (= எபிரேய மொழியில் "மீட்பர்").
  • (KH, Khi) : ΧΡΙΣΤΟΣ (Khristòs) « கிறிஸ்து » ; (= கிரேக்க மொழியில் "அபிஷேகம் பெற்றவர்")
  • (TH, Thêta) : ΘΕΟΥ (Theoû) « கடவுளின் » ;
  • (U, Upsilon) : ΥΙΟΣ (Huiòs) « மகன் » ;
  • (S, Sigma) : ΣΩΤΗΡ (Sôtếr) « மீட்பர் ».


 A - Ω   - அல்பா ஒமேகா - ஒரு விளக்கம்:

 

கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஆல்ஃபா (Alpha) et எனவும் இறுதி எழுத்து ஒமெகா (Omega) என்றும் பெயர் கொண்டுள்ளன. அவற்றை α - ω என்று சிறிய எழுத்திலும் A - Ω என்று பெரிய எழுத்திலும் குறிப்பர். இயேசுவே அனைத்தின் முதலும் நிறைவும் (தொடக்கமும் முடிவும்) என்னும் பொருளில் அவரை ஆல்ஃபாவும் ஒமெகாவும் (அகரமும் னகரமும்) என்பது கிறிஸ்தவ வழக்கம்.

அகரமும் னகரமும், "முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே" (வெளிப்படுத்தல்: 22:13).

நன்றி: விக்கிபீடியா